அதிகாரம் 14
எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்
“எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.
1, 2. நாம் நேர்மையாக நடக்க முயல்வதைப் பார்க்கும்போது யெகோவா ஏன் சந்தோஷப்படுகிறார்? விளக்கவும்.
அம்மாவும் பையனும் கடையிலிருந்து வெளியே வருகிறார்கள். திடீரென அந்தப் பையன் நின்றுவிடுகிறான், அவனுடைய முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடுகிறது. அந்தக் கடையில் எடுத்த ஒரு சிறு பொம்மையைக் கையில் வைத்திருக்கிறான். அதை எடுத்த இடத்தில் மறுபடியும் வைக்க மறந்திருக்கலாம், அல்லது அதை வாங்கலாமா என்று அம்மாவிடம் கேட்க மறந்திருக்கலாம். இப்போது அவன் பதட்டமடைந்து இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்கிறான். கடைக்காரரிடம் மன்னிப்பு கேட்டு அதைக் கொடுத்துவிடலாம் என்று அம்மா அவனைச் சமாதானப்படுத்தி மீண்டும் அந்தக் கடைக்குள் அழைத்துச் செல்கிறாள். அப்போது, அவள் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கிறது. ஏன்?
2 பிள்ளைகள் நேர்மையாக நடக்க முயல்வதைப் பார்க்கும்போது பெற்றோர் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறார்கள். ‘சத்தியத்தின் கடவுளான’ நம்முடைய பரலோகத் தகப்பனும் அப்படித்தான். (சங்கீதம் 31:5) நாம் ஆன்மீக ரீதியில் முன்னேறி, நேர்மையாக நடக்க முயல்வதைப் பார்க்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார். நாம் அவரைப் பிரியப்படுத்தவும் அவரது அன்பில் நிலைத்திருக்கவும் விரும்புகிறோம்; அதனால், “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்ன வார்த்தைகளையே நாமும் எதிரொலிக்கிறோம். (எபிரெயர் 13:18) வாழ்க்கையின் நான்கு முக்கியமான அம்சங்களில் நேர்மையாக நடப்பது சில சமயங்களில் நமக்குப் பெரும் சவாலாக இருக்கலாம்; அதைப் பற்றி நாம் இப்போது சிந்திக்கலாம். பின்பு, அதனால் வரும் ஆசீர்வாதங்களையும் பார்க்கலாம்.
நம்மையே நேர்மையாக எடைபோட்டுப் பார்த்தல்
3-5. (அ) நம்மையே ஏமாற்றிக்கொள்ளும் அபாயத்தைக் குறித்து கடவுளுடைய வார்த்தை எப்படி நம்மை எச்சரிக்கிறது (ஆ) நம்மையே நேர்மையுடன் எடைபோட்டுப் பார்க்க எது உதவும்?
3 நம்மையே நேர்மையாக எடைபோட்டுப் பார்ப்பதுதான் நம்முடைய முதல் சவால். நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் நம்மையே ஏமாற்றிக்கொள்வது வெகு சுலபம். உதாரணமாக, லவோதிக்கேயா சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆன்மீக ரீதியில் தங்களைச் செல்வந்தர்களாக நினைத்துக்கொண்டிருந்தார்கள்; ஆனால், உண்மையில், ‘ஏழ்மையானவர்களாக, பார்வையில்லாதவர்களாக, நிர்வாணமானவர்களாக’ இருந்தார்கள். எவ்வளவு பரிதாபமான நிலை! (வெளிப்படுத்துதல் 3:17) அவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொண்டதால் அவர்களுடைய நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆனது.
4 “கடவுளை வழிபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல் தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும்” என்று சீஷரான யாக்கோபு எச்சரித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். (யாக்கோபு 1:26) நம் நாவைத் தவறாகப் பயன்படுத்தினாலும் யெகோவாவுக்குப் பிரியமான முறையில் அவரை வழிபடலாம் என நாம் நினைத்துக்கொண்டால், நம்மையே வஞ்சித்துக்கொண்டிருப்போம். நாம் யெகோவாவை வழிபடுவது வீணானதாகவே இருக்கும், அதில் ஒரு பிரயோஜனமும் இருக்காது. இத்தகைய சோகமான நிலை நமக்கு வராமலிருக்க எது உதவி செய்யும்?
