Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர் தற்செயலாக தோன்ற முடியுமா?

உயிர் தற்செயலாக தோன்ற முடியுமா?

அதிகாரம் 4

உயிர் தற்செயலாக தோன்ற முடியுமா?

சார்ல்ஸ் டார்வின் தனது பரிணாமக் கொள்கையை முன்வைத்தபோது, உயிரை “சில உயிரினங்களில் அல்லது ஒரேவொரு உயிரினத்தில் . . . முதன்முதலில் படைப்பாளரே கொடுத்திருக்க வேண்டும்”1 என ஒப்புக்கொண்டார். ஆனால் தற்கால பரிணாமக் கொள்கையோ படைப்பாளரைப் பற்றி மூச்சுவிடுவதே கிடையாது. அதற்குப் பதிலாக, ஒருகாலத்தில் ஒதுக்கித்தள்ளப்பட்ட தன்னியல் உயிர்த்தோற்றம் (spontaneous generation) என்ற கொள்கை ஓரளவு மாறுபட்ட வடிவத்தில் மீண்டும் வலம் வருகிறது.

2பல நூற்றாண்டுகளாகவே மக்கள் ஏதோ ஒருவித தன்னியல் உயிர்த்தோற்றத்தில் நம்பிக்கை வைத்திருந்திருக்கின்றனர். பொ.ச. 17-⁠ம் நூற்றாண்டில் ஃபிரான்ஸிஸ் பேக்கன், வில்லியம் ஹார்வி போன்ற புகழ்பெற்ற அறிவியல் வல்லுனர்களும்கூட இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். எனினும், 19-⁠ம் நூற்றாண்டில் லூயி பாஸ்டரும் மற்ற விஞ்ஞானிகளும், உயிர் மற்றொரு உயிரிலிருந்து மட்டுமே வரமுடியும் என்று பரிசோதனைகளால் நிரூபித்தபோது இக்கொள்கைக்கு மரண அடி கிடைத்தது. இப்போது பரிணாமக் கொள்கைக்கு வேறு வழியில்லை. ஆகவே, வெகுகாலத்திற்கு முன்பு உயிரற்ற பொருளிலிருந்து நுண்ணுயிரிகள் எப்படியோ தானாகவே தோன்றின என்று அது ஊகித்துக் கொள்கிறது.

தன்னியல் உயிர்த்தோற்றத்தின் புது வடிவம்

3உயிரின் தொடக்கம் பற்றிய தற்போதைய பரிணாம கொள்கை, ரிச்சர்ட் டாக்கின்ஸ்ஸுடைய த செல்ஃபிஷ் ஜீன் என்ற புத்தகத்தில் சுருக்கிக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், அமோனியா, தண்ணீர் ஆகியவை இருந்ததென அவர் ஊகிக்கிறார். சூரிய ஒளியிலிருந்தும் ஒருவேளை மின்னல், எரிமலை வெடிப்புகள் ஆகியவற்றிலிருந்தும் கிடைத்த ஆற்றலினால் இந்த எளிய சேர்மங்கள் சிதைந்து, பின்னர் அமினோ அமிலங்களாக மீண்டும் ஒன்றுசேர்ந்தன. இவற்றில் பல வகைகள் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் சேர்க்கப்பட்டு பின்னர் புரதம் போன்ற சேர்மங்களாக இணைந்தன. இறுதியில் இந்தக் கடல் ஒரு ‘கரிம திரவமாக’ (“organic soup”) மாறியது ஆனால் உயிரற்றதாகவே இருந்ததென அவர் கூறுகிறார்.

4பிறகு டாக்கின்ஸ் விவரிக்கிறபடி, “ஒரு விபத்தினால் சிறப்புவாய்ந்த மூலக்கூறு ஒன்று உருவானது”; இது சுயமாக இனப்பெருக்கம் செய்துகொள்ளும் திறன் கொண்டது. அப்படிப்பட்ட விபத்து சம்பவிப்பது மிகவும் அரிது என அவரே ஒப்புக்கொண்டாலும் அது அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என அடித்துக் கூறுகிறார். ஒரே விதமான மூலக்கூறுகள் ஒன்றாக இணைகின்றன, பிறகு சாத்தியமற்ற மற்றொரு விபத்தினால் அவற்றைச் சுற்றி ஒரு சவ்வு உருவாகிறது; இந்தச் சவ்வு வேறு சில புரத மூலக்கூறுகளால் ஆன பாதுகாப்புச் சுவர் ஆகும். இவ்வாறுதான் முதல் உயிரணு தானாகவே உருவானது என சொல்லப்படுகிறது.2

5இந்தச் சந்தர்ப்பத்தில், டாக்கின்ஸ் தன் புத்தகத்தின் முகவுரையில் பின்வருமாறு ஏன் எழுதினார் என்பதை ஒரு வாசகர் புரிந்துகொள்ளலாம்: “இந்தப் புத்தகத்தை ஓர் அறிவியல் புனைக்கதையை வாசிப்பது போல வாசிக்க வேண்டும்.”3 ஆனால் இவ்விஷயம் பற்றிய அநேக புத்தகங்களை வாசிப்பவர்கள், இவ்வாறு விளக்குவது இவர் மட்டுமேயல்ல என்பதைக் காண்பர். பரிணாமம் பற்றிய பெரும்பாலான மற்ற புத்தகங்களும், உயிரற்ற பொருளிலிருந்து உயிர் தோன்றியதை விளக்கும் மிகச் சிக்கலான பிரச்சினையைத் தொட்டும் தொடாமலும் விட்டுவிடுகின்றன. இதன் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் பேராசிரியர் வில்லியம் தார்ப்பெ தன் சக விஞ்ஞானிகளிடம் சொன்னதாவது: “உயிர் தோன்றிய விதத்தை விவரித்து கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக அநேக கற்பனைகளும் கட்டுரைகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாமே மிகவும் அபத்தமானவை, எந்தவித மதிப்பும் இல்லாதவை என்பது தெளிவாகியுள்ளது. அன்றும் பிரச்சினையை தீர்க்க முடியாமல் பல மைல் தூரத்தில் இருந்தோம், இன்றும் அங்கேயேதான் இருக்கிறோம்.”4

6அண்மைக் காலத்தில் அறிவியல் அறிவு பெருமளவு அதிகரித்திருப்பதால் உயிருள்ளவற்றிற்கும் உயிரற்றவற்றிற்கும் மத்தியிலுள்ள இடைவெளி இன்னும் அகலமாகியுள்ளது. வெகு காலத்திற்கு முன்பே அறியப்பட்ட ஒரு செல் உயிரிகளும்கூட புரிந்துகொள்ள முடியாதளவு சிக்கல் வாய்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “வெகு காலத்திற்கு முந்தைய உயிரினங்கள்கூட சிக்கல் நிறைந்தவையே, எளியவை அல்ல என்பதே அறிவியலுக்கு இருக்கும் பிரச்சினை” என கூறுகின்றனர் வானவியல் வல்லுநர்கள் ஃபிரெட் ஹாய்ல் மற்றும் சந்திரா விக்ரமசிங்கே. “பழங்கால உயிரினங்களின் புதைப்படிவங்கள் எளியவையாக இல்லை. . . . ஆகவே பரிணாமக் கொள்கைக்கு தகுந்த ஓர் அஸ்திவாரம் இல்லை.”5 மேலும் அதிக விவரங்கள் கிடைக்கக் கிடைக்க, மிகவும் சிக்கல் வாய்ந்த நுண்ணுயிரிகள் தற்செயலாக எப்படி தோன்றியிருக்க முடியும் என விளக்குவது கடினமாகிக்கொண்டே போகிறது.

7பரிணாமக் கொள்கையின்படி உயிர் தோன்றியதற்கு வழிநடத்திய முக்கிய படிகள்: (1சாதகமான பண்டைக்கால வளிமண்டலமும் (2உயிருக்கு அவசியமான “எளிய” மூலக்கூறுகளாலான கரிம திரவம் சமுத்திரங்களில் அடர்த்தியாக சேர்ந்திருப்பதும் அவசியம். (3இவற்றிலிருந்து புரதங்களும் நியூக்ளியோட்டைடுகளும் (சிக்கல் வாய்ந்த ரசாயன சேர்மங்கள்) உருவாகின்றன; இவை (4ஒன்றாக இணைந்து ஒரு சவ்வை உண்டுபண்ணுகின்றன, அதன் பிறகு (5இவை ஒரு மரபணுக் குறியீட்டை (genetic code) வகுத்துக்கொண்டு நகல் எடுக்க ஆரம்பிக்கின்றன. ஆனால், கிடைக்கும் சான்றுகள் இந்தப் படிகளை ஆதரிக்கின்றனவா?

பண்டைக்கால வளிமண்டலம்

81953-⁠ல் ஸ்டான்லி மில்லர் என்பவர் ஆய்வகத்தில் ஒரு சோதனை செய்தார். ஹைட்ரஜன், மீத்தேன், அமோனியா, நீராவி ஆகியவை அடங்கிய ‘வளிமண்டலத்தில்’ ஒரு மின்பொறியைச் செலுத்தினார். இதன் விளைவாக இன்றுள்ள அமினோ அமிலங்களில் சில உண்டாயின. இவை புரதங்களை உண்டுபண்ணும் அடிப்படைக் கூறுகளாகும். உயிர் வாழ 20 அமினோ அமிலங்கள் தேவை. ஆனால் அவற்றில் 4-ஐ மட்டுமே அவரால் பெற முடிந்தது. இப்போது 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்படியிருந்தும், சாத்தியமானவை என கருதப்படும் நிலைமைகளிலும், அவசியமான இந்த 20 அமினோ அமிலங்களையும் விஞ்ஞானிகளால் இதுவரை சோதனைக்கூடத்தில் உண்டாக்க முடியவில்லை.

9மில்லர், தனது சோதனைக் குடுவையில் உபயோகித்த சேர்மங்களுக்கு ஒப்பாகவே பூமியின் பண்டைக்கால வளிமண்டலம் இருந்ததென ஊகித்துக்கொண்டார். ஏன்? ஏனென்றால், அவரும் அவருடைய சக ஆராய்ச்சியாளர் ஒருவரும் பின்னர் சொன்னதுபோல: “ஒடுக்கும் (reducing) நிலைமைகளில், [அதாவது ஆக்ஸிஜன் இல்லாத வளிமண்டலத்தில்] மட்டுமே உயிரியல் சேர்மங்கள் ஒன்றிணைவது நடைபெறுகிறது.”6 ஆனால் மற்ற பரிணாமவாதிகளோ ஆக்ஸிஜன் இருந்ததென ஊகிக்கின்றனர். இதனால் பரிணாமத்திற்கு ஏற்பட்டுள்ள இரண்டக நிலையை ஹிட்சிங் இவ்வாறு கூறினார்: “காற்றில் ஆக்ஸிஜன் இருந்திருந்தால் அந்த முதல் அமினோ அமிலம் உண்டாகியே இருக்காது; ஆக்ஸிஜன் இல்லையென்றால் அது காஸ்மிக் கதிர்களால் துடைத்தழிக்கப்பட்டிருக்கும்.”7

10பூமியின் பண்டைக்கால வளிமண்டலம் எப்படி இருந்ததென நிரூபிக்க முயலுவது வெறும் கற்பனையை அல்லது ஊகத்தை மட்டுமே சார்ந்தது. அது உண்மையில் எப்படி இருந்ததென யாருக்குமே தெரியாது.

“கரிம திரவம்” உண்டாகுமா?

11வளிமண்டலத்தில் உருவானதாக கூறப்படும் அமினோ அமிலங்கள் கீழே மிதந்து வந்து சமுத்திரங்களில் ஒரு ‘கரிம திரவத்தை’ உண்டுபண்ணுவதற்கு இருக்கும் வாய்ப்புகள் எவ்வளவு? வாய்ப்பே கிடையாது. வளிமண்டலத்திலுள்ள ஏதோவொரு ஆற்றல் எளிய சேர்மங்களை பிரித்தது என்றால், அதே ஆற்றல் சிக்கல் நிறைந்த எந்த அமினோ அமிலங்களையும் அதிவேகமாக சிதைத்துவிடும். ஆர்வமூட்டும் விஷயம் என்னவென்றால், ‘வளிமண்டலத்தினூடே’ மின்பொறியை செலுத்திய பரிசோதனையில், மில்லர் அந்த நான்கு அமினோ அமிலங்களையும் மின்பொறி ஏற்பட்ட இடத்திலிருந்து அகற்றிவிட்டார். அதனால்தான் அவற்றை பத்திரமாக பாதுகாக்க முடிந்தது. அங்கேயே விட்டுவைத்திருந்தார் என்றால் அந்தப் பொறி அவற்றை சிதைத்திருக்கும்.

12என்றபோதிலும், அழிக்கும் புறஊதாக் கதிர்களிலிருந்து அமினோ அமிலங்கள் எப்படியோ தப்பி சமுத்திரத்தை வந்தடைந்துவிட்டது என்றே வைத்துக்கொண்டாலும் என்ன நடந்திருக்கும்? ஹிட்சிங் விளக்கினார்: “கூடுதலான வேதிவினைகளை ஊக்குவிக்க தண்ணீருக்குள் போதுமான ஆற்றல் இருக்காது; எப்படியிருந்தாலும், அதிக சிக்கல் வாய்ந்த மூலக்கூறுகள் உருவாவதைத் தண்ணீர் தடைசெய்கிறது.”8

13ஆகவே, தண்ணீரிலுள்ள அமினோ அமிலங்கள் பெரிய மூலக்கூறுகளாக உருவாகி உயிர் தோன்ற உதவும் புரதங்களாக பரிணமிக்க வேண்டுமானால் அவை தண்ணீரைவிட்டு வெளியே வந்தாக வேண்டும். ஆனால் அவை தண்ணீரைவிட்டு வெளியே வந்தால் புறஊதாக் கதிர்களிடம் மாட்டிக்கொள்ளும்! “வேறு வார்த்தைகளில் சொன்னால், உயிர் பரிணமிப்பதில் முதலாவதும், ஓரளவு எளியதுமான [அமினோ அமிலங்கள் உருவாகும்] இந்தக் கட்டத்தைக் கோட்பாட்டளவில் கடப்பதுகூட மிகவும் கடினம்”9 என ஹிட்சிங் சொல்லுகிறார்.

