‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயம்’ மன்னிப்பைத் தேடும்போது . . .
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயம்’ மன்னிப்பைத் தேடும்போது . . .
நாம் எல்லாரும் அநேக சமயங்களில் பாவம் செய்துவிடுகிறோம். அதற்காக நாம் எவ்வளவுதான் வருத்தப்பட்டாலும் மனந்திரும்பினாலும், ‘நான் செய்கிற ஊக்கமான ஜெபங்களைக் கடவுள் கேட்பாரா? என்னை மன்னிப்பாரா?’ என்றெல்லாம் நினைத்து நாம் கவலைப்படலாம். யெகோவா பாவத்தை வெறுக்கிறபோதிலும், தவறுசெய்த ஒருவர் மனந்திரும்பும்போது மன்னிக்கத் தயாராய் இருக்கிறார் என்ற உண்மையை பைபிள் கற்பிக்கிறது; இது நமக்கு எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது! 2 சாமுவேல் 12-ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறபடி, பூர்வ இஸ்ரவேலில் வாழ்ந்த தாவீது ராஜாவின் விஷயத்திலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது.
என்ன நடந்ததென்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தாவீது வினைமையான பாவங்களைச் செய்திருந்தார். அவர் பத்சேபாளுடன் ஒழுக்கக்கேடான உறவில் ஈடுபட்டார்; அந்தத் தவறை மறைக்க முடியாதபோது அவளுடைய கணவனைக் கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். பிறகு, பல மாதங்களுக்குத் தன் பாவங்களை மறைத்து குற்றமற்றவரைப் போல வேஷம் போட்டார். ஆனால், யெகோவா எல்லாவற்றையும் பார்த்தார். தாவீதின் பாவங்களையும் பார்த்தார். மனந்திரும்புவதற்கேற்ற இருதயம் தாவீதுக்கு இருக்கிறது என்பதையும்கூட அவர் பார்த்தார். (நீதிமொழிகள் 17:3) எனவே, யெகோவா என்ன செய்தார்?
நாத்தான் தீர்க்கதரிசியை தாவீதிடம் அனுப்பினார். (வசனம் 1) கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலின்படி நாத்தான் தாவீதை சாதுரியத்தோடு அணுகினார்; சரியான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். தன்னையே ஏமாற்றிக்கொண்டிருந்த தாவீதின் மனநிலையை மாற்ற வேண்டும்; அதோடு, அவர் எவ்வளவு வினைமையான பாவங்களைச் செய்திருக்கிறார் என்பதை தாவீதுக்கு உணர்த்தவும் வேண்டும். இதற்கு நாத்தான் என்ன செய்தார்?
தாவீது தான் செய்த தவறை நியாயப்படுத்தாதபடி, நாத்தான் ஒரு கதையை அவரிடம் சொன்னார்; முன்னாள் மேய்ப்பனான தாவீதின் மனதை அந்தக் கதை நிச்சயம் தொடுமென நம்பினார். அந்தக் கதை ஓர் ஏழையையும், ஒரு பணக்காரனையும் பற்றியது. அந்தப் பணக்காரனிடம் ‘ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தன’; ஆனால் அந்த ஏழையிடமோ ‘ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டிதான்’ இருந்தது. அந்தப் பணக்காரன் தன் வீட்டுக்கு வந்த வழிப்போக்கனுக்காக விருந்து அளிக்க ஏற்பாடு செய்தான். அதற்கு, தன்னிடம் உள்ள ஆடுகளில் ஒன்றைப் பயன்படுத்தாமல் ஏழையிடமிருந்த ஒரே ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அந்தக் கதையை உண்மையென நினைத்த தாவீது உணர்ச்சிவசப்பட்டு, “இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன்” என்றார். ஏன் அப்படிச் சொன்னார்? ‘அவன் இரக்கமற்றவனாய் இருந்தபடியினால்’ என தாவீதே விளக்குகிறார். a—வசனங்கள் 2-6.
நாத்தான் என்ன நோக்கத்தோடு அந்தக் கதையைச் சொன்னாரோ அந்த நோக்கம் நிறைவேறியது. சொல்லப்போனால், தாவீது தனக்குத்தானே தீர்ப்பளித்துக்கொண்டார். இப்போது நாத்தான் நேரடியாக தாவீதிடம் சொல்கிறார்: “நீயே அந்த மனுஷன்.” (வசனம் 7) கடவுளின் சார்பாக நாத்தான் பேசினார்; தாவீது யெகோவாவுக்கு எதிராகவே பாவம் செய்தார் என்பதைத் தெளிவாகக் காட்டினார். தாவீது கடவுளுடைய சட்டத்தை மீறியதன் மூலம் அந்தச் சட்டத்தைக் கொடுத்தவரையே அவமதித்தார். ‘நீ என்னை அசட்டை பண்ணினாய்’ என்று கடவுள் சொல்கிறார். (வசனம் 10) நேரடியான இந்தக் கடிந்துகொள்ளுதல் தாவீதின் இதயத்தைச் சுருக்கென்று குத்தியதால் அவர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்.” தாவீதை யெகோவா மன்னித்துவிட்டார் என நாத்தான் உறுதியளித்தார். ஆனால் தன் பாவத்தின் பின்விளைவுகளை தாவீது அனுபவித்தே ஆக வேண்டும்.—வசனம் 13, 14.
தன் பாவம் வெட்டவெளிச்சமான பிறகு தாவீது 51-ஆம் சங்கீதத்தை எழுதினார். அதில் அவர் தன்னுடைய உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பது அவரது உண்மையான மனந்திரும்புதலைக் காட்டுகிறது. அவர் தன் பாவத்தின் மூலம் யெகோவாவை அவமானப்படுத்தியிருந்தார். ஆனால் மனந்திரும்பி, யெகோவாவின் மன்னிப்பை ருசித்தபோது அவரிடம் இவ்வாறு சொன்னார்: “தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” (சங்கீதம் 51:17) பாவம் செய்து யெகோவாவின் இரக்கத்திற்காக ஏங்கும் ஒருவருக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவாய் நம்பிக்கை அளிக்கின்றன! (w10-E 05/01)
[அடிக்குறிப்பு]
a விருந்தினரை உபசரிப்பதற்காக ஆட்டை அடித்துச் சமைப்பது நல்ல பழக்கம்தான். ஆனாலும், ஆட்டுக்குட்டியைத் திருடியது ஒரு குற்றம், அதற்குத் தண்டனையாக நான்கு ஆடுகளைத் திரும்பச் செலுத்த வேண்டும். (யாத்திராகமம் 22:1) அந்தப் பணக்காரன் ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டதால் இரக்கமற்ற விதத்தில் நடந்துகொண்டான் என தாவீது நினைத்தார். ஏழையின் குடும்பத்திற்கு அந்த ஆட்டுக்குட்டி பால், உடை போன்ற அடிப்படைத் தேவைகளை அளித்திருக்கலாம், அந்த ஆட்டுக்குட்டியின் மூலம் ஒருவேளை ஓர் ஆட்டு மந்தையேகூட உருவாகியிருக்கலாம். ஆனால், அந்தப் பணக்காரன் அதற்கெல்லாம் வழியில்லாமல் செய்துவிட்டான்.