விழிப்புடன் இருப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
விழிப்புடன் இருப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
“விழிப்புடன் இருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.”—மத். 26:41.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்பதை நம் ஜெபங்கள் எப்படிக் காட்டும்?
ஊழியம் செய்வதில் நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்பதை என்னென்ன வழிகளில் காட்டலாம்?
கஷ்டங்கள் வரும்போது நாம் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது ஏன் முக்கியம், எப்படி விழிப்புடன் இருக்கலாம்?
1, 2. (அ) விழிப்புடன் இருப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது சம்பந்தமாக என்னென்ன கேள்விகள் எழலாம்? (ஆ) பாவமுள்ள மனிதர்களுக்கு இயேசுவின் தலைசிறந்த முன்மாதிரி பயனுள்ளதாய் இருக்குமா? உதாரணம் தருக.
‘இயேசுவைப் போல் நம்மால் விழிப்புடன் இருக்க முடியுமா? அவர் பரிபூரணராய் இருந்தார், அதனால் அவரால் முடிந்தது. நம்மால் முடியாது’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அதோடு, ‘இயேசு உண்மையிலேயே விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததா? சிலசமயங்களில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அப்பால் நடக்கப் போவதையும் அவர் அறிந்திருந்தாரே!’ என்றுகூட நினைக்கலாம். (மத். 24:37-39; எபி. 4:15) முதலில் இந்தக் கேள்விகளைப் பற்றி நாம் சிந்திப்போம்; அப்போதுதான், இந்த விஷயம் நம் காலத்திற்கு எந்தளவு பொருத்தமானது... அவசரமானது... என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
2 பாவமுள்ள மனிதர்களுக்கு ஒருவருடைய தலைசிறந்த முன்மாதிரி பயனுள்ளதாய் இருக்குமா? ஆம், பயனுள்ளதாய் இருக்கும்; ஏனென்றால், ஒரு சிறந்த குருவிடமிருந்து... அவரது முன்மாதிரியிலிருந்து... நாம் கற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவர் முதன்முதலில் வில்வித்தை கற்றுக்கொள்வதைக் கற்பனை செய்து பாருங்கள். எடுத்த எடுப்பிலேயே அவரால் குறிதவறாமல் அம்பு எய்ய முடியாது. அதற்காக அவர் பலமுறை பயிற்சி எடுக்கிறார், முயற்சி செய்கிறார். முன்னேற்றம் செய்வதற்காக, வில்வித்தையில் தேர்ச்சிபெற்ற குருவினுடைய முன்மாதிரியை உன்னிப்பாகக் கவனிக்கிறார். குரு எப்படி நிற்கிறார்... எப்படி வில்லை ஏந்துகிறார்... எப்படி நாண்மீது விரலை வைத்து இழுக்கிறார்... என்பதையெல்லாம் அந்த சிஷ்யன் நன்கு கவனிக்கிறார். கற்றுக்கொள்ள வேண்டுமென்ற உறுதியுடன்... நாணை எந்தளவு இழுக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்கிறார்; அதேசமயத்தில், காற்று எவ்வளவு பலமாக வீசுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்கிறார். குருவைப் பார்த்துப் பார்த்துப் பழகி, இலக்கிற்கு இன்னும் பக்கத்தில்... இன்னும் பக்கத்தில்... அம்பை எய்வதற்குக் கற்றுக்கொள்கிறார். அது போலவே, இயேசுவின் அறிவுரைகளையும் அவரது பூரண முன்மாதிரியையும் பின்பற்றுவதன் மூலம் கிறிஸ்தவர்களாக நாம் தொடர்ந்து முன்னேற முயற்சி செய்கிறோம்.