14உயிர் சமுத்திரங்களில் தானாகவே தோன்றியதென பொதுவாக நம்பப்பட்டாலும், தண்ணீரோ அதற்கு தேவையான வேதிவினைகளை அனுமதிப்பதில்லை. வேதியியல் வல்லுனர் ரிச்சர்ட் டிக்கர்ஸன் விளக்குகிறார்: “எனவே ஆரம்பகால நீர் நிறைந்த சூழலில் பல்படியாக்கம் [சிறிய மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்து பெரிய மூலக்கூறுகள் உருவாதல் (polymerization)] நடைபெற்றிருக்க முடியுமா என்ற சந்தேகம் எழும்புகிறது. ஏனென்றால் தண்ணீர், பல்படியாக்கத்தைவிட ஒருபடியாக்கத்தையே [பெரிய மூலக்கூறுகள் சிதைந்து எளிய மூலக்கூறுகளாக ஆகுதல் (depolymerization)] ஊக்குவிக்கிறது.”10 உயிர்வேதியியல் வல்லுனர் ஜார்ஜ் வால்ட் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார்: “தானாக சிதைவதற்கே அதிக சாத்தியமிருக்கிறது. ஆகவே, தானாக ஒன்றிணைவதைவிட சிதைவதே அதிவேகமாக நடைபெறுகிறது.” அப்படியென்றால், கரிம திரவம் ஒன்றுசேர்வதற்கு வாய்ப்பே கிடையாது! இதுவே, “நாம் [பரிணாமவாதிகள்] எதிர்ப்படும் கடினமான பிரச்சினை”11 என்பதாக வால்ட் கருதுகிறார்.

15எனினும், பரிணாமக் கொள்கைக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் மற்றொரு பிரச்சினையும் உண்டு. 100-⁠க்கும் அதிகமான அமினோ அமிலங்கள் இருந்தாலும், உயிருக்கு தேவையான புரதங்கள் உருவாக 20 மட்டுமே தேவை என்பதை நினைவில் வையுங்கள். அதுமட்டுமல்ல அவை இரண்டு வடிவங்களில் வருகின்றன: அந்த மூலக்கூறுகளில் சில “வலதுகை வாட்டமுள்ளவை” மற்றவையோ “இடதுகை வாட்டமுள்ளவை.” இந்த அமினோ அமிலங்கள் கோட்பாட்டளவிலான கரிம திரவத்தில் தற்செயலாக உருவாகியிருந்தால், பெரும்பாலும் அவற்றில் ஒரு பாதி வலதுகை வாட்டமுள்ளவையாகவும் மறு பாதி இடதுகை வாட்டமுள்ளவையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. உயிரினங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை மாத்திரம் தெரிவுசெய்கின்றன என்பதற்கு எந்தவொரு காரணமும் அறியப்படவில்லை. இருப்பினும், உயிருக்கு தேவையான புரதங்களைத் தயாரிக்க தேவைப்படும் 20 அமினோ அமிலங்களில் அனைத்துமே இடதுகை வாட்டமுடையவை!

16உயிருக்கு தேவைப்படும் இந்த வடிவம் மட்டுமே அந்தத் திரவத்தில் தற்செயலாக இணைக்கப்படுவது எப்படி? இயற்பியல் வல்லுனர் ஜே. டி. பெர்னல் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “இந்த மூலக்கூறுகள் எவ்வாறு ஒன்று சேர்ந்தன . . . என்பதை விளக்குவதே . . . மிகவும் கடினமாக இருந்து வருகிறது என ஒப்புக்கொள்ள வேண்டும்.” அவர், “இதை நம்மால் ஒருபோதுமே விளக்க முடியாமல் போகலாம்”12 என்று கூறிமுடித்தார்.

நிகழ்தகவும் தன்னியல் புரதங்களும்

17பொருத்தமான அமினோ அமிலங்கள் ஒன்றுகூடி புரத மூலக்கூறு ஒன்றை உருவாக்க என்ன வாய்ப்பு உள்ளது? இதை, சிகப்பு பீன்ஸும் வெள்ளை பீன்ஸும் சம எண்ணிக்கையில் நன்றாக கலந்துள்ள ஒரு பெரிய குவியலுக்கு ஒப்பிடலாம். அதில் நூற்றுக்கும் அதிகமான வெவ்வேறு வகை பீன்ஸுகளும் உள்ளன. இப்பொழுது இந்தக் குவியலுக்குள் ஒரு பெரிய கரண்டியை விட்டு அள்ளினால் அதில் என்ன வரும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு புரதத்தின் அடிப்படைக் கூறுகளை பிரதிநிதித்துவம் செய்யும் பீன்ஸுகளைப் பெற சிவப்பு நிறமுடையவற்றை மட்டுமே நீங்கள் அள்ளவேண்டும், அதில் ஒரு வெள்ளை பீன்ஸ்கூட இருக்கக்கூடாது! அதோடு உங்களுடைய கரண்டியில் 20 வகை சிவப்பு பீன்ஸ் மட்டுமே இருக்கவேண்டும்; அவற்றில் ஒவ்வொன்றும் அக்கரண்டியில் குறிப்பிட்ட, அதற்காக முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட ஓர் இடத்தில் மட்டுமே இருக்கவேண்டும். புரத உலகில், இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்தாலும் உற்பத்தி செய்யப்படும் புரதம் சரிவர இயங்காது. நமது கற்பனையான பீன்ஸ் குவியலில் எவ்வளவுதான் கிண்டிக்கிண்டி அள்ளினாலும் சரியானவற்றை மட்டுமே அள்ளி எடுக்க முடியுமா? முடியவே முடியாது. அப்படியென்றால் கோட்பாட்டளவிலான கரிம திரவத்தில் மாத்திரம் இது எப்படி சாத்தியம்?

18உயிருக்கு தேவையான புரதங்களில் மிகவும் சிக்கல் வாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. ஒரு கரிம திரவத்தில் ஒரேவொரு எளிய புரத மூலக்கூறு தற்செயலாக தோன்றுவதற்கு உள்ள வாய்ப்பு எவ்வளவு? அது 10113-⁠க்கு (1-⁠க்கு பிறகு 113 பூஜ்யங்கள்) ஒரு வாய்ப்பு மட்டுமே என பரிணாமவாதிகளே ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் வெறுமனே 1050 தடவையில் ஒரு வாய்ப்பு என்ற விகிதத்திலுள்ள எந்தச் சம்பவமும் ஒருபோதுமே நிகழாது என கணிதவியல் வல்லுனர்கள் நிராகரித்துவிடுவர். அதுமட்டுமல்ல 10113 என்ற எண், இந்த அண்டத்தில் உள்ளதாகக் சொல்லப்படும் அணுக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகம். இந்த உண்மையிலிருந்து, இதில் உட்பட்டுள்ள சாத்தியக்கூற்றை (odds) அல்லது நிகழ்தகவை (probability) உங்களால் காண முடிகிறதா?

19சில புரதங்கள் வடிவமைப்பு பொருட்களாகவும், மற்றவை நொதிகளாகவும் (enzymes) பயன்படுகின்றன. நொதிகள் உயிரணுவில் அவசியமான வேதிவினைகளை ஊக்குவிக்கின்றன. இவை இல்லையென்றால் உயிரணு இறந்துவிடும். ஓர் உயிரணுவின் செயல்பாட்டிற்கு ஒன்றல்ல, இரண்டல்ல நொதிகளாக செயல்படும் 2,000 புரதங்கள் தேவை. இவை அனைத்தையுமே தற்செயலாக பெறுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு? 1040,000-⁠க்கு ஒன்று! “இந்த முழு பிரபஞ்சமுமே கரிம திரவத்தால் நிறைந்திருந்தாலும், இது கொஞ்சம்கூட எதிர்பார்க்க முடியாத சிறிய நிகழ்தகவு” என ஹாய்ல் உறுதியாக கூறுகிறார். அவர் மேலும் கூறுவதாவது: “பூமியில் உயிர் [தானாகவே] தோன்றிற்று என்ற தப்பெண்ணத்தை சமுதாயத்தினாலோ கல்வியினாலோ வளர்த்துக்கொள்ளாத ஒருவர், இந்தச் சாதாரண கணக்கைக் கண்டவுடன் அந்த எண்ணத்தையே தன் மனதிலிருந்து நீக்கிவிடுவார்.”13

