எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்
“எல்லாவற்றிலும் பரிசுத்தராக இருங்கள்.”—1 பே. 1:15.
1, 2. (அ) நாம் எப்படி இருக்க வேண்டும்? (ஆ) என்ன கேள்விகளைச் சிந்திக்கப் போகிறோம்?
“நான் பரிசுத்தர், அதனால் நீங்களும் பரிசுத்தராக இருக்க வேண்டும்.” லேவியராகம புத்தகத்திலுள்ள இந்த வார்த்தைகளை மீண்டும் எழுதும்படி பேதுருவை யெகோவா தூண்டினார். இஸ்ரவேலர்களைப் போலவே நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (1 பேதுரு 1:14-16-ஐ வாசியுங்கள்.) யெகோவா “பரிசுத்தர்.” அதனால், பரலோகதில் வாழப்போகிறவர்களும் பூமியில் வாழப்போகிறவர்களும், சில விஷயங்களில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.—யோ. 10:16.
2 இப்போது லேவியராகம புத்தகத்திலிருக்கும் இன்னும் சில புதையல்களைத் தோண்டி எடுப்போம். எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க லேவியராகம புத்தகத்தில் இருக்கும் சட்டங்கள் நமக்கு எப்படி உதவும் என்று பார்ப்போம். கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்க நாம் ஏன் தீர்மானமாக இருக்க வேண்டும்? யெகோவா மட்டுமே ஆட்சி செய்ய உரிமை உள்ளவர் என்பதைப் பற்றி லேவியராகம புத்தகம் என்ன சொல்கிறது? இஸ்ரவேலர்கள் செலுத்திய பலிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்த கேள்விகளுக்கும் பதில்களைப் பார்க்கலாம்.
யெகோவாவுக்கு பிடித்ததை செய்யுங்கள்
3, 4. (அ) கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்க நாம் ஏன் தீர்மானமாக இருக்க வேண்டும்? (ஆ) நாம் ஏன் பகையையும் பழிவாங்கும் எண்ணத்தையும் வளர்க்கக் கூடாது?
3 நாம் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றால் அவருடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். அதன் ஆழமான விஷயங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், யெகோவா எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தசட்டங்கள் நமக்கு உதவும். உதாரணமாக, “உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே [யெகோவா]!” என்று இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கட்டளையிட்டார்.—லேவி. 19:18, ஈஸி டு ரீட் வர்ஷன்.
4 நமக்கு எதிராக யார் எது செய்தாலும் நாம் பழிவாங்கக் கூடாது என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (ரோ. 12:19) அவர் சொன்னதை நாம் மீறினால் சாத்தான் ரொம்ப சந்தோஷப்படுவான், யெகோவா வருத்தப்படுவார். அது அவருடைய பெயரையும் கெடுக்கும். அதனால், யாராவது நம் மனதை வேண்டுமென்றே கஷ்டப்படுத்தினால், அவர்கள் மீது பகையை வளர்க்கக் கூடாது, பழிவாங்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இதை யோசித்துப் பாருங்கள்: “பொக்கிஷத்தை மண்பாத்திரங்களில் பெற்றிருக்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. நாம்தான் அந்த ‘மண்பாத்திரம்.’ நம்முடைய ஊழியம்தான் ‘பொக்கிஷம்.’ (2 கொ. 4:1, 7) தங்கம், வெள்ளி போன்ற பொக்கிஷம் இருக்கும் மண்பாத்திரத்தில் ஆசிடை (acid) ஊற்றினால் அது பொக்கிஷத்தை நாசமாக்கிவிடும். அதேபோல் பகை என்ற ஆசிட் நம் மனதில் இருந்தால், நாம் செய்யும் ஊழியத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டார்.
5. ஆரோனிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படம்.)
