அதிகாரம் 7
ஊழிய முறைகள்—மக்களைச் சென்றெட்ட எல்லா முறைகளையும் பயன்படுத்துவது
1, 2. (அ) ஏராளமான மக்களிடம் பேச இயேசு என்ன செய்தார்? (ஆ) கிறிஸ்துவின் உண்மை சீஷர்கள் அவருடைய முன்மாதிரியை எப்படிப் பின்பற்றியிருக்கிறார்கள், ஏன்?
ஏரிக் கரையில் இருந்த இயேசுவைப் பார்க்க ஏராளமான மக்கள் வருகிறார்கள். ஆனால், அவர் கரையைவிட்டு கொஞ்சம் தூரம் படகில் போய் அங்கிருந்து அவர்களிடம் பேச ஆரம்பிக்கிறார். தன்னுடைய செய்தி அந்த மக்களுக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறார். ஏனென்றால், தண்ணீரின் மேற்பரப்பு தன்னுடைய குரலின் ஒலியைப் பலமடங்கு அதிகமாக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.—மாற்கு 4:1, 2-ஐ வாசியுங்கள்.
2 கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, கிறிஸ்துவின் உண்மை சீஷர்கள் அவரைப் போலவே நல்ல செய்தியைச் சொல்வதற்கு புதிய முறைகளைப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஏராளமான மக்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொன்னார்கள். நம் ராஜாவின் வழிநடத்துதலோடு, கடவுளுடைய மக்கள் தொடர்ந்து புதிய முறைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். சூழ்நிலைகள் மாறும்போதும், தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும்போதும் அதற்கேற்ப ஊழிய முறைகளில் மாற்றங்களைச் செய்கிறார்கள். முடிவு வருவதற்கு முன்பாக, எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு நல்ல செய்தியைச் சொல்ல நாம் விரும்புகிறோம். (மத். 24:14) எல்லா இடங்களிலும் உள்ள மக்களைச் சென்றெட்ட நாம் பயன்படுத்தியிருக்கும் சில முறைகளைக் கவனியுங்கள். நல்ல செய்தியை அறிவித்த பைபிள் மாணாக்கர்களின் விசுவாசத்தை என்னென்ன விதங்களில் நீங்கள் பின்பற்றலாம் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
ஏராளமான மக்களுக்கு நல்ல செய்தி சென்றெட்டுகிறது
3. சத்தியத்தை எதிர்த்தவர்கள் ஏன் கொதித்துப்போனார்கள்?
3 செய்தித்தாள்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிவிப்பதற்காக, சகோதரர் ரஸலும் அவருடைய நண்பர்களும் 1879-லிருந்தே காவற்கோபுர பத்திரிகையைப் பிரசுரித்துவந்தார்கள். ஆனால், இன்னும் ஏராளமான மக்களுக்கு நல்ல செய்தி சென்றெட்ட, 1914-க்கும் முன்பே கிறிஸ்து வழிசெய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1903-லிருந்து அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இதைக் காட்டுகின்றன. அந்த வருஷத்தில், பைபிள் போதனைகளைப் பற்றி விவாதிப்பதற்காக சகோதரர் ரஸலை, டாக்டர் ஈ. எல். ஈட்டன் (பென்ஸில்வேனியாவைச் சேர்ந்த புராட்டஸ்டன்ட் ஊழியர்கள் அடங்கிய ஒரு தொகுதியின் பிரதிநிதி) அழைத்தார். ரஸலுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஈட்டன் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “எனக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகாத சில கேள்விகளைப் பற்றி மக்கள் முன்பாக விவாதிக்கலாம் என நான் நினைக்கிறேன் . . . இது மக்களுக்கு அதிக ஆர்வத்துக்குரிய விஷயமாக இருக்கும்.” இந்த விஷயங்களைக் கேட்க, பொது மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று ரஸலும் அவருடைய நண்பர்களும்கூட நினைத்தார்கள். அதனால், த பிட்ஸ்பர்க் கஸட் என்ற பிரபலமான செய்தித்தாளில் அவர்கள் விவாதித்த விஷயங்களை வெளியிட ஏற்பாடு செய்தார்கள். செய்தித்தாளில் வந்த கட்டுரைகள் ரொம்பப் பிரபலமாகிவிட்டன. பைபிள் சத்தியங்களுக்கு ரஸல் கொடுத்த தெளிவான விளக்கம் ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்ததால், ஒவ்வொரு வாரமும் அவருடைய பேச்சுகளை வெளியிட அந்தச் செய்தித்தாள் முன்வந்தது. சத்தியத்தை எதிர்த்தவர்கள் இதைப் பார்த்து எப்படிக் கொதித்துப்போயிருப்பார்கள்!
