Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 55

உங்கள் சபைக்கு உதவியாக இருங்கள்

உங்கள் சபைக்கு உதவியாக இருங்கள்

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சபைகளில் லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவை சந்தோஷமாக வணங்குகிறார்கள். அங்கு கிடைக்கும் அறிவுரைகளுக்காக அவர்கள் நன்றியோடு இருக்கிறார்கள், நிறைய விதங்களில் சபைக்கு மனப்பூர்வமாக உதவுகிறார்கள். நீங்களும் அப்படிச் செய்ய விரும்புகிறீர்களா?

1. சபைக்காக உங்கள் நேரத்தையும் சக்தியையும் எப்படிப் பயன்படுத்தலாம்?

நாம் எல்லாருமே சபைக்கு உதவியாக இருக்க முடியும். உங்கள் சபையில் வயதானவர்கள் அல்லது உடம்பு முடியாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? கூட்டங்களுக்கு வர அவர்களுக்கு உங்களால் உதவ முடியுமா? அவர்களுக்காகக் கடைக்குப் போக, வீட்டு வேலைகள் செய்ய, அல்லது மற்ற உதவிகள் ஏதாவது செய்ய முடியுமா? (யாக்கோபு 1:27-ஐ வாசியுங்கள்.) ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும்கூட நாம் உதவலாம். இதையெல்லாம் செய்ய யாரும் நம்மைக் கட்டாயப்படுத்துவது கிடையாது. கடவுள் மீதும் நம் சகோதர சகோதரிகள் மீதும் இருக்கும் அன்பினால் ‘மனப்பூர்வமாக [நம்மையே] அர்ப்பணிக்கிறோம்.’சங்கீதம் 110:3.

ஞானஸ்நானம் எடுத்த யெகோவாவின் சாட்சிகள் இன்னும் பல விதங்களில் சபைக்கு உதவியாக இருக்கலாம். தகுதிகளை வளர்த்துக்கொண்ட சகோதரர்கள் உதவி ஊழியர்களாகவும், காலப்போக்கில் மூப்பர்களாகவும் சேவை செய்யலாம். சகோதரர்களும் சரி, சகோதரிகளும் சரி, பயனியர் சேவை செய்வதன் மூலம் பிரசங்க வேலையை ஆதரிக்கலாம். சிலர் கட்டுமான வேலைக்குக் கைகொடுக்கலாம் அல்லது வேறொரு இடத்துக்குக் குடிமாறிப் போய் அங்குள்ள சபைக்கு உதவலாம்.

2. சபைக்காக நம் பணம் பொருளை எப்படிப் பயன்படுத்தலாம்?

நம்முடைய ‘மதிப்புமிக்க பொருள்களை . . . கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்த’ முடியும். (நீதிமொழிகள் 3:9) சபைக்காகவும் உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலைக்காகவும் நம்முடைய பணம் பொருளைக் கொடுப்பதில் நாம் சந்தோஷப்படுகிறோம். (2 கொரிந்தியர் 9:7-ஐ வாசியுங்கள்.) நம் நன்கொடைகள் நிவாரண வேலைகளுக்கும் உதவுகின்றன. நிறைய பேர் நன்கொடை கொடுப்பதற்காகத் தவறாமல் ‘ஏதாவது சேமித்து வைக்கிறார்கள்.’ (1 கொரிந்தியர் 16:2-ஐ வாசியுங்கள்.) நன்கொடைகளை நாம் கூடிவரும் இடங்களில் இருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் போடலாம் அல்லது donate.jw.org வெப்சைட் மூலம் கொடுக்கலாம். நம்மிடம் இருப்பதைக் கொடுப்பதன் மூலம் யெகோவாமேல் நாம் வைத்திருக்கும் அன்பைக் காட்ட முடியும்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

நீங்கள் என்னென்ன விதங்களில் சபைக்கு உதவியாக இருக்க முடியும் என்று பார்க்கலாம்.

3. பணம் பொருளைக் கொடுக்கலாம்

சந்தோஷமாகக் கொடுப்பவர்களை யெகோவாவும் இயேசுவும் நேசிக்கிறார்கள். உதாரணத்துக்கு, தன்னிடம் இருந்ததை நன்கொடையாகக் கொடுத்த ஏழை விதவையை இயேசு பாராட்டினார். லூக்கா 21:1-4-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நிறைய பணம் கொடுத்தால்தான் யெகோவா சந்தோஷப்படுவாரா?

