Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 88

பணக்காரனும் லாசருவும்

பணக்காரனும் லாசருவும்

லூக்கா 16:14-31

  • பணக்காரனையும் லாசருவையும் பற்றிய உவமை

பொருள் செல்வங்களைப் பயன்படுத்துவது சம்பந்தமாக இயேசு தன் சீஷர்களுக்கு அருமையான ஆலோசனையை இப்போதுதான் கொடுத்து முடித்திருக்கிறார். அங்கே, அவருடைய சீஷர்கள் மட்டுமல்லாமல் பரிசேயர்களும் இருக்கிறார்கள். பரிசேயர்கள் ‘பண ஆசைபிடித்தவர்கள்.’ அதனால், இயேசு சொன்ன ஆலோசனைகள் அவர்களுக்கு நிச்சயம் பொருந்தும். ஆனால், அவர் சொன்னதைக் கேட்டு, பரிசேயர்கள் ‘அவரை ஏளனம் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.’—லூக்கா 15:2; 16:13, 14.

அதையெல்லாம் பார்த்து இயேசு பயப்படவில்லை. “மனுஷர்கள் முன்னால் உங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொள்கிறீர்கள். ஆனால், உங்களுடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்று கடவுளுக்குத் தெரியும். மனுஷர்களுடைய பார்வையில் எது உயர்வாக இருக்கிறதோ அது கடவுளுடைய பார்வையில் அருவருப்பாக இருக்கிறது” என்று அவர்களிடம் சொல்கிறார்.—லூக்கா 16:15.

பரிசேயர்கள் பல காலமாக ‘மனுஷர்களுடைய பார்வையில் உயர்ந்தவர்களாக’ இருந்தார்கள். ஆனால், சீக்கிரத்தில் எல்லாமே மாறப் போகிற நேரம் வந்துவிட்டது. சொத்துப்பத்து, அரசியல் பலம், மத செல்வாக்கு என்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் சீக்கிரத்தில் கீழே தள்ளப்படுவார்கள். கடவுளைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிற சாதாரண மக்கள் உயர்ந்த நிலையில் வைக்கப்படுவார்கள். ஒரு பெரிய மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது என்று இயேசு தெளிவுபடுத்துகிறார்.

“திருச்சட்டமும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் யோவானுடைய காலம்வரை அறிவிக்கப்பட்டன. அதுமுதல் கடவுளுடைய அரசாங்கமே நல்ல செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. எல்லா விதமான ஆட்களும் அதற்குள் நுழைய தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில், வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்திலுள்ள ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட அழிந்துபோகாது, அதிலுள்ள எல்லாமே நிறைவேறும்” என்று அவர் சொல்கிறார். (லூக்கா 3:18; 16:16, 17) ஒரு மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?

மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக யூத மதத் தலைவர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். முன்பு எருசலேமில் ஒரு மனிதனுக்கு இயேசு பார்வை கொடுத்தபோது, “நாங்கள் மோசேயுடைய சீஷர்கள். மோசேயிடம் கடவுள் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும்” என்று பரிசேயர்கள் பெருமையாகச் சொன்னதை யோசித்துப் பாருங்கள். (யோவான் 9:13, 28, 29) மனத்தாழ்மையுள்ள மக்களை மேசியாவிடம், அதாவது இயேசுவிடம், வழிநடத்துவது திருச்சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இயேசுதான் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி என்று யோவான் ஸ்நானகர் அடையாளம் காட்டினார். (யோவான் 1:29-34) யோவான் ஊழியத்தை ஆரம்பித்த சமயத்திலிருந்தே, மனத்தாழ்மையுள்ள யூதர்கள், அதுவும் ஏழை எளியவர்களாக இருந்த யூதர்கள், ‘கடவுளுடைய அரசாங்கத்தை’ பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டுவந்தார்கள். உண்மையைச் சொல்லப்போனால், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக வாழவும், அதனால் பயன் அடையவும் விரும்புகிற எல்லாருக்கும் “நல்ல செய்தி” கிடைக்கிறது.