1914-க்குள், 2,000-க்கும் அதிகமான செய்தித்தாள்கள் ரஸல் கொடுத்த பைபிள் பேச்சுகளைப் பிரசுரித்தன
4, 5. சகோதரர் ரஸல் என்ன குணத்தை வெளிக்காட்டினார், பொறுப்பான ஸ்தானத்தில் இருப்பவர்கள் அவருடைய முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்?
4 சீக்கிரத்தில், இன்னும் பல செய்தித்தாள்கள் ரஸலின் பேச்சுகளை வெளியிட விரும்பின. 1908-க்குள், அவர் கொடுத்த பேச்சுகளை “11 வித்தியாசப்பட்ட செய்தித்தாள்கள் தொடர்ந்து” வெளியிட்டதாக காவற்கோபுரம் குறிப்பிட்டது. செய்தித்தாள் சம்பந்தப்பட்ட வேலைகளில் அனுபவமுள்ள சகோதரர்கள் ரஸலுக்கு ஒரு ஆலோசனை சொன்னார்கள். சங்கத்தின் அலுவலகங்களை பிட்ஸ்பர்க்கிலிருந்து பிரபலமான ஒரு நகரத்துக்கு மாற்றினால், பைபிள் சம்பந்தமான கட்டுரைகளை இன்னும் அதிகமான செய்தித்தாள்களில் வெளியிடலாம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதையும் மற்ற சில விஷயங்களையும் யோசித்துப் பார்த்த பிறகு, 1909-ல் அலுவலகங்களை நியு யார்க்கிலுள்ள புருக்லினுக்கு ரஸல் மாற்றினார். அதனால், சில மாதங்களிலேயே சுமார் 400 செய்தித்தாள்கள் அவர் கொடுத்த பேச்சுகளை வெளியிட்டன. இப்படிச் செய்தித்தாள்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்பட்ட சமயத்திற்குள், நான்கு மொழிகளில் 2,000-க்கும் அதிகமான செய்தித்தாள்கள் ரஸலின் பேச்சுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன!
5 இதிலிருந்து என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? இன்று கடவுளுடைய அமைப்பில் பொறுப்பான ஸ்தானத்தில் இருப்பவர்கள் சகோதரர் ரஸலைப் போல மனத்தாழ்மையைக் காட்ட வேண்டும். எப்படி? முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும்போது மற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.—நீதிமொழிகள் 15:22-ஐ வாசியுங்கள்.
6. செய்தித்தாள் மூலமாக சத்தியத்தைக் கற்றுக்கொண்ட ஒருவர் என்ன செய்யத் தூண்டப்பட்டார்?