5 லேவியராகமம் 10:1-11-லுள்ள பதிவைக் கவனியுங்கள். ஆரோனுடைய மகன்களான நாதாபையும் அபியூவையும் யெகோவா நெருப்பினால் அழித்தார். ஆனால், மகன்கள் இறந்ததை நினைத்து துக்கப்பட கூடாது என்று ஆரோனிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் அவர் கட்டளையிட்டார். இதைக் கேட்டபோது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? வேதனையாக இருந்தாலும் ஆரோன் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். சபையில் அல்லது குடும்பத்தில் ஒருவர் சபை நீக்கம் செய்யப்பட்டால் அவரோடு நெருங்கி பழகாமல் இருக்கிறோமா?—1 கொரிந்தியர் 5:11-ஐ வாசியுங்கள்.
6, 7. (அ) சர்ச்சில் நடக்கும் கல்யாணத்துக்கு யாராவது நம்மை அழைத்தால் என்ன செய்ய வேண்டும்? (அடிக்குறிப்பு.) (ஆ) நம்முடைய தீர்மானத்தை உறவினர்களிடம் எப்படி விளக்கலாம்?
6 ஆரோனுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் வந்த அதே சூழ்நிலை நமக்கு வராமல் இருக்கலாம். ஆனால், உறவினர் ஒருவருக்கு சர்ச்சில் கல்யாணம் நடந்தால் நாம் என்ன செய்வோம்? அதில் கலந்துகொள்வோமா? இதைப் பற்றி பைபிளில் நேரடியான எந்தக் கட்டளையும் இல்லை. ஆனால், பைபிள் சட்டங்களின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும்போது நாம் நல்ல தீர்மானத்தை எடுக்க முடியும். *
7 இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் எடுக்கும் தீர்மானங்களை உறவினர்கள் புரிந்துகொள்ளாமல் போகலாம். (1 பே. 4:3, 4) இதைப் பற்றி அவர்கள் கேள்வி கேட்டால், அவர்களை கஷ்டப்படுத்தும் விதத்தில் பதில் சொல்லாமல் அன்பாக பதில் சொல்ல வேண்டும். நம்மை மதித்து கல்யாணத்துக்கு அழைத்ததற்காக அவருக்கு நன்றி சொல்லலாம். கல்யாணத்துக்கு வந்தாலும், மத சடங்குகளில் கலந்துகொள்ள மாட்டோம் என்பதால் அது அங்கு வரும் மற்றவர்களின் சந்தோஷத்தைக் கெடுக்கும் என்று சொல்லலாம். அதனால், கல்யாணத்துக்கு வந்து அவர்களைச் கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்றும் சொல்லலாம். இப்படி, முன்னதாகவே நம் தீர்மானத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது. இதை செய்வதன் மூலம் நாம் கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவோம்.
யெகோவாவுக்கு எப்போதும் கீழ்ப்படியுங்கள்
8. யெகோவா ஒருவருக்கே ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதை லேவியராகம புத்தகம் எப்படிக் காட்டுகிறது?
8 லேவியராகம புத்தகத்தில் இருக்கும் சட்டங்கள் எல்லாம் யெகோவாதான் கொடுத்தார் என்று 30 தடவைக்கும் அதிகமாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது. யெகோவாவுக்கு மட்டும்தான் நம்மை ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதை இந்த புத்தகம் தெளிவாக காட்டுகிறது. அதனால்தான், யெகோவா கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தார். (லேவி. 8:4, 5) அதேபோல், நாமும் யெகோவாவின் கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். அப்படிக் கீழ்ப்படிவதற்கு கடவுளுடைய அமைப்பு நமக்கு உதவி செய்கிறது. இருந்தாலும், சில நேரங்களில் தனியாக இருக்கும்போது நம் விசுவாசத்திற்கு சோதனைகள் வரலாம். இயேசுவும் தனியாக இருந்தபோதுதான் சோதிக்கப்பட்டார். (லூக். 4:1-13) ஆனால், யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்தால், அவருக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டோம். அப்படிச் செய்ய யாராவது நம்மை கட்டாயப்படுத்தினாலும் யெகோவாவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய தீர்மானமாக இருப்போம்.—நீதி. 29:25.