மோசேயின் திருச்சட்டம் எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறிவருகிறது. ஏனென்றால், மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள மக்களுக்கு அது உதவி செய்திருக்கிறது. அந்தத் திருச்சட்டம் சீக்கிரத்தில் முடிவுக்கு வரப்போகிறது. அதற்குப் பிறகு அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து செய்ய திருச்சட்டம் அனுமதித்திருந்தது. ஆனால் இப்போது, “தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்கிறவன் அவளோடு முறைகேடான உறவுகொள்கிறான்; கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்கிறவனும் முறைகேடான உறவுகொள்கிறான்” என்று இயேசு விளக்குகிறார். (லூக்கா 16:18) தொட்டதுக்கெல்லாம் சட்டம் போடுகிற பரிசேயர்கள் இதைக் கேட்டு கோபத்தில் கொதிக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார். அதில் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களின் சூழ்நிலையும் அந்தஸ்தும் திடீரென்று தலைகீழாக மாறுகிறது. இயேசு இந்த உவமையைச் சொல்லும்போது, மக்களால் ரொம்ப உயர்வாகக் கருதப்பட்ட, பண ஆசைபிடித்த பரிசேயர்களும் இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

“பணக்காரன் ஒருவன் ஊதா நிற உடைகளையும் விலை உயர்ந்த [நாரிழை] அங்கிகளையும் போட்டுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் சுகபோகமாக வாழ்ந்துவந்தான். லாசரு என்ற பிச்சைக்காரன் ஒருவனும் இருந்தான். அந்தப் பணக்காரனுடைய வீட்டு வாசலில் சிலர் அவனை வழக்கமாக உட்கார வைத்தார்கள். அவனுடைய உடல் முழுவதும் சீழ்பிடித்த புண்கள் இருந்தன. அந்தப் பணக்காரனுடைய மேஜையிலிருந்து விழுகிறதைச் சாப்பிட்டு அவன் தன்னுடைய வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். நாய்கள்கூட வந்து அவனுடைய புண்களை நக்கின” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 16:19-21, அடிக்குறிப்பு.

இந்த “பணக்காரன்,” பண ஆசைபிடித்த பரிசேயர்களுக்கு அடையாளமாக இருக்கிறான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. யூத மதத் தலைவர்கள் ஆடம்பரமான, பகட்டான உடைகளைப் போட்டுக்கொள்கிறார்கள். அவர்களிடம் எக்கச்சக்கமான சொத்துப்பத்துகள் இருக்கின்றன. அதோடு, அந்தஸ்தும் பெரிய பொறுப்புகளும் இருப்பதால் அவர்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். பணக்காரன் போட்டிருந்த ஊதா நிற உடைகள், இந்தப் பரிசேயர்களுக்கு இருக்கிற உயர்ந்த அந்தஸ்தைக் காட்டுகிறது. வெள்ளை நிற நாரிழை அங்கி, அவர்கள் தங்களை நீதிமான்களாக நினைத்துக்கொள்வதைக் காட்டுகிறது.—தானியேல் 5:7.

பெருமைபிடித்த இந்தப் பணக்காரத் தலைவர்கள், சாதாரணமான ஏழை மக்களை எப்படிக் கருதுகிறார்கள்? அவர்களை ‘ஆம்ஹாரெட்ஸ்,’ அதாவது நிலத்தின் (மண்ணின்) மக்கள், என்று வெறுப்போடு சொல்கிறார்கள். அந்த மக்களுக்குத் திருச்சட்டம் தெரியாது என்றும், அதைத் தெரிந்துகொள்ள தகுதி கிடையாது என்றும் இந்தப் பரிசேயர்கள் நினைக்கிறார்கள். (யோவான் 7:49) ‘பணக்காரனுடைய மேஜையிலிருந்து விழுகிற’ துணுக்குகளைச் சாப்பிட ஏங்கிய ‘லாசரு என்ற பிச்சைக்காரனை’ போலத்தான் அந்த மக்கள் இருக்கிறார்கள். உடல் முழுவதும் சீழ்பிடித்த லாசருவைப் பார்ப்பது போல, சாதாரண மக்களை இவர்கள் கேவலமாகப் பார்க்கிறார்கள். அவர்களை ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டவர்கள் என்று நினைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பரிதாபமான நிலைதான் பல காலமாக இருந்துவருகிறது. ஆனால், பணக்காரனைப் போல இருக்கிறவர்களின் சூழ்நிலையும், லாசருவைப் போல இருக்கிறவர்களின் சூழ்நிலையும் அடியோடு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது.

