ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துவது எது?
அதிகாரம் 56
ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துவது எது?
இயேசுவுக்கு எதிர்ப்பு தீவிரமடைகிறது. அவருடைய சீஷர்களில் அநேகர் அவரை விட்டுப் போய்விட்டது மட்டுமல்லாமல், யூதேயாவிலிருந்த யூதர்கள் பொ.ச. 31-ன் பெந்தெகொஸ்தேவின் சமயத்தில் அவர் எருசலேமிலிருந்தபோது செய்த வண்ணமாகவே, அவரைக் கொலைசெய்ய வகைத்தேடுகிறார்கள்.
இப்பொழுது பொ.ச. 32-ன் பெந்தெகொஸ்தேவாக இருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டபடி, கடவுளுடைய கட்டளைகளுக்கு இசைவாக ஆஜராயிருப்பதற்காக இயேசு எருசலேமில் பஸ்காவுக்காகச் செல்கிறார். என்றபோதிலும் ஜாக்கிரதையாக இதைச் செய்கிறார், ஏனென்றால் அவருடைய உயிர் ஆபத்திலிருக்கிறது. பின்னர் அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வருகிறார்.
எருசலேமிலிருந்து பரிசேயர்களும் வேதபாரகரும் இயேசுவினிடத்திற்கு வரும்போது அவர் ஒருவேளை கப்பர்நகூமிலிருக்க வேண்டும். மதசம்பந்தமான சட்டத்தை மீறியதற்காக அவரைக் குற்றஞ்சாட்டும்படிக்குக் காரணத்தை அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். “உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்?” என்று அவர்கள் கேட்கிறார்கள். ‘கைகழுவாமல் சாப்பிடுகிறார்கள்.’ இது கடவுள் தேவைப்படுத்தும் ஒன்றல்ல, என்றபோதிலும் பரிசேயர்கள், முழங்கை வரையிலுமாக கழுவுவதை உட்படுத்திய இந்தப் பாரம்பரிய ஆசாரத்தைச் செய்யாதிருப்பதை ஒரு வினைமையான குற்றமாகக் கருதுகிறார்கள்.
அவர்களுடைய குற்றச்சாட்டுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, இயேசு அவர்கள் கடவுளுடைய சட்டத்தைப் பொல்லாப்பாகவும் வேண்டுமென்றே மீறுகிறதையும் சுட்டிக்காட்டுகிறார். “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?” என்பதை அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். “‘உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக’ என்றும் ‘தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும்’ என்றும் தேவன் கற்பித்திருக்கிறாரே. நீங்களோ எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: ‘உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி அவன் தன் தகப்பனை கனம்பண்ண வேண்டியதில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்.”
ஆம், பணம், உடைமைகள் அல்லது கடவுளுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட எதுவும் ஆலயத்துக்குச் சொந்தமானது என்றும் வேறு எந்த நோக்கத்துக்கும் அது பயன்படுத்தப்பட முடியாது என்றும் பரிசேயர்கள் போதித்தார்கள். என்றபோதிலும், உண்மையில் அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கை அதை அர்ப்பணித்தவர்வசமே இருக்கிறது. இவ்விதமாக, ஒரு மகன் தன்னுடைய பணம் அல்லது உடைமை “கொர்பான்”—கடவுளுக்கு அல்லது ஆலயத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கை—என்பதாக வெறுமென சொல்வதன் மூலம், மிக மோசமான வறுமையிலிருக்கக்கூடிய வயதான தன் பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்துவிடுகிறான்.
கடவுளுடைய சட்டத்தைப் பரிசேயர்கள் பொல்லாப்பாய் திரித்துவழங்குவதைக் குறித்து எரிச்சலடைந்தவராய் இயேசு சொல்வதாவது: “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள். மாயக்காரரே, உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.”
பரிசேயர்கள் இயேசுவிடம் வினவுவதை அனுமதிக்கும் பொருட்டு ஜனங்கள் பின்னால் தங்கிவிட்டிருக்க வேண்டும். இப்பொழுது, இயேசு, அவர்களை கடுமையாக கண்டிக்கையில், பரிசேயர்களுக்கு எந்தப் பதிலும் இருக்கவில்லை. ஜனக்கூட்டத்தை அவர் தம் அருகே வரவழைத்து “எனக்கு செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்த மாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்” என்று சொல்கிறார்.
பின்னால் அவர்கள் ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கையில், அவருடைய சீஷர்கள் கேட்கிறார்கள்: “பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா?”
“என் பரம பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்” என்பதாக இயேசு பதிலளிக்கிறார். “அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.”
பேதுரு சீஷர்களின் சார்பாக, எது ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துகிறது என்பதைக் குறித்ததில் விளக்கத்தைக் கேட்டபோது இயேசு ஆச்சரியமடைந்தவராய் தோற்றமளிக்கிறார். “நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?” என்பதாக இயேசு பதிலளிக்கிறார். “வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது.”
இயேசு இங்கே வழக்கமான சுகாதாரத்தைத் தடை செய்யவில்லை. உணவை தயாரிப்பதற்கோ அல்லது சாப்பாடு சாப்பிடுவதற்கோ முன்பு ஒரு நபர் தன் கைகளைக் கழுவ வேண்டிய அவசியமில்லை என்பதாக அவர் தர்க்கித்துக் கொண்டில்லை. மாறாக, வேத ஆதாரமற்ற பாரம்பரியங்களை வற்புறுத்துவதன் மூலம் கடவுளுடைய நீதியான சட்டங்களைத் தவறாகச் சுற்றிவளைத்துப் பொருத்த முயற்சி செய்துகொண்டிருந்த மதத்தலைவர்களின் மாய்மாலத்தை அவர் கண்டித்துக்கொண்டிருக்கிறார். ஆம், பொல்லாத கிரியைகளே ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துகிறது, மேலும் இவை ஒரு நபரின் இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிறது என்பதாக இயேசு காண்பிக்கிறார். யோவான் 7:1; உபாகமம் 16:16; மத்தேயு 15:1–20, NW; மாற்கு 7:1–23; யாத்திராகமம் 20:12; 21:17; ஏசாயா 29:13.
▪ என்ன எதிர்ப்பை இயேசு இப்போது எதிர்ப்படுகிறார்?
▪ பரிசேயர்களின் குற்றச்சாட்டு என்ன? ஆனால் இயேசுவின் பிரகாரம், பரிசேயர்கள் எவ்விதமாக வேண்டுமென்றே கடவுளுடைய சட்டத்தை மீறுகிறார்கள்?
▪ ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துவதாக இயேசு வெளிப்படுத்தும் காரியங்கள் யாவை?