Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஒரு வேலையை அடைவது (மற்றும் காத்துக்கொள்வது!) எவ்வாறு?

நான் ஒரு வேலையை அடைவது (மற்றும் காத்துக்கொள்வது!) எவ்வாறு?

அதிகாரம் 21

நான் ஒரு வேலையை அடைவது (மற்றும் காத்துக்கொள்வது!) எவ்வாறு?

உயர்நிலை கல்வித்துறைச் சார்ந்த பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆராய்ச்சி, அமெரிக்கன் உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் சிலரைத் தாங்கள் எந்த வாழ்க்கை இலக்குகளை “மிக முக்கியம்” எனக் கருதுகின்றனர் என்பதை மதிப்பிடும்படிக் கேட்டது. “நிலையான வேலையைக் கண்டடையக்கூடியதாயிருப்பதே,” என எண்பத்திநான்கு சதவீதம் பதிலளித்தனர்.

தனிப்பட்ட அல்லது வீட்டுச் செலவுகளுக்கு உதவியாயிருப்பதற்கு, பள்ளிக்குப் பிற்பட்டநேர வேலை ஒன்றில் ஒருவேளை நீ அக்கறைகொண்டிருக்கலாம். அல்லது நீ நற்செய்தி பிரசங்கிக்கும் முழுநேர ஊழியனாக உன்னை ஆதரித்துக்கொள்வதற்கு ஒருவேளை பகுதி-நேர வேலையைத் தேடிக்கொண்டிருக்கலாம். (அதிகாரம் 22-ஐப் பார்.) எவ்வாறாயினும், நீ இளைஞனாயிருந்தால், உலகமெங்குமுள்ள பணவீக்கமும் திறமையற்ற வேலையாளருக்கானத் தேவை மட்டுப்பட்டிருப்பதும் வேலைகள் கிடைப்பதைக் கடினமாக்கியிருக்கின்றன. அப்படியானால், நீ எவ்வாறு வேலைகிடைப்பதை எளிதாக்க முடியும்?

பள்ளி—வேலைக்குப் பயிற்றுவிக்கும் இடம்

பல ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்டவரான வேலைக்கு-ஆளெடுக்கும் கிளீவ்லன்ட் ஜோன்ஸ், பின்வரும் இந்த அறிவுரை கொடுக்கிறார்: “நல்ல உயர்நிலைப்பள்ளிக் கல்வியைப் பெறு. சரியானமுறையில் வாசிக்கவும் எழுதவும் பேசவும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை நான் போதியளவு அழுத்திக்கூற முடியாது. அதோடு தகுதியான சீரொழுங்கையும் கற்றுக்கொள், இவ்வாறு வேலைசெய்யும் உலகத்தில் நீ ஆட்களைக் கையாள முடியும்.”

பேருந்து ஓட்டுபவன் வந்துசேருவதற்கும் புறப்படுவதற்குமுரிய கால அட்டவணைகளை வாசிக்கும் திறமையுடன் இருக்கவேண்டும். தொழிற்சாலை வேலையாட்கள் வேலை-முடிக்கும் சீட்டுகளை அல்லது அவற்றைப்போன்ற விவர அறிவிப்புகளை நிரப்புவது எவ்வாறென அறிந்திருக்கவேண்டும். விற்பனை கணக்கர்கள் கணக்கிடுதலை அறிந்திருக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். ஏறக்குறைய எல்லா வகையான வேலையிலும், பேச்சுத்தொடர்பு திறமைகள் தேவைப்படுகின்றன. இவை நீ பள்ளியில் தேர்ச்சிப்பெறக்கூடிய திறமைகள்.

