குருடனாகப் பிறந்த ஒரு மனிதனை சுகப்படுத்துதல்
அதிகாரம் 70
குருடனாகப் பிறந்த ஒரு மனிதனை சுகப்படுத்துதல்
யூதர்கள் இயேசுவை கல்லெறிய முயற்சி செய்த போது, அவர் எருசலேமை விட்டு செல்லவில்லை. பின்னர், ஓய்வு நாளின் போது அவரும் அவருடைய சீஷர்களும் பட்டணத்தில் நடந்து சென்று கொண்டிருக்கையில், பிறவியிலிருந்து குருடனாயிருக்கிற ஒரு மனிதனை காண்கிறார்கள். சீஷர்கள் இயேசுவை கேட்கின்றனர்: “ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ?”
ஓர் ஆள் தன் தாயின் கர்ப்பத்திலேயே பாவம் செய்யக்கூடும் என்று சில ரபீக்கள் நம்புவது போல, சீஷர்களும் ஒருவேளை அவ்வாறு நம்புகின்றனர். ஆனால் இயேசு பதிலளிக்கிறார்: “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்.” அந்த மனிதனின் குருட்டுத்தன்மை, அவனோ அல்லது அவனுடைய பெற்றோர்களோ செய்த பாவம் அல்லது குறிப்பிட்ட தவறினால் ஏற்பட்ட விளைவு அல்ல. முதல் மனிதனாகிய ஆதாமின் பாவம் எல்லா மானிடர்களும் அபூரணராவதில் விளைவடைந்தது. ஆகையால் பிறவியிலேயே குருடனாகப் பிறப்பதைப் போன்ற குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர். மனிதனில் இருக்கும் இந்தக் குறைபாடு, கடவுளுடைய கிரியைகளை வெளிப்படுத்துவதற்கு இயேசுவுக்கு ஒரு வாய்ப்பை இப்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இப்பேர்ப்பட்ட கிரியைகளைச் செய்வதில் ஓர் அவசரத் தன்மையை இயேசு அழுத்திக் காட்டுகிறார். “பகற்காலமிருக்கு மட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். விரைவில் இயேசுவின் மரணம், அவர் இனிமேலும் எந்தக் காரியத்தையும் செய்யமுடியாத பிரேதக்குழியின் இருளுக்குள் அவரைத் தள்ளிவிடும். அதுவரை அவர் உலகத்துக்கு ஒளியூட்டுவதற்கு ஊற்றுமூலமாயிருக்கிறார்.
இந்தக் காரியங்களையெல்லாம் சொல்லிய பின்பு, இயேசு தரையிலே துப்பி, உமிழ் நீரினால் களிமண் உண்டாக்குகிறார். இதை அவர் குருடனின் கண்களில் போட்டு சொல்கிறார்: “நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு.” அந்த மனிதன் கீழ்ப்படிகிறான். அவன் அவ்வாறு செய்த போது, அவனால் பார்க்க முடிந்தது! அவனுடைய வாழ்க்கையில் முதல் தடவையாக பார்த்த போது, அவன் திரும்பி வருகையில் எவ்வாறு சந்தோஷப்படுகிறான்!
அவனுடைய அயலகத்தாரும், அவனை அறிந்திருந்த மற்றவர்களும் வியப்படைகின்றனர். “இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவனல்லவா?” என்று அவர்கள் கேட்கின்றனர். “அவன் தான்” என்று சிலர் பதிலளிக்கின்றனர். ஆனால் மற்றவர்களால் அதை நம்ப முடியவில்லை: “அவனுடைய சாயலாயிருக்கிறான்.” என்றபோதிலும் அந்த மனிதன் சொல்கிறான்: “நான் தான் அவன்.”
“உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது?” என்று ஜனங்கள் அறிய விரும்புகின்றனர்.
“இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின் மேல் பூசி, நீ போய் ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன்.”
“அவர் எங்கே?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
“எனக்குத் தெரியாது” என்று அவன் பதிலளிக்கிறான்.
ஜனங்கள் இப்பொழுது, ஒரு சமயம் குருடனாயிருந்த மனிதனை தங்களுடைய மதத் தலைவர்களாகிய பரிசேயர்களிடம் வழிநடத்துகின்றனர். அவன் எவ்வாறு பார்வையடைந்தான் என்று அவர்களும் கேட்கின்றனர். “அவர் என் கண்களின் மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன்” என்று அந்த மனிதன் விளக்குகிறான்.
நிச்சயமாகவே, பரிசேயர்கள் குணமாக்கப்பட்ட பிச்சைக்காரனோடு சேர்ந்து சந்தோஷப்பட வேண்டும்! ஆனால் மாறாக, அவர்கள் இயேசுவை கண்டனம் செய்கின்றனர். “அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல” என்று அவர்கள் உரிமை பாராட்டிக் கொள்கின்றனர். அவர்கள் ஏன் இதைச் சொல்கின்றனர்? “அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால்.” இன்னும் வேறு சில பரிசேயர்கள் ஆச்சரியப்படுகின்றனர்: “பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான்?” ஆகையால் அவர்களுக்குள்ளே ஒரு பிரிவினை உண்டாகிறது.
எனவே, அவர்கள் அந்த மனிதனை கேட்கின்றனர்: “உன் கண்களைத் திறந்தானே, அவனைக் குறித்து நீ என்ன சொல்லுகிறாய்?”
“அவர் தீர்க்கதரிசி” என்று அவன் பதிலளிக்கிறான்.
பரிசேயர்கள் இதை நம்ப மறுக்கின்றனர். ஜனங்களை ஏமாற்றுவதற்கு இயேசுவுக்கும் இந்த மனிதனுக்குமிடையே ஏதோ ஓர் இரகசிய ஒப்பந்தம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவர்கள் உறுதியாய் நம்புகின்றனர். ஆகையால் இவ்விஷயத்தை தெளிவாக்குவதற்கு, பிச்சைக்காரனின் பெற்றோர்களை கேள்வி கேட்பதற்கு அழைக்கின்றனர். யோவான் 8:59; 9:1–18.
▪ அந்த மனிதனின் குருட்டுத்தன்மைக்கு எது காரணமாயிருக்கிறது, எது காரணமாயில்லை?
▪ ஒரு மனிதனும் வேலை செய்யக்கூடாத இரவு என்ன?
▪ அந்த மனிதன் குணமானபோது, அவனை அறிந்திருக்கிறவர்களின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கிறது?
▪ அந்த மனிதன் குணமடைந்ததன் பேரில் பரிசேயர்கள் எவ்வாறு பிரிவுபட்டிருக்கின்றனர்?