5 அதே அதிகாரத்தில், கடவுளுடைய சத்திய வார்த்தையை ஒரு கண்ணாடிக்கு யாக்கோபு ஒப்பிட்டுப் பேசுகிறார். கடவுளுடைய பரிபூரண சட்டத்தை உற்றுப்பார்த்து அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யும்படி அவர் நமக்கு அறிவுரை கூறுகிறார். (யாக்கோபு 1:23-25-ஐ வாசியுங்கள்.) நம்மையே நேர்மையுடன் எடைபோட்டுப் பார்க்கவும், ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்கவும் பைபிள் நமக்கு உதவுகிறது. (புலம்பல் 3:40; ஆகாய் 1:5) அதோடு, நம்மை ஆராய்ந்து பார்க்கும்படி யெகோவாவிடம் மன்றாடலாம்; நம்மிடம் ஏதேனும் மோசமான குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டவும் அவற்றைத் திருத்திக்கொள்ள உதவி செய்யவும் அவரிடம் மன்றாடலாம். (சங்கீதம் 139:23, 24) நேர்மையின்மை வஞ்சகமான ஒரு பலவீனம், நம் பரலோக தகப்பனுடைய கண்ணோட்டத்தில் நாம் அதைப் பார்க்க வேண்டும். நீதிமொழிகள் 3:32 இவ்வாறு கூறுகிறது: “ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார். ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.” யெகோவாவின் உணர்ச்சிகளை நாமும் பிரதிபலிக்கவும் அவர் நம்மைப் பார்ப்பதைப்போல் நாமும் நம்மைப் பார்க்கவும் அவரால் உதவ முடியும். “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னதை நினைவில்கொள்ளுங்கள். இப்போதே நாம் பரிபூரணராய் ஆக முடியாவிட்டாலும், நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே நம் மனப்பூர்வமான ஆசை.
குடும்பத்தில் நேர்மையுடன் இருத்தல்
6. தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஏன் நேர்மையாக இருக்க வேண்டும், அப்போது என்னென்ன ஆபத்துகளைத் தவிர்க்கலாம்?
6 நேர்மை என்பது கிறிஸ்தவ குடும்பத்தின் அடையாளச் சின்னமாய் இருக்க வேண்டும். எனவே, கணவனும் மனைவியும் எதையும் மூடிமறைக்காமல் வெளிப்படையாகப் பேச வேண்டும். வேறொரு நபரோடு சரசமாடுவது, இன்டர்நெட் மூலம் கள்ளத்தொடர்புகொள்வது, ஆபாசத்தைப் பார்ப்பது போன்ற அசுத்தமான, மனதை நோகடிக்கும் பழக்கங்களுக்கு கிறிஸ்தவ குடும்பத்தில் இடமில்லை. திருமணமான கிறிஸ்தவர்கள் சிலர் இப்படிப்பட்ட தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதோடு, அதைத் தங்கள் துணையிடமிருந்து மறைத்தும் இருக்கிறார்கள். இது நேர்மையற்ற செயல். “ஏமாற்றுப் பேர்வழிகளோடு நான் பழகுவதில்லை. வெளிவேஷம் போடுகிறவர்களோடு சேருவதில்லை” என்று உண்மையுள்ள ராஜாவாகிய தாவீது சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள். (சங்கீதம் 26:4) நீங்கள் திருமணமானவர் என்றால், நீங்கள் செய்யும் காரியங்களை உங்கள் துணையிடம் மறைக்காதீர்கள்.
7, 8. நேர்மையின் மதிப்பைக் கற்றுக்கொள்ள பைபிளிலுள்ள எந்த உதாரணங்கள் பிள்ளைகளுக்கு உதவும்?
7 பைபிள் உதாரணங்களைப் பயன்படுத்தி, நேர்மையின் மதிப்பை பிள்ளைகளின் மனதில் பெற்றோர் பதிய வைப்பது நல்லது. திருடிவிட்டு அதை மறைக்கத் துணிந்த ஆகான், பணத்துக்காகவும் பொருளுக்காகவும் பொய் சொன்ன கேயாசி, திருடியதும் அல்லாமல் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் ஆகியோரை நேர்மையற்றவர்களுக்கு உதாரணமாக பிள்ளைகளிடம் குறிப்பிடலாம்.யோசுவா 6:17-19; 7:11-25; 2 ராஜாக்கள் 5:14-16, 20-27; மத்தேயு 26:14, 15; யோவான் 12:6.
—8 நேர்மையாக நடந்தவர்களைப் பற்றிய உதாரணங்களையும் குறிப்பிடலாம்; முதலாவதாக யாக்கோபு; தனது மகன்களின் சாக்குப் பைகளில் ஒருவேளை பணம் தவறுதலாக வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் நினைத்ததால் அதைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி அவர்களிடம் கூறினார். அடுத்ததாக யெப்தாவும் அவருடைய மகளும்; யெப்தாவின் மகள் தன்னுடைய அப்பாவின் வாக்குறுதியை நிறைவேற்ற பெரும் தியாகம் செய்தாள். இன்னொரு உதாரணம் இயேசு; தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றவும் தன் நண்பர்களைக் காப்பாற்றவும் கொடூர கும்பலுக்கு முன்பு தன்னைத் தைரியமாக அடையாளம் காட்டினார். (ஆதியாகமம் 43:12; நியாயாதிபதிகள் 11:30-40; யோவான் 18:3-11) நேர்மையைக் குறித்து கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற முத்தான தகவல்களில் இவை சிலவே; இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி நேர்மையை உயர்வாய் மதிக்கவும் நேசிக்கவும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.
9. பெற்றோரின் முன்மாதிரியிலிருந்து பிள்ளைகள் நேர்மையைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் பெற்றோர் எதைத் தவிர்க்க வேண்டும், அது ஏன் முக்கியம்?
9 இப்படிக் கற்றுக்கொடுக்கும்போது பெற்றோர்மீது ஒரு முக்கியமான பொறுப்பு விழுகிறது. “மற்றவர்களுக்குக் கற்பிக்கிற நீங்களே உங்களுக்குக் கற்பிக்காமல் இருக்கலாமா? ‘திருடாதே’ என்று பிரசங்கிக்கிற நீங்களே திருடலாமா?” என்ற சிந்திக்க வைக்கும் கேள்விகளை அப்போஸ்தலன் பவுல் கேட்டார். (ரோமர் 2:21) நேர்மையாக நடக்க வேண்டுமெனப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டு பெற்றோரே நேர்மையில்லாமல் நடக்கிறார்கள், அதனால் பிள்ளைகளுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. வேலை செய்யும் இடத்திலிருந்து சின்னச் சின்ன பொருள்களை திருடிவந்து, “இதெல்லாம் எடுத்தா கண்டுக்கமாட்டாங்க” என்று பெற்றோர் சொல்லலாம்; ஏதாவது பொய் சொல்லிவிட்டு, “சின்னப் பொய்தானே, இதுல ஒன்னுமில்ல” என்றும் சொல்லி நியாயப்படுத்தலாம். சொல்லப்போனால், சின்னப் பொருளாக இருந்தாலும் சரி பெரிய பொருளாக இருந்தாலும் சரி, திருட்டு திருட்டுதான்; அதேபோல் சின்ன விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி, பொய் பொய்தான். * (லூக்கா 16:10-ஐ வாசியுங்கள்.) நாம் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருந்தால் பிள்ளைகள் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். அது அவர்களுடைய பிஞ்சு மனதைக் கெடுத்துவிடலாம். (எபேசியர் 6:4) ஆனால், பெற்றோரின் முன்மாதிரியிலிருந்து அவர்கள் நேர்மையைக் கற்றுக்கொண்டால், நேர்மையற்ற இந்த உலகில் கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் நபர்களாக வளருவார்கள்.—நீதிமொழிகள் 22:6.
சபையில் நேர்மையுடன் இருத்தல்
10. சக கிறிஸ்தவர்களுடன் பேசும் விஷயத்தில் நேர்மையாக இருக்க என்ன எச்சரிப்புகளை நாம் மனதில்கொள்ள வேண்டும்?