விடாப்பிடியாய் முயற்சிசெய்வது பலன்தருகிறது

“நீ பள்ளியைவிட்டு வெளியேறி வேலைக்காகத் தேடிக்கொண்டிருந்தால் முயற்சியை ஒருபோதும் விட்டுவிடாதே,” என்று ஜோன்ஸ் சொல்கிறார். “இரண்டு அல்லது மூன்று நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றுவிட்டு, பின்பு வீட்டுக்குச் சென்று உட்கார்ந்து காத்திருக்காதே. அந்த முறையில் நீ ஒருபோதும் ஒரு வேலைக்கு வரும்படி அழைக்கப்படப்போவதில்லை.” இளைஞன் சால் தான் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னால் ஏழு மாதங்கள் வேலைக்காகத் தேடினான். “‘என் வேலை ஒரு வேலையைத் தேடிப்பெறுவது,’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்,” என்று சால் விளக்குகிறான். “நான் வேலைக்காகத் தேடி ஏழு மாதங்களாக ஒவ்வொரு வார நாளும் எட்டு மணிநேரங்கள் செலவிட்டேன். ஒவ்வொரு நாளும் விடியற்காலையிலேயே தொடங்கி பிற்பகல் நாலு மணி வரையில் ‘உழைப்பேன்.’ பல இரவுகள் என் பாதங்கள் மிகுந்த வேதனைதரும். அடுத்த நாள் காலையில் திரும்பத் தேடத்தொடங்குவதற்கு நான் ‘என் மனதைத் தூண்டி வற்புறுத்த’ வேண்டியிருக்கும்.”

முயற்சியை விட்டுவிடாதபடி சாலைக் காத்துவந்தது எது? அவன் பின்வருமாறு பதில்சொல்கிறான்: “ஓர் அதிகாரியின் அலுவலகத்தில் நான் இருந்த ஒவ்வொரு சமயத்திலும், ‘உங்களைக் கடுமுயற்சியில் ஈடுபடுத்துங்கள்,’ என்று இயேசு சொன்னதை நினைவுகூருவேன். ஒரு நாள் நான் வேலைசெய்துகொண்டிருப்பேன் இந்தக் கெட்டக் காலம் சீக்கிரம் கடந்துபோகும் என்று நான் விடாது சிந்தித்துக்கொண்டிருப்பேன்.”—லூக்கா 13:24, NW.

வேலைகளை எங்கே தேடிப்பெறுவது?

நாட்டுப்புறப் பகுதியில் நீ வாழ்ந்தால், நீ வேலை தேடுவது அவ்விடத்துப் பண்ணைகளிலும் பழத்தோட்டங்களிலுமிருந்து தொடங்கலாம், அல்லது ஏதோவொரு வகையான வெளி வேலைக்காகவும் தேடலாம். பெரிய பட்டணத்தில் அல்லது நகரத்தில் நீ வழ்ந்தால், செய்தித்தாளில் உதவி-தேவை விளம்பரங்களைப் பார்க்க முயற்சிசெய். இந்த விளம்பரங்கள் குறிப்பிட்ட வேலைக்கு என்ன தகுதிகள் தேவை என்பவற்றைப்பற்றி உனக்கு வழிகாட்டும் குறிப்புகளை அளிக்கும், மேலும் நீ ஏன் அந்தத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய முடியுமென அந்த வேலைகொடுப்பவருக்கு விளக்கிக் கூறவும் உனக்கு உதவிசெய்யும். பெற்றோர், ஆசிரியர்கள், வேலை தேடித்தரும் நிறுவனங்கள், தொழிலாளர் அலுவலகங்கள், நண்பர்கள், மற்றும் அயலார் ஆகியோரும் நீ நாடக்கூடிய மற்ற உதவிமூலங்கள்.

உன் வேலையைக் காத்துக்கொள்வது

விசனகரமாய், பொருளாதார நெருக்கடிகள் வேலையில்லாமையை உண்டுபண்ணுகையில், வேலைக்கு அமர்த்தப்பட்ட இளைஞரே வேலையிலிருந்து நீக்கப்படுவோரில் முதல்வராயிருக்கின்றனர். ஆனால் இது உனக்கு நடக்க வேண்டியதில்லை. “உழைப்பதில் ஆர்வமுடையோரும் எஜமானர் கேட்கும் எதையும் செய்ய தயாராயுள்ள மனப்பான்மை காட்டுவோருமான ஆட்களே வேலையில் தொடர்ந்திருக்க வைத்துக்கொள்ளப்படும் ஆட்கள்,” என்று மிஸ்டர் ஜோன்ஸ் சொல்கிறார்.

