‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’—2 கொரிந்தியர் 1:3, 4
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’
வாழ்க்கையில் உண்டாகும் கஷ்டங்கள், ஏமாற்றங்கள், துன்பங்கள் காரணமாக நமக்கு மனவேதனை ஏற்படலாம். சில சமயம் இவற்றால் நாம் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிடலாம். இதுபோன்ற சமயங்களில், ‘நான் யார்கிட்ட போவேன், எனக்கு யார் இருக்கிறார்?’ என நீங்கள் நினைக்கலாம். ஆறுதலின் பிறப்பிடமான யெகோவா தேவன் நமக்கு உதவ தயாராக இருக்கிறார் என்று 2 கொரிந்தியர் 1:3, 4-ல் அப்போஸ்தலன் பவுல் தைரியமளிக்கிறார்.
கடவுளை “இரக்கங்களின் பிதா” என்று 3-வது வசனம் சொல்கிறது. அதன் அர்த்தமென்ன? ‘இரக்கம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, மற்றவர்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து பரிதவிப்பதைக் குறிக்கிறது. a ஒருவருக்காக “மனதுருகுவதை” அல்லது அவர்மீது “அளவுகடந்த அக்கறை” காட்டுவதை இந்த வார்த்தை அர்த்தப்படுத்துவதாக ஒரு பைபிள் ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. கடவுளுக்கு இருக்கும் இந்த ‘இரக்க’ குணம் நமக்காக உதவி செய்யும்படி அவரைத் தூண்டுகிறது. கடவுளுடைய சுபாவத்தின் ஓர் அம்சமாக இருக்கும் இந்தக் குணத்தைப் பற்றி அறிந்துகொள்கையில் அவரிடம் நெருங்கிச் செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்குள் துளிர்விடுகிறதல்லவா?
யெகோவாவை ‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’ என்றும் பவுல் அழைக்கிறார். இங்கே பவுல் பயன்படுத்தும் வார்த்தை “இக்கட்டில் அல்லது சோகத்தில் ஆழ்ந்திருப்பவரிடம் ஆறுதலாக பேசுவதோடு அவருக்கு உதவியையும் உற்சாகத்தையும் அளிப்பதை” குறிக்கிறது. தி இன்டர்பிரெட்டர்ஸ் பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “துன்பத்தில் இருப்பவருக்கு வேதனையைத் தாங்கிக்கொள்ள தேவையான தைரியத்தை அளிக்கையில் அவருக்கு நாம் ஆறுதலளிக்கிறோம்.”
ஆனால், ‘கடவுள் எப்படி நமக்கு ஆறுதலளித்து வேதனையைத் தாங்குவதற்குத் தைரியம் கொடுக்கிறார்?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். அவர் முக்கியமாக இரண்டு வழிகளில் அதைச் செய்கிறார். தம்முடைய புத்தகமான பைபிள் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் அதைச் செய்கிறார். எனவே, ‘தேவவசனத்தினால் உண்டாகும் ... ஆறுதலினால் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படி’ தம்முடைய புத்தகத்தை கடவுள் நமக்கு அன்போடு அளித்திருக்கிறார் என பவுல் சொல்கிறார். அதோடுகூட நாம் இருதயப்பூர்வமாக அவரிடம் ஜெபிக்கையில் ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை’ நம்மால் உணர முடியும்.—ரோமர் 15:4; பிலிப்பியர் 4:7.
எந்தளவிற்கு யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்? ‘சகல உபத்திரவங்களிலேயும் அவர் நமக்கு ஆறுதல்’ அளிக்கிறார் என பவுல் கூறுகிறார். (2 கொரிந்தியர் 1:4) திணறடிக்கும் பிரச்சினையோ மனஉளைச்சலோ துன்பமோ எதுவாக இருந்தாலும்சரி, அதைத் தாங்கிக்கொள்வதற்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் கடவுள் நமக்கு கொடுக்கிறார். இதைக் கேட்கும்போது மனதுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது!
கடவுள் அளிக்கும் ஆறுதல், அதைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கு மட்டுமே பயனளிப்பதில்லை. பவுல் மேலும் சொல்கிறார், ‘தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாக’ இருக்கிறோம். நாம் கஷ்டப்படும்போது நமக்கு ஆறுதல் கிடைத்திருப்பதால், மற்றவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுடைய வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது; எனவே, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட நாம் தயாராய் இருக்கிறோம்.
யெகோவா ‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’ என்பதற்காக நம்முடைய பிரச்சினைகள் எல்லாம் பஞ்சாக பறந்துவிடும் என்று சொல்ல முடியாது. என்றாலும், ஒரு விஷயத்தைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம்: நாம் ஆறுதலுக்காக அவரை சார்ந்திருந்தால் வாழ்க்கையில் புயல் போன்ற பிரச்சினைகளும் துன்பங்களும் நம்மை தாக்கினாலும் நாம் கலங்காமல் உறுதியாக இருப்போம். இதுபோன்ற கருணை உள்ளம் படைத்த கடவுளுக்கே நம்முடைய வழிபாடும் போற்றுதலும் சேரவேண்டும், அல்லவா? (w08 9/1)
[அடிக்குறிப்பு]
a கடவுள், கருணையின் பிறப்பிடமாக இருப்பதால் ‘இரக்கங்களின் பிதா [அதாவது, ஊற்றுமூலர்]’ என அழைக்கப்படுகிறார். இந்தக் குணம் அவருடைய சுபாவத்தின் பாகமாகும்.