அதிகாரம் 61
பேய் பிடித்த பையனைக் குணமாக்குகிறார்
மத்தேயு 17:14-20 மாற்கு 9:14-29 லூக்கா 9:37-43
-
பேய் பிடித்த பையனைக் குணமாக்க பலமான விசுவாசம் தேவை
இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கூட்டத்தைப் பார்க்கிறார்கள். அங்கே ஏதோ பிரச்சினை என்று அவர்களுக்குப் புரிகிறது. வேத அறிஞர்கள் இயேசுவின் சீஷர்களைச் சுற்றி நின்றுகொண்டு அவர்களோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். இயேசுவைப் பார்த்ததும் மக்களுக்கு ஒரே சந்தோஷம். அதனால் அவருக்கு வாழ்த்துச் சொல்வதற்காக அவரிடம் ஓடுகிறார்கள். அப்போது இயேசு, “எதைப் பற்றி இவர்களோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்கிறார்.—மாற்கு 9:16.
அப்போது அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் வந்து, இயேசுவின் முன்னால் மண்டிபோட்டு, “போதகரே, பேய் பிடித்ததால் என் மகன் ஊமையாகிவிட்டான். அதனால் அவனை உங்களிடம் கூட்டிக்கொண்டு வந்தேன். அவனுக்குப் பேய் பிடிக்கும்போதெல்லாம், அது அவனைத் தரையில் வீசியடிக்கிறது; அப்போது அவன் வாயில் நுரை தள்ளுகிறது, பற்களை நறநறவென்று கடிக்கிறான், பின்பு அப்படியே துவண்டுவிடுகிறான். அந்தப் பேயை விரட்டச் சொல்லி உங்கள் சீஷர்களிடம் கேட்டேன், அவர்களால் முடியவில்லை” என்று சொல்கிறார்.—மாற்கு 9:17, 18.
இயேசுவின் சீஷர்களால் அந்தப் பையனைக் குணமாக்க முடியாததைப் பார்த்து வேத அறிஞர்கள் குறை சொல்லியிருக்கலாம். அவனைக் குணப்படுத்த சீஷர்கள் முயற்சி செய்தபோது இவர்கள் கேலி செய்திருக்கலாம். அதனால், அந்தப் பையனின் அப்பாவிடம் பதில் சொல்வதற்கு முன்பு இயேசு அந்தக் கூட்டத்தாரிடம், “விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையே, நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடிருந்து உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்கிறார். அவர் இல்லாத நேரத்தில் அவருடைய சீஷர்களோடு வாக்குவாதம் செய்த வேத அறிஞர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும். அந்தப் பையனின் அப்பா தவியாய் தவிப்பதை இயேசு பார்க்கிறார். அதனால் அவரிடம் திரும்பி, “உன் மகனை இங்கே கொண்டுவா” என்று சொல்கிறார்.—லூக்கா 9:41.
அந்தப் பையன் இயேசுவின் பக்கத்தில் வந்ததும், அவனைப் பிடித்திருந்த பேய் அவனைத் தரையில் தள்ளி, அவனுக்குப் பயங்கரமாக வலிப்பு ஏற்படுத்துகிறது. அந்தப் பையன் தரையில் உருண்டு புரண்டுகொண்டே இருக்கிறான். அவனுடைய வாயில் நுரை தள்ளுகிறது. இயேசு அந்தப் பையனின் அப்பாவிடம், “எவ்வளவு காலமாக இவனுக்கு இப்படி நடக்கிறது?” என்று கேட்கிறார். அதற்கு மாற்கு 9:21, 22.