ஒரு மாற்றம்

சூழ்நிலை எப்படித் தலைகீழாக மாறுகிறது என்று இயேசு விளக்குகிறார். “ஒருநாள் அந்தப் பிச்சைக்காரன் இறந்துபோனான். அப்போது, தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய் ஆபிரகாமின் பக்கத்தில் உட்கார வைத்தார்கள். பின்பு, அந்தப் பணக்காரனும் இறந்துபோய் அடக்கம் செய்யப்பட்டான். கல்லறையில் அவன் வேதனைப்படுகிறபோது, தூரத்தில் ஆபிரகாமும் அவருக்குப் பக்கத்தில் லாசருவும் இருப்பதை அண்ணாந்து பார்த்தான்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 16:22, 23.

ஆபிரகாம் பல காலத்துக்கு முன்பே இறந்துவிட்டார் என்பதும் இப்போது கல்லறையில் இருக்கிறார் என்பதும் அங்கிருக்கிறவர்களுக்குத் தெரியும். கல்லறையில், அதாவது ஷியோலில், இருக்கிற யாராலும் பார்க்கவோ பேசவோ முடியாது என்று வேதவசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன. (பிரசங்கி 9:5, 10) இது ஆபிரகாமுக்கும் பொருந்தும். ஆனால், இந்த உவமை மூலமாக இயேசு என்ன சொல்வதாக மதத் தலைவர்கள் நினைக்கிறார்கள்? சாதாரண மக்களையும் பண ஆசைபிடித்த மதத் தலைவர்களையும் பற்றி இயேசு என்ன சொல்லவருகிறார்?

“திருச்சட்டமும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் யோவானுடைய காலம்வரை அறிவிக்கப்பட்டன. அதுமுதல் கடவுளுடைய அரசாங்கமே நல்ல செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிறது” என்று சொல்வதன் மூலம் ஒரு மாற்றத்தைப் பற்றிச் சற்று முன்புதான் இயேசு குறிப்பிட்டிருந்தார். யோவானும் இயேசு கிறிஸ்துவும் பிரசங்கிக்க ஆரம்பித்த பிறகு, லாசருவின் வாழ்க்கையிலும் பணக்காரனின் வாழ்க்கையிலும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பல காலமாகவே ஆன்மீக உணவு கிடைக்காமல் ஏழை எளியவர்கள் தவித்துவந்தார்கள். ஆனால், யோவான் ஸ்நானகரும், அவருக்குப் பிறகு இயேசுவும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கித்தபோது இந்த மக்களுக்கு உதவி கிடைக்க ஆரம்பித்தது. அந்தச் செய்தியை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். முன்பெல்லாம், மதத் தலைவர்களின் ‘ஆன்மீக மேஜையிலிருந்து விழுந்த துணுக்குகள்’ மட்டும்தான் இவர்களுக்குச் சாப்பிடக் கிடைத்தது. இப்போதோ, முக்கியமான ஆன்மீக சத்தியங்கள் இவர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கின்றன. அதுவும், இயேசு விளக்குகிற அருமையான சத்தியங்கள் இவர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கின்றன. அதோடு, யெகோவா தேவனின் தயவும் இவர்களுக்கு கிடைக்கிறது.