10 சக கிறிஸ்தவர்களுடன் பழகும்போது நேர்மையாக நடக்க நமக்கு பல வாய்ப்புகள் உள்ளன. 12-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, பேசும் திறன் எனும் பரிசை முக்கியமாக நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் இருக்கையில் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சாதாரணமாக நாம் பேசும் பேச்சு மிக எளிதில் தீங்கிழைக்கும் வீண்பேச்சாக மாறிவிடலாம்; ஏன், மற்றவர்களைப் பற்றி நாம் இல்லாததையும் பொல்லாததையும்கூட பேச ஆரம்பித்துவிடலாம்! உண்மையா பொய்யா என்று நமக்கே சரியாகத் தெரியாத விஷயத்தை நாம் இன்னொருவரிடம் சொல்கிறோம் என்றால் ஒருவேளை பொய்யை பரப்பிக்கொண்டிருப்போம்; அதனால், நம் உதடுகளை அடக்குவது மிகவும் நல்லது. (நீதிமொழிகள் 10:19) மறுபட்சத்தில், ஒரு விஷயம் உண்மையென நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் அதைக் கண்டிப்பாக மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்றில்லை. ஒருவேளை அது நமக்குச் சம்பந்தமில்லாத விஷயமாக இருக்கலாம், அல்லது அதைப் பற்றிப் பேசுவது அன்பற்றதாக இருக்கலாம். (1 தெசலோனிக்கேயர் 4:11) சிலர் நேர்மையாகப் பேசுவதாய் நினைத்துக்கொண்டு முகத்தில் அடித்தாற்போல பேசுவார்கள்; ஆனால், நம் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்.—கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.
11, 12. (அ) படுமோசமான பாவத்தைச் செய்த சிலர் எப்படிப் பாவத்துக்கு மேல் பாவம் செய்கிறார்கள்? (ஆ) படுமோசமான பாவங்களைப் பற்றி சாத்தான் பரப்பியிருக்கும் சில பொய்கள் யாவை, அவற்றை நாம் எப்படித் தவறென நிரூபிக்கலாம்? (இ) யெகோவாவின் அமைப்பிடம் நாம் எப்படி நேர்மையாக நடந்துகொள்ளலாம்?
11 மிக முக்கியமாக, சபையை முன்னின்று நடத்துகிறவர்களிடம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். சிலர் படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டு அதை மூடிமறைப்பதன் மூலமும் மூப்பர்கள் விசாரிக்கும்போது பொய் சொல்வதன் மூலமும் பாவத்துக்கு மேல் பாவம் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இரட்டை வாழ்க்கை வாழத் தொடங்கலாம், ஒரு பக்கம் மோசமான பாவத்தைச் செய்துகொண்டு மறுபக்கம் யெகோவாவுக்குச் சேவை செய்வதுபோல் காட்டிக்கொள்ளத் தொடங்கலாம். இப்படியே செய்துவந்தால், இவர்கள் பொய்யின் மொத்த உருவமாக ஆகிவிடுவார்கள்! (சங்கீதம் 12:2) இன்னும் சிலரோ மூப்பர்களிடம் பாதி உண்மையை மட்டும் சொல்லிவிட்டு மீதியை மறைத்துவிடுகிறார்கள். (அப்போஸ்தலர் 5:1-11) அவர்கள் இப்படிச் செய்வதற்குப் பெரும்பாலும் காரணம் சாத்தான் பரப்பியிருக்கிற பொய்களை நம்புவதே.—“ படுமோசமான பாவங்களைப் பற்றிய சாத்தானின் பொய்கள்” என்ற பெட்டியைப் பக்கங்கள் 188-189-ல் காண்க.
நீதிமொழிகள் 6:16-19-ஐ வாசியுங்கள்.
12 யெகோவாவின் அமைப்பு கேட்கும் சில தகவல்களை எழுதுகையிலும் நாம் நேர்மையாக இருப்பது முக்கியம். உதாரணமாக, ஊழிய அறிக்கை செய்யும்போது பொய் கணக்கு எழுதாதபடி கவனமாய் இருக்கிறோம். அதேபோல், சில விசேஷ ஊழிய பொறுப்புகளுக்காக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது நம் உடல்நலத்தைப் பற்றியோ தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியோ தவறான தகவல் தரக்கூடாது.—13. சக கிறிஸ்தவருடன் நாம் தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால் எப்படி நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்?
