Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குழந்தை இயேசுவைப் பார்க்கப்போனது நிஜமாகவே மூன்று ராஜாக்களா?

குழந்தை இயேசுவைப் பார்க்கப்போனது நிஜமாகவே மூன்று ராஜாக்களா?

வாசகரின் கேள்வி

குழந்தை இயேசுவைப் பார்க்கப்போனது நிஜமாகவே மூன்று ராஜாக்களா?

தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஆசியா போன்ற பல நாடுகளில் கிறிஸ்துமஸ் சமயத்தின்போது இயேசுவின் பிறப்பைப் பற்றி ஏராளமான கதைகள் உலா வருகின்றன. இயேசு பிறந்தபோது மூன்று ராஜாக்கள் பச்சிளம் குழந்தையான இயேசுவுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொண்டுவந்து கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கதை உண்மையா? பைபிள் சொல்கிற விஷயங்களோடு இது ஒத்துப்போகிறதா? இப்போது பார்க்கலாம்.

சுவிசேஷ எழுத்தாளர்களான மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் பிறப்பைப் பற்றி எழுதினார்கள். இயேசு பிறந்தபோது அந்த இடத்திற்கு அருகிலிருந்த வயல்வெளிகளிலிருந்து சாதாரண மேய்ப்பர்கள் மட்டுமே அவரை வந்து பார்த்ததாக அந்தப் பதிவுகள் காட்டுகின்றன. பிற்பாடு அவரை வந்து பார்த்தது சோதிடர்களே; சிலர் நம்புவதுபோல் ராஜாக்களோ ஞானிகளோ அல்ல. இவர்கள் எத்தனை பேர் என்றும் பைபிள் சொல்வதில்லை. இந்தச் சோதிடர்கள் இயேசுவைப் பார்க்க வந்தபோது அவர் பச்சிளம் குழந்தையாகத் தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கவில்லை; ஒரு சிறுபிள்ளையாக வீட்டில் வசித்து வந்தார். அவர்களுடைய வருகை இயேசுவின் உயிருக்கே உலைவைக்க இருந்தது!

இயேசுவின் பிறப்பைப் பற்றி லூக்கா எழுதிய பதிவைச் சற்றுக் கவனியுங்கள்: “அந்தப் பகுதியிலிருந்த மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, தங்களுடைய மந்தைகளை இரவிலே காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று யெகோவாவின் தூதர் அவர்களிடம் வந்து நின்றார்; அந்தத் தேவதூதர் அவர்களை நோக்கி, . . . சிறுகுழந்தை துணிகளில் சுற்றப்பட்டு, தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள் . . . என்றார். மேய்ப்பர்கள் வேகமாகப் புறப்பட்டுப் போய், மரியாளையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த சிறுகுழந்தையையும் பார்த்தார்கள்.”—லூக்கா 2:8-16.

பச்சிளம் குழந்தையான இயேசுவுடன், யோசேப்பும் மரியாளும் மேய்ப்பர்களும் மட்டுமே இருந்தார்கள். வேறு யாரும் இருந்ததாக லூக்கா குறிப்பிடவில்லை.

இப்போது, மத்தேயு 2:1-11-ல் உள்ள பதிவை பொது மொழிபெயர்ப்பு பைபிளில் பாருங்கள்: ‘ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்தார்கள். . . . வீட்டுக்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்.’

“மூன்று ஞானிகள்” வந்ததாக இந்தப் பதிவு சொல்வதில்லை. “ஞானிகள்” வந்ததாக மட்டுமே சொல்கிறது. அதோடு, அவர்கள் கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்ததாகச் சொல்கிறது; இயேசு பிறந்த ஊராகிய பெத்லகேமுக்கு வந்ததாகச் சொல்வதில்லை. ஆகவே, ஒருவழியாக பெத்லகேமுக்கு வந்துசேர்ந்தபோது, அவர்கள் பார்த்தது ‘பிள்ளையாகிய’ இயேசுவைத்தான், பச்சிளம் குழந்தையாகிய இயேசுவை அல்ல; அதுவும் வீட்டில்தான், தொழுவத்தில் அல்ல.

மேலே பார்த்தபடி, பொது மொழிபெயர்ப்பு பைபிள் “ஞானிகள்” என்ற பதத்தைப் பயன்படுத்தியிருந்தாலும், மற்ற மொழிபெயர்ப்புகள் “சாஸ்திரிகள்” அல்லது “சோதிடர்கள்” என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றன. “ஞானிகள்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வினைச்சொல் சோதிட வல்லுநர்களாகத் திகழ்ந்த பெர்சிய குருமார்களைக் குறித்தது” என்று மத்தேயு சுவிசேஷத்தைப் பற்றிய கையேடு என்ற ஆங்கிலப் புத்தகம் தெரிவிக்கிறது. ஓர் அகராதி, (தி எக்ஸ்பேன்டட் வைன்ஸ் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் வர்ட்ஸ்) “மாயவித்தைக்காரன், சூனியக்காரன், மந்திர சக்தி இருப்பதாகச் சொல்லிக்கொள்பவன், பில்லிசூனியக் கலைகளைக் கற்பிப்பவன்” என்றெல்லாம் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தருகிறது.

சோதிடமும் பில்லிசூனியமும் இன்று பிரபலமாக இருக்கின்றன; என்றாலும், அவற்றைக் குறித்து பைபிள் எச்சரிக்கிறது. (ஏசாயா 47:13-15) அவை ஆவியுலகத் தொடர்பின் சில வகைகள்; அப்படிப்பட்ட பழக்கங்களை யெகோவா அருவருக்கிறார். (உபாகமம் 18:10-12) அதனால்தான், இயேசுவின் பிறப்பைப் பற்றி கடவுளுடைய தூதர்கள் சோதிடர்களிடம் அறிவிக்கவில்லை. என்றாலும், பொல்லாத அரசனாகிய ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல முயற்சித்ததால், அவனிடம் திரும்பிச் செல்ல வேண்டாமென்று கடவுள் கனவில் அவர்களை எச்சரித்தார். எனவே, ‘வேறொரு வழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.’—மத்தேயு 2:11-16.

இயேசுவின் பிறப்போடு சம்பந்தப்பட்ட உண்மைகளைத் திரித்துக் கூறுகிற கட்டுக்கதைகளை உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆதரிப்பார்களா? மாட்டார்கள்! (w09-E 12/01)