பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
“வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்”
-
பிறந்த வருடம்: 1941
-
சொந்த நாடு: ஆஸ்திரேலியா
-
முன்பு: புகை பிடிப்பவர், குடித்து வெறிப்பவர்
என் கடந்த காலம்:
நியு சவுத் வேல்ஸில் உள்ள வாரியல்டா என்ற சிறிய ஊரில் வளர்ந்தேன். ஆடுமாடு மேய்ப்பது, தானியம் விளைவிப்பது, சிறுபயிர் விவசாயம் செய்வது எனப் பலதரப்பட்ட வேலைகளை அந்த ஊர் மக்கள் செய்துவந்தார்கள். அவர்கள் கைச்சுத்தம் உள்ளவர்களாய் இருந்ததால், அங்கு குற்றச்செயல்கள் அவ்வளவாக நடக்கவில்லை.
எங்கள் குடும்பத்தில் மொத்தம் பத்து பிள்ளைகள், நான்தான் மூத்தவன். அதனால், 13 வயதிலேயே குடும்பத்திற்காக வேலைக்குப் போக ஆரம்பித்தேன். படிப்பறிவு இல்லாததால் பண்ணைகளில் வேலை செய்தேன். 15 வயதில் குதிரைகளைப் பழக்குவிக்கிறவனாக ஆனேன்.
பண்ணைகளில் வேலை செய்தது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. சுற்றுச்சூழலும் ரம்மியமாக இருந்தது. மாலை வேளைகளில், அருகிலிருந்த காட்டுப் புதர்களிலிருந்து பூங்காற்று நறுமணத்தைச் சுமந்துவந்தது. இரவு நேரங்களில், நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தபடி, வானில் மிதக்கும் பால்நிலாவையும் மினுமினுக்கும் நட்சத்திரங்களையும் பார்த்து ரசிக்க முடிந்தது. இந்த அதிசயங்களை நிச்சயம் யாரோ ஒருவர் படைத்திருக்க வேண்டுமென அச்சமயங்களில் நான் நினைத்ததுண்டு. அங்கு வேலை செய்தது ஒரு புறம் எனக்கு இப்படி நன்மை அளிக்க... மறுபுறம் பல தீமைகளை விளைவித்தது. அங்கிருந்தவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள், புகை பிடித்தார்கள். சீக்கிரத்திலேயே, அவர்களுடைய காற்று என்மேல் அடிக்க ஆரம்பித்தது.
18 வயதில் சிட்னிக்குக் குடிமாறினேன். ராணுவத்தில் சேர முயன்றேன், ஆனால் படிப்பறிவு இல்லாததால் என்னை நிராகரித்துவிட்டார்கள். அதனால், வேறொரு வேலையில் சேர்ந்து ஒரு வருடம் அங்கேயே தங்கினேன். அந்தச் சமயத்தில்தான், முதன்முதலாக யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன். கூட்டங்களுக்கு வரும்படி அவர்கள் கொடுத்த அழைப்பை ஏற்று அங்கு சென்றேன்; அவர்களிடம்தான் சத்தியம் இருக்கிறதென்பதை உடனடியாகக் கண்டுகொண்டேன்.
ஆனால், சீக்கிரத்திலேயே பண்ணை வேலைக்கே திரும்பிவிடத் தீர்மானித்தேன். இறுதியில், குயின்ஸ்லாந்திலுள்ள குண்டெவின்டி ஊருக்குக் குடிமாறினேன். ஒரு வேலையில் சேர்ந்தேன், திருமணம் செய்துகொண்டேன், ஆனால் வருத்தகரமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன்.
எங்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அதன் பின்னர்தான்,
என் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். சிட்னியில் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்தில் நான் கேட்ட விஷயங்கள் என் நினைவுக்கு வந்தன. பைபிளைப் பற்றி இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள முடிவுசெய்தேன்.பழைய காவற்கோபுர இதழ் ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்தேன்; அதில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆஸ்திரேலியக் கிளை அலுவலகத்தின் விலாசம் இருந்தது. உதவி கேட்டு கடிதம் எழுதினேன். விரைவிலேயே, அன்பான ஒரு யெகோவாவின் சாட்சி என்னைச் சந்தித்தார், எனக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார்.
