Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் இருபத்து மூன்றாம்

மன்னிக்கக் கற்றுக்கொண்டார்

மன்னிக்கக் கற்றுக்கொண்டார்

1. பேதுருவின் வாழ்வில் எது கொடிய தருணம்?

இயேசுவின் கண்களும் அவரது கண்களும் ஒன்றையொன்று சந்தித்த அந்தப் பயங்கரமான தருணத்தை பேதுருவால் மறக்கவே முடியாது. இயேசுவின் பார்வையில் ஏமாற்றமோ கண்டனமோ கொஞ்சமாவது அவருக்குத் தெரிகிறதா? நம்மால் எதையும் ஊகிக்க முடியாது. “இயேசு திரும்பி, பேதுருவைப் பார்த்தார்” என்று மட்டுமே பைபிள் சொல்கிறது. (லூக். 22:61) ஆனால், அந்த ஒரே பார்வையில் பேதுரு தன்னுடைய தவறின் வீரியத்தை உணர்ந்துகொள்கிறார். ‘இயேசு சொன்ன மாதிரியே நான் செய்துவிட்டேனே, எதைச் செய்ய மாட்டேன் என அடித்துச் சொன்னேனோ அதையே செய்துவிட்டேனே’ என்று பேதுரு நினைக்கிறார். ஆம், தன் உயிருக்கு உயிரான எஜமானரை யாரென்றே தெரியாதெனச் சொல்லிவிட்டார்! பேதுரு அப்படியே மனமொடிந்து போய்விடுகிறார்... இந்தத் தருணம்தான் அவரது வாழ்வில் மிக மிகக் கொடிய தருணம்!

2. பேதுரு கற்றுக்கொள்ள வேண்டியிருந்த பாடம் என்ன, அவரது சரிதையிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?

2 என்றாலும், ‘இனி அவ்வளவுதான்’ என்று பேதுரு இடிந்துபோய் உட்கார்ந்துவிட வேண்டியதில்லை. பேதுருவுக்கு அபார விசுவாசம் இருப்பதால், தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் இயேசுவிடமிருந்து தலைசிறந்த ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அது மன்னிப்பைப் பற்றிய பாடம். அந்தப் பாடத்தை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வது அவசியம். வாழ்க்கையில் பேதுரு கடந்துவந்த அந்த இக்கட்டான பாதையை இப்போது நாம் திரும்பிப் பார்க்கலாம்.

நிறையப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய மனிதர்

3, 4. (அ) இயேசுவிடம் பேதுரு என்ன கேள்வி கேட்டார், பேதுரு என்ன நினைத்திருக்கலாம்? (ஆ) அன்றைய மக்களின் மனப்பான்மை பேதுருவையும் தொற்றியிருந்தது என்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

3 சுமார் ஆறு மாதத்திற்கு முன்னால் பேதுரு தன் சொந்த ஊரான கப்பர்நகூமில் இருந்தபோது, “எஜமானே, என்னுடைய சகோதரன் எனக்கு விரோதமாகப் பாவம் செய்துவந்தால் எத்தனை தடவை நான் அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவை வரைக்குமா?” என்று இயேசுவிடம் கேட்டார். அப்படிக் கேட்டதால் தனக்குப் பெரிய மனது... தாராள மனது... என்று பேதுரு நினைத்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரை மூன்று முறை மன்னித்தாலே போதுமென அன்றைய மதத் தலைவர்கள் கற்பித்திருந்தார்களே! ஆனால் இயேசு, “ஏழு தடவை அல்ல, எழுபத்தேழு தடவை வரை” மன்னிக்க வேண்டும் என்று சொன்னார்.​—மத். 18:​21, 22.

4 அப்படியானால், தனக்கு விரோதமாக ஒருவர் செய்யும் தவறுகளை பேதுரு கணக்கு வைக்க வேண்டும் என்று இயேசு அர்த்தப்படுத்தினாரா? இல்லை, 7 முறை அல்ல 77 முறை என்று சொன்னதன் மூலம் மன்னிக்கும் விஷயத்தில் அன்பு கணக்கு வைக்காது என்பதையே எடுத்துக்காட்டினார். (1 கொ. 13:​4, 5) அன்று மக்கள் பெரும்பாலும் கல்நெஞ்சம் படைத்தவர்களாக... மன்னிக்க மனமில்லாதவர்களாக... இருந்தார்கள்; அதனால், மற்றவர்களுடைய தவறுகளைக் கணக்கு வைத்துக்கொண்டார்கள்; மன்னிப்பதற்கு வரம்பு வைத்துக்கொண்டார்கள். இந்த மனப்பான்மை பேதுருவையும் தொற்றியிருந்ததை இயேசு சுட்டிக்காட்டினார். ஆனால், கடவுளுடைய கண்ணோட்டமுள்ள ஒருவர் எத்தனை தடவை என்றாலும் மன்னிக்கத் தயங்க மாட்டார்!​1 யோவான் 1:​7-9-ஐ வாசியுங்கள்.