செல்வாக்குமிக்க பணக்கார மதத் தலைவர்களோ, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி யோவான் அறிவித்த செய்தியையும், தேசம் முழுவதும் இயேசு பிரசங்கிக்கிற செய்தியையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். (மத்தேயு 3:1, 2; 4:17) சொல்லப்போனால், கடவுளின் சுட்டெரிக்கும் நியாயத்தீர்ப்பைப் பற்றிய செய்தியைக் கேட்டு அவர்கள் கோபப்படுகிறார்கள், அவதிப்படுகிறார்கள். (மத்தேயு 3:7-12) இயேசுவும் அவருடைய சீஷர்களும் கடவுளுடைய செய்தியைப் பற்றிச் சொல்வதை நிறுத்திவிட்டால், பண ஆசைபிடித்த மதத் தலைவர்களுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும். இந்த உவமையில் வருகிற பணக்காரனைப் போல அவர்கள் இருக்கிறார்கள். அந்தப் பணக்காரன், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்; லாசரு தன் விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து என் நாவைக் குளிர வைப்பதற்காக அவனை அனுப்புங்கள். ஏனென்றால், கொழுந்துவிட்டு எரிகிற இந்த நெருப்பில் நான் மிகவும் அவதிப்படுகிறேன்’ என்று சொல்கிறான்.—லூக்கா 16:24.

அவர்கள் படுகிற இந்த வேதனை முடிவுக்கு வரப்போவதில்லை. ஏன்? முதல் காரணம்: பெரும்பாலான மதத் தலைவர்கள் மாறவே மாட்டார்கள். “மோசேயின் புத்தகங்களும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் சொல்வதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை.” அந்தப் புத்தகங்களைப் படித்து, இயேசுதான் மேசியா என்பதையும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா அவர்தான் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. (லூக்கா 16:29, 31; கலாத்தியர் 3:24) அவர்கள் மனத்தாழ்மையாகவும் நடந்துகொள்ளவில்லை. இயேசுவை ஏற்றுக்கொண்டு, கடவுளின் தயவைப் பெற்ற ஏழைகள் பிரசங்கித்த செய்தியையும் அவர்கள் கேட்கவில்லை. இரண்டாவது காரணம்: மதத் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு நிம்மதி தருவதற்காகவோ இயேசுவின் சீஷர்கள் சத்தியத்தைப் பூசிமெழுக மாட்டார்கள். இந்த விஷயத்தைத்தான் பணக்காரனிடம் ‘தந்தை ஆபிரகாம்’ சொன்ன பின்வரும் வார்த்தைகள் காட்டுகின்றன:

“மகனே, உன்னுடைய வாழ்நாளில் எல்லா நல்ல காரியங்களையும் நீ அனுபவித்தாய், லாசருவோ கஷ்டங்களையே அனுபவித்தான் என்பது உனக்கு ஞாபகம் இல்லையா? இப்போது அவனுக்கு இங்கே ஆறுதல் கிடைக்கிறது, நீயோ மிகவும் அவதிப்படுகிறாய். இவை எல்லாவற்றையும் தவிர, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே மாபெரும் பிளவு ஒன்று நிரந்தரமாக உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதனால், இங்கிருந்து உங்களிடம் வர விரும்புகிறவர்கள் அதைக் கடந்துவர முடியாது, அதேபோல் அங்கிருந்து யாருமே எங்களிடம் வர முடியாது.”—லூக்கா 16:25, 26.

இப்படிப்பட்ட தலைகீழ் மாற்றம் நியாயமானது, சரியானது. பெருமைபிடித்த மதத் தலைவர்களின் நிலையும், இயேசுவின் நுகத்தடியை ஏற்றுக்கொண்டு, புத்துணர்ச்சி பெற்று, ஆன்மீக உணவைச் சாப்பிடுகிற தாழ்மையுள்ளவர்களின் நிலையும் இப்போது மாறுகிறது. (மத்தேயு 11:28-30) ஒருசில மாதங்களில் இந்த மாற்றம் இன்னும் தெளிவாகத் தெரியும். ஏனென்றால், அப்போது திருச்சட்ட ஒப்பந்தம் நீக்கப்பட்டு புதிய ஒப்பந்தம் அமலுக்கு வரும். (எரேமியா 31:31-33; கொலோசெயர் 2:14; எபிரெயர் 8:7-13) கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளில் கடவுள் தன்னுடைய சக்தியை ஊற்றும்போது, அவருடைய தயவு இயேசுவின் சீஷர்களுக்குத்தான் இருக்கிறது என்பதும், பரிசேயர்களுக்கும் அவர்களுடைய மதக் கூட்டாளிகளுக்கும் அது இல்லை என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும்.