ஆலயத்துக்கு மறுபடியும் செல்கிறார்
அதிகாரம் 103
ஆலயத்துக்கு மறுபடியும் செல்கிறார்
எரிகோவிலிருந்து வந்து சேர்ந்ததிலிருந்து இயேசுவும் அவருடைய சீஷர்களும் தங்களது மூன்றாவது இரவை பெத்தானியாவில் அப்போது தான் கழித்து முடித்திருக்கின்றனர். இப்போது திங்கள், நிசான் 10-ம் தேதியின் அதிகாலை வெளிச்சத்தில் எருசலேமுக்கு செல்லும் சாலையில் தங்களைக் காண்கின்றனர். இயேசு பசியாயிருக்கிறார். ஆகையால் இலைகளையுடைய ஓர் அத்தி மரத்தைக் கண்டபோது, அதில் அத்திப்பழங்கள் இருக்குமா என்பதைக் காண்பதற்கு அதனிடம் செல்கிறார்.
அத்திப்பழங்களின் இயல்பான காலம் ஜூன் மாதம், இப்போது மார்ச் மாத கடைசி ஆதலால் மரத்தின் இலைகள் அதன் இயல்பான காலத்துக்கு முன்பாகவே துளிர்த்திருக்கின்றன. என்றபோதிலும், இலைகள் முன்னமே வந்துவிட்டதால், அத்திப்பழங்களும் முன்னமே வந்திருக்கும் என்று இயேசு நினைக்கிறார். ஆனால் அவர் ஏமாற்றமடைகிறார். இலைகள் அந்த மரத்துக்கு ஏமாற்றமடையச் செய்யும் தோற்றத்தை கொடுத்திருக்கின்றது. இயேசு அப்போது மரத்தை சபித்து இவ்வாறு சொல்கிறார்: “இது முதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன்.” இயேசுவின் செயலின் விளைவுகளும், அதன் முக்கியத்துவமும் மறுநாள் காலைதான் விளங்குகின்றன.
இயேசுவும் அவருடைய சீஷர்களும் விரைவில் எருசலேம் வந்து சேருகின்றனர். தாம் அதற்கு முந்தின நாள் மதியம் பார்வையிட்ட ஆலயத்துக்கு அவர் செல்கிறார். ஆனால் இன்று அவர் நடவடிக்கை எடுக்கிறார், பொ.ச. 30-ம் ஆண்டில் மூன்று வருடங்களுக்கு முன்பு பஸ்காவுக்கு வந்தபோது அவர் செய்தது போலவே செய்கிறார். ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்தி விட்டு, காசுக்காரருடைய மேஜைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்துப் போடுகிறார். ஆலயத்தின் வழியாக எவருமே ஒரு பாத்திரத்தைக்கூட எடுத்துக் கொண்டு போக அவர் அனுமதிக்கவில்லை.
ஆலயத்தில் பணம் மாற்றுபவர்களையும், மிருகங்களை விற்கிறவர்களையும் கண்டிப்பவராய் அவர் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்.” அவர்கள் கள்ளர்கள், ஏனென்றால் பலியிடுவதற்கு தேவையான மிருகங்களை அவர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டிய நிலையில் இருப்பவர்களிடமிருந்து அவர்கள் மட்டுக்கு மீறிய விலைகளை வற்புறுத்திக் கேட்கின்றனர். ஆகையால் இயேசு இந்த வியாபார தொடர்புகளை, சட்டத்துக்குப் புறம்பான பணப் பறிப்பாக அல்லது கள்ளத்தனம் என்பதாகக் கருதுகிறார்.
பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர் மேலும் ஜனங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இயேசு செய்ததைக் கேட்டபோது, அவரைக் கொலை செய்வதற்கு மறுபடியும் வழி தேடுகின்றனர். இவ்வாறு அவர்கள் திருத்த முடியாதவர்கள் என்று தங்களை நிரூபிக்கின்றனர். என்றபோதிலும், இயேசுவை எவ்வாறு அழிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை, ஏனென்றால் எல்லா ஜனங்களும் அவருக்கு செவிகொடுத்துக் கேட்பதற்கு அவரோடே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றனர்.