20எனினும், உண்மையில் இந்தச் “சிறிய” எண்ணிக்கையைவிட இதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவே. உயிரணுவை சுற்றி ஒரு சவ்வு இருக்கவேண்டும். ஆனால் புரதம், சர்க்கரை, கொழுப்பு போன்ற மூலக்கூறுகளாலான இந்தச் சவ்வு அதிக சிக்கல் நிறைந்ததாகும். பரிணாமவாதி லெஸ்லி ஆர்கெல் எழுதுகிறபடி: “நவீன உயிரணுவின் சவ்வுகளில், உணவுச் சத்துக்கள், கழிவுப் பொருட்கள், உலோக அயனிகள், மற்ற பொருட்கள் போன்றவை உட்புகுந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் வாய்க்கால்களும் பம்புகளும் உள்ளன. விசேஷித்த இந்த வாய்க்கால்களிலுள்ள புரதங்கள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆதலால், இவை உயிரின் பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்திருக்க முடியாத மூலக்கூறுகளாகும்.”14

தனித்தன்மை வாய்ந்த மரபணுக் குறியீடு

21இவற்றைவிட நியூக்ளியோட்டைடுகளை​—⁠டிஎன்ஏவின் வடிவமைப்பு மூலக்கூறுகளை​—⁠பெறுவதே அதிக கடினம்; டிஎன்ஏவில்தான் மரபணுக் குறியீடு உள்ளது. டிஎன்ஏவில் ஐந்து ஹிஸ்டோன்கள் இருக்கின்றன (ஹிஸ்டோன்கள், ஜீன்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக கருதப்படுகின்றன). இந்த ஹிஸ்டோன்களில் மிகவும் எளிமையான ஒன்று உருவாவதற்கு உள்ள வாய்ப்பு 20100-⁠க்கு ஒன்று என சொல்லப்படுகிறது. 20100 என்பது மற்றொரு பெரும் எண்ணிக்கை. இது, “மாபெரும் தொலைநோக்கியில் தெரியக்கூடிய அனைத்து நட்சத்திர மண்டலங்களிலும் உள்ள எல்லா அணுக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.”15

22பரிணாமக் கொள்கைக்கு இதைவிட இன்னும் கடினமான பிரச்சினைகளும் உள்ளன. அதில் ஒன்று, செல்லின் இனப்பெருக்கத்திற்கு தேவைப்படும் முழு மரபணுக் குறியீடு எப்படி வந்தது என்பதே. புரதங்கள் மற்றும் டிஎன்ஏ விஷயத்தில் முதலில் வந்தது ‘கோழியா, முட்டையா’ என்ற பழம்புதிர் தலைதூக்குகிறது. ஹிட்சிங் கூறுவதாவது: “புரதங்கள் உருவாக டிஎன்ஏ தேவை. ஆனால் ஏற்கெனவே புரதம் இல்லையென்றால் டிஎன்ஏ உருவாக முடியாது.”16 டிக்கர்ஸன் எழுப்புகிற புதிரை இது முன்வைக்கிறது: “முதலில் வந்தது எது?” புரதமா அல்லது டிஎன்ஏவா? “‘அவை இரண்டும் ஒரே சமயத்தில் தோன்றின’ என்பதே விடை”17 என அவர் அடித்துச் சொல்கிறார். அதாவது, ‘கோழியும்,’ ‘முட்டையும்’ ஒரே சமயத்தில் பரிணமித்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றிலிருந்து பரிணமித்திருக்க முடியாது என்பதே அவர் கூற்று. இது நியாயமானதாக உங்களுக்கு தோன்றுகிறதா? அறிவியல் எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு சுருக்கிக் கூறுகிறார்: “மரபணுக் குறியீடு தோன்றியதால் முதலில் வந்தது கோழியா, முட்டையா என்ற மாபெரும் பிரச்சினை உருவாகியுள்ளது; இது தற்போது தீர்க்கவே முடியாத பிரச்சினையாக உள்ளது.”18

23வேதியியல் வல்லுனர் டிக்கர்ஸன் ஆர்வத்தைத் தூண்டும் பின்வரும் குறிப்பையும் சொன்னார்: “மரபணு பரிணமிப்பதை பரிசோதனைக் கூடத்தில் செய்துபார்க்க முடியாது. ஆகவே, விரும்பப்படாத உண்மைகளைப் பற்றி கவலைப்படாமல் ஊகித்துக் கொண்டே போகலாம்.”19 ஆனால் ஏராளமாக உள்ள ‘விரும்பப்படாத உண்மைகளை’ சுலபமாக ஒதுக்கித் தள்ளுவது நல்ல அறிவியல் முறையா? மரபணுக் குறியீடு, “உயிர் தோன்றியதைப் பற்றிய பிரச்சினையிலேயே மிகவும் திணறடிக்கும் அம்சம்”20 என லெஸ்லி ஆர்கெல் கூறுகிறார். மேலும், “மரபணுக் குறியீடு பரவலாக காணப்படுகிறது. என்றாலும் அதன் அமைப்புமுறை மிகவும் சிக்கலாக இருப்பதால் அது ஒரே வீச்சில் உருவாக முடியாது”21 என்று ஃபிரான்ஸிஸ் க்ரிக் என்பவர் கூறி முடித்தார்.

24மரபணுக் குறியீடு “ஒரே வீச்சில்” நிகழமுடியாது என்பதால், அது படிப்படியாக தோன்றியது என்றும், இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உதவியது என்றும் கூறி பரிணாமக் கொள்கை இப்பிரச்சினையை சமாளிக்கிறது. எனினும், மரபணுக் குறியீடு இல்லையென்றால் இனப்பெருக்கமே இருக்காது. அப்படியென்றால் இயற்கை வழித்தேர்ந்தெடுப்பிற்கு ஏது வழி!

பிரமிக்கவைக்கும் ஒளிச்சேர்க்கை

25பரிணாமக் கொள்கைக்கு இப்போது மற்றொரு தடை எழும்புகிறது. பூமியிலுள்ள உயிரினங்களில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றை, அதாவது ஒளிச்சேர்க்கையை (photosynthesis), ஆரம்பகால செல் ஏதோவொரு காலகட்டத்தில் கண்டுபிடித்தது என கூறுகின்றனர். ஆனால், தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளிவிடும் இந்தச் செயல்முறையை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. உயிரியல் வல்லுநர் எஃப். டபிள்யூ. வெண்ட் கூறுவதுபோல ஒளிச்சேர்க்கையை, “இதுவரை யாராலும் சோதனைக் குழாயில் செய்ய முடியவில்லை.”22 ஆயினும், இதை ஒரு சிறிய எளிய செல் தற்செயலாய் செய்துவிட்டதாக கூறுகிறார்களே, அது எப்படி!

26ஆரம்பத்தில் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனே இல்லை. ஆனால் ஒளிச்சேர்க்கையினால் ஐந்து மூலக்கூறுக்கு ஒரு மூலக்கூறு ஆக்ஸிஜனாக மாறியது. இதன் விளைவாக, விலங்குகள் ஆக்ஸிஜனை சுவாசித்து வாழ முடிகிறது. அது மட்டுமல்லாமல், புறஊதாக் கதிர்களின் பாதிப்புகளிலிருந்து அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓஸோன் படலம் உருவாகவும் வழிசெய்தது. வரிசையாய் நிகழ்ந்த இந்தக் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் குருட்டுத்தனமாக நிகழ்ந்திருக்கக் கூடுமா?

