யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிற பெண்கள்
“நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி.” —சங். 68:11, NW.
1, 2. (அ) கடவுள் ஆதாமுக்கு என்னவெல்லாம் கொடுத்தார்? (ஆ) கடவுள் ஏன் பெண்ணைப் படைத்தார்? (படத்தைப் பாருங்கள்.)
மனிதர்கள் ‘குடியிருப்பதற்காக’ யெகோவா இந்தப் பூமியைப் படைத்தார். (ஏசா. 45:18) முதல் மனிதன் ஆதாமை அவர் எந்தக் குறையும் இல்லாமல் படைத்தார். கடவுள் அவனை ஏதேன் என்ற அழகிய தோட்டத்தில் வாழ வைத்தார். அந்தத் தோட்டத்தைச் சுற்றி ஆறுகள் ஓடின, விதவிதமான மரங்களும் மிருகங்களும் இருந்தன. ஆனால், ஆதாம் தனியாக இருந்ததை யெகோவா பார்த்தார். “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்று கடவுள் சொன்னார். அவர் ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வர வைத்தார். அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்தார். அந்த “விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி” ஆதாமிடம் அழைத்து வந்தார். ஆதாம் எழுந்து பார்த்தபோது சந்தோஷத்தில் கவிதை பாடினான்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்.”—ஆதி. 2:18-23.
2 கடவுள் ஆணுக்கு ஏற்ற துணையாகப் பெண்ணைப் படைத்தார். குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அருமையான பாக்கியம் அவளுக்கு இருந்தது. ‘ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாய்.’ (ஆதி. 3:20, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆதாம்-ஏவாள் உடலிலும் மனதிலும் குறை இல்லாதவர்களாய் இருந்ததால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அவர்களைப் போலவே குறையில்லாமல் இருந்திருப்பார்கள். பூமி முழுவதிலும் குறையில்லாத மனிதர்கள் வாழ்ந்திருப்பார்கள்; பூமியை ஏதேன் தோட்டத்தைப்போல் மாற்றியிருப்பார்கள். மிருகங்களும் பறவைகளும் எல்லா உயிரினங்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்.—ஆதி. 1:27, 28.
3. (அ) ஆசீர்வாதங்களை அனுபவிக்க ஆதாம்-ஏவாள் என்ன செய்ய வேண்டியிருந்தது, ஆனால் என்ன செய்தார்கள்? (ஆ) எந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
3 யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்திருந்தால் இந்த எல்லா ஆசீர்வாதங்களையும் அவர்கள் அனுபவித்திருப்பார்கள்; அவர் கொடுத்த பொறுப்புகளையும் நிறைவேற்றியிருப்பார்கள். (ஆதி. 2:15-17) ஆனால், ஆதாம்-ஏவாள் சாத்தானுடைய பேச்சைக் கேட்டு, யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். (வெளி. 12:9; ஆதி. 3:1-6) இவர்கள் கீழ்ப்படியாமல் போனது, பெண்களை எப்படிப் பாதித்திருக்கிறது? பைபிள் காலங்களில் தேவபக்தியுள்ள பெண்கள் எப்படி யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார்கள்? நம்முடைய காலத்தில் “நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி” என்று ஏன் சொல்கிறோம்?—சங். 68:11, NW.
கீழ்ப்படியாமல் போனதன் விளைவுகள்
4. ஆதாம்-ஏவாள் செய்த தவறுக்கு யார் முக்கிய காரணம்?
4 ‘ஏன் அந்தப் பழத்தைச் சாப்பிட்டாய்?’ என்று யெகோவா ஆதாமைக் கேட்டபோது, “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.” (ஆதி. 3:12) ஆதாம் தன் தவறை ஒத்துக்கொள்ளவில்லை, பழியை ஏவாள்மீது போட்டான். இதன்மூலம் தனக்காக ஏவாளைத் தந்த கடவுள்மீதே பழி போட்டான். ஆதாம்-ஏவாள் இருவரும்தான் தவறு செய்தார்கள். இருந்தாலும், அந்தத் தவறுக்கு ஆதாம்தான் முக்கிய காரணம். அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “ஒரே மனிதனால் [ஆதாமால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.”—ரோ. 5:12.
5. மனிதனுடைய ஆட்சியிலிருந்து என்ன தெரிகிறது?