9. யெகோவாவின் சாட்சிகளை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள்?
9 யெகோவாவின் சாட்சிகளாகவும் இயேசுவின் உண்மை சீடர்களாகவும் இருப்பதால் இந்த உலகம் நம்மை துன்புறுத்துகிறது. “மக்கள் உங்களை உபத்திரவப்படுத்துவார்கள், கொலையும் செய்வார்கள்; என் பெயரை முன்னிட்டு எல்லாத் தேசத்தாருடைய வெறுப்புக்கும் ஆளாவீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 24:9) மக்கள் நம்மை வெறுத்தாலும் நற்செய்தி அறிவிப்பதை நாம் நிறுத்துவதில்லை. எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்கவும் முயற்சி செய்கிறோம். அதாவது நேர்மையாக, சுத்தமாக, ஒழுக்கமாக, அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கிறோம். அப்படியிருந்தும் நம்மை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்? (ரோ. 13:1-7) ஏனென்றால், நாம் யெகோவாவை ராஜாவாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். “அவர் ஒருவருக்கே” பரிசுத்த சேவை செய்கிறோம். அவர் கொடுத்திருக்கும் கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறோம்.—மத். 4:10.
10. யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போன ஒருவர் என்ன சூழ்நிலையை எதிர்ப்பட்டார்?
10 நாம் இந்த “உலகத்தின் பாகமாக” இல்லை. அதனால், போர்களிலும் அரசியலிலும் தலையிடுவதில்லை. (யோவான் 15:18-21; ஏசாயா 2:4-ஐ வாசியுங்கள்.) ஆனால், ஞானஸ்நானம் எடுத்த சிலர் இந்த விஷயத்தில் கடவுளுடைய கட்டளையை மீறியிருக்கிறார்கள். அவர்களில் நிறைய பேர் மனந்திரும்பி, திரும்பவும் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்திருக்கிறார்கள். (சங். 51:17) சிலர் மட்டும் மனந்திரும்பவில்லை. உதாரணமாக, ஹங்கேரி நாட்டில் இரண்டாம் உலகப் போரின்போது அநியாயமாக சிறையில் வைக்கப்பட்ட 160 சகோதரர்களை (45 வயதுக்குட்பட்டவர்கள்) அதிகாரிகள் ஓரிடத்தில் ஒன்றுகூட்டினார்கள். அவர்களை ராணுவத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தினார்கள். அவர்களில் நிறைய பேர் ராணுவத்தில் சேரவில்லை; ஆனால், 9 பேர் மட்டும் ராணுவத்தில் சேர்ந்துகொண்டார்கள். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அந்த 9 பேரில் ஒருவரிடம் அந்த அதிகாரிகள் அங்கிருந்த சில யெகோவாவின் சாட்சிகளைச் சுட்டுக் கொள்ளச் சொன்னார்கள். அந்த சாட்சிகளில் அவருடைய கூடப்பிறந்த சகோதரரும் இருந்தார். கடைசியில், என்ன காரணமோ தெரியவில்லை அவர்கள் கொல்லப்படவில்லை.
யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுங்கள்
11, 12. இஸ்ரவேலர்கள் செலுத்திய பலிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 திருச்சட்டத்தின்படி இஸ்ரவேலர்கள் பலிகளைச் செலுத்த வேண்டியிருந்தது. (லேவி. 9:1-4, 15-21) அந்தப் பலிகள் இயேசுவின் பலிக்கு அடையாளமாக இருந்தது. அதனால், அவர்கள் குறையில்லாத, தரமான பலிகளைச் செலுத்த வேண்டியிருந்தது. ஒவ்வொரு பலியையும் எப்படிச் செலுத்த வேண்டும் என்று கடவுள் சொல்லியிருந்தார். உதாரணமாக, குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண் செலுத்த வேண்டிய பலியைக் கவனியுங்கள். “அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக் குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.” (லேவி. 12:6) யெகோவா அநியாயமாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவருடைய வசதிக்கேற்ப பலிகளை செலுத்தச் சொன்னார். ஒருவேளை, அந்தப் பெண் ஏழையாக இருந்தால் இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது பலி செலுத்தினால் போதும். (லேவி. 12:8) ஆட்டுக்குட்டியை பலி செலுத்தினாலும் காட்டுப் புறாக்களை செலுத்தினாலும் புறாக் குஞ்சுகளை செலுத்தினாலும் எல்லாவற்றையும் யெகோவா சமமாக நினைத்தார். ஏழை செலுத்திய பலியையும் உயர்வாக மதித்தார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 “உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோமாக” என்று பவுல் உற்சாகப்படுத்துகிறார். (எபி. 13:15) யெகோவாவுடைய பெயரை நாம் எல்லாருக்கும் சொல்ல வேண்டும். உதாரணமாக, காது கேட்காத சகோதர சகோதரிகள் சைகை மொழியிலேயே யெகோவாவைப் பற்றிச் சொல்கிறார்கள். வியாதிப்பட்டதால் அல்லது வயதானதால் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாதவர்கள் கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் சாட்சி கொடுக்கிறார்கள்; அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களிடமும் பார்க்க வருபவர்களிடமும் யெகோவாவைப் பற்றிச் சொல்கிறார்கள். நம் உடல்நிலையையும் சூழ்நிலையையும் பொறுத்து நம்மால் முடிந்தளவுக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம். யெகோவா நம்மால் முடியாததை எதிர்பார்ப்பதில்லை. நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது யெகோவா ஏற்றுக்கொள்கிறார்.—ரோ. 12:1; 2 தீ. 2:15.
13. நாம் ஏன் ஊழிய அறிக்கையை கொடுக்க வேண்டும்?
13 நாம் கடவுளை நேசிப்பதால், நாமாகவே ஆசைப்பட்டு ஊழியம் செய்கிறோம். (மத். 22:37, 38) ஆனால், நாம் ஏன் ஊழிய அறிக்கையைக் கொடுக்க வேண்டும்? அப்படிச் செய்வதன் மூலம் அமைப்புக்குக் கீழ்ப்படிந்து தேவபக்தியைக் காட்டுகிறோம். (2 பே. 1:7) அதிக மணிநேரம் அறிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக ஊழியம் செய்யக் கூடாது. 15 நிமிடங்களைக்கூட அறிக்கை செய்யலாம் என்ற ஏற்பாட்டை அமைப்பு செய்திருக்கிறது. வியாதிப்பட்டதால் அல்லது வயதானதால் அதிகம் ஊழியம் செய்ய முடியாதவர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும். அந்த 15 நிமிடத்தையும் யெகோவா உயர்வாக நினைக்கிறார். ஏனென்றால், அவர்களால் முடிந்த சிறந்ததை செய்திருக்கிறார்கள் என்று யெகோவாவுக்குத் தெரியும். அவரை எந்த அளவுக்கு அவர்கள் நேசிக்கிறார்கள் என்றும் யெகோவாவின் சாட்சியாக இருப்பதை மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறார்கள் என்றும் யெகோவாவுக்குத் தெரியும். இஸ்ரவேலில் இருந்த ஏழைகளின் பலியைப் போலவே இவர்களுடைய மணிநேரங்களையும் யெகோவா ஏற்றுக்கொள்கிறார். சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் உலகளாவிய அறிக்கையில் இவர்களுடைய மணிநேரங்களுக்கும் பங்கு இருக்கிறது. எங்கு ஊழியம் செய்ய ஆட்கள் தேவை என்று முடிவு செய்ய ஊழிய அறிக்கைகள்தான் அமைப்புக்கு உதவுகிறது. இந்தக் காரணத்திற்காகத்தான் நாம் அறிக்கை செய்கிறோம்.
புதையல்களைத் தேடுங்கள்
14. நாம் ஏன் பைபிளை ஆராய்ந்து படிக்க வேண்டும்?