புத்திக்கூர்மையினாலா?

27உயிருள்ள ஒரு செல் தற்செயலாய் தோன்ற முடியாது என்பதற்கு மலையளவு எதிர்ப்புகள் எழும்பியதால் பரிணாமவாதிகளில் சிலர் பின்வாங்கியே ஆகவேண்டும் என உணர்ந்துள்ளனர். உதாரணமாக, விண்வெளியிலிருந்து பரிணாமம் (Evolution From Space) என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் (ஹாய்ல் மற்றும் விக்ரமசிங்கே), “இந்தப் பிரச்சினைகள் எண்ணிக்கையில் விவரிக்க முடியாதளவு சிக்கல் வாய்ந்தவை” என்று சொல்லி பின்வாங்குகின்றனர். அவர்கள் தொடர்ந்து கூறுவதாவது: “இன்னும் அதிகமான, மேம்பட்ட ஒரு கரிம திரவத்தால் இது சாத்தியம் என ஓரிரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் நம்பியிருந்தோம் . . . ஆனால் எந்தப் பிரயோஜனமுமில்லை. பூமி முழுவதிலும் கரிம திரவம் நிரம்பியிருந்தாலும் சரி, பிரபஞ்சம் முழுவதிலுமே இருந்தாலும் சரி, அதற்கு சாத்தியமேயில்லை என்பதைத்தான் மேலே நாங்கள் கணக்குப்போட்ட எண்ணிக்கைகள் காட்டுகின்றன.”23

28ஆகவே, புத்திக்கூர்மையால் எப்படியோ உயிர் தோன்றியது என்பதை ஒப்புக்கொண்ட பின்பு இந்த ஆசிரியர்கள் தொடர்ந்து கூறுவதாவது: “உண்மையில் [படைப்பு பற்றிய] கொள்கை அவ்வளவு தெள்ளத் தெளிவாக இருப்பதால், அதுதான் உண்மையென ஏன் அனைவரும் ஏற்றுக்கொள்கிறதில்லை என்று ஒருவரை யோசிக்க வைக்கிறது. இதற்கு அவர்களுடைய மனதுதான் காரணம் அறிவியல் அல்ல.”24 பெரும்பாலான பரிணாமவாதிகள் உயிர் தற்செயலாகத் தோன்றிற்று என்பதை விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டு, “வடிவமைப்பு அல்லது நோக்கம் அல்லது வழிநடத்துதல்”25 இருக்கிறது என டாக்கின்ஸ் கூறியதை நிராகரிக்கின்றனர். ஆகவே இவற்றை கவனிக்கும் ஒருவர், இதற்கு “மனதுதான்” தடை என்ற முடிவுக்கு வருவார். புத்திக்கூர்மை தேவை என ஹாய்ல் மற்றும் விக்ரமசிங்கே ஒப்புக்கொண்ட பிறகும், உயிரின் ஆரம்பத்திற்கு ஒரு படைப்பாளரே காரணம் என தாங்கள் நம்பத் தயாராக இல்லை என்று சொல்கின்றனர்.26 ‘புத்திக்கூர்மை இன்றியமையாதது, ஆனால் படைப்பாளரை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என அவர்கள் கூறுவதுபோல இருக்கிறதல்லவா? இது உங்களுக்கு முரண்பாடாக தொனிக்கிறதா?

இது அறிவியல்பூர்வமானதா?

29உயிர் தானாகவே தோன்றியதை அறிவியல்பூர்வ உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அது அறிவியல்பூர்வமான முறையில் நிரூபிக்கப்பட வேண்டும். அறிவியல்பூர்வமான முறை கீழ்க்கண்டவாறு விவரிக்கப்படுகிறது: என்ன நடக்கிறதென்று கவனியுங்கள்; அவ்வாறு கவனித்தவற்றை ஆதாரமாகக்கொண்டு உண்மை என்னவாக இருக்கலாம் என்ற ஒரு கொள்கையை உருவாக்குங்கள்; அந்தக் கொள்கையை பரிசோதிக்க தொடர்ந்து கவனித்து, ஆய்வுகள் செய்யுங்கள்; பிறகு, இந்தக் கொள்கையை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட முன்கணிப்புகள் நிறைவேறுகின்றனவா என்பதை கவனித்துப் பாருங்கள்.

30அறிவியல்பூர்வ முறையை கடைப்பிடிக்கையில் உயிர் தானாக தோன்றியதைப் பார்ப்பதற்கு வழியே இல்லை. அது இன்று நிகழ்கிறது என்பதற்கும் சான்றுகள் கிடையாது, அது சம்பவித்ததென பரிணாமவாதிகள் கூறும் சமயத்திலும் எந்த மனிதனும் இல்லை. அந்தக் கொள்கை கவனித்து உறுதிசெய்யப்படவும் இல்லை. அதை திரும்பவும் செய்து காண்பிப்பதற்கான ஆய்வுக்கூட சோதனைகள் தோல்வியுற்றன. அந்தக் கொள்கை அடிப்படையிலான முன்கணிப்புகள் எதுவும் நிறைவேறவில்லை. இப்படி ஒவ்வொரு படியிலும் அறிவியல்பூர்வ முறையைக் கடைப்பிடிக்க இயலாமல் இருக்கையில், அப்படிப்பட்ட ஒரு கொள்கையை உண்மை என்ற ஸ்தானத்துக்கு உயர்த்துவது நேர்மையான அறிவியலாகுமா?

31மறுபட்சத்தில், உயிரற்ற பொருட்களிலிருந்து உயிர் தானாகவே தோன்ற முடியாது என்பதை ஆதரிக்க ஏராளமான சான்றுகள் உள்ளன. “இது எவ்வளவு பிரமாண்டமான காரியம் என்பதை ஒருவர் புரிந்துகொண்டாலே போதும், உயிருள்ள பிராணி தானாகவே தோன்ற முடியாது என்பதை உடனே ஏற்றுக்கொள்வார்” என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வால்ட் ஒப்புக்கொள்கிறார். பரிணாமத்தை ஆதரிக்கும் இவர் உண்மையில் எதை நம்புகிறார்? “ஆனாலும் நாம் இங்கு தோன்றியது தன்னியல் உயிர்த்தோற்றத்தின் விளைவாகவே என நான் நம்புகிறேன்.”27 பாரபட்சமற்ற அறிவியலைப் போலவா இது தோன்றுகிறது?

32அத்தகைய நியாயத்தை, “வறட்டுப் பிடிவாதம்; அதாவது, தான் நம்ப விரும்புவதுதான் உண்மையில் நடந்தது என அடித்துக் கூறுவது”28 என்று கூறினார் பிரிட்டிஷ் உயிரியல் வல்லுனர் ஜோசஃப் ஹென்றி ஊட்கர். அறிவியல்பூர்வமான முறையை அப்பட்டமாக மீறும் ஒன்றை எப்படி விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர்? பிரபல பரிணாமவாதி லாரன் ஐஸ்லி இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “கட்டுக்கதைகளிலும், அற்புதங்களிலும் நம்பிக்கை வைத்த மதவாதிகளை கடிந்துகொண்ட அறிவியலே, உயிர் தானாக தோன்றியது என்ற கட்டுக்கதையை உருவாக்கியுள்ளது. என்னதான் முயன்றும் அது நிகழ்ந்ததை இன்றுவரை நிரூபிக்க முடியவில்லை. ஆனாலும் அந்தக் காலத்தில் அது எப்படியோ நடந்தது என அறிவியல் கூறுவதால் இக்கட்டில் மாட்டித்தவிக்கிறது.”29

33அத்தாட்சிகளின் அடிப்படையில் பார்த்தால், தன்னியல் உயிர்த்தோற்றக் கொள்கையை அறிவியல் உண்மை என்று கூறுவதைவிட அறிவியல் புனைக்கதை என்று கூறுவதே சாலச்சிறந்தது. பரிணாமத்தை ஆதரிக்கும் அநேகர், தாங்கள் விரும்புவதை ஏற்றுக்கொள்வதற்காக அறிவியல்பூர்வ முறையை கைவிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உயிர் தற்செயலாக தோன்ற முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இருந்தபோதிலும் அறிவியல்பூர்வமான முறைக்கே உரிய நிதானத்திற்கு பதிலாக வறட்டுப் பிடிவாதமே நிலவுகிறது.