5. மன்னிப்பின் அருமையை எப்போது நாம் புரிந்துகொள்கிறோம்?

5 இயேசுவிடம் பேதுரு வாதாடவில்லை. ஆனால், இயேசு கற்பித்த பாடம் அவர் மனதை எட்டியதா? மற்றவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும் என்று ஏங்கும்போதுதான் மன்னிப்பின் அருமையே நமக்குப் புரிகிறது. இப்போது நாம் இயேசுவின் மரணத்திற்கு வழிநடத்திய சம்பவங்களுக்குத் திரும்பலாம். அந்த இக்கட்டான தருணங்களில் பேதுரு பல தவறுகள் செய்தார், எஜமானருடைய மன்னிப்பை வேண்டி நின்றார்.

மன்னிப்பு​—ஒரு தடவை அல்ல, பல தடவை

6. மனத்தாழ்மையைப் பற்றி அப்போஸ்தலர்களுக்கு இயேசு கற்றுக்கொடுக்க முயன்றபோது பேதுரு என்ன சொன்னார், என்றாலும் அவரை இயேசு எப்படி நடத்தினார்?

6 அது மனித வரலாற்றில் மறக்க முடியாத நாள்... இயேசுவின் வாழ்வில் கடைசி இரவு. மனத்தாழ்மை உட்பட, அநேக விஷயங்களை அப்போஸ்தலர்களுக்கு அவர் கற்பிக்க வேண்டியிருந்தது. அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவியதன் மூலம்... பொதுவாக வேலைக்காரர்களிலேயே தாழ்வானவர்கள் செய்கிற வேலையைச் செய்ததன் மூலம்... மனத்தாழ்மைக்கு இயேசு முன்மாதிரி வைத்தார். முதலில், “எஜமானே, நீங்களா என் பாதங்களைக் கழுவப்போகிறீர்கள்?” என்று இயேசுவிடம் பேதுரு கேட்டார். பின்பு தன் பாதங்களை இயேசு கழுவக் கூடாது என்று சொன்னார். அதற்குப் பிற்பாடு, தன் பாதங்களை மட்டுமல்ல, கைகளையும் தலையையும்கூட கழுவ வேண்டுமெனக் கேட்டார்! இயேசு பொறுமை இழந்துவிடவில்லை. மாறாக, தாம் எதற்கு அப்படிச் செய்தார் என்பதையும் அது எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கினார்.​—யோவா. 13:​1-17.

7, 8. (அ) இயேசுவின் பொறுமையை பேதுரு எப்படியெல்லாம் சோதித்தார்? (ஆ) கனிவு காட்டுவதிலும் தாராளமாய் மன்னிப்பதிலும் இயேசு எப்படி மணிமகுடமாய்த் திகழ்ந்தார்?

7 கொஞ்ச நேரம்கூட ஆகியிருக்கவில்லை, மறுபடியும் இயேசுவின் பொறுமையை பேதுரு சோதித்தார். தங்களில் யார் பெரியவன் என்று அப்போஸ்தலர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. கர்வம் என்ற மோசமான குணத்தை அவர்கள் காட்டியபோது நிச்சயம் பேதுரு அதற்கு விதிவிலக்காக இருந்திருக்க மாட்டார். என்றாலும், இயேசு அவர்களை அன்புடன் திருத்தினார், அவர்களுடைய நல்ல குணத்திற்காக​—எஜமானராகிய தமக்கு விசுவாசமாக இருந்ததற்காக​—அவர்களைப் பாராட்டவும் செய்தார். அதேசமயத்தில், அவர்கள் எல்லோரும் தம்மை விட்டுவிட்டு ஓடிப்போவார்கள் என்றும் முன்னுரைத்தார். அப்போது பேதுரு... சாவே வந்தாலும் இயேசுவைவிட்டு ஓடிப்போவதில்லை என்று சொன்னார். ஆனால், அன்றிரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்குள் தம்மை மூன்று முறை பேதுரு மறுதலிப்பார் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார். பேதுரு இதை மறுத்தது மட்டுமல்லாமல் மற்ற அப்போஸ்தலர்கள் இயேசுவைவிட்டு ஓடிப்போனாலும் தான் ஓடிப்போவதில்லை எனப் பெருமையாகச் சொன்னார்!​—மத். 26:​31-35; மாற். 14:​27-31; லூக். 22:​24-28; யோவா. 13:​36-38.