5 யெகோவாவுடைய ஆட்சி தேவையில்லை என்று ஆதாம்-ஏவாளை சாத்தான் நினைக்க வைத்தான். அதனால், “ஆட்சி செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது?” என்ற கேள்வி வந்தது. மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்துகொள்ள கடவுள் அனுமதித்தார். அவர்களுடைய ஆட்சி கண்டிப்பாகத் தோல்வியடையும் என்று யெகோவாவுக்குத் தெரியும். இத்தனை வருடங்களாக மனித ஆட்சியினால் கஷ்டங்கள்தான் வந்திருக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் 10 கோடி பேர் போரில் இறந்திருக்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத குழந்தைகள், பெண்கள், ஆண்கள் பலியாகியிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? “ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ, அல்லது தங்கள் எதிர்காலத்தை திட்டமிடவோ முடியாது” என்பது தெளிவாகத் தெரிகிறது. (எரே. 10:23, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது.—நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.
6. நிறைய நாடுகளில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
6 இன்று சாத்தானுடைய உலகத்தில் நிறைய அநியாயங்கள் நடக்கின்றன. இதனால் ஆண்களும் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். (பிர. 8:9; 1 யோ. 5:19) முக்கியமாக, பெண்களுக்குப் பல கொடுமைகள் நடக்கின்றன. உலகெங்கும் 30 சதவீத பெண்கள், தங்களைக் கணவர்கள் அடித்ததாகப் புகார் செய்திருக்கிறார்கள். ஆண்கள்தான் குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள் என்பதால் சில இடங்களில் ஆண்களை உயர்த்திப் பேசுகிறார்கள். சிலர் பெண் குழந்தை என்றாலே வெறுக்கிறார்கள், கருவிலேயே கொன்றுவிடுகிறார்கள்.
7. கடவுள் ஆணையும் பெண்ணையும் எப்படிப் படைத்தார்?
7 பெண்களைக் கொடுமைப்படுத்துவது யெகோவாவுக்குக் கொஞ்சங்கூட பிடிக்காது. ஆண்களையும் பெண்களையும் யெகோவா ஒரே விதமாகத்தான் பார்க்கிறார்; பெண்களுக்கு அவர் மதிப்பு கொடுக்கிறார். இது நமக்கு எப்படித் தெரியும்? யெகோவா, எல்லாவற்றையும் படைத்த பிறகு, ஆறாம் நாளில், “தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” யெகோவா படைத்த ‘எல்லாமே’ “மிகவும் நன்றாயிருந்தது.” ஆதாமை மட்டுமல்ல ஏவாளையும் எந்தக் குறையும் இல்லாமல் யெகோவா படைத்தார். (ஆதி. 1:31) ஏவாளை அடிமையாகப் படைக்கவில்லை; ஆதாமுக்கு ஏற்ற துணையாகப் படைத்தார். ஆதாம்-ஏவாள் தங்களுடைய வாழ்க்கையைச் சந்தோஷமாக ஆரம்பித்தார்கள்.
யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த பெண்கள்
8. (அ) இன்று எப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்? (ஆ) எப்படிப்பட்டவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்?
8 ஆதாம்-ஏவாளுக்குப் பிறகு பூமியில் வாழ்ந்த நிறைய பேர் அவர்களைப் போலவே யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். போகப்போக நிலைமை மோசமானது. நம்முடைய காலத்தில், ரொம்பவே மோசமாகிவிட்டது. “கடைசி நாட்களில்” கெட்ட ஆட்கள் இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1-5) ஆனால், நிறைய ஆண்களும் பெண்களும் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள்; அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்கிறார்கள்.—சங்கீதம் 71:5-ஐ வாசியுங்கள். *
9. பெருவெள்ளத்தில் எத்தனை பேர் தப்பித்தார்கள், யெகோவா ஏன் அவர்களைக் காப்பாற்றினார்?
9 நோவா காலத்தில் கெட்ட ஜனங்களை பெருவெள்ளத்தில் யெகோவா அழித்தார். நோவாவின் சகோதரர்களும் சகோதரிகளும் அந்தச் சமயத்தில் உயிரோடு இருந்திருந்தால் அவர்களும் அழிந்து போயிருப்பார்கள். (ஆதி. 5:30) பெருவெள்ளத்தில் எட்டு பேர் மட்டும்தான் காப்பாற்றப்பட்டார்கள். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் யெகோவா காப்பாற்றினார். தப்பித்தவர்களில் 4 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள்: நோவா, அவருடைய மனைவி; நோவாவின் 3 மகன்கள், அவர்களுடைய மனைவிகள். அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்ததால்தான் காப்பாற்றப்பட்டார்கள். இன்று உலகில் வாழும் எல்லோரும் அந்த 8 பேரின் வம்சத்தில் வந்தவர்கள்தான்.—ஆதி. 7:7; 1 பே. 3:20.