இயற்கையான யூதர்கள் மட்டுமன்றி, புறஜாதியாரும் பஸ்காவுக்கு வந்திருக்கின்றனர். இந்தப் புறஜாதியார்கள் யூதர்களின் மதத்துக்கு மாறியவர்கள். இப்படி மதம் மாறிய சில கிரேக்கர்கள் இப்போது பிலிப்புவை அணுகி, இயேசுவை பார்க்க வேண்டுமென்று கேட்கின்றனர். பிலிப்பு அந்திரேயாவிடம் செல்கிறான், அப்பேர்ப்பட்ட சந்திப்பு பொருத்தமானதாயிருக்குமா என்று கேட்பதற்காக ஒருவேளை இருக்கலாம். இயேசு இன்னும் ஆலயத்திலேயே இருக்கிறார், கிரேக்கர்கள் அவரை அங்கு பார்க்க முடிகிறது.
வெகு சில நாட்கள் மட்டும் தாம் உயிரோடிருக்கப் போவதை இயேசு அறிந்திருக்கிறார், ஆகையால் அவர் தம்முடைய நிலைமையை நன்றாக சிறப்பித்துக் காண்பிக்கிறார்: “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்.”
ஒரு கோதுமை மணி குறைவான மதிப்புள்ளதாயிருக்கிறது. என்றபோதிலும், அதை நிலத்தில் போட்டு, ஒரு விதையாக அதனுடைய ஜீவனை முடித்துக் கொண்டு அது “மரித்துப்” போனால் என்ன? அப்போது அது முளை விடுகிறது, காலப்போக்கில் அநேக, அநேக கோதுமை மணிகளை விளைவிக்கும் ஒரு பயிராக வளர்கிறது. அதே போன்று, இயேசு ஒரு பரிபூரண மனிதனாக இருக்கிறார். ஆனால் அவர் கடவுளுக்கு உண்மையுள்ளவராக மரித்தால், அவருக்கிருக்கும் அதே சுய–தியாகமுள்ள ஆவியை உடைய உண்மையுள்ள நபர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்கு காரணராகி விடுகிறார். ஆகையால், இயேசு இவ்வாறு சொல்கிறார்: “தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக் கொள்ளுவான்.”
இயேசு தம்மைப் பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டில்லை என்பது தெளிவாக இருக்கிறது, ஏனென்றால் அவர் அடுத்து இவ்வாறு விளக்குகிறார்: “ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்.” இயேசுவைப் பின்பற்றி அவருக்கு ஊழியம் செய்ததற்காக என்னே ஒரு மகத்தான வெகுமதி! அது ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு கூட்டுறவு கொள்வதற்கு பிதாவால் கனப்படுத்தப்படும் வெகுமதியாகும்.
அவரை எதிர்நோக்கியிருக்கும் பெரும் துன்பத்தையும் வாதனையான மரணத்தையும் பற்றி சிந்தித்து, இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்னசொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும்.” அவருக்கு நேரிடப் போவது மட்டும் தவிர்க்கப்பட்டால்! ஆனால், இல்லை. “இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்” என்று அவர் சொல்கிறார். தம்முடைய சொந்த பலிக்குரிய மரணம் உட்பட கடவுளின் முழு ஏற்பாட்டோடும் இயேசு இணக்கமாய் இருக்கிறார். மத்தேயு 21:12, 13, 18, 19; மாற்கு 11:12–18; லூக்கா 19:45–48; யோவான் 12:20–27.
▪ அத்திப்பழங்களுக்கான காலம் அதுவாக இல்லாவிடினும் இயேசு ஏன் அவைகளை எதிர்பார்க்கிறார்?
▪ ஆலயத்தில் விற்பவர்களை “கள்ளர்கள்” என்று இயேசு ஏன் அழைக்கிறார்?
▪ என்ன விதத்தில் இயேசு மரித்துப் போகும் ஒரு கோதுமை மணியைப் போல் இருக்கிறார்?
▪ அவருக்கு நேரிடப்போகும் துன்பத்தையும் மரணத்தையும் பற்றி இயேசு எவ்வாறு உணருகிறார்?