6 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி செய்தித்தாள்களில் வெளிவந்த கட்டுரைகள் பலருடைய வாழ்க்கையை மாற்றின. (எபி. 4:12) இப்படிப்பட்ட கட்டுரைகள் மூலம் சத்தியத்தைக் கற்றுக்கொண்டவர்தான் சகோதரி ஓரா ஹெட்ஸல். அவர் இப்படிச் சொன்னார்: “எனக்கு கல்யாணமான பிறகு, மினசோட்டாவிலுள்ள ராகஸ்டரில் இருந்த என் அம்மாவைப் பார்க்கப் போனேன். அங்கே, என் அம்மா ஒரு செய்தித்தாளிலிருந்து கட்டுரைகளை வெட்டியெடுப்பதைப் பார்த்தேன். அதெல்லாம் ரஸல் கொடுத்த பேச்சுகள். அந்தக் கட்டுரைகளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை அம்மா என்னிடம் சொன்னார்.” அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களை ஓரா ஏற்றுக்கொண்டார். பிறகு, அவர் 1917-ல் ஞானஸ்நானம் எடுத்தார். அவர் சுமார் 60 வருஷங்களாக கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உண்மையோடு அறிவித்து வந்தார்.
7. முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள், செய்தித்தாள்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைப் பற்றி ஏன் யோசித்தார்கள்?
7 முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் 1916-ல் செய்தித்தாள்கள் மூலம் நல்ல செய்தியைத் தொடர்ந்து பரப்புவதா வேண்டாமா என்று யோசித்தார்கள். அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று, முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்ததால் அச்சிடுவதற்குத் தேவையான பொருள்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. 1916-ல் பிரிட்டனிலுள்ள செய்தித்தாள் இலாகாவிடமிருந்து வந்த அறிக்கை இப்படிச் சொன்னது: “இப்போது சுமார் 30 செய்தித்தாள்கள் மட்டும்தான் பைபிள் பேச்சுகளை வெளியிடுகின்றன. பேப்பரின் விலை அதிகமாகிக்கொண்டே போவதால் சீக்கிரத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது.” இரண்டாவது காரணம், சகோதரர் ரஸலின் மரணம். அவர் அக்டோபர் 31, 1916-ல் இறந்துவிட்டார். “சகோதரர் ரஸல் இறந்துவிட்டதால், பைபிள் பேச்சுகளை [செய்தித்தாள்களில்] வெளியிடுவது முற்றிலுமாக நிறுத்தப்படும்” என்று டிசம்பர் 15, 1916, காவற்கோபுரம் அறிவித்தது. நல்ல செய்தியை அறிவிக்க இந்த முறையைப் பயன்படுத்துவது முடிவுக்கு வந்தாலும், அவர்கள் பயன்படுத்திய மற்ற முறைகள் நல்ல பலன்களைத் தந்தன. அதற்கு ஒரு உதாரணம், “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்.”
8. ‘ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷனை’ தயாரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது?
8 படங்கள். ரஸலும் அவருடைய நண்பர்களும் சுமார் மூன்று வருஷங்கள் வேலை செய்து “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற படத்தைத் தயாரித்து 1914-ல் வெளியிட்டார்கள். (நீதி. 21:5) அதை ஒரு நாடகம் என்று அழைத்தார்கள். இயங்கும் படங்களும், ஒலிப்பதிவுகளும், வண்ண வண்ண ஸ்லைடுகளும் கலந்த ஒரு புது கண்டுபிடிப்பாக அது இருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் நடித்துக் காட்டிய பைபிள் சம்பவங்கள் படம் பிடிக்கப்பட்டு அந்தப் நாடகத்தில் சேர்க்கப்பட்டன. அதில் மிருகங்கள்கூட பயன்படுத்தப்பட்டன. 1913-ல் வந்த அறிக்கை அந்தப் படத்தைப் பற்றி இப்படிச் சொன்னது: “உலகச் சரித்திரத்தைப் பற்றிய படக்காட்சியில் நோவாவின் கதையை பேசும் படமாக எடுப்பதற்கு ஒரு பெரிய விலங்கியல் பூங்காவின் பெரும் பகுதி பயன்படுத்தப்பட்டது.” லண்டன், நியு யார்க், பாரிஸ், பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள், இந்தப் படத்துக்காகத் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஸ்லைடுகளில் கலர் அடித்தார்கள்.
9. அதிக நேரமும் பணமும் செலவு செய்து ஏன் ‘ஃபோட்டோ டிராமாவை’ தயாரித்தார்கள்?