8 அப்போது, இயேசு பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டாரா? இல்லை. சொல்லப்போனால், இந்த இக்கட்டான சமயம் முழுவதும், இயேசு தம்முடைய அபூரண அப்போஸ்தலர்களிடம் இருந்த நல்ல குணங்களையே பார்த்தார். பேதுரு தம்மை மறுதலிப்பார் என்று தெரிந்திருந்தும், “நீ விசுவாசத்தை விட்டுவிடாதிருக்க வேண்டுமென உனக்காக மன்றாடியிருக்கிறேன்; நீ மனந்திரும்பியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து” என்று சொன்னார். (லூக். 22:32) இவ்வாறு, பேதுரு மனந்திரும்பி மீண்டும் உத்தமமாய்ச் சேவை செய்வார் என்ற நம்பிக்கையை இயேசு தெரிவித்தார். கனிவு காட்டுவதில்... தாராளமாய் மன்னிப்பதில்... இயேசு மணிமகுடமாய்த் திகழ்ந்தார்!

9, 10. (அ) கெத்சமனே தோட்டத்தில், பேதுருவுக்கு இயேசு கொடுத்த திருத்தங்கள் யாவை? (ஆ) பேதுருவின் உதாரணம் நமக்கு எதை உணர்த்துகிறது?

9 பின்பு கெத்செமனே தோட்டத்தில், பேதுருவை இயேசு மீண்டும் மீண்டும் திருத்த வேண்டியிருந்தது. தாம் ஜெபம் செய்கையில் விழிப்புடன் இருக்கும்படி யாக்கோபு மற்றும் யோவானிடம் மட்டுமல்ல பேதுருவிடமும் இயேசு சொல்லியிருந்தார். அப்போது உணர்ச்சி ரீதியில் இயேசு தாங்கமுடியா வேதனையில் இருந்தார், அவருக்கு ஆதரவு தேவைப்பட்டது; ஆனால், பேதுருவும் மற்ற இருவரும் மறுபடியும் மறுபடியும் தூங்கிவிட்டார்கள். இருந்தாலும், இயேசு அவர்கள்மீது அனுதாபம் கொண்டு அவர்களை மன்னித்தார். “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று சொன்னார்.​—மாற். 14:​32-41.

10 கொஞ்ச நேரம் கழித்து, ஒரு கும்பல் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு, தீப்பந்தங்களுடன் தோட்டத்திற்குள் வந்தது. அந்தச் சமயத்தில், சீடர்கள் ஜாக்கிரதையாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், பேதுரு சடாரெனத் தன் வாளை உருவி தலைமைக் குருவின் அடிமையான மல்குஸின் தலையைக் குறிவைத்துத் தாக்கினார், அவனுடைய காது அறுந்து விழுந்தது. இயேசு சாந்தமாக பேதுருவைக் கண்டித்து, அந்த அடிமையைச் சுகப்படுத்தினார். அதோடு, வன்முறையில் இறங்கக் கூடாது என்ற நியதியைத் தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்; அந்த நியதிதான் இன்றுவரை அவரது சீடர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. (மத். 26:​47-55; லூக். 22:​47-51; யோவா. 18:​10, 11) பேதுரு ஏற்கெனவே பல முறை தவறு செய்திருந்தார், எஜமானருடைய மன்னிப்பை வேண்டி நின்றார். நாம் அடிக்கடி தவறு செய்கிறோம் என்பதை பேதுருவின் உதாரணம் உணர்த்துகிறது. (யாக்கோபு 3:​2-ஐ வாசியுங்கள்.) நம்மில் யாருக்குத்தான் கடவுளுடைய மன்னிப்பு அன்றாடம் தேவையில்லை? பேதுருவும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல, அதே இரவில் இன்னும் பயங்கரமான தவறுகளைச் செய்தார்.

பேதுரு செய்த மகா தவறு!

11, 12. (அ) இயேசு கைது செய்யப்பட்டபோது பேதுரு எப்படித் தைரியம் காட்டினார்? (ஆ) பேதுரு எப்படித் தன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டார்?

11 இயேசு தம்மைப் பிடிக்க வந்த கும்பலிடம், ‘நீங்கள் என்னைத்தான் பிடிக்க வந்தீர்கள் என்றால், என்னுடைய சீடர்களைப் போக விடுங்கள்’ என்று சொன்னார். இயேசுவை அந்தக் கும்பல் பிடித்துக் கட்டியபோது பேதுருவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்பு, மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே பேதுருவும் இயேசுவைவிட்டு ஓடிப்போனார்.