3. (அ) தாம் விழிப்புடன் இருப்பது அவசியம் என்பதை இயேசு எப்படிச் சுட்டிக்காட்டினார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
3 இயேசு உண்மையிலேயே விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததா? கண்டிப்பாக இருந்தது. உதாரணமாக, அவரது பூமிக்குரிய வாழ்வின் கடைசி இரவன்று, “என்னோடுகூட விழித்திருங்கள்” என்று உண்மையுள்ள தமது அப்போஸ்தலர்களிடம் கூறினார். அதோடு, “நீங்கள் சோதனைக்கு இணங்கிவிடாதபடி விழிப்புடன் இருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்றும் கூறினார். (மத். 26:38, 41) எப்போதுமே அவர் விழிப்புடன் இருந்தபோதிலும், முக்கியமாக அந்த இக்கட்டான நேரத்தில் விழிப்புடனிருக்கவும் தமது பரலோகத் தகப்பனுடன் மிகவும் நெருங்கியிருக்கவும் விரும்பினார். தம்மைப் பின்பற்றுகிறவர்களும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்... அக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திலும் அவசியம்... என்பதை அவர் அறிந்திருந்தார். இப்போது, நாம் விழிப்புடன் இருக்கும்படி இயேசு ஏன் எதிர்பார்க்கிறார் என்பதைச் சிந்திக்கலாம். அதன் பின்பு, இயேசுவைப் போல் விழிப்புணர்வை நாம் எப்படி அன்றாட வாழ்வில் காட்டலாம் என்பதற்கு மூன்று வழிகளை ஆராயலாம்.
நாம் விழிப்புடன் இருக்கும்படி இயேசு ஏன் எதிர்பார்க்கிறார்
4. நாம் ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்?
4 சுருக்கமாய்ச் சொன்னால், நமக்குச் சில விஷயங்கள் தெரியாததாலும் சில விஷயங்கள் தெரிந்திருப்பதாலுமே நாம் விழிப்புடன் இருக்கும்படி இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு பூமியில் ஒரு மனிதராக வாழ்ந்தபோது, எதிர்காலத்தில் நடக்கவிருந்த அனைத்தையும் அறிந்திருந்தாரா? இல்லை. அதனால்தான், “அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது” என்று தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். (மத். 24:36) எப்போது உலகத்திற்கு முடிவு வரும் என்பதைப் பற்றி ‘மகனாகிய’ இயேசுவுக்கு அந்தச் சமயத்தில் துல்லியமாகத் தெரியவில்லை. நம்மைப் பற்றியென்ன? எதிர்காலத்தில் நடக்கப்போகிற எல்லாமே நமக்குத் தெரியுமா? கண்டிப்பாகத் தெரியாது! இந்தப் பொல்லாத உலகத்திற்கு முடிவைக் கொண்டுவர யெகோவா எப்போது தம்முடைய மகனை அனுப்புவாரென நமக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால், நாம் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியமாய் இருக்குமா? இயேசு கூறியபடி முடிவு திடீரென வரும், எதிர்பாராத விதத்தில் வரும்; ஆகவே, நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.—மத்தேயு 24:43-ஐ வாசியுங்கள்.
5, 6. (அ) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நமக்கு இருக்கிற அறிவு நாம் விழிப்புடன் இருக்க எப்படி உதவுகிறது? (ஆ) சாத்தானைப் பற்றி நாம் அறிந்திருக்கும் விஷயம் அதிக விழிப்புடனிருக்க நம்மை ஏன் தூண்ட வேண்டும்?
5 எதிர்காலத்தைப் பற்றிய பல அற்புதமான விஷயங்களை... தம்மைச் சுற்றியிருந்த பெரும்பாலான மக்களுக்குத் துளிகூடத் தெரியாத உண்மைகளை... இயேசு அறிந்திருந்தார். அவருக்குத் தெரிந்தளவு நமக்குத் தெரியாதுதான்; என்றாலும், அவரது உதவியால் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் அது விரைவில் சாதிக்கப்போவதைப் பற்றியும் நாம் நிறைய விஷயங்களைத் தெரிந்திருக்கிறோம். பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ பிராந்தியத்திலோ உள்ள பெரும்பாலோர் இந்த அற்புதமான உண்மைகளைப் பற்றித் தெரியாமல் இருளில் இருப்பதையே நாம் காண்கிறோம். இது, நாம் விழிப்புடன் இருப்பதற்குரிய மற்றொரு காரணம். இயேசுவைப் போல, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் பொன்னான வாய்ப்பு, எதையும் நாம் தவறவிடக் கூடாது. உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன!—1 தீ. 4:16.
