கதை 54
மிகவும் பலமுள்ள மனிதன்
இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிக மிக பலமுள்ள நபரின் பெயர் உனக்குத் தெரியுமா? அவர் பெயர் சிம்சோன், அவர் ஒரு நியாயாதிபதி. சிம்சோனுக்கு இத்தனை பலத்தைக் கொடுத்தது யார் தெரியுமா? யெகோவா தேவன்தான். சிம்சோன் பிறப்பதற்கு முன்பாகவே யெகோவா அவருடைய அம்மாவிடம்: ‘சீக்கிரத்தில் உனக்கு ஒரு மகன் பிறப்பான். இஸ்ரவேலை பெலிஸ்தரிடமிருந்து அவன் விடுவிப்பான்’ என்று சொல்கிறார்.
கானானில் வாழ்கிற கெட்ட ஜனங்கள்தான் பெலிஸ்தர். அவர்களிடம் ஏராளமான போர் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேலருக்கு நிறைய கெடுதல் செய்கிறார்கள். ஒருநாள் பெலிஸ்தர் வாழ்கிற இடத்திற்கு சிம்சோன் போய்க் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பெரிய சிங்கம் அவரை நோக்கி கர்ஜித்துக்கொண்டு வருகிறது. எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கையாலேயே அந்தச் சிங்கத்தை அவர் கொன்று விடுகிறார். அதுமட்டுமல்ல, நூற்றுக்கணக்கான கெட்ட பெலிஸ்தரையும் கொன்றுவிடுகிறார்.
பிற்பாடு, தெலீலாள் என்ற ஒரு பெண்ணை சிம்சோன் காதலிக்கிறார். பெலிஸ்திய அதிபதிகள் சிம்சோனுக்கு இவ்வளவு பலம் எப்படி வந்தது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆகவே அதைக் கண்டுபிடிக்கும்படி தெலீலாளிடம் சொல்கிறார்கள். அப்படிக் கண்டுபிடித்துச் சொன்னால் ஒவ்வொருவரும் அவளுக்கு 1,100 வெள்ளிக் காசுகளைக் கொடுப்பதாக வாக்குக் கொடுக்கிறார்கள். அந்தப் பணம் முழுவதையும் பெற்றுக்கொள்ள தெலீலாள் ரொம்ப ஆசைப்படுகிறாள். அவளுக்கு சிம்சோன் மீது உண்மையான அன்பு இல்லை, கடவுளுடைய ஜனங்கள் மீதும் அன்பு இல்லை. அதனால் எப்படி இவ்வளவு பலம் வந்ததென்று சிம்சோனை சதா நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள்.
கடைசியாக, அவளுடைய நச்சரிப்பு தாங்காமல் சிம்சோன் தன் பலத்தின் இரகசியத்தை சொல்லி விடுகிறார். ‘இதுவரைக்கும் என் தலைமுடி வெட்டப்பட்டதே இல்லை. நான் பிறந்தது முதல், கடவுள் என்னை ஒரு நசரேயனாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அதாவது அவருடைய விசேஷ ஊழியனாக தேர்ந்தெடுத்திருக்கிறார். என் முடியை வெட்டினால், என் பலமெல்லாம் போய்விடும்’ என்று சொல்கிறார்.
இதைத் தெரிந்ததும் சிம்சோனை தெலீலாள் மடியில் தூங்க வைக்கிறாள். பின்பு ஒரு ஆளை உள்ளே கூப்பிட்டு அவருடைய முடியை வெட்டிவிடுகிறாள். சிம்சோன் தூங்கியெழும்புகிறபோது தன் பலம் முழுவதும் போயிருப்பதை உணருகிறார். அப்பொழுது பெலிஸ்தர் உள்ளே வந்து அவரைச் சிறைபிடித்துச் செல்கிறார்கள். அவருடைய இரண்டு கண்களையும் பிடுங்கி, அவரை அடிமையாக ஆக்குகிறார்கள்.
ஒருநாள் பெலிஸ்தர் தங்கள் கடவுளான தாகோனுக்கு ஒரு பெரிய விருந்து கொண்டாடுகிறார்கள். அந்த விருந்துக்கு 3,000 பெலிஸ்தர் வந்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் சிம்சோனை கேலி பண்ணுவதற்காக அவரைச் சிறையிலிருந்து கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சிம்சோனின் முடி மறுபடியும் வளர்ந்துவிட்டிருக்கிறது. ஒரு பையன் சிம்சோனின் கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு வருகிறான். அவனிடம் சிம்சோன்: ‘இந்தக் கட்டிடத்தின் தூண்களை நான் தொட்டுப் பார்க்க வேண்டும்’ என்று கேட்கிறார். பின்பு யெகோவாவிடம் தனக்குப் பலம் தரும்படி ஜெபித்துவிட்டு அந்தத் தூண்களைப் பிடித்துக்கொள்கிறார். ‘பெலிஸ்தரோடு சேர்ந்து நானும் செத்துப் போகிறேன்’ என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு தன் முழு பலத்தினால் அந்தத் தூண்களைச் சாய்க்கிறார், அப்போது அந்தக் கட்டிடம் இடிந்து விழுகிறது, அங்கிருந்த எல்லாக் கெட்ட ஜனங்களும் செத்துப் போகிறார்கள்.
நியாயாதிபதிகள் 13-16 அதிகாரங்கள்.