வாழ்க்கை சரிதை
யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் நான் பெற்ற ஆசீர்வாதங்கள்
“நோவாகிட்ட இருந்து நல்ல பாடம் கத்துக்கிட்டோம்ல! நோவா யெகோவாவுக்கு கீழ்ப்படிஞ்சார், குடும்பத்தையும் நேசிச்சார். குடும்பமா பேழைக்குள்ள போனதுனால காப்பாற்றப்பட்டாங்க” என்று என் அப்பா விளக்கினார்.
சிறு வயதில் அப்பா சொல்லிக்கொடுத்த இந்த விஷயம் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. அப்பா ரொம்ப பணிவானவர், கடின உழைப்பாளி, எப்போதும் நியாயத்தை விரும்புபவர். அதனால்தான், 1953-ல் பைபிள் சத்தியம் காதுக்கு எட்டியதும் உடனே ஏற்றுக்கொண்டார். அன்று முதல் அவர் கற்றுக்கொண்டதையெல்லாம் எங்கள் மனதில் பதிய வைக்க முயற்சி எடுத்தார். ஆரம்பத்தில், கத்தோலிக்க பாரம்பரியத்தை விட்டுவிட்டு வர வேண்டுமா என்று அம்மா யோசித்தார். ஆனால், போகப்போக அம்மாவும் பைபிள் படிக்க ஆரம்பித்தார்.
எங்களுக்கு பைபிள் படிப்பு நடத்த அப்பா-அம்மாவுக்குக் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், அம்மாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது. அப்பாவோ நாள்முழுக்க வயலில் பாடுபட்டு வேலைசெய்து களைத்துப்போய் வீடு திரும்புவார். சிலநேரங்களில் ரொம்பக் களைப்பாக இருப்பார். பைபிள் படிப்பு நடத்தும்போதே தூங்கி விழுவார். ஆனாலும் அவர் எடுத்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது. நான்தான் மூத்தவள். அதனால், என் தங்கைக்கும், இரண்டு தம்பிகளுக்கும் சொல்லிக்கொடுக்க அப்பா-அம்மாவுக்கு உதவுவேன். ‘நோவா தன் குடும்பத்தை நேசித்தது, கடவுளுக்குக் கீழ்ப்படிந்தது’ பற்றி அப்பா அடிக்கடிச் சொல்லும் கதையையும் சொல்லிக் கொடுப்பேன். எனக்கு அந்தக் கதை ரொம்பப் பிடிக்கும். சீக்கிரத்திலேயே நாங்கள் எல்லோரும் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தோம். இத்தாலியில், ஏட்ரியாடிக் கடலோரத்தில் அமைந்திருந்த ரோஸேடோ டெல்யி அப்ரூட்ஸி என்ற நகரில் இருந்த ராஜ்ய மன்றத்திற்குத்தான் போவோம்.
நானும் அம்மாவும் முதன்முதலில் 1955-ல் ரோமில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டோம். அதற்காக, மேற்கேயுள்ள மலைகளைக் கடந்து சென்றோம். அப்போது எனக்கு 11 வயது. மாநாடுகளைத் தவற விடவே கூடாது என்பதை அப்போது உணர்ந்தேன்.
அடுத்த வருடமே ஞானஸ்நானம் எடுத்தேன். பிறகு சீக்கிரத்திலேயே, முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். 17 வயதில் ரோமுக்குத் தெற்கே லாட்டீனா நகரில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். வீட்டிலிருந்து அது சுமார் 300 கி.மீ. தொலைவில் இருந்தது. அது புதிதாக உருவான நகரம். எனவே, நாங்கள் சொல்வதைக் கேட்டால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அங்குள்ளவர்கள் கவலைப்படவில்லை. அதனால், நானும் என் பயனியர் பார்ட்னரும் நிறைய பிரசுரங்களைக் கொடுத்தோம். நான் சின்ன பெண்ணாக இருந்ததால் அடிக்கடி வீட்டு ஞாபகம் வரும். இருந்தாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவர் கொடுத்த வேலையைச் செய்வதுதான் முக்கியம் என்று நினைத்தேன்.
பிறகு, 1963-ல் “நித்திய நற்செய்தி” என்ற சர்வதேச மாநாட்டு வேலைகளில் உதவுவதற்காக மிலான் நகருக்கு அனுப்பப்பட்டேன்.