14 இதுவரை லேவியராகம புத்தகத்திலிருக்கும் சில புதையல்களைத் தோண்டி எடுத்தோம். இந்தப் புத்தகம் “கடவுளுடைய சக்தியினால்” எழுதப்பட்டது என்பதை நம்மால் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. (2 தீ. 3:16) நாம் பரிசுத்தமாக இருக்க உதவுகிறது. நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுக்கும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். அப்படி எதிர்பார்க்க அவருக்கு உரிமை இருக்கிறது. லேவியராகம புத்தகத்திலிருக்கும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, பைபிளில் வேறென்ன புதையல்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? (நீதிமொழிகள் 2:1-5-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், ஜெபம் செய்துவிட்டு, பைபிளை ஆராய்ந்து படிக்கத் திட்டமிடுங்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்கிறேனா? அல்லது டிவி நிகழ்ச்சிகள், வீடியோகேம்ஸ், போட்டி விளையாட்டுகள், மற்ற பொழுதுபோக்கு விஷயங்கள் போன்றவற்றில் என் நேரத்தை வீணாக்குகிறேனா? யெகோவாவுடைய சேவையில் என் முன்னேற்றத்தை தடைசெய்ய அவற்றை அனுமதிக்கிறேனா?’ இதைப் பற்றி, பவுல் எபிரெய புத்தகத்தில் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்.
15, 16. பவுல் ஏன் எபிரெயர்களுக்கு நேரடியான அறிவுரைகளைக் கொடுத்தார்?
15 பவுல் எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவான அறிவுரைகளைக் கொடுத்தார். (எபிரெயர் 5:7, 11-14-ஐ வாசியுங்கள்.) ‘செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் மந்தமாக இருக்கிறீர்கள்’ என்று அவர்களிடம் நேரடியாகவே சொன்னார். பவுல் ஏன் அப்படிச் சொன்னார்? யெகோவாவைப் போலவே பவுலும் அவர்கள்மேல் அன்பும் அக்கறையும் வைத்திருந்தார். அவர்கள் பைபிளிலிருக்கும் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டால் போதும் என்று நினைத்ததைப் பார்த்து கவலைப்பட்டார். அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது முக்கியம்தான். ஆனால், ‘திட உணவை’ போன்ற ஆழமான பைபிள் விஷயங்களைக் கற்றுக்கொண்டால்தான் யெகோவாவுடைய சேவையில் முன்னேற முடியும்.
16 எபிரெய கிறிஸ்தவர்கள் ‘போதகர்களாக இருந்திருக்க வேண்டும்.’ ஆனால், அவர்களுக்கே ஒருவர் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் ‘திட உணவை’ சாப்பிடவில்லை; அதாவது, ஆழமான பைபிள் விஷயங்களைக் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஆழமான பைபிள் விஷயங்களைக் கற்றுக்கொள்வது முக்கியம் என்பதைப் புரிந்திருக்கிறேனா? அதை ஆவலோடு கற்றுக்கொள்கிறேனா? அல்லது ஆழமான விஷயங்களை ஆராய்ச்சி செய்யத் தயங்குகிறேனா? ஆழமான விஷயங்களைப் புரிந்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ நாம் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு பைபிளைப் பற்றி கற்றுக்கொடுத்து, சீடராக்க வேண்டும். அதற்கு, ஆழமான பைபிள் விஷயங்களை நாம் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.—மத். 28:19, 20.
17, 18. (அ) நாம் ஏன் ஆழமான பைபிள் விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்? (ஆ) கூட்டங்களுக்குப் போவதற்கு முன்பு குடிப்பதைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்?
17 நாம் கடமைக்காக பைபிள் படிக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவதில்லை. ஞானஸ்நானம் எடுத்து பல வருஷங்கள் ஆகியிருந்தாலும் சரி சமீபத்தில் எடுத்திருந்தாலும் சரி, எல்லாருமே பைபிளில் இருக்கும் ஆழமான விஷயங்களை புரிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான், தொடர்ந்து பரிசுத்தமாக இருக்க முடியும்.