அவர், “சிறுவயதிலிருந்தே” என்று சொல்கிறார். அதோடு, “அவனைக் கொல்வதற்காக அந்தப் பேய் அடிக்கடி அவனைத் தண்ணீரிலும் நெருப்பிலும் தள்ளிவிடுகிறது; உங்களால் முடிந்தால், எங்களுக்குக் கருணை காட்டி உதவி செய்யுங்கள்” என்று கெஞ்சுகிறார்.—இயேசுவின் சீஷர்களாலேயே அவனைக் குணப்படுத்த முடியாததால், அந்தப் பையனின் அப்பா ரொம்ப நொந்துபோயிருக்கிறார். இயேசு அவரிடம், “‘உங்களால் முடிந்தால்’ என்று சொல்கிறாயே! ஒருவருக்கு விசுவாசம் இருந்தால் எல்லாமே முடியும்” என்று சொல்லித் தைரியப்படுத்துகிறார். உடனே அந்தப் பையனின் அப்பா, “எனக்கு விசுவாசம் இருக்கிறது! என் விசுவாசம் இன்னும் பலமாவதற்கு உதவி செய்யுங்கள்!” என்று சத்தமாகச் சொல்கிறார்.—மாற்கு 9:23, 24.
மக்கள் தன்னிடம் ஓடி வருவதை இயேசு பார்க்கிறார். எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இயேசு அந்தப் பேயை அதட்டி, “ஊமையாக்கும் பேயே! செவிடாக்கும் பேயே! நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், இவனைவிட்டு வெளியே போ, இனிமேல் இவனுக்குள் நுழையாதே” என்று சொல்கிறார். அப்போது அந்தப் பேய் அவனைக் கத்திக் கூச்சல்போட வைத்து, அவனுக்குப் பயங்கரமாக வலிப்பு உண்டாக்கி, அவனைவிட்டு வெளியே போகிறது. அவன் அப்படியே பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறான். இதைப் பார்த்து பெரும்பாலோர், “அவன் செத்துவிட்டான்!” என்று பேசிக்கொள்கிறார்கள். (மாற்கு 9:25, 26) இயேசு அவன் கையைப் பிடித்து தூக்கியதும் அவன் எழுந்துகொள்கிறான். ‘அந்த நொடியே அவன் குணமாகிறான்.’ (மத்தேயு 17:18) இயேசு செய்ததைப் பார்த்து மக்கள் மலைத்துப்போகிறார்கள்.
இதற்கு முன்பு, பிரசங்கிப்பதற்காக இயேசு தன் சீஷர்களை அனுப்பிய சமயத்தில் அவர்கள் பேய்களை விரட்டியிருந்தார்கள். ஆனால் இப்போது முடியவில்லை. அதனால் இயேசு ஒரு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீஷர்கள் தனியாக வந்து, “எங்களால் ஏன் அந்தப் பேயை விரட்ட முடியவில்லை?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “இப்படிப்பட்ட பேயை ஜெபத்தினால் மட்டும்தான் விரட்ட முடியும்” என்று சொல்கிறார். (மாற்கு 9:28, 29) அவர்களுடைய விசுவாசக் குறைவினால்தான் அந்தப் பேயை அவர்களால் விரட்ட முடியவில்லை. இப்படிப்பட்ட பயங்கரமான பேயை விரட்ட அவர்களுக்கு உறுதியான விசுவாசம் தேவைப்பட்டது; அதோடு, கடவுளிடம் சக்தி கேட்டு அவர்கள் ஜெபம் செய்ய வேண்டியிருந்தது.
கடைசியாக இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கே போ’ என்று சொன்னால், அது பெயர்ந்துபோகும்; உங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்காது” என்று சொல்கிறார். (மத்தேயு 17:20) விசுவாசத்துக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது!
தடைகளும் கஷ்டங்களும் யெகோவாவின் சேவையில் முன்னேற விடாமல் நம்மைத் தடுக்கலாம். அவை நம் கண்ணுக்கு மலை போலத் தெரியலாம். ஆனால், நாம் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டால் மலைபோன்ற தடைகளையும் கஷ்டங்களையும் நம்மால் தவிடுபொடியாக்க முடியும்.