வெள்ளிக்கிழமை புதைக்கப்படுகிறார்—ஞாயிற்றுக்கிழமை ஒரு காலியான கல்லறை
அதிகாரம் 127
வெள்ளிக்கிழமை புதைக்கப்படுகிறார்—ஞாயிற்றுக்கிழமை ஒரு காலியான கல்லறை
இப்போது வெள்ளிக்கிழமை பிற்பகலின் பிற்பகுதி, நிசான் 15-ன் ஓய்வு நாள் சூரிய அஸ்தமனத்தின் போது ஆரம்பமாகும். இயேசுவின் மரித்த உடல் கழுமரத்தில் வலுவற்று தொங்குகிறது, ஆனால் அவர் பக்கத்தில் இருந்த இரண்டு கள்ளர்களும் இன்னும் உயிரோடிருக்கின்றனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆயத்தம் என்றழைக்கப்படுகிறது, ஏனென்றால் ஓய்வுநாளுக்குப் பிறகு காத்திருக்க முடியாத அவசரமான வேலைகள், மேலும் உணவு தயாரிப்பது போன்ற காரியங்களைச் செய்வதற்காக இது ஒதுக்கப்படுகிறது.
விரைவில் ஆரம்பிக்கப் போகும் ஓய்வுநாள் ஒழுங்காக அனுசரிக்கப்படும் ஓய்வுநாள் மட்டுமல்ல (வாரத்தின் ஏழாம் நாள்) ஆனால் ஓர் இரட்டை ஓய்வுநாள் அல்லது “பெரிய” ஓய்வுநாளாகவும் இருக்கிறது. இது இவ்வாறு அழைக்கப்படுகிறது ஏனென்றால் ஏழு-நாள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் முதல் நாளாகிய நிசான் 15, (வாரத்தின் எந்த நாளில் அது வந்தாலும் சரி, அது எப்போதும் ஓர் ஓய்வுநாளாயிருக்கிறது) ஒழுங்கான ஓய்வுநாள் வரும் அதே நாளில் வருகிறது.
கடவுளுடைய சட்டத்தின்படி, கழுமரத்தின் மேல் உடல்கள் ஓர் இரவு முழுவதும் தொங்கியிருக்கும்படி விடக்கூடாது. ஆகையால் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களின் கால்களை முறிப்பதன் மூலம் அவர்களுடைய மரணத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று யூதர்கள் பிலாத்துவை கேட்கின்றனர். ஆகையால், போர்ச்சேவகர்கள் இரண்டு கள்ளர்களின் கால்களை முறிக்கின்றனர். ஆனால் இயேசு மரித்தவர் போல் தோன்றியதால் அவருடைய கால்கள் முறிக்கப்படவில்லை. இது பின்வரும் வேதவசனத்தை நிறைவேற்றுகிறது: “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.”
என்றபோதிலும், இயேசு உண்மையிலேயே மரித்துவிட்டாரா என்ற சந்தேகத்தை நீக்குவற்கு போர்ச்சேவகர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்துகிறான். அந்த ஈட்டி அவருடைய இருதயம் இருக்கும் பாகத்தை குத்துகிறது, உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வருகிறது. இதை கண்கூடாகக் கண்ட அப்போஸ்தலனாகிய யோவான், இது மற்றொரு வேதவசனத்தை நிறைவேற்றுகிறது என்று அறிக்கையிடுகிறான்: “தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள்.”
அரிமத்தியா என்ற பட்டணத்தில் இருந்து வந்தவனும், நியாயசங்கத்தின் ஒரு மதிப்புவாய்ந்த அங்கத்தினராகவும் இருக்கும் யோசேப்பும் கொலை நடந்த இடத்தில் இருக்கிறான். இயேசுவுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தண்டனைக்கு ஆதரவாக வாக்களிக்க அவன் மறுத்து விட்டான். யோசேப்பு உண்மையில் இயேசுவின் ஒரு சீஷனாக இருக்கிறான், என்றாலும் தன்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் காண்பிக்க அவன் பயப்பட்டுக் கொண்டிருந்தான். இருந்தபோதிலும், இப்போது அவன் தைரியத்துடன் பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலைக் கேட்கிறான். பொறுப்பில் இருக்கும் நூற்றுக்கு அதிபதியை பிலாத்து வரவழைக்கிறான், இயேசு மரித்து விட்டார் என்று அந்த அதிகாரி உறுதி செய்த பின்பு பிலாத்து அந்தப் பிணத்தை ஒப்படைக்கிறான்.