9 அதிக நேரமும் பணமும் செலவு செய்து ஏன் ‘ஃபோட்டோ டிராமாவை’ தயாரித்தார்கள்? 1913-ல் நடந்த மாநாடுகளில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. “பொம்மைப் படங்களையும் விளக்கப் படங்களையும் பயன்படுத்தி மக்களின் சிந்தையைச் செதுக்குவதில் அமெரிக்க செய்தித்தாள்கள் அதிக வெற்றி அடைந்திருக்கின்றன. இயங்கும் படங்களும் புதுமையான விதத்தில் மக்களுக்குத் தகவல்களைக் கொடுத்து பிரபலமடைந்திருக்கின்றன. இவை இரண்டுக்குமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அப்படியானால், பிரசங்கிப்பதிலும் பைபிள் வகுப்புகள் நடத்துவதிலும் முன்னேற்றம் செய்ய விரும்புகிற நாம், இயங்கும் படங்களையும் ஸ்லைடுகளையும் பயன்படுத்துவது பலன்தரும் சிறந்த முறையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். இதற்கு எங்கள் முழு ஆதரவைத் தருகிறோம்.”
10. “ஃபோட்டோ டிராமா” எந்தளவுக்குப் பரவலாகக் காட்டப்பட்டது?
10 1914-ல் 80 நகரங்களில் ஒவ்வொரு நாளும் “ஃபோட்டோ டிராமா” போட்டுக் காட்டப்பட்டது. அமெரிக்காவிலும் கனடாவிலும் கிட்டத்தட்ட 80 லட்சம் மக்கள் அதைப் பார்த்தார்கள். அதே வருஷத்தில் ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, சுவீடன், டென்மார்க், நார்வே, நியுசிலாந்து, பிரிட்டன், பின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் “ஃபோட்டோ டிராமா” போட்டுக் காட்டப்பட்டது. சிறிய கிராமங்களில் போட்டுக் காட்டுவதற்காக அதன் சுருக்கமான பதிப்பு, அதாவது “யுரேகா டிராமா,” தயாரிக்கப்பட்டது. அதில் இயங்கும் படங்கள் இருக்கவில்லை. அதனால், ‘யுரேகா டிராமாவை’ அதிக செலவில்லாமல் தயாரிக்க முடிந்தது. அதைப் போட்டுக் காட்டுவதற்குத் தேவையான பொருள்களைச் சுலபமாக எடுத்துச் செல்ல முடிந்தது. 1916-க்குள் “ஃபோட்டோ டிராமா” மற்றும் “யுரேகா டிராமா” வேறு சில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.
1914-ல் ‘ஃபோட்டோ டிராமாவை’ பார்க்க அரங்கங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது
11, 12. ‘ஃபோட்டோ டிராமாவை’ பார்த்த ஒரு இளைஞர் என்ன செய்யத் தூண்டப்பட்டார், அவர் என்ன முன்மாதிரி வைத்தார்?
11 18 வயது ஷார்ல் ரானர் பிரெஞ்சு மொழியில் ‘ஃபோட்டோ டிராமாவை’ பார்த்தார். அது அவருடைய மனதை ரொம்பவே தொட்டது. அவர் இப்படிச் சொல்கிறார்: “பிரான்சில் அல்சேஸ் பகுதியிலுள்ள கோல்மார் என்ற ஊரில் அந்த டிராமா காட்டப்பட்டது. அதில் பைபிள் சத்தியங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருந்த விதம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.”