12 பேதுருவும் யோவானும் மட்டும் பாதியிலேயே நின்றுவிட்டார்கள், ஒருவேளை முன்னாள் தலைமைக் குரு அன்னா வீட்டுக்கு அருகில் அவர்கள் நின்றிருக்கலாம். முதலில் இங்குதான் விசாரணைக்கு இயேசு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து மீண்டும் அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, பேதுருவும் யோவானும் “சற்றுத் தூரத்திலிருந்தபடியே” பின்தொடர்ந்தார்கள். (மத். 26:58; யோவா. 18:​12, 13) அதற்காக, பேதுருவைக் கோழை என்று சொல்லிவிட முடியாது; பின்தொடர்ந்து செல்லக்கூட ரொம்பவே தைரியம் தேவை. ஏனென்றால், அந்தக் கும்பலிடம் ஆயுதங்கள் இருந்தன; அதுமட்டுமல்ல, அவர்களில் ஒருவனை பேதுரு ஏற்கெனவே தாக்கியிருந்தார். என்றாலும், எஜமானருக்காகச் சாகக்கூட தயார் என்று சொன்னாரே, அந்தளவுக்குப் பற்றுமாறா அன்பை அவர் காட்டவில்லை.​—மாற். 14:31.

13. கிறிஸ்துவைச் சரியான முறையில் பின்பற்றுவதற்கு ஒரே வழி என்ன?

13 இன்று அநேகர் பேதுருவைப் போல் யாருக்கும் தெரியாமல், “சற்றுத் தூரத்திலிருந்தபடியே” கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால், பேதுருவே பின்னர் எழுதியபடி, கிறிஸ்துவைச் சரியான முறையில் பின்பற்றுவதற்கு ஒரே வழி: என்ன வந்தாலும் சரி, நம்மால் முடிந்தளவுக்கு அவரை நெருக்கமாய்ப் பின்பற்றுவதுதான், அதாவது எல்லா விஷயங்களிலும் அவரை வழிகாட்டியாக எடுத்துக்கொள்வதுதான்.​1 பேதுரு 2:​21-ஐ வாசியுங்கள்.

14. இயேசு விசாரணை செய்யப்பட்ட அந்த இரவில் பேதுரு என்ன செய்துகொண்டிருந்தார்?

14 பதுங்கிப் பதுங்கி பின்தொடர்ந்த பேதுரு, எருசலேமில் கம்பீரமாய் வீற்றிருந்த ஒரு மாளிகையின் வாயிற்கதவைக் கடைசியாக வந்தடைந்தார். அது, செல்வமும் செல்வாக்கும் படைத்த தலைமைக் குரு காய்பாவின் வீடு. பொதுவாக அப்படிப்பட்ட வீடுகளின் முன்பக்கத்தில் வாயிற்கதவும் அதற்கடுத்து ஒரு முற்றமும் இருக்கும். பேதுரு வாயிற்கதவருகே சென்றார், ஆனால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தலைமைக் குருவுக்குப் பரிச்சயமான யோவான் ஏற்கெனவே உள்ளே சென்றிருந்தார், அதனால் வாயிற்காவலரிடம் பேசி பேதுருவும் உள்ளே வர அனுமதி வாங்கித் தந்தார். பேதுரு, யோவானின் பக்கத்தில் இருக்கவுமில்லை... எஜமானருடன் இருப்பதற்காக வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்யவுமில்லை... எனத் தெரிகிறது. அவர் முற்றத்திலேயே இருந்துவிட்டார்; குளிரான அந்த இரவில் அங்கு தகதகவென்று எரிந்துகொண்டிருந்த நெருப்புக்கு முன்னால் சில அடிமைகளும் வேலைக்காரர்களும் குளிர் காய்ந்துகொண்டிருந்தார்கள். விசாரணை நடந்துகொண்டிருந்தபோது பொய் சாட்சிகள் உள்ளே போவதையும் வருவதையும் பேதுரு கவனித்துக்கொண்டிருந்தார்.​—மாற். 14:​54-57; யோவா. 18:​15, 16, 18.

15, 16. பேதுரு தம்மை மூன்று முறை மறுதலிப்பார் என இயேசு முன்னுரைத்தது எப்படி நிறைவேறியது?