எல்லா விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்ளவில்லை

34இருந்தபோதிலும், வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு எல்லா விஞ்ஞானிகளும் வந்துவிடவில்லை. உதாரணமாக, இயற்பியல் வல்லுனர் ஹெச். எஸ். லிப்ஸன், உயிர் தற்செயலாக தோன்ற முடியாது என்பதற்கான ஏராளமான சாத்தியக்கூறுகளை உணர்ந்தவராக இவ்வாறு கூறினார்: “படைக்கப்பட்டது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே விளக்கம். இதை ஏற்றுக்கொள்வது என்றால் என்னைப் போலவே மற்ற இயற்பியல் வல்லுனர்களுக்கும் வெறுப்பாக இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் நாம் விரும்பாவிட்டாலும்கூட அந்தக் கொள்கையை பரிசோதனையின் சான்றுகள் ஆதரிக்குமானால் அதை ஒதுக்கிவிட முடியாதே.” உயிரினங்களின் ஆரம்பம் என்ற டார்வினின் புத்தகம் வெளிவந்த பிறகு, “பரிணாமம் ஒரு விதத்தில் அறிவியல் மதமாகவே ஆயிற்று. கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்; அது மட்டுமா, இதோடு பொருந்த வேண்டும் என்பதற்காக தங்களுடைய ஆராய்ச்சியின் முடிவுகளை ‘வளைக்கவும்’ அநேகர் தயாராக உள்ளனர்”30 என்று அவர் மேலும் கூறினார். இது வருத்தகரமானதுதான், ஆனால் இதுவே உண்மை.

35கார்டிஃப் என்ற இடத்திலுள்ள யூனிவர்சிட்டி காலேஜ் பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்கே பின்வருமாறு கூறினார்: “அறிவியலும் படைப்பும் ஒத்துப்போகவே போகாது என்று ஆரம்பத்திலிருந்தே ஒரு விஞ்ஞானியான நான் மூளைச்சலவை செய்யப்பட்டேன். அதனால் இந்த எண்ணத்தை வேதனையோடு கைவிட வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட மனநிலையில் மிகவும் தர்மசங்கடமாகவும் உணருகிறேன். ஆனால் அதிலிருந்து வெளிவருவதைத் தவிர நியாயமான வேறு எந்த வழியுமில்லை. . . . ஒரு ரசாயன விபத்தின் காரணமாகவே பூமியில் உயிர் தோன்றியது என்பது, இந்த அண்டத்திலுள்ள அனைத்து கோள்களிலுமுள்ள எல்லா கடற்கரைகளிலும் ஒரு குறிப்பிட்ட மண்துகளைத் தேடி அதைக் கண்டுபிடிப்பதற்கு சமமாக உள்ளது.” வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு ரசாயன விபத்தின் காரணமாக உயிர் தோன்றுவதற்கு சாத்தியமே கிடையாது. ஆகவே விக்ரமசிங்கே இந்த முடிவுக்கு வருகிறார்: “இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே உயிரின் ரசாயன பொருட்கள் இவ்வளவு துல்லியமாக அமைக்கப்பட்டிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.”31

36வானவியல் வல்லுனர் ராபர்ட் ஜாஸ்ட்ரோ சொன்னதுபோல, “உயிர் படைக்கப்படவில்லை என்பதற்கு விஞ்ஞானிகளிடத்தில் அத்தாட்சி இல்லை.”32

37எனினும், முதல் செல் எப்படியோ தானாக தோன்றியது என்றே வைத்துக்கொண்டாலும்கூட இதுவரை பூமியில் வாழ்ந்த எல்லா உயிரினங்களாகவும் அது பரிணமித்ததற்கு சான்று உள்ளதா? புதைப்படிவம் பதிலளிக்கிறது. ஆகவே புதைப்படிவம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை அடுத்த அதிகாரம் அலசி ஆராயும்.

[கேள்விகள்]

1. (அ) உயிரின் ஆரம்பத்தைப் பற்றி சார்ல்ஸ் டார்வின் எதை ஒப்புக்கொண்டார்? (ஆ) தற்கால பரிணாமக் கொள்கை எந்தக் கருத்துக்கு புத்துயிரளித்துள்ளது?

2. (அ) தன்னியல் உயிர்த்தோற்றம் பற்றிய முந்தைய நம்பிக்கை எவ்வாறு தவறென நிரூபிக்கப்பட்டது? (ஆ) தற்போது உயிர் தானாகவே தோன்றுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும் பரிணாமவாதிகள் என்ன ஊகிக்கின்றனர்?

3, 4. (அ) உயிர் தோன்றியதற்கு வழிநடத்தும் படிகளைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது? (ஆ) உயிர் தற்செயலாக தோன்றுவதற்கு சாத்தியமே இல்லாதபோதிலும் பரிணாமவாதிகள் அடித்துக் கூறுவதென்ன?

5. உயிர் தோன்றிய விதத்தை பிரசுரங்கள் பொதுவாக எவ்வாறு விளக்குகின்றன, இருப்பினும் ஒரு விஞ்ஞானி என்ன கூறினார்?

6. அறிவு பெருகியிருப்பது எதைச் சுட்டிக்காட்டுகிறது?

7. உயிர் தோன்றியதற்கு வழிநடத்தியதாக கூறப்படும் முக்கிய படிகள் யாவை?

8. ஸ்டான்லி மில்லரும் அதற்குப் பின் மற்றவர்களும் செய்த பிரபல பரிசோதனைகளில் இருந்த குறை என்ன?

9, 10. (அ) பூமியின் பண்டைக்கால வளிமண்டலத்தின் கலவையைப் பற்றிய கருத்து என்ன? (ஆ) பரிணாமம் எதிர்ப்படும் இரண்டக நிலை என்ன, பூமியின் பண்டைக்கால வளிமண்டலம் பற்றி என்ன அறியப்பட்டுள்ளது?

11. (அ) சமுத்திரத்தில் “கரிம திரவம்” சேர்வதற்கு ஏன் வாய்ப்பே இல்லை? (ஆ) மில்லர் உருவாக்கிய சில அமினோ அமிலங்களை அவரால் எப்படி பாதுகாக்க முடிந்தது?

12. அப்படியே சில அமினோ அமிலங்கள் சமுத்திரங்களை வந்தடைந்திருந்தாலும் அவற்றிற்கு என்ன நேரிடும்?

13. தண்ணீரிலுள்ள அமினோ அமிலங்கள் புரதங்களாக உருவாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும், அப்படி செய்தால் வேறு என்ன ஆபத்தை அவை எதிர்ப்படும்?

14. பரிணாமவாதிகள் எதிர்ப்படும் மாபெரும் பிரச்சினைகளில் ஒன்று என்ன?