  • நாம் மனதார நன்கொடைகள் கொடுப்பதைப் பார்க்கும்போது யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் எப்படி இருக்கும்?

நம் நன்கொடைகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன? வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • நாம் கொடுக்கும் நன்கொடைகள் உலகம் முழுவதும் இருக்கும் சபைகளுக்கு எப்படியெல்லாம் உதவியாக இருக்கின்றன?

4. உடல் உழைப்பைக் கொடுக்கலாம்

பைபிள் காலங்களில், வணக்கத்துக்காகப் பயன்படுத்திய இடங்களைப் பராமரிக்க யெகோவாவின் மக்கள் பணத்தை மட்டுமல்ல, உடல் உழைப்பையும் சந்தோஷமாகக் கொடுத்தார்கள். 2 நாளாகமம் 34:9-11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவாவின் ஆலயத்தைப் பராமரிப்பதற்கு ஒவ்வொரு இஸ்ரவேலரும் என்ன செய்தார்கள்?

இன்று யெகோவாவின் சாட்சிகள் எப்படி அந்த இஸ்ரவேலர்களைப் போலவே செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள, வீடியோவைப் பாருங்கள். பிறகு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • நம் ராஜ்ய மன்றத்தை சுத்தமாகவும் நல்ல நிலையிலும் வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்?

  • நீங்கள் எப்படியெல்லாம் உதவி செய்யலாம்?

5. பொறுப்புகளை எடுத்துச் செய்ய சகோதரர்கள் தகுதிகளை வளர்க்கலாம்

சபையில் நிறைய பொறுப்புகளை எடுத்துச் செய்ய கிறிஸ்தவ ஆண்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. ஒரு சகோதரருடைய அனுபவத்தைத் தெரிந்துகொள்ள, வீடியோவைப் பாருங்கள். பிறகு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வீடியோவில் வரும் ரையன், சபைக்கு ரொம்ப உதவியாக இருக்க என்ன முயற்சிகளை எடுத்தார்?

உதவி ஊழியர்களுக்கும் மூப்பர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளைப் பற்றி பைபிள் சொல்கிறது. 1 தீமோத்தேயு 3:1-13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உதவி ஊழியர்களாகவும் மூப்பர்களாகவும் சேவை செய்ய சகோதரர்கள் என்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

  • அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?—வசனங்கள் 4, 11-ஐப் பாருங்கள்.

  • சகோதரர்கள் இந்தத் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும்போது சபையில் இருக்கும் எல்லாருக்குமே எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

யாராவது இப்படிக் கேட்கலாம்: “யெகோவாவின் சாட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருது?”

  • நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சுருக்கம்

நம் நேரத்தையும் சக்தியையும் பணம் பொருளையும் சபைக்காகக் கொடுக்க முயற்சி எடுக்கும்போது யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

ஞாபகம் வருகிறதா?

  • சபைக்காக நம் நேரத்தையும் சக்தியையும் எப்படிப் பயன்படுத்தலாம்?

  • சபைக்காக நம்முடைய பணம் பொருளை எப்படிப் பயன்படுத்தலாம்?

  • நீங்கள் எப்படியெல்லாம் சபைக்கு உதவியாக இருக்க ஆசைப்படுகிறீர்கள்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

இன்று கடவுள் ஏன் நம்மிடம் தசமபாகத்தை எதிர்பார்ப்பதில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“தசமபாகம் செலுத்துவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)

சில வேலைகளை ஞானஸ்நானம் எடுத்த ஆண்கள் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் அவற்றை ஞானஸ்நானம் எடுத்த பெண்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது?

“தலைமை ஸ்தானம்—சபையில்” (காவற்கோபுரம், பிப்ரவரி 2021)

சகோதர சகோதரிகளுக்குப் பிரசுரங்களைக் கொண்டுபோய் சேர்க்க பெரிய தியாகங்களைச் செய்த தைரியமான சில யெகோவாவின் சாட்சிகளைப் பாருங்கள்.

காங்கோவில் பைபிள் புத்தகங்களின் விநியோகிப்பு (4:25)

யெகோவாவின் சாட்சிகளுக்கு பண உதவி கிடைக்கிற விதம் எப்படி மற்ற மத அமைப்புகளிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எப்படிப் பண உதவி கிடைக்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)