15 பேதுருவை உள்ளே அனுமதித்த பணிப்பெண்ணால், அந்த நெருப்பு வெளிச்சத்தில் அவருடைய முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவரை அவள் அடையாளம் கண்டுகொண்டாள். “கலிலேயனான இயேசுவோடு நீயும்தானே இருந்தாய்!” என்று சொல்லி அவரைக் குற்றம்சாட்டினாள். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பேதுரு தனக்கு இயேசுவைத் தெரியவே தெரியாது என்று சொன்னார்; அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்றுகூட தனக்குப் புரியவில்லை என்றும் சொன்னார். அதன்பின் யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக வாசல் மண்டபத்துக்குச் சென்றார்; அப்போது இன்னொரு பெண்ணும் அவரைப் பார்த்து, “இந்த ஆள் நாசரேத்தூர் இயேசுவோடு இருந்தான்” என்று சொன்னாள். அதற்கு பேதுரு, “எனக்கு அந்த மனுஷனைத் தெரியவே தெரியாது!” என்று ஆணையிட்டுச் சொன்னார். (மத். 26:​69-72; மாற். 14:​66-68) ஒருவேளை இரண்டாவது முறை பேதுரு மறுதலித்தபோது சேவல் கூவும் சத்தம் அவர் காதில் விழுந்திருக்கலாம்; ஆனால், பல விஷயங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் இயேசு சில மணிநேரத்திற்கு முன் உரைத்த அந்தத் தீர்க்கதரிசனம் அவர் நினைவுக்கு வராமல் போயிருக்கலாம்.

16 கொஞ்ச நேரத்திற்குப்பின்... யாராவது தன்னைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் பேதுரு அல்லாடிக்கொண்டிருந்தபோது... முற்றத்தில் நின்றுகொண்டிருந்த சிலர் அவரிடம் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பேதுரு காயப்படுத்திய அடிமை மல்குஸின் சொந்தக்காரர். “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று பேதுருவிடம் சொன்னார். பேதுருவோ, அவர்கள் நினைப்பது தவறென எப்படியாவது அவர்களை நம்பவைக்கப் பார்த்தார். தான் சொல்வது பொய் என்றால் தன்மேல் சாபம் வரட்டும் என்றும்கூட ஆணையிட்டார். இப்படி மூன்றாம் முறை மறுதலித்ததுதான் தாமதம், சேவல் இரண்டாம் முறை கூவியது.​—யோவா. 18:​26, 27; மாற். 14:​71, 72.

“இயேசு திரும்பி, பேதுருவைப் பார்த்தார்”

17, 18. (அ) எஜமானருக்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டதை பேதுரு உணர்ந்துகொண்டபோது எப்படிப் பிரதிபலித்தார்? (ஆ) பேதுரு என்ன நினைத்திருக்கலாம்?

17 சரியாக அந்தத் தருணத்தில் இயேசு மேல்மாடத்திற்கு வர... ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டபடி, கீழே முற்றத்திலிருந்த பேதுருவின் கண்களும் அவரது கண்களும் சந்திக்கின்றன. எஜமானருக்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டதை அப்போதுதான் பேதுரு உணருகிறார். குற்றவுணர்ச்சியால் மனம் சுக்குநூறாக உடைந்துபோய் முற்றத்தைவிட்டு வெளியேறுகிறார். நிலவு சிந்தும் மங்கிய ஒளியில் நகரத்தின் வீதியில் உயிர் சுமந்த உடலாய் பேதுரு நடந்துசெல்கிறார். கண்களில் கண்ணீர் தேங்கிநிற்க... எல்லாமே அவருக்குக் கலங்கலாய்த் தெரிகிறது. துக்கம் தாளாமல் மனங்கசந்து அழுகிறார்.​—மாற். 14:72; லூக். 22:​61, 62.

18 இப்படிப்பட்ட பெரும் தவறைச் செய்தபின்... தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பே இல்லை என்று ஒருவர் நினைப்பது சகஜம்தான். பேதுருவும் அப்படி நினைத்திருக்கலாம். அப்படியானால், அவருக்கு மன்னிப்பே கிடையாதா?

பேதுரு செய்த பாவம் மன்னிக்க முடியாததா?

19. செய்த தவறை நினைத்து பேதுரு எப்படி உணர்ந்திருப்பார், ஆனால் அவர் நம்பிக்கை இழந்துவிடவில்லை என எப்படிச் சொல்லலாம்?

19 பொழுது விடிந்து அந்த நாளில் நடக்கிற ஒவ்வொரு சம்பவமும் தெரிய வருகையில் பேதுரு படுகிற வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இயேசு மணிக்கணக்காகச் சித்திரவதை அனுபவித்து அன்று மதியம் மரிக்கும்போது பேதுரு எந்தளவு தன்னையே நொந்துகொண்டிருப்பார்! தன் எஜமானரின் மானிட வாழ்க்கை அஸ்தமித்த அந்த நாளில்... அவருக்கு ஏற்கெனவே இருந்த வேதனையோடு தானும் வேதனையைக் கூட்டிவிட்ட எண்ணம் பேதுருவை உலுக்கியெடுத்திருக்கும். ஆனால், பேதுருவின் துக்கம் அதலபாதாளம்வரை சென்றபோதிலும் அவர் நம்பிக்கையெனும் நூல் பிடித்து மீண்டும் மேலே வருகிறார். எப்படிச் சொல்கிறோம்? அவர் விரைவில் ஆன்மீகச் சகோதரர்களுடன் ஒன்றுசேர்ந்துகொண்டார் என்று பைபிள் பதிவு காட்டுகிறது. (லூக். 24:33) அன்றிரவு இயேசுவைவிட்டு ஓடிப்போனதை நினைத்து அப்போஸ்தலர்கள் அனைவரும் மனம் வருந்தியிருப்பார்கள்... ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லித் தேற்றியிருப்பார்கள்.