உன் மனப்பான்மை—உன் வேலையைப்பற்றியும் உன் எஜமானரைப்பற்றியும் உன் உடனுழைப்போரைப்பற்றியும் நீ எவ்வாறு உணருகிறாய் என்ற—உன் மனநிலையே. உன் மனப்பான்மை நீ செய்யும் வேலையின் தனித்தன்மையில் பிரதிபலிக்கும். உன் எஜமானர் நீ செய்யும் வேலையளவின்பேரில் மட்டுமல்ல உன் மனப்பான்மையின் அடிப்படையின்பேரிலும் உன் தகைமையை நியாயந்தீர்ப்பார்.

“இடைவிடாத மேற்பார்வையில்லாமல் நீ கட்டளைகளைப் பின்பற்ற முடியும் என்றுமட்டுமல்லாமல் கேட்கப்பட்டவற்றிற்கு மேலாகவும் செய்வாயென உன் எஜமானர் காணவிடு,” என ஜோன்ஸ் தெடர்ந்து கூறுகிறார். “ஏனெனில் வேலையில்லா நெருக்கடியில், தொடர்ந்து நிலைத்திருக்கும் வேலையாளர்கள் அங்கே வெகுகாலம் இருந்தவர்கள்தான் என்பதல்ல, ஆனால் மிகுந்த உற்பத்திப் பலன் உண்டுபண்ணுவோரேயாவர்.

சால் இவ்வாறு உண்மையில் இருப்பதைக் கண்டான். அவன் சொல்வதாவது: “நான் எப்பொழுதும் என் எஜமானருக்கு இணங்கிப்போக முயன்றேன். தேவைப்பட்டபோது என் திட்டத்தைச் சற்று மாற்றிக்கொள்ளவும், கட்டளைகளைப் பின்பற்றவும் என் மேற்பார்வையாளரிடம் மரியாதையுடன் இருக்கவும் மனமுள்ளவனாயிருந்தேன்.” இது, “உங்கள் [மனித] எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு . . . கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்,” என்று பைபிள் கொடுக்கும் அறிவுரையை ஒருவருக்கு நினைப்பூட்டுகிறது.—கொலோசெயர் 3:22.

பயத்தை அடக்கி வெல்லுதல்

அந்த வேலையில் நீ புதியவனாயிருந்தால், பொதுவாய் முதல் ஒருசில நாட்கள் பய உணர்ச்சியுடனிருப்பாய். நீ ஒருவேளை பின்வருமாறு சிந்திக்கலாம்: ‘அவர்கள் என்னை விரும்புவார்களா? நான் இந்த வேலையைச் செய்ய முடியுமா? என் வேலை அவர்களுக்குப் பிரியமாயிருக்குமா? நான் முட்டாளாய்த் தோன்றாதிருப்பேனென நம்புகிறேன்.’ இங்கே நீ கவனமாய் இருக்கவேண்டும், அல்லது உன் பயங்கள் உன் உடன்பாடான மனநிலைசார்பை சிறிதுசிறிதாய் அரித்துப்போடும்.

அந்த ஸ்தாபனத்தைப்பற்றி மேலுமதிகம் தெரிந்துகொள்வதால் நீ உன்னைத் தக்கவாறு பொருத்திக்கொள்வதையும் உன் பயங்களை அமர்த்துவதையும் விரைவுபடுத்தலாம். கவனித்துப்பார், செவிகொடுத்துக்கேள், மற்றும் வாசி. தக்கச் சமயத்தில் உன் வேலையைப்பற்றியும் உன் வேலை நிறைவேற்றத்தைப்பற்றியும் உன் மேற்பார்வையாளரிடம் உகந்தக் கேள்விகளைக் கேள்.—இது உன்னை முட்டாள்தனமாய்த் தோன்றச் செய்யாது. ‘என் வேலை எவ்வாறு என் இலாக்காவுடன், மற்றும் ஸ்தாபனத்தின் நோக்கத்துடன் பொருந்துகிறது?’ என உன்னை நீயே கேட்டுக்கொள். இதற்குப் பதில்கள் நல்ல வேலைப் பழக்கங்களையும் வேலையில் திருப்தியையும் முன்னேற்றுவிக்க உனக்கு உதவிசெய்யலாம்.