12 அதன் பலனாக, அவர் ஞானஸ்நானம் எடுத்தார். பிறகு, 1922-ல் முழுநேர சேவையை ஆரம்பித்தார். பிரான்சிலுள்ள மக்களுக்கு ‘ஃபோட்டோ டிராமாவை’ காட்ட உதவுவதுதான் அவருக்குக் கிடைத்த முதல் நியமிப்பு. அந்த வேலையைப் பற்றி ஷார்ல் இப்படிச் சொல்கிறார்: “வயலின் வாசிப்பது, கணக்கு இலாகாவிலும் பிரசுர இலாகாவிலும் சேவை செய்வது போன்ற சில பொறுப்புகள் எனக்குக் கொடுக்கப்பட்டன. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு, கூடிவந்திருந்தவர்களை அமைதியாக இருக்கும்படி சொல்வதும் என்னுடைய பொறுப்பாக இருந்தது. இடைவேளையில் நாங்கள் பிரசுரங்களைக் கொடுத்தோம். பிரசுரங்களைக் கொடுப்பதற்காக சகோதர சகோதரிகள் மன்றத்தின் ஒவ்வொரு பகுதிக்கு நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் கைநிறைய பிரசுரங்களை எடுத்துக்கொண்டு தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியில் இருந்தவர்களுக்கு அவற்றைக் கொடுத்தார்கள். அதோடு, மன்றத்தின் வாசலிலிருந்த மேஜைகள்மீதும் நிறைய பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்தன.” 1925-ல் புருக்லினிலுள்ள நியு யார்க் பெத்தேலில் சேவை செய்ய ஷார்ல் அழைக்கப்பட்டார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட WBBR வானொலி நிலையத்துக்காக ஒரு இசைக் குழுவை நடத்தும் நியமிப்பு அவருக்குக் கிடைத்தது. சகோதரர் ஷார்ல் ரானர் வைத்த முன்மாதிரியைப் பார்த்த பிறகு நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘கடவுளுடைய அரசாங்கத்தின் செய்தியை அறிவிக்கும் வேலையில் எனக்கு எந்த நியமிப்பு கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேனா?’—ஏசாயா 6:8-ஐ வாசியுங்கள்.
13, 14. நல்ல செய்தியை அறிவிக்க ரேடியோ எப்படிப் பயன்படுத்தப்பட்டது? (“ WBBR நிகழ்ச்சிகள்” மற்றும் “ ஒரு முக்கியமான மாநாடு” என்ற பெட்டிகளையும் பாருங்கள்.)
13 ரேடியோ. 1920-களில் ‘ஃபோட்டோ டிராமாவை’ பயன்படுத்துவது குறைய ஆரம்பித்தது. ஆனாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க ரேடியோ ஒரு மிகச் சிறந்த வழியாக இருந்தது. ஏப்ரல் 16, 1922-ல் பென்ஸில்வேனியாவைச் சேர்ந்த பிலடெல்ஃபியாவிலுள்ள மெட்ரோபாலிட்டன் ஓப்ரா ஹவுஸிலிருந்து சகோதரர் ரதர்ஃபர்ட்டின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று! “இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிப்பதில்லை!” என்ற தலைப்பில் அவர் கொடுத்த பேச்சை சுமார் 50,000 பேர் கேட்டார்கள். பிறகு, 1923-ல் முதன்முதலாக ஒரு மாநாட்டின் ஒரு பாகம் ஒலிபரப்பப்பட்டது. மற்ற வானொலி நிலையங்களைப் பயன்படுத்துவதோடு கூட, நமக்குச் சொந்தமாக ஒரு வானொலி நிலையத்தை அமைப்பது சிறந்ததாக இருக்கும் என்று முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் நினைத்தார்கள். அதனால் நியு யார்க், ஸ்டேட்டன் தீவில் ஒரு வானொலி நிலையத்தை அமைத்தார்கள். WBBR என்ற பெயரில் அதைப் பதிவு செய்தார்கள். பிப்ரவரி 24, 1924-ல் அந்தப் புதிய வானொலி நிலையத்திலிருந்து முதல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
1922-ல் சுமார் 50,000 பேர், “இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிப்பதில்லை!” என்ற பேச்சை ரேடியோவில் கேட்டார்கள்
14 WBBR-ன் நோக்கத்தைப் பற்றி டிசம்பர் 1, 1924, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “நல்ல செய்தியை அறிவிப்பதற்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட வழிகளிலேயே ரேடியோதான் மிகச் சிறந்த வழி. இதற்கான செலவும் ரொம்பக் குறைவு.” அதோடு, “சத்தியத்தைப் அறிவிப்பதற்கு இன்னும் சில வானொலி நிலையங்களை அமைப்பது கடவுளுடைய விருப்பமாக இருந்தால், அதற்குத் தேவையான பணத்தை எப்படியாவது அவர் தருவார்” என்றும் குறிப்பிட்டது. (சங். 127:1) யெகோவாவின் மக்கள் 1926-க்குள் சொந்தமாக ஆறு வானொலி நிலையங்களை அமைத்தார்கள். அவற்றில் இரண்டு ஐக்கிய மாகாணங்களில் இருந்தன. ஒன்று WBBR என்ற பெயரில் நியு யார்க்கிலும், மற்றொன்று WORD என்ற பெயரில் சிகாகோவிலும் இருந்தன. மற்ற நான்கு வானொலி நிலையங்கள் கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ, சஸ்காட்சுவான், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய இடங்களில் இருந்தன.