20. பேதுரு எடுத்த ஒரு ஞானமான தீர்மானத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

20 பேதுரு எடுத்த ஞானமான தீர்மானங்களில் இதுவும் ஒன்று. கடவுளுடைய ஊழியர் ஒருவர் பாவத்தில் விழுந்துவிட்டால் அவர் எந்தளவு கொடிய பாவத்தில் விழுந்திருக்கிறார் என்பதைவிட அதிலிருந்து எழுந்துவர எந்தளவு மனவுறுதியுடன் இருக்கிறார் என்பதுதான் முக்கியம். (நீதிமொழிகள் 24:​16-ஐ வாசியுங்கள்.) பேதுரு எவ்வளவுதான் துக்கத்தில் துவண்டிருந்தாலும் சகோதரர்களுடன் ஒன்றுகூடி வருவதன் மூலம் உண்மையான விசுவாசத்தைக் காட்டினார். ஒருவர் வேதனையிலோ வருத்தத்திலோ தளர்ந்திருக்கும்போது தனிமையை நாட விரும்பலாம், ஆனால் அது ஆபத்து! (நீதி. 18:1) சக விசுவாசிகளோடு எப்போதும் நெருக்கமாய் இருந்து ஆன்மீக ரீதியில் மீண்டும் பலத்தைப் பெறுவதுதான் ஞானமானது.​—எபி. 10:​24, 25.

21. ஆன்மீகச் சகோதரர்களுடன் ஒன்றுகூடி வந்ததால் பேதுரு என்ன செய்தியைக் கேள்விப்பட்டார்?

21 பேதுரு தன் ஆன்மீகச் சகோதரர்களுடன் இருப்பதால்தான் இயேசுவின் உடல் கல்லறையில் இல்லை என்ற அதிர்ச்சியான செய்தி அவருக்குக் கிடைக்கிறது. இயேசுவின் உடல் வைக்கப்பட்டு முத்திரை போடப்பட்டிருந்த கல்லறைக்கு பேதுருவும் யோவானும் ஓடுகிறார்கள். யோவான்... ஒருவேளை வாலிபராக இருப்பதால்... முதலில் வந்து சேருகிறார். கல்லறை திறந்திருப்பதைக் கண்டு அவர் தயங்கி நின்றுவிடுகிறார். ஆனால் பேதுரு அப்படிச் செய்வதில்லை. மூச்சு வாங்க ஓடோடி வந்திருந்தாலும், நேரே கல்லறைக்குள் செல்கிறார். அது காலியாகக் கிடக்கிறது!​—யோவா. 20:​3-9.

22. பேதுருவின் மனதிலிருந்த சந்தேக ரேகைகளும் வேதனை வடுக்களும் எப்படி மறைந்தன?

22 இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டிருப்பதை பேதுரு நம்புகிறாரா? முதலில் நம்புவதில்லை, இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைத் தேவதூதர்கள் வாயிலாக அறிந்துகொண்ட விசுவாசமுள்ள பெண்கள் அதைத் தெரிவிக்கிறபோதும்கூட அவர் நம்புவதில்லை. (லூக். 23:55–24:11) ஆனால், பொழுது சாயும்போது பேதுருவின் மனதிலுள்ள சந்தேக ரேகைகளும் வேதனை வடுக்களும் மறைந்துவிடுகின்றன. இயேசு உயிரோடு இருக்கிறார், இப்போது சக்திவாய்ந்த தூதராக இருக்கிறார்! மற்றெல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளிப்பதற்கு முன்னால் ஒருவருக்குக் காட்சியளிக்கிறார். “எஜமானர் உண்மையாகவே உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார்! சீமோனுக்குக் காட்சி அளித்தார்!” என அப்போஸ்தலர்கள் அன்று சீடர்களிடம் சொல்கிறார்கள். (லூக். 24:34) குறிப்பிடத்தக்க அந்த நாளில் நடந்த சம்பவங்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் பின்னர் எழுதியபோது, “கேபாவுக்கும், அதன்பின்பு பன்னிரண்டு பேருக்கும் [இயேசு] தோன்றினார்” எனச் சொன்னார். (1 கொ. 15:5) கேபா, சீமோன் ஆகியவை பேதுருவின் மறுபெயர்களே. ஆகவே, அன்று பேதுருவுக்கு இயேசு காட்சியளித்தார்​—ஒருவேளை தனியாக இருந்த சமயத்தில்.