18 பரிசுத்தமாக இருப்பதற்கு நாம் பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்க வேண்டும். அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் வேண்டும். ஆரோனுடைய மகன்களின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். நாதாபும் அபியூவும் யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்தார்கள். அவர்கள் ஒருவேளை குடி போதையில் ஆலயத்திற்குள் போயிருக்கலாம். (லேவி. 10:1, 2) இந்தச் சம்பவம் நடந்த பிறகு ஆரோனுக்கு கடவுள் ஒரு கட்டளை கொடுத்தார். இது லேவியராகமம் 10:8-11-ல் (வாசியுங்கள்.) இருக்கிறது. அப்படியென்றால், சபைக் கூட்டங்களுக்கு போவதற்கு முன்பு நாம் குடிக்கலாமா? இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: இன்று நாம் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. (ரோ. 10:4) இயேசு பஸ்கா பண்டிகையின்போது திராட்சை மதுவை பயன்படுத்தினார். பிறகு, கடைசி இரவு விருந்தின்போது அவர் தம்முடைய இரத்தத்தை அடையாளப்படுத்தும் திராட்சை மதுவைக் குடிக்கும்படி சீடர்களிடம் சொன்னார். (மத். 26:27) அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும் குடிவெறியையும்தான் பைபிள் தவறு என்று சொல்கிறது. (1 கொ. 6:10; 1 தீ. 3:8) சில நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள் உணவு சாப்பிடும்போது அளவாக குடிக்கிறார்கள்; பிறகு கூட்டங்களுக்குப் போகிறார்கள். ஆனால் நிறைய பேர், கூட்டங்களுக்கோ ஊழியத்திற்கோ போவதற்கு முன்பு குடிப்பதை சுத்தமாகத் தவிர்க்கிறார்கள். நாட்டுக்கு நாடு பழக்க வழக்கங்களும் சூழ்நிலைகளும் மாறுவதால் நம் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்க வேண்டும். “பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும்” உள்ள வித்தியாசத்தைப் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருப்போம்; யெகோவாவையும் சந்தோஷப்படுத்துவோம்.
19. (அ) குடும்ப வழிபாட்டிலும் தனிப்பட்ட படிப்பிலும் என்ன செய்ய வேண்டும்? (ஆ) என்ன செய்ய தீர்மானமாக இருக்கிறீர்கள்?
19 பைபிளை நாம் ஆராய்ச்சி செய்து படித்தால் அதில் இருக்கும் நிறைய புதையல்களை கண்டுபிடிக்க முடியும். அதனால், குடும்ப வழிபாட்டிலும் தனிப்பட்ட படிப்பிலும் ஆராய்ச்சி செய்து படியுங்கள். யெகோவாவை பற்றியும் அவர் செய்யப்போகும் காரியங்களைப் பற்றியும் அதிகமாகக் கற்றுக்கொள்ளுங்கள். யெகோவாவுடைய நெருங்கிய நண்பராக முயற்சி செய்யுங்கள். (யாக். 4:8) “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” என்று யெகோவாவிடம் கேளுங்கள். (சங். 119:18) பைபிளிலிருக்கும் சட்டங்களையும் அதன் ஆழமான விஷயங்களையும் கடைப்பிடிக்க தீர்மானமாக இருங்கள். “பரிசுத்தராக” இருக்கும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். ‘நற்செய்தியை அறிவிக்கும் பரிசுத்த வேலையை’ தொடர்ந்து செய்யுங்கள். (1 பே. 1:15; ரோ. 15:16) இந்தக் கடைசி நாட்களில் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் பரிசுத்தமான கடவுளாகிய யெகோவாவை ராஜாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
^ பாரா. 6 காவற்கோபுரம் மே 15, 2002-ல், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையை பாருங்கள்.