15, 16. கோட்பாட்டளவிலான கரிம திரவத்தில் உள்ள அமினோ அமிலங்களிலிருந்து உயிருக்கு தேவையான புரதங்களைப் பெறுவதிலுள்ள பெரும் பிரச்சினை என்ன?

17. இது எவ்வளவு சிக்கலான பிரச்சினை என்பதை எந்த உதாரணம் சுட்டிக்காட்டுகிறது?

18. ஓர் எளிய புரத மூலக்கூறாவது தற்செயலாக தோன்றுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் எந்தளவு நடைமுறையானவை?

19. ஓர் உயிரணுவிற்கு தேவையான நொதிகளைப் பெற எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன?

20. உயிரணுவிற்கு தேவைப்படும் சவ்வு ஏன் பிரச்சினையை இன்னும் அதிகமாக்குகிறது?

21. டிஎன்ஏவிற்கு தேவையான ஹிஸ்டோன்களைப் பெறுவது எவ்வளவு கடினம்?

22. (அ) ‘கோழியா, முட்டையா’ என்ற பழம்புதிர், புரதங்கள் மற்றும் டிஎன்ஏவோடு எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது? (ஆ) பரிணாமவாதி ஒருவர் என்ன பதிலை கொடுக்கிறார், அது நியாயமானதா?

23. மரபணு அமைப்புமுறை பற்றி மற்ற விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றனர்?

24. இனப்பெருக்கத்திற்கும் இயற்கை வழித்தேர்ந்தெடுப்பிற்கும் என்ன தொடர்பு?

25. எதைச் செய்ய ஓர் எளிய செல்லிற்கு பிரமிக்கவைக்கும் திறன் இருப்பதாக பரிணாமம் கூறுகிறது?

26. ஒளிச்சேர்க்கையினால் புரட்சிகரமான என்ன மாற்றம் ஏற்பட்டது?

27. சான்றுகளின் காரணமாக சில பரிணாமவாதிகள் என்ன முடிவுக்கு வந்துள்ளனர்?

29. அறிவியல்பூர்வமான முறை என்றால் என்ன?

28. (அ) புத்திக்கூர்மையை மறுப்பதற்கு எது காரணமாக இருக்கலாம்? (ஆ) மேலான புத்திக்கூர்மை தேவை என ஒப்புக்கொள்ளும் பரிணாமவாதிகளும்கூட அதன் ஊற்றுமூலம் எது அல்ல என சொல்லுகிறார்கள்?

30. அறிவியல்பூர்வ முறையைக் கடைப்பிடித்தால் தன்னியல் உயிர்த்தோற்றம் என்ற கொள்கையில் உள்ள குறைகள் யாவை?

31. தன்னியல் உயிர்த்தோற்றம் பற்றி முரண்படும் என்ன கருத்துகளை ஒரு விஞ்ஞானி குறிப்பிடுகிறார்?

32. அத்தகைய நியாயம் அறிவியல்பூர்வமற்றது என்பதை எவ்வாறு பரிணாமவாதிகளும்கூட ஒப்புக்கொள்கின்றனர்?

33. இதுவரை கவனித்த அத்தாட்சிகளின் அடிப்படையில், அறிவியல்பூர்வ முறையை தன்னியல் உயிர்த்தோற்றத்திற்கு பொருத்துவதைப் பற்றி என்ன முடிவுக்கு வரவேண்டும்?

34. (அ) இயற்பியல் வல்லுனர் ஒருவர் தனக்கு அறிவியல்பூர்வமாக திறந்த மனது உள்ளது என்பதை எவ்வாறு காண்பித்தார்? (ஆ) பரிணாமத்தை அவர் எவ்வாறு விவரிக்கிறார், மேலும் அநேக விஞ்ஞானிகளைப் பற்றி என்ன சொல்கிறார்?

35. (அ) பல்கலைக்கழக பேராசிரியருக்கு எந்த எண்ணத்தைக் கைவிடுவது மிகவும் வேதனையாக இருந்தது? (ஆ) உயிர் தற்செயலாக பரிணமிக்க முடியுமா என்பதை அவர் எவ்வாறு உதாரணத்தோடு விளக்குகிறார்?

36. ராபர்ட் ஜாஸ்ட்ரோ என்ன சொல்கிறார்?

37. பரிணாமத்தைப் பற்றி என்ன கேள்வி எழும்புகிறது, பதில் எங்கே கிடைக்கும்?

[பக்கம் 44-ன் சிறு குறிப்பு]

“புரதங்கள் உருவாக டிஎன்ஏ தேவை. ஆனால் ஏற்கெனவே புரதம் இல்லையென்றால் டிஎன்ஏ உருவாக முடியாது”

[பக்கம் 45-ன் சிறு குறிப்பு]

“மரபணுக் குறியீடு தோன்றியதால் முதலில் வந்தது கோழியா, முட்டையா என்ற மாபெரும் பிரச்சினை உருவாகியுள்ளது; இது தற்போது தீர்க்கவே முடியாத பிரச்சினையாக உள்ளது”

[பக்கம் 46-ன் சிறு குறிப்பு]

மரபணுக் குறியீடு: “உயிர் தோன்றியதைப் பற்றிய பிரச்சினையிலேயே மிகவும் திணறடிக்கும் அம்சம்”

[பக்கம் 47-ன் சிறு குறிப்பு]

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்கையில் சூரிய ஒளி, கார்பன்-டை-ஆக்ஸைடு, தண்ணீர், தாதுப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனையும் உணவுப் பொருட்களையும் தயாரிக்கின்றன. ஓர் எளிய செல்லால் இவை அனைத்தையுமே கண்டுபிடித்திருக்க முடியுமா?

[பக்கம் 50-ன் சிறு குறிப்பு]

சில விஞ்ஞானிகள் கூறுவதாவது: ‘புத்திக்கூர்மை இன்றியமையாதது, ஆனால் படைப்பாளரை ஏற்றுக்கொள்ள முடியாது’

[பக்கம் 53-ன் சிறு குறிப்பு]

“படைக்கப்பட்டது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே விளக்கம்” என ஒரு விஞ்ஞானி ஒப்புக்கொள்கிறார்

[பக்கம் 53-ன் சிறு குறிப்பு]

ஜாஸ்ட்ரோ: “உயிர் படைக்கப்படவில்லை என்பதற்கு அத்தாட்சி விஞ்ஞானிகளிடத்தில் இல்லை”

[பக்கம் 52-ன் பெட்டி]

உயிர் தோன்றியதைப் பற்றி பரிணாமவாதிகள்​—⁠அன்றும் இன்றும்

“உயிரற்ற பொருட்களிலிருந்து உயிர் தோன்றியது என்ற கோட்பாடு இன்றும் கண்ணை மூடிக்கொண்டு விசுவாசிக்க வேண்டிய ஒரு விஷயமே.”​—⁠கணித மேதை ஜே. டபிள்யூ. என். சல்லிவன்d

“ஒரு விபத்தினால் உயிர் தோன்றியது என்பதை ஓர் அச்சகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் முழுமையான ஓர் அகராதி உருவாவதற்கு ஒப்பிடலாம்.”​—⁠உயிரியல் வல்லுனர் எட்வின் காங்க்லின்e

“இது எவ்வளவு பிரமாண்டமான காரியம் என்பதை ஒருவர் புரிந்துகொண்டாலே போதும், உயிருள்ள பிராணி தானாகவே தோன்றமுடியாது என்பதை உடனே ஏற்றுக்கொள்வார்.”​—⁠உயிர் வேதியியல் வல்லுனர் ஜார்ஜ் வால்ட்f

“இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்தையும் அறிந்த நேர்மையுள்ள ஒரு மனிதன், உயிர் தோன்றியது ஓர் அற்புதம் என்று மட்டுமே சொல்லக்கூடும்.”​—⁠உயிரியல் வல்லுனர் ஃபிரான்ஸிஸ் க்ரிக்g

“பூமியில் உயிர் [தானாகவே] தோன்றிற்று என்ற தப்பெண்ணத்தை சமுதாயத்தினாலோ கல்வியினாலோ வளர்த்துக்கொள்ளாத ஒருவர், இந்தச் சாதாரண கணக்கைக் [அதற்கு எதிரான கணித சாத்தியக்கூறுகளை] கண்டவுடன் அந்த எண்ணத்தையே தன் மனதிலிருந்து நீக்கிவிடுவார்.”​—⁠வானவியல் வல்லுனர்கள் ஃபிரெட் ஹாய்ல், என். சி. விக்ரமசிங்கேh

[பக்கம் 48, 49-ன் பெட்டி/படம்]

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செல்

உயிருள்ள ஒரு செல் பெரும் சிக்கல் வாய்ந்தது. இதன் செயல்பாடுகளை உயிரியல் நிபுணர் ஃபிரான்ஸிஸ் க்ரிக் எளிய முறையில் விவரிக்க முயலுகிறார். ஆனால் தன்னால் முடிந்ததெல்லாம் இவ்வளவுதான் என்பதை இறுதியில் ஒப்புக்கொள்கிறார்: “அது அவ்வளவு சிக்கல் வாய்ந்ததாக இருப்பதால் அதன் முழு விவரத்தையும் புரிந்துகொள்ள ஒரு வாசகர் முயற்சிப்பது வீண்.”a

ஒரு செல்லின் டிஎன்ஏவிற்குள் உள்ள விவரங்களை “எழுதினால் 600 பக்கங்கள் கொண்ட ஓராயிரம் புத்தகங்கள் நிரம்பிவிடும்” என நேஷனல் ஜியாக்ரஃபிக் விளக்குகிறது. “ஒவ்வொரு செல்லும், மூலக்கூறுகள் என அழைக்கப்படும் சுமார் இருநூறு லட்சம் கோடி சிறிய அணுக்களின் தொகுதிகள் நிறைந்த ஓர் உலகமாகும். . . . நம்முடைய 46 குரோமோசோம் ‘இழைகளையும்’ ஒன்றாக இணைத்தால் ஆறு அடி நீளத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால் குரோமோசோம்கள் உள்ள உட்கருவின் விட்டமோ ஒரு மில்லிமீட்டரில் 100-⁠ல் ஒரு பங்கைவிட குறைவு.”b

செல்லின் செயல்பாடுகளை நாம் புரிந்துகொள்ள உதவும் வகையில் நியூஸ்வீக் பத்திரிகை ஓர் உதாரணத்தைப் பயன்படுத்துகிறது: “நூறு லட்சம் கோடி செல்களில் ஒவ்வொன்றும் மதில் சூழ்ந்த ஒரு நகரத்தைப்போல் இருக்கிறது. மின் நிலையங்கள், செல்லிற்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்கின்றன. தொழிற்சாலைகள், இரசாயன போக்குவரத்திற்கு இன்றியமையாத புரதங்களை உற்பத்தி செய்கின்றன. சிக்கல் வாய்ந்த போக்குவரத்து அமைப்புகள், சில இரசாயனங்களை செல்லிற்கு உள்ளேயும் வெளியேயும், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் கொண்டு செல்ல உதவுகின்றன. பாதுகாவலர்கள், எல்லையில் நின்று ஏற்றுமதி இறக்குமதியைக் கட்டுப்படுத்துகின்றனர். அதோடு, அபாய அறிகுறிகள் வருகிறதா என கண்காணிக்கின்றனர். உயிரியல் ராணுவ வீரர்கள், எதிரிகளோடு போரிட தயார் நிலையில் நிற்கின்றனர். மையத்தில் அமைந்த மரபணு அரசாங்கம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து வருகிறது.”c

நவீன பரிணாமக் கொள்கை முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோது, உயிருள்ள ஒரு செல் எவ்வளவு சிக்கல் வாய்ந்தது என விஞ்ஞானிகளுக்கு அதிகம் தெரியாது. ஓர் எளிய செல்லின் சில பாகங்கள் அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன; இவை அனைத்தையும் உள்ளடக்கிய செல்லின் விட்டமோ ஒரு மில்லிமீட்டரில் 40-⁠ல் ஒரு பகுதியே.

செல் புறச்சவ்வு

செல்லுக்குள் நுழைபவற்றையும் வெளியேறுபவற்றையும் கட்டுப்படுத்தும் உறை

ரைபோசோம்கள்

அமினோ அமிலங்கள் புரதங்களாக இணைக்கப்படும் இடங்கள்

உட்கரு

இரட்டைச் சவ்வுள்ள உறையால் மூடப்பட்டுள்ளது; செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் மையம் இதுவே

குரோமோசோம்கள்

செல்லின் முக்கிய மரபணு திட்டமாகிய டிஎன்ஏ இதில் அடங்கியுள்ளது

நியூக்ளியோலஸ்

ரைபோசோம்கள் இணைக்கப்படும் இடம்

என்டோபிளாஸ வலைப்பின்னல்

சவ்வினாலான இந்தத் தகடுகளில் ஒட்டியிருக்கும் ரைபோசோம்கள் தயாரிக்கும் புரதங்களை இவை சேமித்து வைக்கின்றன அல்லது கடத்துகின்றன (சில ரைபோசோம்கள் செல்லில் தனியாக மிதக்கின்றன)

மைட்டோகாண்ட்ரியா

செல்லிற்கு தேவையான ஆற்றலை அளிக்கும் ஏடிபி மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும் மையங்கள்

கால்கி உறுப்பு

செல் உற்பத்தி செய்யும் புரதங்களை மூட்டைக் கட்டி விநியோகிக்கும் தட்டை வடிவ சவ்வுப் பைகளின் தொகுதி

சென்ட்ரியோல்கள்

உட்கருவிற்கு அருகில் அமைந்துள்ளன, செல்லின் இனப்பெருக்கத்திற்கு அவசியமானவை

[படம்]

உங்களுடைய 1,00,00,000,00,00,000 செல்களும் தற்செயலாக வந்தனவா?

[பக்கம் 47-ன் அட்டவணை/படங்கள்]

மனிதர்களும் விலங்குகளும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுகின்றன. தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஒளி

ஆக்ஸிஜன்

நீராவி

கார்பன்-டை- ஆக்ஸைடு

[பக்கம் 40-ன் படம்]

அஸ்திவாரம் இல்லாமல் எந்தவொரு பெரிய கட்டடமும் நிற்க முடியாது. “பரிணாமக் கொள்கைக்கு தகுந்த ஓர் அஸ்திவாரம் இல்லை” என இரண்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

[பக்கம் 42-ன் படம்]

எல்லாமே சிகப்பு, எல்லாமே சரியான வகை, ஒவ்வொன்றும் அதற்காக முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட இடத்தில்​—⁠தற்செயலாகவா?

[பக்கம் 43-ன் படம்]

உயிரினங்களில், “இடதுகை வாட்டமுள்ள” அமினோ அமிலங்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன: “இதை நம்மால் ஒருபோதுமே விளக்க முடியாமல் போகலாம்”

[பக்கம் 45-ன் படங்கள்]

முதலில் வந்தது எது?