15, 16. (அ) கனடாவில் நம் ரேடியோ ஒலிபரப்புகளைக் கவனித்த குருமார்கள் என்ன செய்தார்கள்? (ஆ) ரேடியோ ஒலிபரப்பு வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கு எப்படி உதவியாக இருந்தது?
15 பைபிள் சத்தியம் இப்படிப் பல இடங்களில் ஒலிபரப்பப்பட்டதை கிறிஸ்தவமண்டல குருமார்கள் கவனித்தார்கள். கனடாவிலுள்ள சஸ்காட்சுவான் வானொலி நிலையத்தில் நடந்த வேலைகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்த ஆல்பர்ட் ஹாஃப்மன் இப்படிச் சொன்னார்: “பைபிள் மாணாக்கர்களை [இப்போது யெகோவாவின் சாட்சிகள்] பற்றி எக்கச்சக்கமான ஆட்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. இப்படி 1928 வரைக்கும் சிறந்த சாட்சி கொடுக்கப்பட்டது. ஆனால், மத குருமார்கள் அதிகாரிகளைத் தூண்டிவிட்டதால் கனடாவில் பைபிள் மாணாக்கர்களுக்குச் சொந்தமாக இருந்த வானொலி நிலையங்களின் லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டன.”
16 கனடாவிலிருந்த நம்முடைய வானொலி நிலையங்கள் மூடப்பட்டாலும், அங்கிருந்த மற்ற வானொலி நிலையங்கள் மூலமாக பைபிள் பேச்சுகள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன. (மத். 10:23) அந்த ஒலிபரப்புகள் மூலம் அதிக பலன் கிடைப்பதற்காக, காவற்கோபுரம் மற்றும் த கோல்டன் ஏஜ் (இப்போது விழித்தெழு! என்று அழைக்கப்படுகிறது) பத்திரிகைகளில் அந்த வானொலி நிலையங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தன. அதனால், வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது மக்களிடம் உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக பைபிள் பேச்சுகளைக் கேட்கும்படி பிரஸ்தாபிகளால் உற்சாகப்படுத்த முடிந்தது. அதன் பலன்? ஜனவரி 1931, புலட்டின் இப்படிச் சொன்னது: “இந்த ரேடியோ ஒலிபரப்பு, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய சகோதர சகோதரிகளுக்கு ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறது. ரேடியோ ஒலிபரப்பு மூலம் சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுத்த பேச்சுகளை மக்கள் கேட்டிருப்பதாகவும், அதனால் ஊழியத்தில் நம் புத்தகங்களை அவர்கள் ஆர்வத்தோடு வாங்கிக்கொள்வதாகவும் நிறைய அறிக்கைகள் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றன.” ரேடியோவில் ஒலிபரப்பு செய்வதும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதும்தான் “கடவுளுடைய அமைப்பு பயன்படுத்துகிற இரண்டு முக்கியமான ஊழிய முறைகள்” என புலட்டின் சொன்னது.