உடனுழைக்கும் வேலையாளருடன் ஒத்துவாழ்வது

எல்லா வேலைகளும் முடிவில் மற்ற ஆட்களுடன் நடைமுறைத் தொடர்பு கொள்வதை உட்படுத்துகின்றன. இதனால் மற்றவர்களுடன் நல்ல உறவுகளைக் காத்துக்கொள்வது எவ்வாறென அறிவது ஒரு வேலையைக் காத்து வைத்துக்கொள்வதற்கு இன்றியமையாதது. “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:18) இவ்வாறு செய்வது வேலையின்பேரில் வேண்டாத சண்டைகளை அல்லது கோப எதிர்ப்புகளைத் தவிர்க்க உனக்கு உதவிசெய்யும்.

உன்னோடு வேலைசெய்யும் ஆட்கள் சிலசமயங்களில் உன்னுடையதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வளர்ப்பு சூழ்நிலைகளையும் பண்பியல்களையும் உடையோராய் இருப்பர். ஒருவன் வேறுபட்டிருப்பதால் அவன் தாழ்ந்தவனென எண்ணாதே. வேறுபட்டிருப்பதற்கு அவனுக்குள்ள உரிமையை மதி. எந்த ஆளும் தான் மதிப்புக்குறைவாய் நடத்தப்பட விரும்புகிறதில்லை; இது தான் ஒரு பொருட்டல்ல என்பதுபோல் உணரும்படி அவனைச் செய்விக்கிறது. தான் வேண்டியவன் தேவைப்படுகிறான்—குறிப்பிடத்தக்கவனென உணரும்படி எல்லாரும் விரும்புகின்றனர்—உடன் வேலைசெய்வோரையும் எஜமானரையும் மரியாதையுடன் நடத்துவதன்மூலம் அவர்களுடைய நன்மதிப்பைப் பெறு.

வீண்பேச்சைத் தவிர்த்தல்

“இது மோசமான இடறுகுழி,“ என சால் சொல்லுகிறான், “ஏனெனில் வீண்பேச்சு தொழில்-முதல்வரையும் மற்றவர்களையும் பற்றித் தாழ்வான அபிப்பிராயத்தை உனக்குக் கொடுக்கலாம். ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவிக்கொண்டுவரும் இந்தப் பேச்சு மிக நல்ல தகவல் ஊற்றுமூலம் அல்ல. இது உன்னை முடிவில் தொந்தரவுக்குள் கொண்டுசென்றுவிடலாம். வீண்பேச்சால் பரவி வளர்ந்துகொண்டுவரும் வதந்தி பொதுவாய் மற்றவர்களுடைய நற்பெயரை—உன் சொந்த நற்பெயரையுங்கூட—கெடுக்கக்கூடியபடி படுமோசமாய் மிகைப்படுத்தின கூற்றுகளாகும். ஆகையால் வீண்பேச்சுப் பேசும்படியான தூண்டுதலை அடக்கி அணைத்துப்போடு.

