பூமியைக் கடவுளால்தான் காப்பாற்ற முடியும்!
பூமியைக் கடவுளால்தான் காப்பாற்ற முடியும்!
“நீல நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் ஜொலிக்கும் மணிக்கல்.” விண்வெளி வீரரான எட்கர் மிட்ஷெல் இருண்ட வான்வீதியிலிருந்து நம் பூமியைப் பார்த்தபோது அதை இப்படித்தான் வர்ணித்தார்.
இந்தப் பூமி கோளத்தை மனிதன் குடியிருப்பதற்கு ஏற்ற வீடாக மாற்றுவதற்கு கடவுள் அதைப் பார்த்து பார்த்து உருவாக்கினார். கடவுளின் கைவண்ணத்தைக் கண்டு தேவதூதர்கள் “மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்.” (யோபு 38:7, ஈஸி டு ரீட் வர்ஷன்) இந்தப் பூமியில் கொட்டிக் கிடக்கும் அற்புதப் படைப்புகளை ஆராய்ந்து பார்த்தப் பிறகு, நாமும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வோம். உயிரினங்கள் செழித்து வாழத் துணைபுரிகிற சிக்கலான சூழியல் அமைப்புகள் இந்தப் பூமியில் ஏராளம் ஏராளம். இந்தச் சூழியல் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒன்றுதான் நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒளிச்சேர்க்கை. தாவரங்கள் சூரிய ஒளியையும் தண்ணீரையும் கார்பன்டை ஆக்ஸைடையும் பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றன. இப்படித் தயாரிக்கையில் கிடைக்கும் உபபொருள்தான் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன். இதுவே நம் வாழ்க்கைக்கு உயிர்நாடி.
இந்தப் பூமி வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை மனிதனிடம் கடவுள் ஒப்படைத்திருப்பதாக பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 1:28; 2:15) ஆனால், பூமியின் சூழியல் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மனிதனின் மனநிலை மாற வேண்டும். சொல்லப்போனால், தான் குடியிருக்கும் பூமியை அவன் நேசிக்க வேண்டும். அதன் அழகு கெடாமல் அதைப் பார்த்துக்கொள்ளும் ஆசையும் அவனுக்கு வரவேண்டும். ஆனால், சுதந்திரமாய்த் தீர்மானிக்கும் திறமை மனிதனுக்கு இருப்பதால், பூமியைப் பாழ்ப்படுத்திவிடலாம் அல்லது அதைத் தவறாக நிர்வகித்துவிடலாம். அதைத்தான் அவன் செய்திருக்கிறான். மனிதனின் அலட்சியமும் பேராசையும் பூமியைச் சின்னாபின்னமாக்கியிருக்கின்றன.
அதற்கு, சில அத்தாட்சிகள் இதோ: (1) காடுகளை அழிப்பதால் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளும் பூமியின் திறன் பாதிக்கப்படுகிறது; இதனால், சீதோஷ்ணநிலை சீர்கெட்டுப்போகிறது. (2) பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது பூச்சிகளைப் பெருகவிடாமல் தடுக்கிறது; இதனால், மகரந்தச் சேர்க்கை உட்பட பல்வேறு சூழியல் அமைப்புகளின் முக்கிய செயல்பாடுகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. (3) எக்கச்சக்கமாக மீன்களைப் பிடிப்பதும் கடல்களையும் ஆறுகளையும் மாசுபடுத்துவதும் மீன் வளத்தை வெகுவாகக் குறைத்திருக்கின்றன. (4) பூமியின் வள ஆதாரங்களை மனிதன் பேராசையோடு சுரண்டுவதால் வருங்கால சந்ததியினருக்கு அவை கிடைக்காமல் போய்விடும்; பூமி விரைவில் வெப்பமடைய இது காரணமாய் இருப்பதாகவும் கருதப்படுகிறது. வடதுருவ, தென்துருவ பனிப் பாளங்கள் பெருமளவில் உருகுவதையும் பெரிய பெரிய பனிப்பாறைகள் உடைவதையும் இதற்கு அத்தாட்சியாகச் சூழலியலாளர்கள் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இயற்கைப் பேரழிவுகள் பெருமளவு நிகழ்வதால், மனிதனைப் பூமி பழிவாங்குகிறது என்றும், அதுவே அவனுடைய துன்பத்திற்குக் காரணம் என்றும் சிலர் சொல்லலாம். மனிதன் வாடகையின்றி இலவசமாய் குடியிருப்பதற்குக் கடவுள் இந்தப் பூமியைக் கொடுத்திருக்கிறார். (ஆதியாகமம் 1:26-29) ஆனால், இந்த அழகிய பூமி-வீட்டைப் பராமரிக்க அநேகருக்கு மனமில்லை என்பதையே உலக நிலவரங்கள் காட்டுகின்றன. தன்னல ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதிலேயே மனிதன் குறியாய் இருக்கிறான். சொல்லப்போனால், மோசமான குடித்தனக்காரன் என்றே பெயரெடுத்திருக்கிறான்; வெளிப்படுத்துதல் 11:18 குறிப்பிடுவதுபோல், ‘பூமியைக் கெடுப்பவனாக’ ஆகியிருக்கிறான்.
உயிரினங்களைக் காக்கும் சூழலியல் அமைப்புகளைப் படைத்த மகா சக்திபடைத்த யெகோவா தேவன், மோசமான குடித்தனக்காரர்களை “வெளியேற்றுவதற்கான” வேளை வந்திருப்பதாக பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. (செப்பனியா 1:14; வெளிப்படுத்துதல் 19:11–15) பூமியை மனிதன் அழிப்பதற்கு முன்பே கடவுள் செயல்படுவார், நாம் எதிர்பார்ப்பதைவிட சீக்கிரமாகவே அவர் செயல்படுவார். a (மத்தேயு 24:44) ஆம், பூமியைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும். (w09 1/1)
[அடிக்குறிப்பு]
a காலத்தின் அவசரத்தன்மையைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான கூடுதல் தகவலைப் பெற, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட விழிப்புடன் இருங்கள்! என்ற சிற்றேட்டைக் காண்க.