பைபிள் என்னை மாற்றிய விதம்:
பைபிளைப் படிக்கப் படிக்க, என் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டுமென்பதை உணர்ந்தேன். என் மனதைத் தொட்ட ஒரு வசனம், 2 கொரிந்தியர் 7:1. ‘உடலிலிருந்து எல்லாக் கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ள’ வேண்டுமென அந்த வசனம் ஊக்கப்படுத்துகிறது.
புகைப் பழக்கத்தையும் குடிப்பழக்கத்தையும் நிறுத்த தீர்மானித்தேன். அவை என் இரத்தத்திலேயே ஊறிப்போயிருந்ததால், அவற்றை நிறுத்துவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. என்றாலும், கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தில் உறுதியாயிருந்தேன். ரோமர் 12:2-ல் உள்ள அறிவுரை எனக்குப் பேருதவியாக இருந்தது. “இந்த உலகத்தின் பாணியின்படி நடப்பதை விட்டுவிடுங்கள்; உங்கள் மனம் புதிதாக்கப்படுவதற்கும், அதன் மூலம் உங்கள் குணாதிசயம் மாற்றப்படுவதற்கும் இடங்கொடுங்கள்” என்று அந்த வசனம் சொல்கிறது. என்னுடைய பழக்கங்களை மாற்றுவதற்கு, முதலில் என் சிந்தனையை மாற்ற வேண்டும் என்பதையும், தீங்கான அவற்றைக் கடவுள் வெறுப்பது போல நானும் வெறுக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டேன். பிற்பாடு அவருடைய உதவியால், அந்தக் கெட்ட பழக்கங்களிலிருந்து முழுமையாக விடுபட்டேன்.
‘என்னுடைய பழக்கங்களை மாற்றுவதற்கு, முதலில் என் சிந்தனையை மாற்ற வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்’
கெட்ட வார்த்தை பேசும் பழக்கத்தை விடுவதுதான் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்” என்று எபேசியர் 4:29-ல் உள்ள பைபிள் ஆலோசனை எனக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும், அந்தப் பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் என்னால் விட முடியவில்லை. அச்சமயத்தில், ஏசாயா 40:26-ல் உள்ள வார்த்தைகளைத் தியானித்தது எனக்கு உதவியது. “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது” என்று அந்த வசனம் சொல்கிறது. நான் கண்டு ரசித்த இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தைப் படைக்க கடவுளுக்குச் சக்தி இருந்ததென்றால், அவரைப் பிரியப்படுத்துகிற மாற்றங்களைச் செய்வதற்கும் எனக்கு நிச்சயம் சக்தி கொடுப்பார் என்று நம்பினேன். ஊக்கமான ஜெபத்தினாலும், கடுமையான முயற்சியினாலும் படிப்படியாக என் நாவுக்கு “கடிவாளம்” போட்டேன்.
நான் பெற்ற பலன்கள்:
நான் வேலை செய்த பண்ணைகளில் சொற்ப ஆட்களே இருந்ததால், பேசிப் பழகுவதற்கு எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கிடைத்த பயிற்சி மற்றவர்களிடம் பேசிப் பழக எனக்கு உதவியிருக்கிறது. முக்கியமாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்க உதவியிருக்கிறது.—மத்தேயு 6:9, 10; 24:14.
கடந்த சில வருடங்களாக, சபையில் மூப்பராகச் சேவை செய்துவருகிறேன். இதனால், சக விசுவாசிகளுக்கு என்னால் முடிந்தளவு உதவி செய்ய முடிகிறது; எனவே, அந்தப் பொறுப்பை பாக்கியமாகக் கருதுகிறேன்.
படிப்பறிவு இல்லாத என்னை யெகோவா தேர்ந்தெடுத்து, இன்றுவரை போதித்து வருவதற்காக நான் அவருக்கு மனமார்ந்த நன்றி சொல்கிறேன். (ஏசாயா 54:13) ‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்’ என்று நீதிமொழிகள் 10:22-ல் உள்ள வார்த்தைகளை முழு மனதோடு ஒத்துக்கொள்கிறேன். ▪ (w13-E 08/01)