இக்கட்டிலுள்ளோருக்கு இரங்குதல்
அதிகாரம் 57
இக்கட்டிலுள்ளோருக்கு இரங்குதல்
பரிசேயரின் தன்னலத்தைச் சேவிக்கும் பாரம்பரியங்களுக்காக அவர்களை வெளிப்படையாய்க் கண்டனஞ்செய்த பின், இயேசு தம்முடைய சீஷர்களுடன் அவ்விடத்தைவிட்டுச் செல்கிறார். இதற்கு முன்னால் ஒரு சமயம் சற்று இளைப்பாறும்படி அவர்களுடன் தனித்துச் செல்ல அவர் முயன்றபோது ஜனக்கூட்டம் அவர்களைக் கண்டதால் அது தடைசெய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்பொழுது, தம்முடைய சீஷர்களுடன், அவர் வடக்கே பல மைல்கள் தூரத்திலுள்ள தீரு சீதோன் பிராந்தியங்களுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். இது இஸ்ரவேலின் எல்லைகளுக்கப்பால் இயேசு தம்முடைய சீஷர்களுடன் செல்லும் ஒரே பயணமெனத் தெரிகிறது.
தங்குவதற்கு ஒரு வீட்டைக் கண்டடைந்தப்பின், தங்கள் இருப்பிடத்தைப் பற்றி எவரும் அறிய தாம் விரும்புகிறதில்லையென இயேசு தெரிவிக்கிறார். எனினும், இஸ்ரவேலரல்லாதவரின் இந்தப் பிராந்தியத்திலும், அவர் கவனிப்புக்குத் தப்பிக்கொள்ள முடிகிறதில்லை. இங்கே சிரியாவின் பெனிக்கியாவில் பிறந்த ஒரு கிரேக்கப் பெண், அவரைக் கண்டு அவரிடம்: “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்” என மன்றாடத் தொடங்குகிறாள். எனினும், இயேசு, அவளுக்கு விடையாக ஒரு வார்த்தையும் சொல்கிறதில்லை.
முடிவில், அவருடைய சீஷர்கள் இயேசுவிடம்: “இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும்” என்று சொல்கிறார்கள். அவளைக் கவனியாமல் இருப்பதற்கான தம்முடைய காரணத்தை விளக்கி, இயேசு: “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல” என்று சொல்கிறார்.
எனினும், அந்தப் பெண் விட்டுவிடுகிறதில்லை. அவள் இயேசுவை அணுகி, அவர் முன் பணிகிறாள், “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்” என கெஞ்சுகிறாள்.
இந்தப் பெண்ணின் ஊக்கமான வேண்டுதலால் இயேசுவின் இருதயம் எவ்வளவாய்க் கனிவுற்றிருக்க வேண்டும்! எனினும், அவர், கடவுளுடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஊழியஞ்செய்ய வேண்டிய தம்முடைய முதல் பொறுப்பை மறுபடியும் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில், ஒருவேளை அவளுடைய விசுவாசத்தை சோதிக்க, மற்ற தேசத்தாரைக் குறித்த யூதரின் தப்பெண்ண நோக்கைக் குறிப்பிட்டு: “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என விவாதிக்கிறார்.
தம்முடைய இரக்கந்தோய்ந்த குரலின் தொனியாலும் முகபாவத்தாலும் இயேசு, யூதரல்லாதவரிடம் தமக்குள்ள சொந்தக் கனிவான உணர்ச்சிகளை நிச்சயமாகவே வெளிப்படுத்துகிறார். புறஜாதியாரைத் தப்பெண்ண வெறுப்புடன் நாய்களுக்கு ஒப்பிடுவதையுங்கூட அவர் கடுமை குறைத்து “நாய்க்குட்டிகள்” என குறிப்பிடுகிறார். அந்தப் பெண் கோபமடைவதற்கு மாறாக, இயேசு குறிப்பிட்ட யூத வெறுப்புச் சொல்லைச் சாதகமாகப் பயன்படுத்தி, “மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே” என்று இந்த மனத்தாழ்மையான குறிப்பைச் சொல்கிறாள்.
