பேச ஆரம்பிப்பது
பாடம் 3
கருணை
நியமம்: ‘அன்பு கருணை உள்ளது.’—1 கொ. 13:4.
இயேசு என்ன செய்தார்?
1. வீடியோவைப் பாருங்கள், அல்லது யோவான் 9:1-7-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:
-
அ. இயேசு முதலில் என்ன செய்தார்—பார்வையில்லாத அந்த மனிதனைக் குணப்படுத்தினாரா அல்லது அவனிடம் நல்ல செய்தியைச் சொன்னாரா?—யோவான் 9:35-38-ஐப் பாருங்கள்.
-
ஆ. அவன் ஏன் இயேசு சொல்வதைக் கேட்கத் தயாராக இருந்தான் என்று நினைக்கிறீர்கள்?
இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
2. நீங்கள் ஒருவர்மேல் அக்கறை வைத்திருப்பதை அவர் உணரும்போது, நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
3. மற்றவருடைய இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். ஒருவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
-
அ. இப்படி யோசித்துப் பாருங்கள்: ‘அவருக்கு என்ன கவலை இருக்கலாம்? அவருக்கு என்ன உதவி தேவைப்படலாம், எது அவருடைய மனதைத் தொடலாம்?’ இப்படியெல்லாம் யோசிப்பது, இதயத்திலிருந்து கருணை காட்டுவதற்கு உதவியாக இருக்கும்.
-
ஆ. ஒருவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். ஒருவேளை, ஒரு விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவர் சொல்லலாம். அல்லது, அவருக்கு இருக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிச் சொல்லலாம். அப்படி அவர் சொல்லும்போது, பேச்சை மாற்றிவிடாதீர்கள்; காதுகொடுத்துக் கேளுங்கள். அப்போதுதான், அவர் சொல்லும் விஷயத்தில் உங்களுக்கும் அக்கறை இருப்பதைக் காட்ட முடியும்.
4. கனிவாகவும் மரியாதையாகவும் பேசுங்கள். ஒருவர்மேல் உங்களுக்குக் கரிசனை இருப்பதும் அவருக்கு உதவி செய்ய நீங்கள் உண்மையிலேயே ஆசைப்படுவதும் நீங்கள் பேசும் விதத்திலேயே தெரிந்துவிடும். அதனால், என்ன வார்த்தைகளை என்ன தொனியில் சொல்லப்போகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அவருடைய மனதைக் காயப்படுத்துவது போல் எதையும் சொல்லிவிடாதீர்கள்.
5. உதவி செய்யுங்கள். அவருக்குத் தேவையான உதவிகளை செய்ய வாய்ப்புகளைத் தேடுங்கள். இப்படிக் கருணை காட்டினால், அவர் நம்மிடம் சகஜமாக பேச வழி பிறக்கலாம்.