பேதுருவை அவரது எஜமானர் பல முறை மன்னித்திருந்தார். நம்மில் யாருக்குத்தான் அன்றாடம் மன்னிப்பு தேவையில்லை?

23. பாவக்குழியில் விழும் கிறிஸ்தவர்கள் ஏன் பேதுருவின் உதாரணத்தை நினைவில் வைக்க வேண்டும்?

23 நெஞ்சை உருக்கும் அந்தச் சந்திப்பின்போது என்ன நடந்தது என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை; அது பேதுருவுக்கும் இயேசுவுக்கும் மட்டும்தான் தெரியும். ஆனால், அன்புக்குரிய எஜமானர் மீண்டும் உயிரோடு இருப்பதைப் பார்க்கவும் தான் மனவருந்தியதை... மனந்திரும்பியதை... பற்றி அவரிடம் சொல்லவும் வாய்ப்பு கிடைத்ததால் பேதுரு எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! இந்த உலகத்தில் வேறெதையும்விட மன்னிப்பைத்தான் அவர் இயேசுவிடம் கேட்டிருப்பார். இயேசு அவரை மன்னித்திருப்பார்... அதுவும் தாராளமாக மன்னித்திருப்பார்... என்பதில் சந்தேகம் உண்டா? இன்று பாவமெனும் படுகுழியில் விழும் கிறிஸ்தவர்கள் பேதுருவின் உதாரணத்தை நினைவில் வைக்க வேண்டும். ‘தாராளமாய் மன்னிக்கிற’ கடவுளைத்தான் இயேசு பூரணமாய்ப் பின்பற்றினார்; ஆகவே, கடவுளால் மன்னிக்கவே முடியாத பாவத்தைச் செய்துவிட்டோம் என்று ஒருபோதும் நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது.​—ஏசா. 55:​7, NW.

மன்னிப்புக்குக் கூடுதல் அத்தாட்சி

24, 25. (அ) கலிலேயாக் கடலில் பேதுரு மீன்பிடித்த அந்த இரவுநேர அனுபவத்தை விவரியுங்கள். (ஆ) அடுத்த நாள் விடியற்காலையில் இயேசு செய்த அற்புதத்தைக் கண்டு பேதுரு என்ன செய்தார்?

24 அப்போஸ்தலர்களை கலிலேயாவுக்குப் போகும்படி இயேசு சொல்கிறார்; அங்கு அவர்களை மீண்டும் சந்திப்பார். அங்கு சென்றதும் பேதுரு கலிலேயாக் கடலில் மீன் பிடிக்கப் போகிறார். மற்றவர்களும் அவரோடுகூட போகிறார்கள். வாழ்நாளில் பல வருடங்களை அந்த ஏரியில் செலவிட்டிருந்த பேதுரு மீண்டும் அங்கு வந்திருக்கிறார். படகின் ‘கிறீச்’ ஒலி... அலைகள் மோதும் சப்தம்... தன் கைகளில் இருக்கிற மீன்பிடி வலைகளின் சொரசொரப்பு... இதெல்லாம் அவருக்குப் புதிதல்ல, நன்கு பழக்கப்பட்டதே. அன்றிரவு முழுவதும் அவர்கள் வலை வீசியும் ஒரு மீன்கூட சிக்கவில்லை.​—மத். 26:32; யோவா. 21:​1-3.

பேதுரு படகிலிருந்து குதித்து கரைக்கு நீந்தி வந்தார்

25 விடியற்காலையில், கரையோரத்தில் நிற்கிற ஒருவர் அவர்களை அழைத்து படகின் மறுபக்கத்தில் வலைவீசச் சொல்கிறார். அப்படி வலை வீசும்போது 153 மீன்கள் சிக்குகின்றன! அவர் யாரென்று பேதுருவுக்குத் தெரிந்துவிடுகிறது. படகிலிருந்து ஒரே குதி குதித்து, கரைக்கு நீந்திச் செல்கிறார். சுட்டு வைத்திருக்கிற மீன்களை உண்மையுள்ள சீடர்களுக்கு இயேசு சாப்பிடக் கொடுக்கிறார். இப்போது, அவர் விசேஷமாக பேதுருமீது தன் கவனத்தைத் திருப்புகிறார்.​—யோவா. 21:​4-14.

