Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 92

ஒரு தொழுநோயாளி நன்றி சொல்கிறார்

ஒரு தொழுநோயாளி நன்றி சொல்கிறார்

லூக்கா 17:11-19

  • பத்துத் தொழுநோயாளிகளை இயேசு குணமாக்குகிறார்

எருசலேமுக்கு வடகிழக்கில் இருக்கிற எப்பிராயீம் நகரத்துக்கு இயேசு போய்விடுகிறார். அதனால், அவரைக் கொல்வதற்கு நியாயசங்கம் போட்ட திட்டம் தோல்வியடைகிறது. இப்படி, தன் எதிரிகளின் கண்ணில் படாமல் இயேசு தன் சீஷர்களோடு தங்குகிறார். (யோவான் 11:54) கி.பி. 33-ஆம் வருஷத்தின் பஸ்கா பண்டிகை சீக்கிரத்தில் ஆரம்பமாகிவிடும். அதனால், இயேசு மறுபடியும் பயணத்தை ஆரம்பிக்கிறார். அவர் சமாரியா வழியாக, வடக்கு நோக்கிப் பயணம் செய்து கலிலேயாவுக்குப் போகிறார். தன்னுடைய மரணத்துக்கு முன் இயேசு இந்தப் பகுதிக்குக் கடைசி தடவையாகப் போகிறார்.

பயணத்தின் ஆரம்பத்தில், இயேசு ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, பத்துத் தொழுநோயாளிகளைப் பார்க்கிறார். சில வகை தொழுநோய்கள், ஒருவருடைய விரல்கள், பாதங்கள், காதுகள் போன்ற பாகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைத்துவிடும். (எண்ணாகமம் 12:10-12) தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், “தீட்டு, தீட்டு!” என கத்த வேண்டும் என்றும், மற்றவர்களைவிட்டு ஒதுங்கி வாழ வேண்டும் என்றும் திருச்சட்டம் சொல்லியிருந்தது.—லேவியராகமம் 13:45, 46.

அதனால், அந்தத் தொழுநோயாளிகள் பத்துப் பேரும் இயேசுவிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கிறார்கள். அங்கிருந்துகொண்டே, “இயேசுவே, போதகரே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று சத்தம் போடுகிறார்கள். இயேசு அவர்களைப் பார்த்தபோது, “நீங்கள் போய் குருமார்களிடம் உங்களைக் காட்டுங்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 17:13, 14) இப்படிச் சொல்வதன்மூலம், திருச்சட்டத்துக்கு இயேசு மரியாதை காட்டுகிறார். ஏனென்றால், தொழுநோயிலிருந்து அவர்கள் குணமாகிவிட்டார்கள் என்பதை அறிவிக்கிற அதிகாரம் குருமார்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, அந்தத் தொழுநோயாளிகளால் மறுபடியும் மக்களோடு மக்களாக வாழ முடியும்.—லேவியராகமம் 13:9-17.

அற்புதங்களைச் செய்கிற சக்தி இயேசுவுக்கு இருக்கிறது என்று அந்தப் பத்துப் பேரும் நம்புகிறார்கள். அதனால், குணமாவதற்கு முன்பே குருமார்களைப் பார்க்க அவர்கள் புறப்படுகிறார்கள். அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போதே, இயேசுமேல் அவர்கள் வைத்த விசுவாசத்துக்குப் பலன் கிடைக்கிறது. தாங்கள் குணமாகிவிட்டதை அவர்கள் பார்க்கிறார்கள், உணருகிறார்கள்.

அவர்களில் ஒன்பது பேர் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் இயேசுவைப் பார்க்கத் திரும்பி வருகிறார். அவர் ஒரு சமாரியர். இயேசு செய்த உதவிக்கு அவர் ரொம்ப நன்றியோடு இருக்கிறார். தான் குணமானதற்குக் கடவுள்தான் காரணம் என்பதைப் புரிந்துகொள்கிறார். அதனால், ‘சத்தமாகக் கடவுளை மகிமைப்படுத்துகிறார்.’ (லூக்கா 17:15) இயேசுவைப் பார்த்ததும் அவருடைய காலில் விழுந்து நன்றி சொல்கிறார்.

அப்போது இயேசு தன்னோடு இருக்கிறவர்களிடம், “பத்துப் பேர் சுத்தமாக்கப்பட்டார்களே, மற்ற ஒன்பது பேர் எங்கே? வெளிதேசத்தைச் சேர்ந்த இவனைத் தவிர வேறு யாருமே கடவுளை மகிமைப்படுத்துவதற்குத் திரும்பி வரவில்லையா?” என்று கேட்கிறார். பிறகு அந்தச் சமாரியரிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது” என்று சொல்கிறார்.—லூக்கா 17:17-19.

பத்துத் தொழுநோயாளிகளைக் குணமாக்குவதன் மூலம், யெகோவாவின் ஆதரவு தனக்கு இருப்பதை இயேசு நிரூபிக்கிறார். அவர்களில் ஒருவர், இப்போது வாழ்வுக்கான பாதையிலும் நடக்க ஆரம்பித்திருக்கலாம். நம்முடைய காலத்தில், இயேசு மூலமாக கடவுள் இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்வதில்லை. ஆனாலும், இயேசுமேல் விசுவாசம் வைத்தால், நாம் முடிவில்லாத வாழ்வைப் பெறலாம். நாமும் அந்தச் சமாரியரைப் போலவே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோமா? முடிவில்லாத வாழ்வைப் பெற நமக்குக் கிடைத்த வாய்ப்புக்காக நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோமா?