Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தம்மைப் பற்றி வர்ணித்தபோது

யெகோவா தம்மைப் பற்றி வர்ணித்தபோது

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

யெகோவா தம்மைப் பற்றி வர்ணித்தபோது

யாத்திராகமம் 34:6, 7

கடவுளை நீங்கள் எப்படி வர்ணிப்பீர்கள்? அவர் என்னென்ன குணங்களைக் காட்டுகிறார், எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் என்று நினைக்கிறீர்கள்? இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கடவுளிடம், ‘உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று கேட்கிறீர்கள். அவரும் தம்முடைய குணங்களை உங்களுக்கு விவரிக்கிறார். தீர்க்கதரிசியான மோசேக்கு அப்படிப்பட்ட அனுபவம் நிஜமாகவே கிடைத்தது. அதைக் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் அவர் எழுதி வைத்திருப்பது சந்தோஷமான விஷயம்.

சீனாய் மலையில் மோசே இருந்தபோது, “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்று யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார். (யாத்திராகமம் 33:18) மறுநாள் அந்தத் தீர்க்கதரிசி, கடவுளுடைய மகிமையைக் கணநேரம் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார். a அற்புதமான அந்தத் தரிசனத்தில் என்னவெல்லாம் பார்த்தாரென மோசே விலாவாரியாக எழுதி வைக்கவில்லை. மாறாக, அதைவிட அதிமுக்கியமான ஒன்றை அவர் எழுதி வைத்தார்; ஆம், கடவுள் என்ன சொன்னார் என்பதை எழுதி வைத்தார். அதை இப்போது ஆராய்வோம்; அது யாத்திராகமம் 34:6, 7-ல் உள்ளது.

யெகோவா தம்மைப் பற்றிச் சொல்கிற முதல் விஷயம், தாம் “இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்” என்பதே. (வசனம் 6, பொது மொழிபெயர்ப்பு) ஓர் அறிஞரின்படி, ‘இரக்கம்’ என்பதற்குரிய எபிரெய வார்த்தை, ‘ஓர் அப்பா தன் பிள்ளைகளிடம் காட்டுகிற கரிசனைக்கு ஒப்பான’ கரிசனையைக் கடவுள் காட்டுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘பரிவு’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, “தேவையில் இருக்கும் ஒருவருக்கு நெஞ்சார உதவுவதைச் சித்தரிக்கிற” வினைச்சொல்லுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதையெல்லாம் கனிவான அன்போடும் ஆழ்ந்த அக்கறையோடும் கொடுத்துப் பராமரிப்பதைப் போல யெகோவாவும் தம்மை வணங்குபவர்களைப் பராமரிக்கிறார்; இதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புவது தெளிவாகத் தெரிகிறது.—சங்கீதம் 103:8, 13.

அடுத்ததாக, தாம் “சினம் கொள்ளத் தயங்குபவர்” என யெகோவா சொல்கிறார். (வசனம் 6, ஈஸி டு ரீட் வர்ஷன்) அவர் பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களிடம் அவ்வளவு எளிதில் கோபப்படுவதில்லை. மாறாக, அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்கிறார், அவர்களுடைய குற்றங்குறைகளைச் சகித்துக்கொள்கிறார்; அதேசமயத்தில், அவர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு விலகுவதற்குக் காலம் தருகிறார்.—2 பேதுரு 3:9.

மேலும், தாம் “மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” எனக் கடவுள் சொல்கிறார். (வசனம் 6) மகா தயை, அதாவது பற்றுமாறா அன்பு என்ற பொன்னான குணத்தின் மூலமாக யெகோவா தமக்கும் தம் மக்களுக்கும் இடையே பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்; இந்தப் பிணைப்பு உறுதியானது, நிலையானது. (உபாகமம் 7:9) யெகோவா சத்தியத்தின் ஊற்றுமூலராகவும் இருக்கிறார். அவர் யாரையும் ஏமாற்ற மாட்டார், அவரை யாரும் ஏமாற்றவும் முடியாது. அவர் ‘சத்தியத்தின் கடவுளாக’ இருப்பதால், எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய எல்லா வாக்குறுதிகளிலும், சொல்லப்போனால் அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் நாம் முழுநம்பிக்கை வைக்கலாம்.—சங்கீதம் 31:5, NW.

யெகோவா தம்மைப் பற்றிய மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார்; அவர் “அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும்” மன்னிக்கிறவர் என்று சொல்கிறார். (வசனம் 7) ஆம், பாவிகள் மனந்திரும்பும்போது அவர் ‘மன்னிக்கிறார்.’ (சங்கீதம் 86:5) அதேசமயத்தில் தவறுகளை அவர் கண்டும் காணாமல் விட்டுவிடுவதில்லை. தவறு செய்கிறவர்களை அவர் ‘தண்டனைக்குத் தப்பவிட மாட்டார்’ என்றும் சொல்கிறார். (வசனம் 7, பொ.மொ.) அவர் பரிசுத்தமும் நீதியும் உள்ளவராக இருப்பதால், வேண்டுமென்றே பாவம் செய்கிறவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டார். அவர்கள் தங்கள் பாவத்தின் விளைவுகளை ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் சந்தித்தே தீர வேண்டும்.

யெகோவா தம்முடைய குணங்களை வர்ணித்தது, நாம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது; ஆம், அவர் என்னென்ன குணங்களைக் காட்டுகிறார், எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் என்பதை நாம் நன்கு தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். அவருடைய அருமையான குணங்களைப் பற்றி இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள நீங்கள் தூண்டப்படவில்லையா? (w09 5/1)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவை மோசே நேருக்கு நேர் பார்க்கவில்லை; ஏனென்றால், கடவுளைப் பார்க்கும் எந்த மனிதனும் உயிரோடிருக்க முடியாது. (யாத்திராகமம் 33:20) யெகோவா தம்முடைய மகிமையின் தரிசனத்தை மோசேக்குக் காட்டியிருக்கலாம்; ஒரு தேவதூதர் மூலம் அவருடன் பேசியிருக்கலாம்.