அடக்கம் செய்வதற்கு தயாரிப்பதற்காக யோசேப்பு உடலை எடுத்துக் கொண்டு போய் சுத்தமான மெல்லிய துணியினால் அதைச் சுற்றுகிறான். மற்றொரு நியாயசங்கத்து அங்கத்தினனான நிக்கொதேமு இவனுக்கு உதவி செய்கிறான். நிக்கொதேமுவும் கூட தன் ஸ்தானத்தை இழந்துவிடும் பயத்தில் இயேசுவில் தன் விசுவாசத்தைக் காண்பிக்க தவறி விடுகிறான். ஆனால் இப்போது அவன் நூறு ராத்தல் (33 கிலோகிராம்) வெள்ளைப் போளமும் கரிய போளமும் அடங்கிய ஓர் உருளையைக் கொண்டு வருகிறான். இந்த நறுமணப் பொருட்கள் அடங்கிய கட்டுகளினால் இயேசுவின் உடல் சுற்றி வைக்கப்படுகிறது, அடக்கம் செய்வதற்கு உடல்களைத் தயாரிக்கும் யூதர்கள் கொண்டிருக்கும் அதே பழக்கத்தின்படி இது செய்யப்படுகிறது.
பின்பு அருகில் இருக்கும் தோட்டத்தில் உள்ள பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் யோசேப்பின் புதிய ஞாபகார்த்த கல்லறையில் உடல் வைக்கப்படுகிறது. இறுதியில், கல்லறைக்கு எதிரே ஒரு பெரிய கல் உருட்டி வைக்கப்படுகிறது. ஓய்வுநாளுக்கு முன்பு அடக்கத்தை நிறைவேற்றுவதற்கு உடல் அவசரமாக தயாரிக்கப்படுகிறது. ஆகையால், தயாரிப்பு செய்வதில் உதவி செய்துகொண்டிருந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபின் தாயாகிய மரியாளும் இன்னுமதிகமான நறுமணப் பொருட்களையும், நறுமணத் தைலங்களையும் கொண்டு வருவதற்கு வீட்டுக்கு விரைந்து செல்கின்றனர். ஓய்வுநாளுக்குப் பிறகு, இயேசுவின் உடலை நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பதற்கு இன்னுமதிகமாக தயாரிக்க அவர்கள் திட்டமிடுகின்றனர்.
அடுத்த நாளாகிய சனிக்கிழமையன்று (ஓய்வுநாள்) பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று இவ்வாறு சொல்கின்றனர்: “ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும் போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப் பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும்.”
“உங்களுக்குக் காவல் சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பிலாத்து பதிலளிக்கிறான். ஆகையால் அவர்கள் சென்று கல்லுக்கு முத்திரை போடுவதன் மூலமும், ரோம போர்ச்சேவகர்களைக் காவல் சேவகர்களாக நிறுத்துவதன் மூலமும் கல்லறையை பாதுகாப்பாக ஆக்குகின்றனர்.
ஞாயிறு அதிகாலை மகதலேனா மரியாள், யாக்கோபுவின் தாயாகிய மரியாள், சலோமே, யோவன்னாள் ஆகியோரோடுங்கூட மற்ற பெண்களும் இயேசுவின் உடலை தயாரிப்பதற்கு நறுமணப் பொருட்களை கல்லறைக்கு கொண்டு வருகின்றனர். செல்லும் வழியில் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி இவ்வாறு சொல்கின்றனர்: “கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான்?” ஆனால் வந்து சேர்ந்த போது, ஒரு பூமியதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றும் யெகோவாவின் தூதன் கல்லை புரட்டித் தள்ளியிருக்கிறான் என்றும் அறியவருகின்றனர். காவல் சேவகர் போய் விட்டிருக்கின்றனர், கல்லறை வெறுமையாய் இருக்கிறது! மத்தேயு 27:57–28:2; மாற்கு 15:42–16:4; லூக்கா 23:50–24:3, 10; யோவான் 19:14, 31–20:1; 12:42; லேவியராகமம் 23:5–7; உபாகமம் 21:22, 23; சங்கீதம் 34:20; சகரியா 12:10.
▪ வெள்ளிக்கிழமை ஏன் ஆயத்தம் என்றழைக்கப்படுகிறது? “பெரிய” ஓய்வுநாள் என்றால் என்ன?
▪ இயேசுவின் உடல் சம்பந்தமாக என்ன வேதவசனங்கள் நிறைவேற்றமடைகின்றன?
▪ யோசேப்புக்கும் நிக்கொதேமுவுக்கும் இயேசுவின் அடக்கத்தில் என்ன பங்கு இருக்கிறது? இயேசுவோடு அவர்களுடைய உறவு என்ன?
▪ ஆசாரியர்கள் பிலாத்துவிடம் என்ன வேண்டுகோள் விடுக்கின்றனர்? அவன் எவ்வாறு பிரதிபலிக்கிறான்?
▪ ஞாயிறு அதிகாலை என்ன நடக்கிறது?