10. சாராளையும் ரெபெக்காளையும் யெகோவா ஏன் ஆசீர்வதித்தார்?
10 நோவா காலத்திற்குப் பிறகும் சில பெண்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள். உதாரணமாக சாராள், ரெபெக்காளைப் பற்றி பார்க்கலாம். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் வந்த கஷ்டநஷ்டங்களைப் பற்றி அவர்கள் குறை சொல்லவில்லை. (யூ. 16) ஆபிரகாமை யெகோவா ஊர் என்ற தேசத்தைவிட்டு போகச் சொன்னார். அப்போது சாராள் எந்தக் குறையும் சொல்லாமல் அவரோடு போனார். எல்லா வசதிகளும் இருந்த ஊர் தேசத்தைவிட்டு நாடோடிகளாகக் கூடாரத்தில் வாழ வேண்டிய நிலைமை வந்தது. ஆனால், சாராள் ஒரு வார்த்தைகூட குறை சொன்னதாக பைபிளில் எந்தப் பதிவுமில்லை. “சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, [ஆபிரகாமுக்கு] கீழ்ப்படிந்திருந்தாள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 3:6) ரெபெக்காளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்; ஈசாக்கிற்கு அருமையான மனைவியாக இருந்தார். “ஈசாக்கு ரெபெக்காளைப் பெரிதும் நேசித்தான். அவன் தாயின் மரணத்தினால் அடைந்த துக்கம் குறைந்து அமைதியும் ஆறுதலும் பெற்றான்.” (ஆதி. 24:67, ஈஸி டு ரீட் வர்ஷன்) சாராளையும் ரெபெக்காளையும் போன்ற தேவபக்தியுள்ள பெண்கள் இன்றும் இருக்கிறார்கள்.
11. சிப்பிராளும் பூவாளும் எப்படித் தைரியமாக நடந்துகொண்டார்கள்?
11 இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது அவர்களுடைய ஜனத்தொகை அதிகரித்துக்கொண்டே போனது. அதனால், பிறந்தவுடனேயே ஆண் குழந்தைகளைக் கொன்றுவிட பார்வோன் திட்டம் போட்டான். ஆண்பிள்ளைகளைக் கொல்லும்படி சிப்பிராள், பூவாள் என்ற இஸ்ரவேல் பெண்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் யெகோவாவுக்குப் பயந்ததினால், அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அதனால், யெகோவா அவர்களின் குடும்பங்களை ஆசீர்வதித்தார்.—யாத். 1:15-21.
12. தெபோராளும் யாகேலும் என்ன செய்தார்கள்?
12 பாராக் நியாயாதிபதியாக இருந்த சமயத்தில் கானானிய படைத் தளபதி சிசெரா, இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான். பாராக்கிற்கு உதவி செய்ய தெபோராள் என்ற பெண்-தீர்க்கதரிசியை யெகோவா பயன்படுத்தினார். இஸ்ரவேலர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெபோராள் பாராக்கிடம் சொன்னார், அவரோடு போர்க்களத்திற்கும் சென்றார். கானானியர்களைத் தோற்கடித்தாலும், அந்தப் பெருமை பாராக்கிற்குக் கிடைக்காது என்று தெபோராள் சொல்லியிருந்தார். ஏனென்றால், கானானிய படைத் தளபதி “சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் [யெகோவா] ஒப்புக்கொடுப்பார்” என்று சொல்லியிருந்தார். தெபோராள் சொன்னபடியே நடந்தது. யாகேல் என்ற புறதேசத்து பெண், சிசெராவைக் கொன்றார்.—நியா. 4:4-9, 17-22.
13. அபிகாயிலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
13 கி.மு. 11-ஆம் நூற்றாண்டில் அபிகாயில் என்ற பெண் வாழ்ந்தார். அவருடைய கணவனின் பெயர் நாபால். அவன் ஒரு முரடன், ஒன்றுக்கும் உதவாதவன். ஆனால், அபிகாயில் ஒரு புத்திசாலியான பெண். (1 சா. 25:2, 3, 25) தாவீதும் அவருடைய ஆட்களும் கொஞ்ச நாட்கள் நாபாலின் மந்தைக்கு பாதுகாப்பாக இருந்தார்கள். ஒருமுறை நாபாலிடம் அவர்கள் உணவு பொருள்களைக் கேட்டபோது அவன் அவர்களைக் கேவலப்படுத்தி, திட்டி அனுப்பிவிட்டான். தாவீதுக்குக் கோபம் வந்தது. நாபாலையும் அவனுடைய ஆட்களையும் கொன்றுபோட புறப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட அபிகாயில், உணவு பொருள்களை எடுத்துக்கொண்டு தாவீதிடம் போனார். தாவீதைச் சாந்தப்படுத்தி, கொலை செய்வதைத் தடுத்தார். (1 சா. 25:8-18) “உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய [யெகோவாவுக்கு] ஸ்தோத்திரம்” என்று தாவீது அவரிடம் சொன்னார். (1 சா. 25:32) நாபால் இறந்த பிறகு, அபிகாயிலை தாவீது கல்யாணம் செய்துகொண்டார்.—1 சா. 25:37-42.
14. சல்லூமின் மகள்கள் என்ன செய்தார்கள், இன்றுள்ள சகோதரிகள் என்ன செய்கிறார்கள்?
14 கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டது. அப்போது நிறைய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இறந்துபோனார்கள். கி.மு. 455-ல் நெகேமியாவின் தலைமையில் எருசலேமின் சுவர்கள் திரும்பக் கட்டப்பட்டன. அந்தச் சுவரைப் பழுதுபார்க்கும் வேலையில் சல்லூம் என்ற பிரபுவின் மகள்களும் உதவினார்கள். (நெ. 3:12) பிரபுவின் மகள்களாக இருந்தபோதிலும் சின்ன சின்ன வேலைகளைச் செய்ய அவர்கள் தயங்கவில்லை. இன்றும் நிறைய சகோதரிகள் கட்டுமான வேலையில் உதவுகிறார்கள். அவர்கள் எல்லோரையும் நாம் பாராட்ட வேண்டும்.
முதல் நூற்றாண்டில் முன்மாதிரியான பெண்கள்
15. மரியாளுக்குக் கடவுள் என்ன பாக்கியத்தைக் கொடுத்தார்?
15 முதல் நூற்றாண்டிலும் நிறைய பெண்களை யெகோவா ஆசீர்வதித்தார். அவர்களில் ஒருவர்தான் மரியாள். யோசேப்போடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த சமயத்தில், “கடவுளுடைய சக்தியின் மூலம்” அவர் கர்ப்பமானார். இயேசுவின் தாயாக இருப்பதற்கு, கடவுள் ஏன் மரியாளைத் தேர்ந்தெடுத்தார்? ஏனென்றால், தம்முடைய மகனை வளர்க்கத் தேவையான நல்ல குணங்கள் மரியாளிடம் இருந்தன. பூமியில் வாழ்ந்தவர்களிலேயே மிகச்சிறந்த மனிதனுக்குத் தாயாக இருப்பது அவருக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—மத். 1:18-25.
16. பெண்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்?
16 யெகோவாவைப் போலவே இயேசுவும் பெண்களிடம் கனிவாக நடந்துகொண்டார். உதாரணத்திற்கு, 12 வருடங்கள் இரத்தப்போக்கினால் அவதிப்பட்ட ஒரு பெண், கூட்டத்தில் இருந்த இயேசுவின் ஆடையை தொட்டார். அந்தப் பெண்ணிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்? சட்டத்தை மீறிய அந்தப் பெண்ணை இயேசு திட்டவில்லை. “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ. உன்னைப் பாடுபடுத்திய நோயிலிருந்து விடுபட்டு நலமாயிரு” என்றார்.—மாற். 5:25-34.
17. கி.பி. 33 பெந்தெகோஸ்தே நாளன்று என்ன நடந்தது?
17 இயேசுவின் சீடர்களில் சில பெண்கள்கூட இருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் சேவை செய்தார்கள். (லூக். 8:1-3) “[யெகோவாவாகிய] நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை [அதாவது, சக்தியை] ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; . . . ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை [அதாவது, சக்தியை] ஊற்றுவேன்” என்று யெகோவா முன்பே சொல்லியிருந்தார். (யோவே. 2:28, 29) கி.பி. 33 பெந்தெகோஸ்தே நாளன்று 120 பேர் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள். அதில் பெண்களும் இருந்தார்கள். (அப்போஸ்தலர்கள் 2:1-4-ஐ வாசியுங்கள்.) கீழ்ப்படியாமல் போன இஸ்ரவேல் தேசத்தை ஒதுக்கிவிட்டு, ஒரு புதிய தேசத்தை யெகோவா தேர்ந்தெடுத்தார். இவர்கள்தான் பரலோக நம்பிக்கையுள்ள ஆண்களும் பெண்களும் அடங்கிய “கடவுளுடைய இஸ்ரவேலர்.” (கலா. 3:28; 6:15, 16) இப்படி ஆர்வமாக ஊழியம் செய்த பெண்களில், நற்செய்தியாளரான பிலிப்புவுடைய நான்கு மகள்களும் நமக்கு நல்ல முன்மாதிரிகள்.—அப். 21:8, 9.