26, 27. (அ) மூன்று முறை பேதுருவுக்கு இயேசு என்ன வாய்ப்பளிக்கிறார்? (ஆ) பேதுருவை முழுமையாக மன்னித்ததற்கு இயேசு என்ன அத்தாட்சி அளித்தார்?

26 “இவற்றைவிட” நீ என்னை நேசிக்கிறாயா என்று பேதுருவிடம் இயேசு கேட்கிறார். குவித்து வைக்கப்பட்டுள்ள மீன்களைச் சுட்டிக்காட்டித்தான் அப்படிக் கேட்கிறார் என்று தெரிகிறது. பேதுருவுக்கு இயேசுவைவிட மீன்பிடி தொழில் மீதுதான் அதிக அன்பு இருக்கிறதா? முன்பு பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்திருந்தார்; இப்போது, தம்மீது அன்பிருக்கிறது என்பதை மற்ற சீடர்கள் முன்னிலையில் மூன்று முறை சொல்ல இயேசு அவருக்கு வாய்ப்பளிக்கிறார். தனக்கு அன்பு இருப்பதாக பேதுரு சொல்கிறபோது அதை எப்படிக் காட்ட வேண்டுமென இயேசு தெரிவிக்கிறார். அதாவது, கடவுளுடைய சேவைக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம்... தமது ஆடுகளான உண்மை ஊழியர்களுக்கு உணவளிப்பதன் மூலம்... அவர்களைப் பலப்படுத்துவதன் மூலம்... மேய்ப்பதன் மூலம்... தம்மீது அன்பு காட்ட வேண்டுமெனத் தெரிவிக்கிறார்.​—லூக். 22:32; யோவா. 21:​15-17.

27 இப்படி... தமக்கும் தமது தகப்பனுக்கும் பேதுரு இன்னும் உபயோகமுள்ளவராகவே இருக்கிறார் என்பதை இயேசு அவருக்கு உணர்த்துகிறார். ஆம், கிறிஸ்துவின் தலைமையில் செயல்படும் சபையில் பேதுரு முக்கியப் பங்கு வகிக்கப்போகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பேதுருவை இயேசு மன்னித்துவிட்டார் என்பதற்கு எப்பேர்ப்பட்ட அத்தாட்சி! உண்மையில் இயேசுவின் கருணை பேதுருவின் நெஞ்சைத் தொடுகிறது, தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்.

28. பேதுரு எப்படித் தன் பெயருக்கேற்ப விளங்கினார்?

28 பின்பு பல வருடங்களுக்கு பேதுரு தன் பொறுப்பைச் சிறப்பாகச் செய்கிறார். இயேசு தாம் இறக்கப்போகும் நாளில் கட்டளையிட்டபடியே, பேதுரு தன் சகோதரர்களைப் பலப்படுத்துகிறார். கிறிஸ்துவின் சீடர்களை மேய்க்கும் வேலையை... அவர்களுக்கு உணவளிக்கும் வேலையை... அன்புடனும் பொறுமையுடனும் செய்கிறார். இயேசு வைத்த பெயருக்கேற்ப... அதாவது கல் என்ற அர்த்தமுள்ள பெயருக்கேற்ப... சபையில் உறுதியான, திடமான, நம்பகமான ஒரு நபராய் சீமோன் விளங்குகிறார். கிறிஸ்தவர்களின் நலனுக்காக அவர் எழுதிய அன்பான இரண்டு கடிதங்களில் இதற்கு ஏராளமான அத்தாட்சி இருக்கிறது; இந்தக் கடிதங்கள் பிற்பாடு பைபிளில் மதிப்புவாய்ந்த புத்தகங்களாக இடம்பிடித்தன. மன்னிப்பைப் பற்றி இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை பேதுரு ஒருபோதும் மறக்கவில்லை என்பதை அந்தக் கடிதங்கள் காட்டுகின்றன.​1 பேதுரு 3:​8, 9; 4:​8-ஐ வாசியுங்கள்.

29. பேதுருவைப் போல் விசுவாசத்தையும் அவரது எஜமானரைப் போல் கருணையையும் நாம் எப்படிக் காட்டலாம்?

29 நாமும் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வோமாக! நாம் செய்யும் பாவங்களுக்காகத் தினமும் கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறோமா? கடவுள் நம்மை மன்னித்துவிட்டார் என்று உறுதியாக நம்புகிறோமா? கடவுள் நம்மை மன்னிக்கும்போது நம் பாவக் கறையை நீக்கி சுத்தமாக்குகிறார் என்பதை நம்புகிறோமா? நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நாம் மன்னிக்கிறோமா? அப்படிச் செய்தால் பேதுரு காட்டியதைப் போன்ற விசுவாசத்தைக் காட்டுவோம், அவருடைய எஜமானரைப் போல் கருணையையும் பொழிவோம்.