Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

கொடி வணக்கம், ஓட்டுப் போடுதல், படைத்துறை சாராத பொதுச் சேவை

கொடி வணக்கம், ஓட்டுப் போடுதல், படைத்துறை சாராத பொதுச் சேவை

கொடி வணக்கம். தேசிய கொடிக்கு ‘சல்யூட்’ அடிப்பது அல்லது தலைவணங்குவது அதை வணங்குவதற்குச் சமம் என யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள்; மக்கள் பெரும்பாலும் தேசிய கீதம் பாடிய பிறகு கொடி வணக்கம் செய்கிறார்கள். கடவுள் அல்ல, தேசமோ தேசத் தலைவர்களோதான் தங்களைக் காப்பாற்ற முடியும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறார்கள். (ஏசாயா 43:11; 1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 5:21) அப்படிப்பட்ட தேசத் தலைவர்களில் ஒருவர்தான் பூர்வ பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார். தன்னுடைய ராஜ அதிகாரத்தினாலும் மதப் பற்றினாலும் மக்களைக் கவருவதற்காக, இந்த மாமன்னர் ஒரு பெரிய சிலையை நிறுவினார்; தேசிய கீதத்தைப் போன்ற ஓர் இசை ஒலிக்கையில் குடிமக்கள் அந்தச் சிலைக்குமுன் தலைவணங்க வேண்டுமெனக் கட்டளையிட்டார். ஆனால், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற எபிரெய இளைஞர்கள் அதற்குத் தலைவணங்க மறுத்தார்கள். அதற்காகச் சாவையும் சந்திக்கத் துணிந்தார்கள்.—தானியேல், அதிகாரம் 3.

நம்முடைய காலத்தில், “கொடி என்பது ஒருவகை விக்கிரகம். . . . கொடி எடுத்துச் செல்லப்படும்போது ஆண்கள் தங்களுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்துகிறார்கள்; கொடியைப் புகழ்ந்து கவிஞர்கள் பாடல்கள் இயற்றுகிறார்கள்; பிள்ளைகள் தேசபக்திப் பாடல்கள் பாடுகிறார்கள்” என சரித்திராசிரியர் கார்ல்டன் ஹேஸ் எழுதினார். தேசபக்திக்கென்றே “புனித நாட்களும்” “புனிதர்களும் மாவீரர்களும்” “கோவில்களும்,” அதாவது பூஜை மாடங்களும், இருப்பதாகக்கூட அவர் குறிப்பிட்டார். பிரேசிலில் நடந்த ஒரு தேசிய விழாவில், ராணுவ நீதிமன்ற தலைவர் இவ்வாறு சொன்னார்: “நம் தந்தைநாடு வணங்கப்படுவதைப் போலவே . . . கொடியும் பயபக்தியோடு வணங்கப்படுகிறது.” ஆம், “சிலுவையைப் போலவே கொடியும் புனிதமானது” என த என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குறிப்பிட்டது.

அதே என்ஸைக்ளோப்பீடியா சமீபத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: தேசிய கீதங்கள் “தேசப்பற்றை வெளிக்காட்டும் பாடல்களாகும்; மக்களுக்கோ ஆட்சியாளர்களுக்கோ வழிகாட்டும்படியும் பாதுகாப்பு கொடுக்கும்படியும் இறைவனிடம் செய்யும் வேண்டுதல்கள் அவற்றில் பெரும்பாலும் அடங்கியிருக்கும்.” ஆகவே, கொடி வணக்கமும் தேசிய கீதமும் இடம்பெறுகிற தேசிய விழாக்களை மத சம்பந்தப்பட்ட விழாக்களாக யெகோவாவின் சாட்சிகள் கருதுவதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப்போனால், அமெரிக்கப் பள்ளிகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் கொடியை வணங்கவும் உறுதிமொழி எடுக்கவும் மறுப்பதைக் குறித்து த அமெரிக்கன் கேரக்டர் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “இந்த அனுதின சடங்குகள் மத சம்பந்தமானவைதான் என பல தொடர் வழக்குகளுக்குப் பிறகு இப்போதுதான் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.”

பைபிளுக்கு முரணான விழாக்களில் யெகோவாவின் சாட்சிகள் கலந்துகொள்வதில்லை என்றாலும், அப்படிக் கலந்துகொள்ள மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை நிச்சயமாகவே மதிக்கிறார்கள். அதோடு, தேசிய கொடிகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்; ஆட்சியாளர்களை “அதிகாரத்தில் இருக்கிற” “கடவுளுடைய வேலையாட்களாக” கருதுகிறார்கள். (ரோமர் 13:1-4) ஆகவே, “ராஜாக்களுக்காகவும் உயர் அதிகாரிகளுக்காகவும்” கடவுளிடம் மன்றாட வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ‘கடவுள்பக்தி உள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் தொல்லையில்லாமல் அமைதியாக வாழ்வதே’ அவர்களுடைய குறிக்கோள்.—1 தீமோத்தேயு 2:1, 2.

