கலியாண விருந்தைப் பற்றிய உவமை
அதிகாரம் 107
கலியாண விருந்தைப் பற்றிய உவமை
இரண்டு உவமைகளின் மூலம், இயேசு வேதபாரகர் மற்றும் பிரதான ஆசாரியர்களின் குற்றத்தை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் இயேசு அவர்களிடம் பேசவேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது. அவர் அவர்களுக்கு மற்றொரு உவமையை தொடர்ந்து சொல்கிறார்:
“பரலோக ராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ் செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச் சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.”
தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக ஒரு கலியாண விருந்தை தயாரிக்கும் ராஜா யெகோவா தேவன். இயேசுவை பின்பற்றும் 1,44,000 அபிஷேகம் பண்ணப்பட்டவர்களால் ஆன மணவாட்டி அவருடன் பரலோகத்தில் நாளடைவில் இணைக்கப்படுவர். ராஜாவின் பிரஜைகள் இஸ்ரவேல் ஜனங்கள். இவர்கள் பொ.ச.மு. 1513-ம் ஆண்டில் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குள் கொண்டுவரப்பட்டபோது, ‘ஆசாரிய ராஜ்யமாவதற்கு’ வாய்ப்பை பெற்றுக்கொண்டனர். ஆக, அந்தச் சமயத்தில், கலியாண விருந்துக்கான வரவேற்பு அவர்களுக்கு முதன்முதலாக கொடுக்கப்பட்டது.
என்றபோதிலும், வரவேற்கப்பட்டவர்களுக்கான முதல் அழைப்பு இயேசுவும் அவருடைய சீஷர்களும் (ராஜாவின் ஊழியக்காரர்) ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை ஆரம்பித்த பொ.ச. 29-ம் ஆண்டின் இலையுதிர்க்காலம் வரை கொடுக்கப்படவில்லை. ஆனால் பொ.ச. 29-லிருந்து பொ.ச. 33 வரை ஊழியக்காரரால் கொடுக்கப்பட்ட இந்த அழைப்பை பெற்ற மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர்கள் வருவதற்கு மனமில்லாதிருந்தனர். ஆகையால் கடவுள் அழைக்கப்பட்டவர்களின் தேசத்துக்கு மற்றொரு வாய்ப்பை அளித்தார். அதை இயேசு இவ்வாறு சொல்கிறார்:
“அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.” அழைக்கப்பட்டவர்களின் இந்த இரண்டாவதும் கடைசியுமான அழைப்பு பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டபோது ஆரம்பமானது. இந்த அழைப்பு பொ.ச. 36 வரை தொடர்ந்து கொடுக்கப்பட்டது.
பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் இந்த அழைப்பையும்கூட ஏளனமாகப் புறக்கணித்துவிட்டனர். இயேசு சொல்கிறார்: “அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டை பண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய் விட்டார்கள். மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலை செய்தார்கள்.” இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.” இது பொ.ச. 70-ம் ஆண்டில் ரோமர்களால் எருசலேம் தரைமட்டமாக்கப்பட்ட போது நிறைவேறியது. அந்தக் கொலைகாரர்கள் கொல்லப்பட்டனர்.
இடைநேரத்தில் என்ன நடந்தது என்பதை இயேசு அடுத்து விளக்குகிறார்: “அப்பொழுது, அவன் [ராஜா] தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச் சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான்.” ஊழியக்காரர்கள் இதைச் செய்தனர், “கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.”
அழைக்கப்பட்டவர்களின் நகரத்துக்கு வெளியே உள்ள சாலைகளிலிருந்து விருந்தாளிகளை கூட்டிச் சேர்க்கும் வேலை பொ.ச. 36-ல் ஆரம்பமானது. விருத்தசேதனம் செய்யப்படாத யூதரல்லாதவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவதில் ரோம இராணுவ அதிகாரியாகிய கொர்நேலியுவும் அவனுடைய குடும்பமும் முதலாவதாக இருந்தனர். இந்த யூதரல்லாதவர்கள், அனைவருமே முதலாவதாக கொடுக்கப்பட்ட அழைப்பை மறுத்தவர்களுக்கு பதிலாக வந்தார்கள். இவர்கள் சேர்க்கப்படுவதானது 20-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்திருக்கிறது.
கல்யாண சடங்குகளுக்கான அறை 20-ம் நூற்றாண்டின்போது தான் நிரம்புகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை இயேசு இவ்வாறு கூறுகிறார்: “விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டு போய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்.”
கலியாண வஸ்திரமில்லாதவனாய் இருக்கும் மனிதன், கிறிஸ்தவமண்டலத்தின் போலி கிறிஸ்தவர்களை படமாகக் குறிப்பிடுகிறான். ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக சரியான அடையாளத்தைக் கொண்டிருப்பவர்களாக இவர்களை கடவுள் ஒருபோதும் தெரிந்து கொள்ளவில்லை. ராஜ்ய உரிமையாளர்களாக அவர்களை பரிசுத்த ஆவியால் ஒருபோதும் அபிஷேகம்பண்ணவில்லை. ஆகையால் அவர்கள் புறம்பே இருளுக்குள் போடப்படுகின்றனர், அங்கே அவர்கள் அழிவுக்கு ஆளாவர்.
இயேசு பின்வருமாறு சொல்வதன் மூலம் தன் உவமையை முடிக்கிறார்: “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்.” ஆம், கிறிஸ்துவின் மணவாட்டி அங்கத்தினர்கள் ஆவதற்கு இஸ்ரவேல் தேசத்திலிருந்து அநேகர் அழைக்கப்பட்டிருந்தனர், ஆனால் வெகு சில மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். பரலோக வெகுமதியை பெற்றுக்கொள்ளும் 1,44,000 விருந்தினர்களில் அநேகர் இஸ்ரவேலரல்லாதவர்களாக இருக்கின்றனர். மத்தேயு 22:1–14; யாத்திராகமம் 19:1–6; வெளிப்படுத்துதல் 14:1–3.
▪ கலியாண விருந்துக்கு முதன்முதலாக அழைக்கப்பட்டவர்கள் யார், எப்போது அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது?
▪ அழைக்கப்பட்டவர்களுக்கு முதல் அழைப்பு எப்போது கொடுக்கப்படுகிறது, அதைக் கொடுப்பதற்கு உபயோகிக்கப்பட்ட ஊழியக்காரர்கள் யார்?
▪ இரண்டாவது அழைப்பு எப்போது கொடுக்கப்படுகிறது, அதற்குப் பிறகு யார் அழைக்கப்படுகின்றனர்?
▪ கலியாண வஸ்திரமில்லாத மனிதன் யாரை படமாகக் குறிப்பிடுகிறான்?
▪ அழைக்கப்பட்ட அநேகரும், தெரிந்துகொள்ளப்பட்ட சிலரும் யார்?