13 வியாபார விஷயங்களிலும்கூட சக கிறிஸ்தவர்களிடம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். சில சமயங்களில் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் கூட்டாக தொழில் செய்யலாம். வழிபாட்டுக்காக ராஜ்ய மன்றத்தில் கூடிவரும்போது அல்லது ஊழியத்தில் கலந்துகொள்ளும்போது, தொழில் விஷயங்களைப் பற்றி பேசுவதை இவர்கள் தவிர்க்க வேண்டும். மறுபட்சத்தில் கிறிஸ்தவர்களில் ஒருவர் முதலாளியாகவும் மற்றவர் தொழிலாளியாகவும் இருக்கலாம். நம் சகோதர சகோதரிகளை நாம் வேலைக்கு அமர்த்தினால், அவர்களிடம் நாணயமாக நடக்க வேண்டும், ஒத்துக்கொண்ட சம்பளத்தைச் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும், சட்டப்படியான சலுகைகளையும் தர வேண்டும். (1 தீமோத்தேயு 5:18; யாக்கோபு 5:1-4) ஒருவேளை நாம் ஒரு சகோதரரிடமோ சகோதரியிடமோ வேலை செய்தால், வாங்குகிற சம்பளத்திற்கு உண்மையாய் உழைக்க வேண்டும். (2 தெசலோனிக்கேயர் 3:10) சக கிறிஸ்தவர் என்பதால் அவர் நம்மை விசேஷமாக நடத்த வேண்டுமென எதிர்பார்க்கக்கூடாது; சக தொழிலாளிகளுக்கு இல்லாத சில விடுப்புகள், சலுகைகள், அல்லது மற்ற ஆதாயங்கள் நமக்குக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.—எபேசியர் 6:5-8.
14. கிறிஸ்தவர்கள் ஒன்றுசேர்ந்து தொழில் செய்யும்போது, எப்படி முன்ஜாக்கிரதையோடு செயல்படுகிறார்கள், ஏன்?
14 சக விசுவாசிகளோடு சேர்ந்து செய்யும் தொழிலில், ஒருவேளை முதலீடு செய்வது, கடன் வாங்குவது போன்றவை உட்பட்டிருந்தால் என்ன செய்வது? முக்கியமான, அதேசமயம் பயனுள்ள ஒரு நியமத்தை பைபிள் தருகிறது: எல்லாவற்றையும் எழுதி வைக்க வேண்டும். உதாரணமாக, எரேமியா ஒரு நிலத்தை வாங்கியபோது பத்திரம் எழுதி அதை நகல் எடுத்தார், சாட்சிகள் முன்னிலையில் அதைச் செய்தார், பிற்காலத்தில் எடுத்துப் பார்ப்பதற்காக பத்திரமாக எரேமியா 32:9-12; ஆதியாகமம் 23:16-20-ஐயும் பாருங்கள்.) ஆம், சக விசுவாசிகளோடு சேர்ந்து தொழில் செய்யும்போது, எல்லா தகவல்களையும் ஒரு பத்திரத்தில் கவனமாக எழுதி, சாட்சிகள் முன்பு கையெழுத்திடுவது ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லை என அர்த்தமாகாது. மாறாக, அப்படிச் செய்வது மனஸ்தாபங்கள், ஏமாற்றங்கள், கருத்துவேறுபாடுகள், பிரிவினைகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். கிறிஸ்தவர்கள் கூட்டாகச் சேர்ந்து தொழில் செய்யும்போது அது சபையின் ஒற்றுமையையும் சமாதானத்தையும் எந்த விதத்திலும் குலைத்துவிடக் கூடாது என்பதை மனதில் வைக்க வேண்டும். *—1 கொரிந்தியர் 6:1-8.
வைத்தார். (உலகில் நேர்மையுடன் இருத்தல்
15. நேர்மையற்ற வியாபாரப் பழக்கங்களைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார், இன்று சகஜமாகக் காணப்படும் இத்தகைய பழக்கங்களைக் கிறிஸ்தவர்கள் எப்படிக் கருத வேண்டும்?