குறைகூறுபவரை ஒருவரும் விரும்புகிறதில்லை என்பதையும் நினைவில் வை. வேலையில் ஏதோ உனக்குத் தொல்லைக்கொடுத்தால், ஆளுக்கு ஆள் தாவிச்செல்லும் வதந்தியின்மூலம் அதைப் பரவச் செய்யாதே. போய் உன் மேற்பார்வையாளரிடம் பேசு. எனினும், கடும் கோபாவேசத்தில் அவருடைய அலுவலகத்துக்குள் திடுமென நுழைந்து பதற்றமாய்ப் பேசின வார்த்தைகளுக்காகப் பின்னால் வருந்தாதே. மேலும், ஓர் ஆளைத் தாக்கும் கண்ணியைத் தவிர். உண்மைகளையே கூறு. அந்தப் பிரச்னையை விவரிப்பதில் உன்னால் கூடியவரை தெளிவாகவும் நேர்மையாகவும் இரு. ஒருவேளை உன் தொடக்கக் கூற்றுகளை இவ்வாறு ஆரம்பிக்கலாம், ‘உங்கள் உதவி எனக்குத் தேவை . . .’ அல்லது, ‘நான் ஒருவேளை தவறில் இருக்கலாம், ஆனால் நான் . . . பற்றி இவ்வாறு உணருகிறேன்.’

நேரம் தவறாதிருப்பது முக்கியம்

வேலைக்குப் பிந்தி வருவதும் வேலைக்கு வராமல் நாட்களைத் தவறவிடுவதும் ஆட்கள் ஒரு வேலையை இழக்காமல் காத்துக்கொள்ளத் தவறுவதற்கு இரண்டு பெரிய காரணங்களாகும். தொழிற்சாலைகள் நிரம்பிய ஒரு பெரிய நகரத்துக்கு வேலை வாய்ப்பளிப்பையும் பயிற்றுவிப்பையும் நடத்தும் மேலாளர் இளம் வேலையாளரைப்பற்றிப் பின்வருமாறு சொன்னார்: “அவர்கள் விடியற்காலையில் எழும்பக் கற்றுக்கொள்ளவேண்டும், கட்டளைகளை ஏற்பது எவ்வாறெனக் கற்றுக்கொள்ளவேண்டும். இவற்றை அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளாவிடில், அது வேலையில்லாமை நோய்க்குறித் தொகுதியை வெறுமென நீடித்திருக்கவே செய்கிறது.”

நேரந்தவறாது இருக்கவேண்டிய பாடத்தைச் சால் கடினமான முறையில் கற்றுக்கொண்டான். “தாமதமாக வரும் போக்கால் வெறும் மூன்று மாதங்களுக்குப் பின் நான் என் முதல் வேலையை இழந்துவிட்டேன்,” என்று அவன் பெருமூச்சுவிடுகிறான், “இது மற்ற வேலைகளைக் கண்டடைவதை மேலும் அதிகக் கடினமாக்கிற்று.”

நேர்மையின் உயர் மதிப்பு

“நேர்மை, வேலையை இழக்காமல் காத்துக்கொள்ள ஒருவருக்கு உதவிசெய்யும்,” என்று வேலைக்கு ஆளெடுப்பவரான ஜோன்ஸ் சொல்கிறார். நேர்மையாயிருப்பது, பொருட்களைத் திருடுவதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் மிதமீறிய இடை ஓய்வுகளை எடுப்பதால் நேரத்தைத் திருடுவதைத் தவிர்ப்பதையும் உட்படுத்துகிறது. நேர்மையுள்ள வேலையாளன் உயர்வாய் மதிக்கப்படுகிறான் மற்றும் நம்பப்படுகிறான். உதாரணமாக, ஒரு பிரத்தியேக துணிக் கடையில் வேலைசெய்த யெகோவாவின் சாட்சியான ஓர் இளைஞன் நேர்மைக்கு நன்மதிப்புப் பெற்றிருந்தான்.

அவன் நினைவுபடுத்திக் கூறுவதாவது: “ஒரு நாள், மேலாளர், சரக்குச் சேமிப்பறையில், மற்றத் துணிகளுக்குள் ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். வேலையாளரில் ஒருவன் அந்தச் சேமிப்பறையிலிருந்து திருடியிருந்தான். கடை மூடும் நேரத்தில் நான் மேல்மாடியிலுள்ள மேலாளர் அலுவலகத்துக்குச் சென்றேன், எனக்கு ஆச்சரியமுண்டாக வேலையாட்கள் எல்லாரும் அங்கே இருந்தனர். சோதனையிடுவதற்காக எல்லா வேலையாட்களும் அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். நான் மாத்திரமே அந்தச் சோதனைக்குத் தவிர்க்கப்பட்ட ஒரே வேலையாள்.”