இயேசு பதிலளித்து: “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது,” என்று சொல்கிறார். அவ்வாறே நடக்கிறது! அவள் தன் வீட்டுக்குத் திரும்பிச்சென்ற போது, தன் மகள் முற்றிலும் சுகமடைந்து, படுக்கையின்மீதிருப்பதைக் காண்கிறாள்.
சீதோனின் கடற்கரை சார்ந்தப் பகுதியிலிருந்து, இயேசுவும் அவருடைய சீஷர்களும் யோர்தான் நதியின் தோற்றுமூலப் பகுதியிலிருந்த நாட்டை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் கலிலேயாக் கடலின் மேற்பகுதியில் ஓரிடத்தில் யோர்தானைக் கடந்து, கடலுக்குக் கிழக்கேயிருந்த தெக்கப்போலி பகுதிக்குள் பிரவேசிப்பதாகத் தெரிகிறது. அங்கே அவர்கள் ஒரு மலையின் மீது ஏறுகின்றனர். ஆனால் ஜனக்கூட்டம் அவர்களைக் கண்டு சப்பாணிகள், ஊனர், குருடர், ஊமையரையும், மற்றபடி நோய்வாய்ப்பட்டிருந்தவர்களையும் ஊனமுமடைந்த பலரையும் இயேசுவினிடம் கொண்டுவருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் அவர்களை இயேசுவின் பாதத்தில் எறிவதுபோல் போடுகிறார்கள். அவர் அவர்களைச் சுகப்படுத்துகிறார். ஊமையர் பேசுகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் காண்கையில் ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள்.
செவிடனும் பேசக்கூடாதவனுமாயிருக்கும் ஒரு மனிதனுக்கு இயேசு தனிப்பட்ட கவனம் செலுத்துகிறார். செவிடர் பெரும்பாலும் எளிதில் மனத்தடுமாற்றமடைகின்றனர், முக்கியமாய் ஒரு கூட்டத்தில் அவ்வாறாகின்றனர். இயேசு இந்த மனிதனின் குறிப்பிட்ட கோழைத்தனத்தைக் கவனித்திருக்கலாம். ஆகையால் இயேசு இரக்கத்துடன் அவனைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் செல்கிறார். தனியே இருக்கையில், தாம் அவனுக்குச் செய்யப்போவதை இயேசு குறிப்பாகத் தெரிவிக்கிறார். அவர் தம் விரல்களை அந்த மனிதனின் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொடுகிறார். பின்பு, வானத்தை அண்ணாந்து பார்த்து, இயேசு, ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “திறக்கப்படுவாயாக” என்று சொல்கிறார். உடனடியாக, அந்த மனிதன் கேட்கும் ஆற்றலை திரும்பப் பெறுகிறான், அவன் வழக்கப்படி இயல்பாய்ப் பேசமுடிகிறவனாகிறான்.
இந்தப் பல சுகப்படுத்தல்களை இயேசு நடப்பித்தப் பின்பு, அந்த ஜனக்கூட்டம்: “எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் பண்ணுகிறார்” என்று போற்றுதலோடு சொன்னார்கள். மத்தேயு 15:21–31; மாற்கு 7:24–37.
▪ அந்தக் கிரேக்கப் பெண்ணின் பிள்ளையை இயேசு ஏன் உடனடியாகச் சுகப்படுத்தவில்லை?
▪ அதன்பின், இயேசு தம்முடைய சீஷர்களை எங்கே அழைத்துச் செல்கிறார்?
▪ பேசமுடியாதிருந்த அந்தச் செவிடனான மனிதனை இயேசு எவ்வாறு இரக்கமாய் நடத்துகிறார்?