மாநாட்டின்போது நிறைய பேருடன் சேர்ந்து வாலண்டியர் சேவை செய்தேன். அந்த வாலண்டியர்களில் ஒருவர்தான் ஃபிளாரன்ஸிலிருந்து வந்திருந்த பாவோலோ பிக்கோலி. மாநாட்டின் இரண்டாவது நாள் மணமாகாதவர்கள் யெகோவாவின் சேவையில் அதிகம் செய்ய முடியும் என்பது பற்றி அந்தச் சகோதரர் ஓர் அருமையான பேச்சு கொடுத்தார். ‘அந்தச் சகோதரர் கல்யாணமே செஞ்சுக்க மாட்டார்போல!’ என்று அப்போது நினைத்தேன். நாங்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுத ஆரம்பித்தோம். எங்களுடைய இலக்குகள், யெகோவாமேல் எங்களுக்கு இருந்த அன்பு, அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற ஆசை போன்ற நிறைய விஷயங்களில் நாங்கள் ஒத்துப்போனோம். 1965-ல் அவரையே கரம் பிடித்தேன்.பாதிரியார்களோடு போராட்டம்
ஃபிளாரன்ஸில் 10 வருடங்கள் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்தேன். சபையில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். அதிலும் இளைஞர்கள் சத்தியத்தில் முன்னேறியதைப் பார்த்து பூரித்துப்போனேன். நானும் என் கணவரும் அந்த இளைஞர்களோடு சேர்ந்து ஆன்மீக விஷயங்களைப் பேசுவோம், சில நேரங்களில் விளையாடுவோம். என் கணவர் அவர்களோடு கால்பந்து விளையாடுவார். என்னோடு அவர் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன், இருந்தாலும் அந்த இளைஞர்களோடும் சபையிலிருந்த குடும்பங்களோடும் அவர் நேரம் செலவிடுவது முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
நிறைய பைபிள் படிப்புகளை நடத்தினோம். இப்போது நினைத்தாலும் மனதில் சந்தோஷம் பூக்கிறது. அப்படி பைபிள் படித்த ஒருவர்தான் ஆட்ரியானா. கற்றுக்கொண்ட விஷங்களைப் பற்றி இரண்டு குடும்பத்தினரிடம் அவர் சொல்லியிருந்தார். திரித்துவம், அழியாத ஆத்துமா போன்ற பொய்க் கோட்பாடுகளைப் பற்றி பாதிரியாரோடு நாங்கள் பேச அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். மூன்று பாதிரிகள் வந்திருந்தார்கள். பைபிள் சொல்வதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்தப் பாதிரிகள் சொன்னது முரண்பாடாக, தெளிவற்றதாக இருந்ததை பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொண்டார்கள். அந்தக் கூட்டம் அவர்களுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியது. அந்தக் குடும்பங்களிலிருந்து கிட்டத்தட்ட 15 பேர் சத்தியத்திற்கு வந்தார்கள்.
பிரசங்கிக்கிற முறை இப்போது மாறிவிட்டது. அந்தக் காலங்களில் பாவோலோ, நிறைய பாதிரிகளிடம் பேசிப் பேசி “திறமைசாலி” ஆனார். ஒருசமயம் சாட்சிகளல்லாத நிறைய பேர் முன்னால் பாவோலோ பேச வேண்டியிருந்தது. அவருடைய வாயை அடைப்பதற்காக சிக்கலான கேள்விகளைக் கேட்கும்படி அங்கிருந்த சிலரிடம் பாதிரிகள் முன்பே சொல்லி வைத்திருந்தார்கள். ஆனால் நடந்ததே வேறு. சர்ச் அங்கத்தினர்கள் அரசியலில் தலையிடுவது சரியா என்று ஒருவர் கேட்க, பாதிரியார்கள் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார்கள். அந்த நேரம் பார்த்து எல்லா லைட்டுகளும் அணைந்துவிட்டன, கூட்டம் கலைந்தது. பாதிரிகள் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் இப்படி லைட்டுகளை அணைத்துவிட வேண்டும் என்று முன்பே திட்டமிட்டிருந்தார்கள் என்பது சில வருடங்களுக்குப் பிறகே தெரிய வந்தது.