15 சபையில் மட்டுமே ஒரு கிறிஸ்தவர் நேர்மையாக நடந்துகொண்டால் போதாது. “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்” என்று பவுல் சொன்னார். (எபிரெயர் 13:18) உலகத்தாருடன் வியாபார விஷயங்களில் ஈடுபடும்போதும் நாம் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நம் படைப்பாளர் விரும்புகிறார். நீதிமொழிகள் புத்தகம் மட்டுமே கள்ளத் தராசைப் பற்றிப் பல தடவை குறிப்பிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! (நீதிமொழிகள் 11:1; 16:11; 20:10, 23) பூர்வ காலங்களில், பொருள்களின் எடையையும் அதற்குரிய நாணயங்களையும் நிறுத்துப் பார்க்க வியாபாரிகள் பொதுவாக தராசுகளையும் எடைக்கற்களையும் பயன்படுத்தினார்கள். நேர்மையற்ற வியாபாரிகள் தங்களுடைய வாடிக்கையாளரை ஏமாற்றவும் மோசடி செய்யவும் கள்ளத் தராசு வைத்திருந்தார்கள், இரண்டு விதமான எடைக்கற்களை உபயோகித்தார்கள். * இப்படிப்பட்ட பழக்கங்களை யெகோவா வெறுக்கிறார்! அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டுமானால் நேர்மையற்ற வியாபாரப் பழக்கங்கள் அனைத்தையும் நாம் அறவே தவிர்க்க வேண்டும்.
16, 17. இன்றைய உலகில் காணப்படும் நேர்மையற்ற சில செயல்கள் யாவை, உண்மைக் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய உறுதிபூண்டிருக்கிறார்கள்?
16 எங்கு பார்த்தாலும் நேர்மையின்மை இருப்பதில் ஆச்சரியமே இல்லை, இந்த உலகம் சாத்தானின் பிடியில்தானே இருக்கிறது! நாணயமாக நடப்பது நமக்கு தினம்தினம் சோதனையாக இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்கையில் பொதுவாக பொய்த் தகவல் அளிப்பதும் மிகைப்படுத்தி எழுதுவதும் இந்த உலகில் வழக்கம்; அதாவது தகுதிகள் இருப்பதாகவோ முன்னனுபவம் பெற்றிருப்பதாகவோ போலி சான்றிதழ் அளிப்பதும் வழக்கம். குடியேற்ற விண்ணப்பப் படிவங்கள், வரி செலுத்துவதற்கான படிவங்கள், காப்பீடு பெறுவதற்கான படிவங்கள், இன்னபிற படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது தங்களுடைய காரியம் நடக்க மக்கள் பொதுவாக தவறான தகவல்களைத் தருகிறார்கள். மாணவர்கள் பலர் பரிட்சைகளில் காப்பி அடிக்கிறார்கள், அல்லது கட்டுரைகளோ அறிக்கைகளோ தயாரிக்கும்போது இன்டர்நெட்டில் வேறு யாரோ வெளியிட்டிருக்கும் தகவலை அப்படியே காப்பியடித்து தங்கள் சொந்த தகவலாக அளிக்கிறார்கள். ஊழல் செய்யும் அதிகாரிகளிடத்தில் தங்கள் காரியத்தைச் சாதிப்பதற்காக மக்கள் பெரும்பாலும் லஞ்சம் கொடுக்கிறார்கள். இந்த உலகில் அநேகர், “சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, . . . நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக” இருக்கும்போது இப்படிப்பட்ட செயல்கள் இருக்கத்தானே செய்யும்!—2 தீமோத்தேயு 3:1-5.
17 இப்படிப்பட்ட எந்தப் பழக்கங்களிலும் ஈடுபடக்கூடாது என்பதில் உண்மைக் கிறிஸ்தவர்கள் உறுதியாயிருக்கிறார்கள். நேர்மையாக வாழ்வது சில சமயங்களில் சவாலாகத் தெரியலாம். ஏனென்றால், நேர்மையற்ற வழியில் நடப்பவர்கள் வெற்றி பெறுவதுபோல் தோன்றலாம், ஏன், எல்லா வசதிவாய்ப்புகளும் அவர்களுக்குக் கிடைப்பதுபோல் தோன்றலாம். (சங்கீதம் 73:1-8) ஆனால், கிறிஸ்தவர்கள் “எல்லாவற்றிலும்” நேர்மையாக நடப்பதால் பணக்கஷ்டத்தில் அவதிப்படலாம். நேர்மையாக நடக்க நாம் செய்யும் தியாகங்கள் தகுதியானவையா? ஆம், தகுதியானவை! ஏன்? நேர்மையாக நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
நேர்மையால் விளையும் நன்மை
18. நாணயமானவர் எனப் பெயர் எடுப்பது ஏன் அதிமுக்கியம்?