17, 18. சூழ்நிலைகள் மாறியபோதிலும, ரேடியோ மூலம் எப்படி நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது?
17 1930-களில் நமக்குச் சொந்தமில்லாத மற்ற வானொலி நிலையங்களைப் பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு வந்தது. அதனால், 1937-ன் முடிவில், யெகோவாவின் மக்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி தங்களுடைய ஊழிய முறைகளை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் மற்ற வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டு, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதற்கு இன்னும் அதிக கவனம் செலுத்தினார்கள். a ஆனாலும், சில தொலைதூர இடங்களில் நல்ல செய்தியை அறிவிப்பதற்கு தொடர்ந்து ரேடியோவைப் பயன்படுத்தினார்கள். உதாரணத்துக்கு, 1951 முதல் 1991 வரை ஜெர்மனியிலுள்ள மேற்கு பெர்லினில் பைபிள் பேச்சுகள் தவறாமல் ஒலிபரப்பப்பட்டன. அதனால், அன்று கிழக்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்களால் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைக் கேட்க முடிந்தது. 1961 முதற்கொண்டு 30 வருஷங்களுக்கும் மேலாக, தென் அமெரிக்காவைச் சேர்ந்த சூரினாம் என்ற இடத்திலுள்ள தேசிய வானொலி நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் 15 நிமிஷங்களுக்கு பைபிள் சத்தியங்கள் ஒலிபரப்பப்பட்டன. ரேடியோவில் ஒலிபரப்புவதற்காக 1969-லிருந்து 1977 வரையில் “வேதவசனங்கள் எல்லாம் பிரயோஜனமுள்ளவை” என்ற தலைப்பில் 350-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நம் அமைப்பு ஒலிப்பதிவு செய்தது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள 48 மாநிலங்களில் இருந்த 291 வானொலி நிலையங்கள் நம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின. 1996-ல் அபியாவிலிருந்த (தென் பசிபிக் நாடான சமோவாவின் தலைநகர்) வானொலி நிலையம் “உங்கள் பைபிள் கேள்விகளுக்குப் பதில்கள்” என்ற நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் ஒலிபரப்பியது.
18 இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ரேடியோ மூலம் நல்ல செய்தியை அறிவிப்பது முடிவுக்கு வந்தது. ஆனாலும், இதுவரையில்லாத அளவுக்கு ஏராளமான மக்களைச் சென்றெட்ட மற்றொரு தொழில்நுட்பம் உதவியாக இருந்தது.
19, 20. jw.org வெப்சைட்டை யெகோவாவின் மக்கள் ஏன் உருவாக்கினார்கள், அது எந்தளவுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது? (“ JW.ORG” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
19 இன்டர்நெட். 2013-ல், 270 கோடிக்கும் அதிகமான ஆட்கள், அதாவது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீத ஆட்கள், இன்டர்நெட்டைப் பயன்படுத்தினார்கள். சுமார் 200 கோடி மக்கள் மொபைல் ஃபோனில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதாக சில கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதிலும் ஆப்பிரிக்காவில்தான் மொபைலில் இன்டர்நெட் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அங்கே ஒன்பது கோடிக்கும் அதிகமான ஆட்கள் மொபைல் இன்டர்நெட் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள். தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் இன்டர்நெட்டுக்கு பெரும் பங்கு இருப்பது இதிலிருந்து தெரிகிறது.
20 1997-லிருந்து யெகோவாவின் மக்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். 2013-ல் jw.org வெப்சைட் சுமார் 300 மொழிகளில் இருந்தது. பைபிள் சார்ந்த நம் பிரசுரங்களை 520-க்கும் அதிகமான மொழிகளில் டவுன்லோட் செய்ய முடிந்தது. ஒவ்வொரு நாளும் 7,50,000-க்கும் அதிகமானோர் நம் வெப்சைட்டைப் பார்க்கிறார்கள். மக்கள் ஒவ்வொரு மாதமும் நம் வெப்சைட்டில் வீடியோக்களைப் பார்ப்பதோடு, 30 லட்சம் புத்தகங்களையும், 40 லட்சம் பத்திரிகைகளையும், 2 கோடியே 20 லட்சம் ஆடியோக்களையும் டவுன்லோட் செய்கிறார்கள்.