“பெண்களின் கூட்டம் மிகுதி”
18, 19. (அ) ஆண்கள்-பெண்கள் இருவருக்கும் என்ன பாக்கியம் கிடைத்திருக்கிறது? (ஆ) பெண்களைப் பற்றி சங்கீதம் என்ன சொல்கிறது?
18 சில ஆண்களும் பெண்களும், 1875-லிருந்து பைபிள் சத்தியத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குப் பிரசங்கித்தார்கள். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று இயேசு சொன்னார். (மத். 24:14) இன்று நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு இவர்கள் சிறந்த முன்மாதிரிகள்.
19 ஆரம்ப காலத்தில் பைபிள் மாணாக்கர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். இப்போது, கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் இருக்கிறார்கள். 2013-ஆம் ஆண்டு நடந்த நினைவு நாள் அனுசரிப்பில் 1 கோடியே 10 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். அதில் பெண்களின் கூட்டம்தான் அதிகம். நற்செய்தியை அறிவிக்கும் மிகப்பெரிய பாக்கியத்தை யெகோவா பெண்களுக்கும் கொடுத்திருக்கிறார். உலகெங்கும் இருக்கும் 10 லட்சம் முழுநேர ஊழியர்களில் பெண்கள்தான் அதிகம். அதனால்தான், “நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி” என்று பைபிள் சொல்கிறது.—சங். 68:11, NW.
பெண்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
20. குடும்ப வழிபாட்டிலோ தனிப்பட்ட படிப்பிலோ என்ன செய்யலாம்?
20 பைபிள் காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள பெண்கள் எல்லோரையும் பற்றிச் சொல்வதற்கு இந்த ஒரு கட்டுரை போதாது. அவர்களைப் பற்றி பைபிளிலும் நம் பத்திரிகைகளிலும் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். நகோமியை விட்டுப் பிரியாமல் இருந்த ரூத்தைப் பற்றிப் படிக்கலாம். (ரூத் 1:16, 17) தைரியமாக நடந்துகொண்ட எஸ்தரைப் பற்றிப் படிக்கலாம். கடவுளுக்குக் கீழ்ப்படிந்த பெண்களைப் பற்றி குடும்ப வழிபாட்டில் அல்லது தனிப்பட்ட படிப்பில் சிந்திக்கலாம்.
21. சோதனைகள் வந்தபோதிலும் சில பெண்கள் எப்படி உண்மையோடு இருந்திருக்கிறார்கள்?
21 பெண்கள் செய்யும் ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார். அவர்களுக்குச் சோதனைகள் வரும்போது உதவுகிறார். நாசி சித்தரவதை முகாம்களில் கஷ்டப்பட்ட நிறைய பெண்களுக்கு யெகோவா உதவியிருக்கிறார். அதனால், அவர்களில் நிறைய பேர் மரணம்வரை உண்மையுள்ளவர்களாய் இருந்திருக்கிறார்கள்; தங்கள் உயிரைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். (அப். 5:29) அன்று போலவே இன்றும் நிறைய சகோதர சகோதரிகள் கடவுளுடைய ஆட்சியை ஆதரிக்கிறார்கள். அவர்களுடைய வலது கையைப் பிடித்து யெகோவா சொல்கிறார்: “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்.”—ஏசா. 41:10-13.
22. எதிர்காலத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம்?
22 அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கும் ஆண்களும் பெண்களும் உயிர்த்தெழுந்து வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுப்பார்கள். அதுவரைக்கும் நாம் அனைவரும் “தோளோடு தோள் சேர்ந்து” யெகோவாவைச் சேவிப்போமாக!—பிலி. 1:27.
^ பாரா. 8 சங்கீதம் 71:5 [NW]: “உன்னத பேரரசராகிய யெகோவா தேவனே! உங்களைத்தான் நான் நம்பியிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.”