சேவையில் புதிய திருப்பம்
திருமணமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு, வட்டார ஊழியத்திற்கு அழைக்கப்பட்டோம். அவருக்கு நல்ல
வேலை இருந்ததால் என்ன செய்வதென யோசித்தோம். நன்கு ஜெபம் செய்துவிட்டு, இந்தச் சேவையில் இறங்கிவிட்டோம். தங்குவதற்கு இடமளித்த குடும்பங்களோடு சந்தோஷமாக நேரம் செலவிட்டோம். மாலை நேரங்களில் அவர்களோடு சேர்ந்து படிப்போம். பிறகு, வீட்டுப்பாடங்கள் செய்ய அந்த வீட்டு பிள்ளைகளுக்கு பாவோலோ உதவுவார், முக்கியமாக கணக்கு சொல்லிக் கொடுப்பார். அவர் ஒரு புத்தகப் புழு. அதனால், தான் படித்த சுவாரஸ்யமான, உற்சாகமூட்டுகிற குறிப்புகளை மற்றவர்களிடம் ஆர்வம்பொங்கச் சொல்வார். திங்கள்கிழமைகளில், சாட்சிகளே இல்லாத ஊர்களுக்குப் போய் பிரசங்கிப்போம், அன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேச்சைக் கேட்க வரும்படி அழைப்போம்.இரண்டு வருடங்களே பயண ஊழியத்தை ருசித்தோம், அதற்குள் ரோம் பெத்தேலில் சேவை செய்ய அழைக்கப்பட்டோம். பாவோலோ சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கவனித்துக்கொண்டார், நான் பத்திரிகை இலாகாவில் நியமிக்கப்பட்டேன். இந்தத் திடீர் மாற்றம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தோம். அந்தச் சமயத்தில், இத்தாலியில் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. கிளை அலுவலகம் படிப்படியாக விரிவடைந்தது, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதையெல்லாம் பார்த்துப் பூரித்துப்போனோம். இந்தச் சேவையில் எங்களுக்கு மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி!
நாங்கள் பெத்தேலில் சேவை செய்த சமயம், இத்தாலியில் ஒரு வழக்கு மிகவும் பிரபலமானது. யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்ற மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியவந்தது. 1980-களின் ஆரம்பத்தில் இந்தப் பிரச்சினை பூதாகரமானது. ஒரு சிறுமி, மத்தியதரைக் கடல் பகுதியில் பரவி வந்த இரத்தம் சம்பந்தமான நோயால் இறந்துவிட்டாள். அவள் இறந்ததற்கு பெற்றோர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கு பெத்தேலில் இருந்த சகோதர சகோதரிகள் உதவினார்கள். இரத்தம் சம்பந்தமாக, ஒரு துண்டுப்பிரதியும் விழித்தெழு! பத்திரிகையின் ஒரு விசேஷ பதிப்பும் வெளியிடப்பட்டது. இரத்தத்தைப் பற்றி கடவுளுடைய வார்த்தை சொல்லும் விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள அவை உதவின. அந்தச் சமயத்தில், பாவோலோ சில நாட்களில் 16 மணி நேரம் வேலை செய்வார். முடிந்தளவு நானும் அவருக்கு உதவி செய்வேன்.
வாழ்வில் திருப்புக்கட்டம்
மணமாகி 20 வருடங்கள் கழித்து வாழ்வில் எதிர்பாரா திருப்பம் ஏற்பட்டது. அப்போது எனக்கு 41 வயது அவருக்கு 49 வயது. நான் அம்மாவாகப் போகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அன்று அவருடைய டைரியில் இப்படி எழுதி வைத்திருந்தார்: “ஜெபம்: இது உண்மையாக இருந்தால், நாங்கள் முழுநேர ஊழியத்தை விட்டுவிடாமல் இருக்க உதவுங்கள், யெகோவாவே. ஆன்மீக விஷயங்களில் மந்தமாகிவிடாமல், அதேசமயம் நல்ல அப்பா-அம்மாவாக, பிள்ளைக்கு முன்மாதிரியாக இருக்க உதவுங்கள். முக்கியமாக, கடந்த 30 வருடங்களுக்கும் மேல் மேடை ஏறி நான் சொன்னவற்றில் ஒரு சதவீதமாவது என் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு உதவுங்கள்.” அவர் செய்த ஜெபத்திற்கும் நான் செய்த ஜெபத்திற்கும் யெகோவா பதிலளித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நீதிமொழிகள் 24:10 சொல்கிறபடி, நாங்கள் சோர்ந்துபோன சில சமயங்களும் உண்டு. “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்று அது சொல்கிறது. ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டோம்.