6 இயேசு இன்னொரு விஷயத்தை அறிந்திருந்தார்; அது, விழிப்புடன் இருக்க அவருக்கு உதவியது. தமக்குச் சபலமூட்ட... தம்மைத் துன்புறுத்த... தம் உத்தமத்தை முறிக்க... சாத்தான் உறுதியுடன் இருந்ததை இயேசு அறிந்திருந்தார். அவரைச் சோதித்துப் பார்க்க ‘வேறொரு நல்ல சந்தர்ப்பத்திற்காக’ அந்தப் பயங்கரமான விரோதி எப்போதும் கண்குத்திப் பாம்பாகக் காத்துக்கொண்டிருந்தான். (லூக். 4:13) இயேசு ஒருபோதும் அஜாக்கிரதையாக இருந்துவிடவில்லை. எந்தவொரு சோதனையையும் சந்திக்கத் தயாராய் இருக்கவே விரும்பினார்—அது சபலமாகவோ எதிர்ப்பாகவோ துன்புறுத்தலாகவோ எதுவாக இருந்தாலும்சரி. இயேசு எதிர்ப்பட்ட அதே சூழ்நிலையைத்தான் இன்று நாமும் எதிர்ப்படுகிறோம். சாத்தான் இன்னமும் “கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்” என்பது நமக்குத் தெரியும். அதனால்தான், “தெளிந்த புத்தியுடன் இருங்கள், விழித்திருங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை நம் அனைவருக்கும் அறிவுறுத்துகிறது. (1 பே. 5:8) ஆனால், நாம் எப்படி விழிப்புடன் இருக்கலாம்?
விழிப்புடன் இருக்க எப்படி ஜெபம் உதவும்?
7, 8. ஜெபம் செய்வது சம்பந்தமாக இயேசு கொடுத்த அறிவுரை என்ன, அவர் எப்படிப்பட்ட முன்மாதிரி வைத்திருக்கிறார்?
7 ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருப்பதற்கும் ஜெபத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பைபிள் காட்டுகிறது. (கொலோ. 4:2; 1 பே. 4:7) தம்மோடுகூட விழித்திருக்கும்படி சீடர்களைக் கேட்டுக்கொண்டதற்குச் சற்றுப்பின் இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் சோதனைக்கு இணங்கிவிடாதபடி விழிப்புடன் இருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.” (மத். 26:41) இயேசு கொடுத்த இந்த அறிவுரை, அந்த மிக இக்கட்டான சூழ்நிலைக்கு மட்டும்தானா? இல்லை. அது நாம் அனைவருமே ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை.
8 ஜெபம் செய்வதில் இயேசு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். ஒருமுறை இரவு முழுவதும் அவர் தம் தகப்பனிடம் ஜெபம் செய்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்தக் காட்சியை இப்போது நம் மனதில் கற்பனை செய்து பார்க்கலாம். (லூக்கா 6:12, 13-ஐ வாசியுங்கள்.) அது ஓர் இளவேனிற்காலம். ஒருவேளை, மீன்பிடி பட்டணமாகிய கப்பர்நகூமுக்கு அருகில் இயேசு இருக்கிறார். இருள் சூழ்ந்துவரும் வேளையில், கலிலேயாக் கடலை நோக்கியவாறு இருக்கும் ஒரு மலைமீது அவர் ஏறிப் போகிறார். கப்பர்நகூமிலும் சுற்றிலுமுள்ள கிராமங்களிலும் எண்ணெய் விளக்குகள் மினுமினுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். என்றாலும், எண்ணங்களைச் சிதறவிடாமல் தம் தகப்பனிடம் ஜெபம் செய்கிறார். நிமிடங்கள்... மணிநேரங்கள்... கரைகின்றன. அந்த விளக்குகள் ஒவ்வொன்றாக அணைவதையோ வானில் நிலா பவனி வருவதையோ ஜாமத்தில் விலங்குகள் சத்தமிடுவதையோ அவர் கவனிப்பதில்லை. ஒருவேளை தாம் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானத்தைப் பற்றி... 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி... அவர் ஜெபம் செய்கிறார். வழிநடத்துதலுக்காகவும் ஞானத்திற்காகவும் இயேசு ஊக்கமாய் விண்ணப்பம் பண்ணுகிறார். ஒவ்வொரு சீடரைப் பற்றியும் தம் மனதிலுள்ள எண்ணங்களையும் கவலைகளையும் தம் தகப்பனிடம் அவர் கொட்டிக் கொண்டிருப்பதை நம்மால் யோசித்துப் பார்க்க முடிகிறது.
