அதிகாரம் 66
எருசலேமில் கூடாரப் பண்டிகை
-
ஆலயத்தில் இயேசு கற்பிக்கிறார்
இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு, சீக்கிரத்திலேயே ரொம்பப் பிரபலமாகிவிட்டார். அவர் செய்த அற்புதங்களை ஆயிரக்கணக்கான யூதர்கள் பார்த்திருந்தார்கள். அவரைப் பற்றிய செய்தி தேசமெங்கும் பரவியிருந்தது. இப்போது, கூடாரப் பண்டிகைக்காக எருசலேமுக்கு வந்திருக்கிற நிறைய பேர் அவர் எங்கே என்று தேடுகிறார்கள்.
இயேசுவைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்கள். “அவர் ஒரு நல்ல மனுஷர்” என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவர்களோ, “இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறான்” என்று சொல்கிறார்கள். (யோவான் 7:12) பண்டிகையின் ஆரம்ப நாட்களில் மக்கள் இப்படிப் பலவிதமாகக் கிசுகிசுக்கிறார்கள். ஆனாலும், இயேசுவுக்கு ஆதரவாகப் பேச யாருக்கும் தைரியம் இல்லை. ஏனென்றால், யூதத் தலைவர்களின் காதில் விழுந்தால் என்ன ஆகுமோ என்று எல்லாரும் பயப்படுகிறார்கள்.
பண்டிகை பாதி முடிந்த சமயத்தில், ஆலயத்துக்கு இயேசு வருகிறார். அவர் திறமையாகப் போதிப்பதைப் பார்த்து நிறைய பேர் அசந்துபோகிறார்கள். அவர் ரபீக்களின் பள்ளிகளில் படிக்கவில்லை. அதனால், “பள்ளிகளுக்கு போகாத இவனுக்கு வேதவசனங்களைப் பற்றி எப்படி இந்தளவு அறிவு வந்தது?” என்று யூதர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.—யோவான் 7:15.
அதற்கு இயேசு, “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது. அவருடைய விருப்பத்தின்படி செய்ய ஒருவன் விரும்பினால், என் போதனை கடவுளிடமிருந்து வந்திருக்கிறதா அல்லது நானே சொந்தமாகப் பேசுகிறேனா என்று தெரிந்துகொள்வான்” என்று சொல்கிறார். (யோவான் 7:16, 17) கடவுள் தந்த திருச்சட்டத்துக்கு இசைவாக இயேசு போதிக்கிறார். இதிலிருந்து, இயேசு தனக்குப் புகழ் தேடவில்லை, எல்லாரும் கடவுளைப் புகழ வேண்டும் என்று விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பிறகு இயேசு, “மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார், இல்லையா? ஆனால், உங்களில் ஒருவர்கூட அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதில்லை. இப்போது என்னை ஏன் கொல்லப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்கிறார். வெளியூரிலிருந்து வந்திருக்கிற சிலர் அங்கே இருக்கிறார்கள். இயேசுவைக் கொல்வதற்காக நடக்கிற சதித்திட்டங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. இவரைப் போன்ற ஒரு போதகரைக் கொல்வதற்கு யாராவது நினைப்பார்களா என்று அவர்கள் யோசிக்கிறார்கள். இயேசுவுக்கு ஏதோ ஆகிவிட்டதால்தான் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று அவர்கள் முடிவுகட்டுகிறார்கள். அதனால், “உனக்குப் பேய் பிடித்திருக்கிறது. யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்?” என்று அவரிடம் கேட்கிறார்கள்.—யோவான் 7:19, 20.
சொல்லப்போனால், ஒன்றரை வருஷங்களுக்கு முன்னால் ஓய்வுநாளில் ஒருவரை இயேசு குணமாக்கிய பிறகு, யூதத் தலைவர்கள் அவரைக் கொல்ல நினைத்தார்கள். அவர்களை யோசிக்க வைப்பதற்காகவும் அவர்கள் நியாயமில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காகவும் திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை இயேசு குறிப்பிடுகிறார். ஒரு ஆண் பிள்ளை பிறந்த எட்டாவது நாளில் அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும், அது ஓய்வுநாளாக இருந்தாலும்கூட கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று திருச்சட்டம் சொல்லியிருந்தது. அதனால் இயேசு அவர்களிடம், “மோசேயின் திருச்சட்டத்தை மீறக் கூடாது என்பதற்காக ஓய்வுநாளில் ஒருவனுக்கு நீங்கள் விருத்தசேதனம் செய்கிறீர்கள் என்றால், அதே ஓய்வுநாளில் நான் ஒருவனை முழுமையாகக் குணமாக்கியதற்காக ஏன் என்மேல் சீறுகிறீர்கள்? வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு, நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 7:23, 24.
இயேசுவைக் கொல்வதற்கு நடக்கிற சதித்திட்டத்தைப் பற்றி எருசலேம் குடிமக்களில் சிலருக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள், “இவரைத்தானே [தலைவர்கள்] கொலை செய்யத் தேடுகிறார்கள்? அப்படியிருந்தும், இதோ! மக்களிடம் இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறார், அவர்களும் இவரிடம் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள். இவர்தான் கிறிஸ்து என்று தலைவர்கள் உறுதியாகத் தெரிந்துகொண்டார்களோ?” என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படியானால், இயேசுதான் கிறிஸ்து என்று மக்கள் ஏன் நம்பாமல் இருக்கிறார்கள்? “கிறிஸ்து எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல்தானே இருக்கும்! இவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்பதுதான் நமக்குத் தெரியுமே!” என்று அவர்கள் சொல்கிறார்கள்.—யோவான் 7:25-27.
அந்த ஆலயத்திலேயே இயேசு அவர்களுக்குப் பதில் சொல்கிறார். “நான் யார் என்றும், எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் சுயமாக வரவில்லை, என்னை அனுப்பியவர் நிஜமானவர், உங்களுக்கு அவரைத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும்; ஏனென்றால், நான் அவருடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன்; யோவான் 7:28, 29) இயேசு இப்படி வெளிப்படையாகச் சொன்னதும், அவரைப் பிடிப்பதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அவரைப் பிடித்து சிறையில் தள்ள வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இயேசு இறப்பதற்கான நேரம் இன்னும் வராததால், அவர்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
அவரே என்னை அனுப்பினார்” என்று அவர்களிடம் சொல்கிறார். (இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைக்கிறார்கள். அவர் தண்ணீர்மேல் நடந்திருக்கிறார், புயல்காற்றை அடக்கியிருக்கிறார், ஒருசில ரொட்டிகளையும் மீன்களையும் வைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்திருக்கிறார், நோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறார், கால் ஊனமானவர்களை நடக்க வைத்திருக்கிறார், பார்வை இல்லாதவர்களைப் பார்க்க வைத்திருக்கிறார், தொழுநோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறார், இறந்தவர்களைக்கூட உயிரோடு எழுப்பியிருக்கிறார். அதனால் அவர்கள், “கிறிஸ்து வரும்போது இவர் செய்வதைவிடவா அதிகமான அடையாளங்களைச் செய்யப்போகிறார்?” என்று பேசிக்கொள்கிறார்கள்.—யோவான் 7:31.
மக்கள் இப்படிப் பேசிக்கொள்வது பரிசேயர்களின் காதில் விழுகிறது. அதனால், இயேசுவைக் கைது செய்வதற்காக அவர்களும் முதன்மை குருமார்களும் சில காவலர்களை அனுப்புகிறார்கள்.