கிறிஸ்தவ இளைஞர் பலர் இதைப்போன்ற அனுபவங்களைக் கொண்டிருக்கின்றனர் மற்றும் உயர்வாய் மதிக்கப்படும் வேலையாட்களாகியிருக்கின்றனர். அப்படியானால், வேலையைத் தேடுவதில் கடினமாய் உழை. விடாப்பிடியாய் முயற்சிசெய். விட்டுவிடாதே. நீ அவ்வளவு கடின முயற்சியெடுத்துத் தேடி அந்த வேலையைப் பெறுகையில், அதை இழக்காமல் காத்துக்கொள்ள கடினமாய் உழை!

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

உன் பள்ளிப்பாடவேலை எவ்வாறு ஒரு வேலையைத் தேடிப்பெறும் உன் திறமையைப் பாதிக்கும்?

வேலைக்காகத் தேடியலைகையில் விடாப்பிடியாய் முயற்சிசெய்வது ஏன் முக்கியம்?

வேலைத் தேடக்கூடிய சில இடங்கள் யாவை, கலந்தாலோசிக்கக்கூடிய ஆட்கள் சிலர் யாவர்?

வேலைக்கான நேர்முகத் தேர்வில் கடைப்பிடிக்கக்கூடிய சில சிறு உதவிக்குறிப்புகள் யாவை?

உன்னை வேலையைவிட்டு நீக்காதபடி பாதுகாத்துக்கொள்ள நீ என்ன செய்யலாம்?

[பக்கம் 166-ன் சிறு குறிப்பு]

“சரியானமுறையில் வாசிக்கவும் எழுதவும் பேசவும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை நான் போதியளவு அழுத்திக்கூற முடியாது”

[பக்கம் 170-ன் சிறு குறிப்பு]

“‘ஒரு வேலையைத் தேடிப்பெறுவது என் வேலை,’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்”

[பக்கம் 168,169-ன் பெட்டி/படம்]

வேலைக்கான நேர்முகத்தேர்வில் கடைப்பிடிக்கவேண்டியவை

“ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வுக்குச் செல்வதற்குமுன், முதல் அபிப்பிராயங்கள் நிலையான அபிப்பிராயங்கள் என்பதை நினைவுபடுத்திக்கொள்,” என்று வேலை-ஆலோசனைகூறும் கிளீவ்லன்ட் ஜோன்ஸ் அறிவுரைகூறுகிறார். தேர்முகத்தேர்வுக்கு ஜீன்ஸும் விளையாட்டு மிதியடிகளும் அணிந்துசெல்வதற்கு எதிராக அவர் எச்சரித்து, சுத்தமும் ஒழுங்கும் அமைந்தத் தோற்றத்துடன் இருப்பதற்கான தேவையை அழுத்திக்கூறுகிறார். ஓர் ஆள் எந்த முறையில் உடுத்துகிறானோ அந்த முறையிலேயே அவன் வேலைசெய்வான் என வேலைகொடுப்போர் அடிக்கடி முடிவுசெய்கின்றனர்.

அலுவலக வேலைக்காக மனுச்செய்கையில், வினைத்திட்பமுள்ள ஆள் உடுத்துவதுபோல் உடுத்து. தொழிற்சாலை வேலைக்கு மனுச்செய்கையில், சுத்தமான மற்றும் சலவைப்பெட்டியால் சமன்படுத்தப்பட்ட தளர்காற்சட்டையும் ஷர்ட்டும், அவற்றோடு ஒழுங்காய்த் தோன்றும் புதைமிதியடிகளையும் அணி. நீ பெண்ணாயிருந்தால், அடக்கமான உடைஉடுத்து, ஒப்பனைப் பொருட்களை மிதமாய்ப் பயன்படுத்து, ஒழுங்கான பாதரட்சை அணி.