தேர்தல்களில் ஓட்டுப் போடுதல். ஓட்டுப் போட மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை உண்மைக் கிறிஸ்தவர்கள் மதிக்கிறார்கள். தேர்தல்களை எதிர்த்து அவர்கள் பிரச்சாரம் செய்வதில்லை; மாறாக, தேர்ந்தெடுக்கப்படுகிற ஆட்சியாளர்களோடு ஒத்துழைக்கிறார்கள். அதேசமயத்தில், அரசியல் விவகாரங்கள் எதிலும் தலையிடாமல் உறுதியுடன் நடுநிலை வகிக்கிறார்கள். (மத்தேயு 22:21; 1 பேதுரு 3:16) ஆனால் சில நாடுகளில், எல்லாரும் கட்டாயமாக ஓட்டுப் போட வேண்டியிருக்கலாம்; அதோடு, ஓட்டுச் சாவடிகளுக்குச் செல்லாதவர்கள் மற்றவர்களுடைய ஆவேசத்திற்கு ஆளாகலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒரு கிறிஸ்தவர் என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும் தூரா சமவெளிக்குச் சென்றதை அவர் நினைத்துப் பார்த்து, தன்னுடைய மனசாட்சி அனுமதித்தால் ஓட்டுச் சாவடிக்குச் செல்லத் தீர்மானிக்கலாம். ஆனால், தன்னுடைய நடுநிலையை விட்டுக்கொடுக்காதபடி அவர் கவனமாயிருக்க வேண்டும். பின்வரும் ஆறு நியமங்களை அவர் மனதில் வைக்க வேண்டும்:

  1. இயேசுவின் சீஷர்கள் ‘உலகத்தின் பாகமாக இருப்பதில்லை.’—யோவான் 15:19.

  2. கிறிஸ்துவையும் அவரது அரசாங்கத்தையும் கிறிஸ்தவர்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.—யோவான் 18:36; 2 கொரிந்தியர் 5:20.

  3. கிறிஸ்தவ சபையினர் ஒரே கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள்; அவர்கள் கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பில் பின்னிப்பிணைந்திருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 1:10; கொலோசெயர் 3:14.

  4. ஆட்சியாளராக ஒருவரை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறவர்கள் அவருடைய செயல்களுக்குப் பொறுப்பாளிகளாக ஆகிறார்கள்.—1 சாமுவேல் 8:5, 10-18; 1 தீமோத்தேயு 5:22 ஆகிய வசனங்களில் பொதிந்துள்ள நியமங்களைக் கவனியுங்கள்.

  5. இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு மனித ராஜா வேண்டுமெனக் கேட்டபோது, அவர்கள் தன்னையே ஒதுக்கித் தள்ளியதாக யெகோவா கருதினார்.—1 சாமுவேல் 8:7.

  6. மக்கள் எந்தவொரு அரசியல் கட்சியை ஆதரித்தாலும் சரி, அவர்கள் எல்லாரிடமும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி கிறிஸ்தவர்கள் தயக்கமில்லாமல் பேச வேண்டும்.—மத்தேயு 24:14; 28:19, 20; எபிரெயர் 10:35.

படைத்துறை சாராத பொதுச் சேவை. சில நாடுகளில், ராணுவ சேவையை மறுக்கிறவர்கள் கொஞ்சக் காலத்திற்கு ஏதோவொரு பொதுச் சேவையில் ஈடுபட வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இது சம்பந்தமாக ஒரு தீர்மானம் எடுப்பதற்குமுன் நாம் ஜெபம் செய்ய வேண்டும்; முதிர்ச்சிவாய்ந்த சக கிறிஸ்தவரிடமும் பேசலாம்; பின்பு, தெரிந்துகொண்ட விஷயங்களின் அடிப்படையில், நம்முடைய மனசாட்சிக்கு ஏற்ப ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும்.—நீதிமொழிகள் 2:1-5; பிலிப்பியர் 4:5.

நாம் “அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் . . . கீழ்ப்படிய வேண்டும், எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும், . . . நியாயமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (தீத்து 3:1, 2) இதை மனதில் வைத்து நம்மை நாமே இப்படியெல்லாம் கேட்டுக்கொள்ளலாம்: ‘பொதுச் சேவையைச் செய்ய நான் சம்மதித்தால் என் கிறிஸ்தவ நடுநிலையை விட்டுக்கொடுப்பதாக ஆகிவிடுமா, அல்லது அது என்னைப் பொய் மதத்தில் ஈடுபடச் செய்துவிடுமா?’ (மீகா 4:3, 5; 2 கொரிந்தியர் 6:16, 17) ‘நான் பொதுச் சேவை செய்தால் என் கிறிஸ்தவ பொறுப்புகளை நிறைவேற்றுவது சிரமமாகிவிடுமா அல்லது அவற்றை நிறைவேற்ற முடியாமலேயே போய்விடுமா?’ (மத்தேயு 28:19, 20; எபேசியர் 6:4; எபிரெயர் 10:24, 25) ‘மறுபட்சத்தில், பொதுச் சேவையைச் செய்வதால் என் கிறிஸ்தவ பொறுப்புகளை இன்னும் அதிகமாகச் செய்ய வாய்ப்பு கிடைக்குமா, ஒருவேளை முழுநேர ஊழியத்தைச் செய்ய முடியுமா?’—எபிரெயர் 6:11, 12.

ஒரு கிறிஸ்தவர் எல்லாவற்றையும் மனசாட்சியின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்த பின்பு, சிறைக்குச் செல்வதற்குப் பதிலாக பொதுச் சேவை செய்யத் தீர்மானித்தால் மற்ற கிறிஸ்தவர்கள் அவருடைய தீர்மானத்தை மதிக்க வேண்டும். (ரோமர் 14:10) ஆனால், அந்தச் சேவையைச் செய்ய அவரது மனசாட்சி இடங்கொடுக்காவிட்டால், அந்தத் தீர்மானத்தையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 10:29; 2 கொரிந்தியர் 1:24.