18 நாணயமானவர், நம்பகமானவர் என நற்பெயர் வாங்குவதைவிட மதிப்புமிக்க ஒன்று இல்லை. (“ எல்லா சமயங்களிலும் நான் நேர்மையாக நடக்கிறேனா?” என்ற பெட்டியைப் பக்கம் 191-ல் காண்க.) இதை யோசித்துப் பாருங்கள்: இப்படிப்பட்ட நற்பெயரை யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; திறமையோ, செல்வமோ, வசீகரத் தோற்றமோ, சமுதாயப் பின்னணியோ அவசியமில்லை, ஏன், உங்கள் சக்திக்கு மீறிய வேறு எதுவுமே அவசியமில்லை. இருந்தாலும், நிறைய பேர் நற்பெயர் என்ற பொக்கிஷத்தை சம்பாதிக்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால், இது ஓர் அரிய பொக்கிஷம்! (மீகா 7:2) நீங்கள் நேர்மையாக நடப்பதைப் பார்த்து சிலர் கேலி செய்யலாம்; சிலரோ உங்களைப் பாராட்டி, உங்கள்மீது நம்பிக்கை வைக்கலாம், உங்களுக்கு மதிப்புமரியாதை கொடுக்கலாம். யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் நேர்மையாக நடப்பதால் பொருளாதார ரீதியிலும் பயனடைந்திருக்கிறார்கள். நேர்மையற்ற நபர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டபோது, அவர்கள் வேலை இழக்கவில்லை; நேர்மையுள்ள ஆட்கள் உடனடியாகத் தேவைப்பட்ட இடங்களில் அவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது.
19. எப்போதும் நேர்மையாக நடப்பது நம் மனசாட்சியையும் யெகோவாவுடன் உள்ள பந்தத்தையும் எப்படிப் பாதிக்கும்?
19 இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, நேர்மையாக நடப்பதால் பெரும் நன்மைகள் கிடைப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். “எங்களுக்குச் சுத்தமான மனசாட்சி இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம்” என்று சொன்ன பவுலைப் போல உங்களுக்கும் சுத்தமான மனசாட்சி இருக்கும். (எபிரெயர் 13:18) நம் அன்புள்ள பரலோகத் தகப்பன் உங்கள் நல்நடத்தையைக் கவனிக்கத் தவறமாட்டார், நேர்மையுள்ளோரை அவர் நேசிக்கிறார். (சங்கீதம் 15:1, 2-ஐயும் நீதிமொழிகள் 22:1-ஐயும் வாசியுங்கள்.) ஆம், நேர்மையாக வாழ்ந்தால், நீங்கள் கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள், அதைவிட பெரிய வெகுமதி வேறெதுவும் இல்லை. அதோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்; அதுதான், வேலையைப் பற்றிய யெகோவாவின் கண்ணோட்டம்.
^ பாரா. 9 கிறிஸ்தவ சபையில், மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யும் எண்ணத்தில் ஒருவர் தொடர்ந்து அபாண்டமாக பொய் சொல்லி வந்தால் மூப்பர்கள் அவர்மீது நீதிவிசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம்.
^ பாரா. 14 தொழில் செய்கிறவர்களுக்கு இடையே பிரச்சினைகள் வந்தால் என்ன செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள பிற்சேர்க்கையில் பக்கங்கள் 254-255-ஐக் காண்க.
^ பாரா. 15 வாங்குவதற்கென்று ஒருவித எடைக்கல்லையும் விற்பதற்கென்று வேறுவித எடைக்கல்லையும் வியாபாரிகள் பயன்படுத்தினார்கள்; இதனால் இரண்டு வகையிலும் அவர்களுக்கே லாபம் கிடைத்தது. அதோடு, வாடிக்கையாளரை ஏமாற்றுவதற்காக தராசின் ஒரு பக்கத்தை மற்றொன்றைவிட நீளமாக அல்லது கனமாக வைத்திருந்தார்கள்.