வழி, சத்தியம், வாழ்வு
நல்ல செய்தி என்றாலே நம் எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் உங்களுடைய அன்பானவர்களுக்கும் ஒரு நல்ல செய்தி இருக்கிறது.
அந்த நல்ல செய்தி பைபிளில் இருக்கிறது. பல வருஷங்களுக்கு முன்பே, இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளரான யெகோவா தேவன் பைபிளில் அதைப் பதிவு செய்திருக்கிறார். இயேசு—வழி, சத்தியம், வாழ்வு என்ற இந்தப் புத்தகத்தில், அந்த நல்ல செய்தியைச் சொல்லும் நான்கு பைபிள் புத்தகங்களுக்குக் கவனம் செலுத்துவோம். கடவுள் யாரைப் பயன்படுத்தி அந்தப் புத்தகங்களை எழுதினாரோ, அவர்களுடைய பெயரே அந்தப் புத்தகங்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவைதான் அந்த நான்கு புத்தகங்கள்.
பொதுவாக, அந்த நான்கு புத்தகங்களையும் சுவிசேஷங்கள் என்று சொல்வார்கள். “சுவிசேஷம்” என்றால் “நல்ல செய்தி” என்று அர்த்தம். அந்த நான்கு புத்தகங்களிலும் இயேசுவைப் பற்றிய நல்ல செய்தி இருக்கிறது. அதாவது, இயேசு மூலமாக நமக்கு மீட்பு கிடைக்கப்போகிறது என்றும், அவர் பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக இருப்பதால், தன்மீது விசுவாசம் வைப்பவர்களுக்கு நிரந்தர ஆசீர்வாதங்களை அள்ளித் தருவார் என்றும் அந்தப் புத்தகங்கள் சொல்கின்றன.—மாற்கு 10:17, 30; 13:13.
எதற்காக நான்கு சுவிசேஷங்கள்?
இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் பற்றி எதற்காக நான்கு புத்தகங்களில் கடவுள் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம்.
இயேசு சொன்னவற்றையும் செய்தவற்றையும் பற்றி நான்கு புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, பிரபலமான ஒரு போதகருக்குப் பக்கத்தில் நான்கு பேர் நின்றுகொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தப் போதகருக்கு முன்னால், வரி வசூலிக்கும் அலுவலகத்தின் உரிமையாளர் ஒருவர் நிற்கிறார். வலது பக்கத்தில், ஒரு மருத்துவர் நிற்கிறார். இடது பக்கத்தில், அந்தப் போதகரின் நெருங்கிய நண்பரான ஒரு மீனவர் நிற்கிறார். அந்தப் போதகருக்குப் பின்னால், பார்வையாளர் ஒருவர் நிற்கிறார்; அவர் எல்லாரையும்விட இளையவர். இந்த நான்கு பேருமே நேர்மையான ஆட்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள், வெவ்வேறு விஷயங்களுக்குக் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் போதகர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் பற்றி ஒரு புத்தகம் எழுதினால் எப்படி இருக்கும்? அநேகமாக, அந்த நான்கு புத்தகங்களிலும் வித்தியாசமான விவரங்களும் சம்பவங்களும்தான் இருக்கும். அவற்றைப் படிக்கும்போது அந்த எழுத்தாளர்களின் கண்ணோட்டமும் குறிக்கோளும் வெவ்வேறு என்பதை மனதில் வைக்க வேண்டும். அப்போதுதான், அந்தப் போதகர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் நம்மால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல், நான்கு சுவிசேஷப் புத்தகங்களையும் படித்தால்தான் பெரிய போதகரான இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.
அந்த உதாரணத்தில் சொல்லப்பட்ட வரி வசூலிப்பவர் யூதர்களை மனதில் வைத்து எழுதினார். அதனால், அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் சில போதனைகளையும் சம்பவங்களையும்
வரிசைப்படுத்தி எழுதினார். மருத்துவரோ, நோயாளிகளும் மாற்றுத்திறனாளிகளும் குணமாக்கப்பட்டதைப் பற்றி அதிகமாக எழுதினார். அதனால், வரி வசூலிப்பவர் எழுதிய சில விஷயங்களை இவர் எழுதவில்லை, அல்லது அந்தச் சம்பவங்களை வேறொரு வரிசையில் எழுதினார். போதகரின் நண்பரோ, அவருடைய உணர்ச்சிகளையும் குணங்களையும் பற்றி அதிகமாக எழுதினார். இளம் எழுத்தாளரோ, நடந்த சம்பவங்களைச் சுருக்கமாக எழுதினார். ஆனால், இவர்கள் நான்கு பேர் எழுதியதும் திருத்தமானதுதான். இப்படி, இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய நான்கு புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதால் அவருடைய செயல்களையும் போதனைகளையும் குணங்களையும் பற்றி நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.‘மத்தேயு எழுதிய சுவிசேஷம்,’ ‘யோவான் எழுதிய சுவிசேஷம்’ என்று சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அப்படிச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால், அவை ஒவ்வொன்றுமே ‘இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைத்தான்’ சொல்கின்றன. (மாற்கு 1:1) ஆனாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால், இயேசுவைப் பற்றிய ஒரேவொரு சுவிசேஷம்தான் இருக்கிறது. அதற்கான தகவல்கள் இந்த நான்கு புத்தகங்களிலும் இருக்கின்றன.
கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் படித்த நிறைய பேர், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய புத்தகங்களில் எழுதப்பட்ட விவரங்களையும் சம்பவங்களையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள்; அவற்றைத் தொகுத்து எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சுமார் கி.பி. 170-ஆம் வருஷத்தில், சீரியாவைச் சேர்ந்த டேஷன் என்ற எழுத்தாளர் சுவிசேஷங்களில் உள்ள விஷயங்களை அப்படித்தான் ஒப்பிட்டுப் பார்த்தார். இந்த நான்கு புத்தகங்களுமே திருத்தமானவை, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டவை என்று நம்பினார். அதனால், இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி நான்கு சுவிசேஷங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லாம் ஒன்றுசேர்த்து டயடேசரான் என்ற புத்தகத்தை எழுதினார்.
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு என்ற இந்தப் புத்தகமும் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய தொகுப்புதான். ஆனால், இந்தப் புத்தகம் மிகவும் திருத்தமானது, முழுமையானது என்று சொல்லலாம். ஏனென்றால், இயேசு சொன்ன நிறைய தீர்க்கதரிசனங்களும், உவமைகளும் எப்படி நிறைவேறி வருகின்றன என்பதை இப்போது நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதனால், அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் பற்றி இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது; சில சம்பவங்கள் எந்த வரிசையில் நடந்தன என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும்கூட சில விஷயங்களைப் புரிந்துகொள்ளவும், எழுத்தாளரின் கண்ணோட்டத்தைத் தெரிந்துகொள்ளவும் உதவி செய்திருக்கின்றன. ஒவ்வொரு சம்பவமும் இந்த வரிசையில்தான் நடந்தது என்று யாராலும் அடித்துச் சொல்ல முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், இயேசு—வழி, சத்தியம், வாழ்வு என்ற இந்தப் புத்தகத்தில் இயேசுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஓரளவு சரியான வரிசையில் தொகுத்து எழுதப்பட்டிருக்கின்றன.
வழி, சத்தியம், வாழ்வு
இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும்போது, உங்களுக்கும் உங்களுடைய அன்பானவர்களுக்கும் என்ன முக்கியமான செய்தி இருக்கிறது என்று யோசித்துக்கொண்டே படியுங்கள். “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று அப்போஸ்தலன் தோமாவிடம் இயேசு சொன்னதை மறந்துவிடாதீர்கள்.—யோவான் 14:5, 6.
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு என்ற இந்தப் புத்தகம் இயேசுதான் “வழி” என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்யும். அவர் மூலமாக மட்டும்தான் யெகோவா தேவனிடம் நம்மால் ஜெபம் செய்ய முடியும். கடவுளோடு நாம் சமரசமாவதற்கும் அவர்தான் வழியாக இருக்கிறார். (யோவான் 16:23; ரோமர் 5:8) இயேசு வழியாகத்தான் கடவுளோடு நம்மால் நல்ல நட்பை அனுபவிக்க முடியும்.
இயேசு ‘சத்தியமாக’ இருக்கிறார். அவர் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார், அதற்கேற்றபடி வாழ்ந்தார். நிறைய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். அவை எல்லாமே “அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன.” (2 கொரிந்தியர் 1:20; யோவான் 1:14) கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவருக்கு இருக்கும் முக்கியப் பங்கைப் புரிந்துகொள்ள அந்தத் தீர்க்கதரிசனங்கள் நமக்கு உதவி செய்கின்றன.—வெளிப்படுத்துதல் 19:10.
இயேசு கிறிஸ்து ‘வாழ்வாக’ இருக்கிறார். தன்னுடைய பரிபூரண உயிரைக் கொடுத்து, இரத்தத்தைச் சிந்தி மீட்புவிலையைச் செலுத்தியிருக்கிறார். இதன் மூலம் நாம் “உண்மையான வாழ்வை,” அதாவது “முடிவில்லாத வாழ்வை,” பெற்றுக்கொள்ள வழி திறந்துவைத்திருக்கிறார். (1 தீமோத்தேயு 6:12, 19; எபேசியர் 1:7; 1 யோவான் 1:7) பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்கிற எதிர்பார்ப்போடு உயிர்த்தெழுந்து வரும் கோடிக்கணக்கான ஆட்களுக்கும் அவர் ‘வாழ்வாக’ இருப்பார்.—யோவான் 5:28, 29.
கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசுவுக்கு இருக்கும் பங்கை நாம் எல்லாரும் புரிந்துகொண்டு, அதை மதிக்க வேண்டும். “வழியும் சத்தியமும் வாழ்வுமாக” இருக்கிற இயேசுவைப் பற்றி அதிகமதிகமாகப் படித்து மகிழுங்கள்!