நேர்முகத் தேர்வுக்கு எப்பொழுதும் தனியாகச் செல், என்று ஜோன்ஸ் எச்சரிக்கிறார். நேர்முகத் தேர்வுக்குச் செல்கையில் உன் தாயையாவது நண்பர்களையாவது உன்னுடன் அழைத்து வந்தால், வேலைகொடுப்பவர் உன்னை முதிர்ச்சியற்றவனென முடிவு செய்யலாம்.

‘முன் வேலைசெய்து னுபவம் இருக்கிறதாவென வேலைகொடுப்பவர் என்னை ஒருவேளை கேட்டால், நான் எவ்வாறு பதில் சொல்வது?’ என்று நீ சிந்தித்துக்கொண்டிருக்கலாம். பொய்ச்சொல்லி ஏமாற்றாதே. காரியங்களை மிகைப்படக்கூறுகையில், வேலைகொடுப்பவர்கள் அதைப் பெரும்பாலும் ஊடுருவிக் கண்டுகொள்வர். நேர்மையுடனிரு.

நீ இதை ஒருவேளை உணராவிடினும், “உண்மையான” முதல் வேலைக்கு நீ தேடியலைந்துகொண்டிருந்தாலும் உனக்குப் பெரும்பாலும் முந்தின வேலை அனுபவம் இருந்திருக்கலாம். உனக்கு எப்பொழுதாவது வேனிற்கால வேலை இருந்ததுண்டா? அல்லது நீ எப்பொழுதாவது குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தாயா? தேவைப்படும் வீட்டுவேலைகளைக் கவனிக்க உன் வீட்டில் நிலையான வேலை பொறுப்பு உனக்கு இருந்ததுண்டா? வணக்கத்துக்குரிய இடத்தில் குறிப்பிட்ட கடமைகளைக் கவனிக்கும் பொறுப்பு உனக்குக் கொடுக்கப்பட்டதா? யாவர்முன்னும் பேச்சுக்கொடுப்பதில் உனக்கு எப்பொழுதாவது பயிற்றுவிப்பு கிடைத்திருக்கிறதா? அப்படியானால், நீ பொறுப்பைக் கையாள முடியுமெனக் காட்டுவதற்கு, இந்தக் காரியங்களை அந்த நேர்முகத் தேர்வில் அதைக் குறிப்பிடலாம் அல்லது உன் அனுபவத்தைப்பற்றிய பதிவில் வரிசையாகக் குறிப்பிடலாம்.

வேலைகொடுப்போரின் மற்றொரு முக்கிய அக்கறை, அவர்களுடைய தொழில் நிறுவனத்திலும் உனக்கு அளிக்கவிருக்கும் வேலையிலும் உனக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதென்பதே. அந்த வேலையை நீ செய்ய விரும்புகிறாய் எனவும் அதைச் செய்ய முடியும் எனவும் நீ அவர்களை உறுதியாய் நம்பவைக்கவேண்டும். “அதில் எனக்கென்னவிருக்கிறது” என்ற மனப்பான்மை, உனக்கு நேர்முகத்தேர்வை எடுப்பவரின் அக்கறையை உன்மீதிருந்து விரைவில் அற்றுப்போகச் செய்யும்.

முழு-நேர அல்லது பகுதி-நேர வேலைக்கு மனுச்செய்து வேலைபெறுவது நீ வெற்றியுடன் மேற்கொள்ளக்கூடிய சவாலாகும். உனக்குமட்டுமேயல்ல மற்றவர்களுக்கும் உதவியாயிருக்கும் ஒரு கருவியாக அந்த வேலையைப் பயன்படுத்துகையில், மனத்திருப்தி கூடுதலாய்க் கிடைக்கும் நன்மையாகிறது.