21. நம் வெப்சைட்டைப் பார்த்த ஒருவரின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?
21 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க இந்த வெப்சைட் ரொம்ப உதவியாக இருக்கிறது. பிரசங்க வேலை தடை செய்யப்பட்ட நாடுகளில்கூட இது பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு, 2013-ன் ஆரம்பத்தில், jw.org வெப்சைட்டைப் பார்த்த ஒருவர் அமெரிக்காவிலுள்ள நம் தலைமை அலுவலகத்துக்கு ஃபோன் செய்தார். பைபிளிலிருந்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள விரும்பியதாக அவர் சொன்னார். அவர் அப்படித் தொடர்புகொண்டது ஒரு சாதாரண விஷயம் இல்லை. ஏனென்றால், அவர் ஒரு முஸ்லிம். அதுவும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு நாட்டின் ஒதுக்குப்புறமான கிராமத்தில் அவர் வாழ்கிறார். அவர் அப்படி தலைமை அலுவலகத்துக்கு ஃபோன் செய்ததால் அமெரிக்காவிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சியோடு சேர்ந்து வாரத்தில் இரண்டு முறை பைபிளைப் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வீடியோ கால் மூலமாக அவருக்குப் படிப்பு நடத்தப்பட்டது.
தனி நபர்களுக்குக் கற்றுக்கொடுப்பது
22, 23. (அ) ஏராளமான மக்களைச் சென்றெட்ட பல முறைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் வீட்டுக்கு வீடு ஊழியம் ஏன் முக்கியமானது? (ஆ) நம் வேலையை நம் ராஜா எப்படி ஆசீர்வதித்திருக்கிறார்?
22 ஏராளமான மக்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்க செய்தித்தாள்கள், “ஃபோட்டோ டிராமா,” ரேடியோ நிகழ்ச்சிகள், வெப்சைட் என பல முறைகளை நாம் பயன்படுத்தியிருந்தாலும் இவை எல்லாவற்றையும்விட வீட்டுக்கு வீடு ஊழியம்தான் ரொம்ப முக்கியமானது. ஏனென்றால், நாம் இதை இயேசுவிடமிருந்து கற்றிருக்கிறோம். அவர் ஏராளமான மக்களுக்குப் பிரசங்கித்திருந்தாலும் தனி நபர்களுக்கும் நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். (லூக். 19:1-5) இப்படிச் செய்யும்படி தன்னுடைய சீஷர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். எதைப் பற்றி பேச வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொன்னார். (லூக்கா 10:1, 8-11-ஐ வாசியுங்கள்.) 6-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, அமைப்பை முன்நின்று வழிநடத்தியவர்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். யெகோவாவின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் மக்களை நேரில் சந்தித்து நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.—அப். 5:42; 20:20.
23 கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்பட்டு 100 வருஷங்கள் கடந்துவிட்டன. இப்போது கிட்டத்தட்ட 80 லட்சம் பிரஸ்தாபிகள் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி மற்றவர்களுக்குச் சுறுசுறுப்பாகச் சொல்லி வருகிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தை விளம்பரப்படுத்த நாம் பயன்படுத்திய முறைகளை நம் ராஜா ஆசீர்வதித்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. எல்லா தேசத்தினருக்கும், இனத்தினருக்கும், மொழியினருக்கும் நல்ல செய்தியை அறிவிப்பதற்குத் தேவையான கருவிகளையும் அவர் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் நாம் பார்க்கலாம்.—வெளி. 14:6.
a நியு யார்க்கில் கடைசியாக இருந்த WBBR வானொலி நிலையத்தையும் 1957-ல் மூடிவிட, முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் தீர்மானித்தார்கள்.