இலாரியா பிறந்தபின் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது.முழுநேர ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்ட இரண்டு யெகோவாவின் சாட்சிகளுக்குப் பிறந்த பிள்ளை என இலாரியா தன்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்வாள். தன்னைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற உணர்வு அவளுக்கு வந்ததே கிடையாது. அந்தளவுக்கு பார்த்துக்கொண்டோம். பகல் நேரம் முழுவதும் நான் கவனித்துக்கொள்வேன். சாயங்காலம், பாவோலோ வீட்டுக்கு வந்தாலும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும். இருந்தாலும், மகளோடு விளையாடுவார், வீட்டுப்பாடம் செய்ய உதவுவார். அதற்குப் பிறகு இரண்டு, மூன்று மணிவரை கண்விழித்து வேலையை முடிப்பார். “அப்பாதான் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்று இலாரியா அடிக்கடிச் சொல்வாள்.
சில நேரங்களில் இலாரியாவை யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வளர்க்கக் கொஞ்சம் கண்டிப்பும் தேவைப்பட்டது. ஒருமுறை, அவளுடைய ஃப்ரெண்டோடு விளையாடிக்கொண்டிருந்தபோது ஒரு தவறு செய்துவிட்டாள். அது யெகோவாவுக்குப் பிடிக்காது என்பதை பைபிளிலிருந்து விளக்கினோம். எங்கள் முன்னாலேயே அவளிடம் போய் மன்னிப்பு கேட்க வைத்தோம்.
ஊழியத்தில் அப்பா-அம்மாவுக்கு இருக்கிற ஆர்வம் தன்னையும் தொற்றிக்கொண்டதாக சொல்வாள். இப்போது அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதும் அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவள் நன்கு புரிந்திருக்கிறாள்.
சோகம் சூழ்ந்துகொண்டபோதும் கீழ்ப்படிந்தோம்
2008-ல் பாவோலோவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ஆரம்பத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றியது. அப்படிச் சொல்லி என்னையும் தேற்றினார். நல்ல சிகிச்சை கொடுக்கிற டாக்டர்களைத் தேடி அலைந்ததோடு, நானும் இலாரியாவும் நீண்ட நேரம் ஜெபம் செய்தோம். என்ன நடந்தாலும் தைரியமாகச் சகித்திருக்க உதவும்படி கெஞ்சினோம். ஆனாலும், தூண்போல் இருந்த மனிதன் துரும்பாக ஆகிவருவதைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. 2010-ல் அவர் இறந்தபோது என் இதயமே வெடித்துவிட்டது. இருந்தாலும், 45 வருடங்களாக நாங்கள் சாதித்த விஷயங்களை நினைத்து மனதைத் தேற்றிக்கொண்டேன். எங்களால் முடிந்த சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய சேவையை அவர் மறக்க மாட்டார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். யோவான் 5:28, 29 சொல்கிறபடி, பாவோலோவை இயேசு உயிரோடு எழுப்பப்போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
“சிறு வயதில் எனக்குச் சொல்லிக்கொடுத்த நோவாவின் கதை இன்னமும் மனதில் ஒலிக்கிறது. எடுத்த தீர்மானத்தில் இப்போதும் உறுதியாயிருக்கிறேன்”
சிறு வயதில் எனக்குச் சொல்லிக்கொடுத்த நோவாவின் கதை இன்னமும் மனதில் ஒலிக்கிறது. எடுத்தத் தீர்மானத்தில் இப்போதும் உறுதியாயிருக்கிறேன். யெகோவா என்னிடம் எதைக் கேட்டாலும் அதற்குக் கீழ்ப்படிய நான் தயாராக இருக்கிறேன். யெகோவா தரும் ஆசீர்வாதங்களோடு ஒப்பிட, நான் சந்தித்த தடங்கல்கள்... தியாகங்கள்... இழப்புகள்... எல்லாம் ஒன்றுமே இல்லை. இதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். நீங்களும் அதை ருசித்துப் பார்க்கலாம்.