[பக்கம் 171-ன் பெட்டி]

நேர்முகத் தேர்வின்போது என்ன செய்வது

முதிர்ந்தவனாய், வினைத்திட்பமுடையவனாய் இரு. வேலைகொடுப்பவருக்குத் தகுந்த மரியாதையுடன் வணக்கம் தெரிவி. அவரை “மிஸ்டர்” என்றழை—“ஜாக்,” “தோழரே,” அல்லது “நண்பரே,” என்றல்ல.

நாற்காலியில் நிமிர்ந்து நேரே உட்கார், பாதங்கள் தரையில் உறுதியாய் ஊன்றியிருக்கட்டும்; விழிப்புடன் தோன்று. முன்னதாகவே திட்டமிடுவது மன அமைதியுடனும், சமநிலையிலும், இயல்பாக தளர்ந்த நிலையிலும் இருக்கும்படி உனக்கு உதவிசெய்யும்.

ஒரு கேள்விக்குப் பதில்சொல்வதற்குமுன் யோசி. மரியாதைமிக்கவனாயும், திருத்தமாயும், நேர்மையாயும், ஒளிவு மறைவில்லாது பேசுபவனாயும் இரு. முழுத் தகவலையும் கொடு. தற்பெருமை பேசாதே.

உதவி குறிப்புத்தாள் ஒன்றை வைத்திரு, அதில் உன் வேலைகள், வேலை செய்தத் தேதிகள், சம்பளங்கள், நீ செய்த வேலைவகைகள், வேலையை விட்டுவிட்ட காரணங்கள் ஆகியவற்றை வரிசையாய்க் குறிப்பிட்டிரு.

உன் பயிற்றுவிப்பும் வேலை அனுபவங்களும் நீ விண்ணப்பிக்கும் வேலையை வெற்றிகரமாய்ச் செய்ய உனக்கு எவ்வாறு உதவிசெய்யுமெனக் காட்ட தயாராயிரு.

சான்றாதாரமாக, உன்னையும் உன் வேலையையும் அறிந்துள்ள நம்பத்தக்க மூன்று ஆட்களின் பெயர்களைக் (முழு விலாசங்களையுங்கூட) கொடு.

மன உறுதியுடன் இரு, ஆர்வத்துடன் இரு, ஆனால் வெற்று வீம்பு பேசாதே. நல்ல தமிழ் பயன்படுத்து. தெளிவாய்ப் பேசு. மட்டுக்குமீறி பேசாதே.

கவனமாய்ச் செவிகொடுத்துக் கேள்; மரியாதைமிக்கவனாயும் சமயோசித சாதுரியத்துடனும் இரு. எல்லாவற்றிற்கும் மேலாக, உன் எதிர்கால எஜமானருடன் எந்த விவாதங்களும் செய்ய முனையாதே.

வேலை கொடுப்பவர் அந்த வேலையில் நீ எவ்வளவு நன்றாய்ப் பொருந்துவாய் என்பதில் மாத்திரமே அக்கறைகொண்டிருக்கிறார். உன் தனிப்பட்ட, வீட்டு, அல்லது பணப் பிரச்னைகளைக் குறிப்பிடாதே.

அந்த வேலை உனக்குக் கிடைக்காதெனத் தோன்றினால், அந்தத் தொழிற்சாலையில் எழும்பக்கூடிய மற்ற வேலைகளைப்பற்றி வேலைகொடுப்பவரின் ஆலோசனையைத் தேடு.

நேர்முகத் தேர்வை அடுத்து உடனே ஒரு சுருக்கமான நன்றிதெரிவிக்கும் கடிதத்தை வேலைகொடுப்பவருக்கு அனுப்பு. a

[அடிக்குறிப்புகள்]

a மூல ஆதார ஏடு: நியு யார்க் ஸ்டேட் வேலைவாய்ப்பு சேவை சிற்றேடு, வேலைகொடுப்பவருக்கு “உன்னை விற்பது” எவ்வாறு. (How to “Sell Yourself” to an Employer)

[பக்கம் 167-ன் படங்கள்]

பள்ளியில் நீ கற்கும் திறமைகள் ஒரு நாள் ஒரு வேலையில் மிகப் பயனுள்ளவையாக நிரூபிக்கலாம்