பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
கடவுளுடைய மனம் வருத்தப்படலாம்—அவரை எப்படிச் சந்தோஷப்படுத்துவது
உன்னை யாராவது காயப்படுத்தி அழ வைத்திருக்கிறார்களா?— a நம் எல்லோருக்குமே அப்படி நடந்திருக்கலாம். ஆனால், அதுபோன்ற எல்லாச் சமயங்களிலுமே அவர்கள் உன் உடலைக் காயப்படுத்தியிருக்க மாட்டார்கள். உன்னைப் பற்றித் தவறாகப் பேசி, உன் மனதைக் காயப்படுத்தியிருக்கலாம். அப்போது நீ ரொம்ப வருத்தப்பட்டிருப்பாய் இல்லையா?— தம்மைப் பற்றி மக்கள் பொய்களைச் சொல்லி தம் மனதைக் காயப்படுத்தும்போது கடவுளும்கூட அதேபோல் வருத்தப்படுவார். ஆனால், அவரை நாம் எப்படிச் சந்தோஷப்படுத்தலாம்? இப்போது பார்ப்போம்.
கடவுள்மேல் அன்பு இருப்பதாகச் சொன்ன சில பேர் அவரை “வருத்தப்பட” வைத்தார்கள். ஆம், அவர்கள் செய்த காரியம் கடவுளுக்கு “வேதனை அளித்தது.” இது உடல் வேதனையை அர்த்தப்படுத்துவதில்லை. ஏனென்றால், கடவுளுடைய உடலை யாருமே காயப்படுத்த முடியாது. அவர் சர்வ வல்லமையுள்ளவர். நாம் அவர் சொல்பேச்சைக் கேட்காதபோது அவருடைய மனம் வேதனைப்படும். எப்படி என்று கவனிக்கலாம்.
பூமியில் யெகோவா தேவன் முதன்முதலாகப் படைத்த இரண்டு பேர் அவரை ரொம்பவே வருத்தப்பட வைத்தார்கள். பூமியில் ‘ஏதேன் தோட்டம்’ என்று அழைக்கப்பட்ட அழகிய பூஞ்சோலையில் அந்த இரண்டு பேரையும் யெகோவா குடிவைத்தார். யார் அந்த இரண்டு பேர்?— சரியாகச் சொன்னாய். ஆதாமும் ஏவாளும்தான். யெகோவாவின் மனதை வேதனைப்படுத்துகிற என்ன காரியத்தை அவர்கள் செய்தார்கள் என்று பார்ப்போம்.
யெகோவா அவர்களை அந்தத் தோட்டத்தில் குடிவைத்து, அதை நன்றாகக் கவனித்துக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னார். அவர்கள் குழந்தைகளைப் பெற்று அவர்களோடு சேர்ந்து சாவில்லாமல் வாழும்படியும் சொன்னார். ஆனால், குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே ஒரு கெட்ட காரியம் நடந்தது. அது என்னவென்று உனக்குத் தெரியுமா?— ஒரு தேவதூதன் முதலில் ஏவாளையும் பின்பு ஆதாமையும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போகும்படி செய்தான். என்ன நடந்தது என்று கவனி.
ஒரு பாம்பு ஏவாளிடம் “பேசியது.” அவள் கடவுளைப் போல் ஆவாள் என்று சொன்னது; அந்த விஷயம் அவளுக்குப் பிடித்துப்போய்விட்டது. அதனால் அந்தப் பாம்பின் பேச்சைக் கேட்டு அது சொன்னபடியே செய்தாள். என்ன செய்தாள் என்று உனக்குத் தெரியுமா?—
கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல்போனாள். எந்தக் கட்டளை? அவளைப் படைப்பதற்கு முன்பு கடவுள் ஆதாமிடம், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று சொல்லியிருந்தார்.
ஏவாளுக்கும் அந்தக் கட்டளை தெரிந்திருந்தது. ஆனாலும் அவள் ஏக்கத்தோடு அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ‘அது புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதன் கனியைப் பறித்து, சாப்பிட்டாள்.’ பின்பு, ‘தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.’ அவன் ஏன் அதைச் சாப்பிட்டான் என்று நினைக்கிறாய்?— ஏனென்றால், அவன் யெகோவாவைவிட ஏவாளையே அதிகம் நேசித்தான். யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதைவிட அவளைச் சந்தோஷப்படுத்தவே நினைத்தான். ஆனால், நாம் மற்ற எவரையும்விட யெகோவாவைத்தான் சந்தோஷப்படுத்த வேண்டும்; அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.
ஒரு பாம்பு ஏவாளிடம் பேசியது என்று சொன்னது உனக்கு ஞாபகமிருக்கிறதா? பொம்மை பேசுவதுபோல் காட்டுவதற்காக எப்படி ஒரு நபர் அதற்குக் குரல் கொடுக்கிறாரோ அப்படித்தான் ஒருவன் அந்தப் பாம்புக்குக் குரல் கொடுத்தான். யார் அவன்?— ‘பழைய பாம்பாகிய பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன்தான்’ அவன்.
நீ எப்படி யெகோவாவைச் சந்தோஷப்படுத்தலாம் என்று உனக்குத் தெரியுமா?— எப்போதும் அவர் மனதுக்குப் பிடித்த விதத்தில் நடப்பதன் மூலம் சந்தோஷப்படுத்தலாம். ஆனால், மனிதர்களைத் தன் இஷ்டப்படி ஆட்டிவைக்க தன்னால் முடியும் என்று சாத்தான் சொல்கிறான். அதனால் யெகோவா நம்மிடம், “என் மகனே [அல்லது மகளே], என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்று உற்சாகப்படுத்துகிறார். யெகோவாவை சாத்தான் ஏளனம் செய்கிறான். எல்லோரையும் யெகோவாவிடமிருந்து பிரித்துவிட முடியும் என்று சவால்விடுகிறான். அதனால், நீ யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவருக்குச் சேவை செய்தால் அவரைச் சந்தோஷப்படுத்தலாம். அப்படிச் செய்ய நீ கடினமாக முயற்சி செய்வாயா?— ▪ (w13-E 09/01)
உன் பைபிளில் வாசித்துப்பார்
a ஒரு பிள்ளையுடன் சேர்ந்து படித்தால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அந்தக் கேள்விக்குப் பிள்ளையைப் பதில் சொல்லச் சொல்லுங்கள்.