9. இரவு முழுவதும் ஜெபம் செய்வதில் இயேசு வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நீண்ட நேரம் ஜெபம் செய்ய வேண்டும் என்பதையா? இல்லை, ஏனென்றால் தம் சீடர்களைப் பற்றிச் சொல்கையில், “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று அவர் ஒத்துக்கொண்டார். (மத். 26:41) இருந்தாலும், நாம் இயேசுவைப் பின்பற்றலாம். உதாரணமாக, நம்மை... நம் குடும்பத்தாரை... நம் சக ஊழியர்களை... ஆன்மீக ரீதியில் பாதிக்கிற எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்பு பரலோகத் தகப்பனிடம் உதவிக்காகக் கேட்கலாம். சகோதர சகோதரிகளுடைய கஷ்டங்களுக்காகவும் ஜெபம் செய்யலாம். எப்போதும் ஒரே வார்த்தைகளைச் சொல்லி ஜெபிப்பதற்குப் பதிலாக இதயப்பூர்வமாக ஜெபிக்கலாம். இப்படியெல்லாம் நாம் செய்கிறோமா? இயேசு தமது தகப்பனிடம் மனம்விட்டுப் பேசும் வாய்ப்பை உயர்வாய் மதித்தார் என்பதையும் கவனியுங்கள். அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கிற இந்த உலகில், நாம் மிக முக்கியமான காரியங்களை மறந்துவிட்டு அன்றாடக் காரியங்களில் மூழ்கிவிடுவது சுலபம். தனிப்பட்ட விதத்தில் ஜெபிக்க... உள்ளத்தைக் கொட்டி ஜெபிக்க... நாம் போதுமான நேரத்தை ஒதுக்கினால், ஆன்மீக ரீதியில் அதிக விழிப்புடன் இருப்போம். (மத். 6:6, 7) யெகோவாவிடம் நெருங்கி வருவோம், அவருடன் நம் உறவைப் பலப்படுத்திக்கொள்வோம், அதைப் பலவீனப்படுத்துகிற எதையும் தவிர்ப்போம்.—யாக். 4:8.
பிரசங்க வேலையில் எப்படி விழிப்புடன் இருக்கலாம்?
10. சாட்சி கொடுக்க வாய்ப்புகளைத் தேடுவதில் இயேசு விழிப்புடன் இருந்தார் என்பதை என்ன உதாரணம் காட்டுகிறது?
10 யெகோவா கொடுத்த வேலையைச் செய்வதில் இயேசு விழிப்புடன் இருந்தார். சில வேலைகளைச் செய்கையில் நம் மனம் அலைபாய்ந்தாலும் பெரிதாக ஒன்றும் பாதிப்பு வராது. ஆனால், பெரும்பாலான வேலைகளுக்கு ஆழ்ந்த கவனமும் விழிப்புணர்வும் தேவை; நம்முடைய கிறிஸ்தவ ஊழியமும் அப்படிப்பட்டதுதான். இயேசு எப்போதும் ஊழிய வேலையில் விழிப்புடன் இருந்தார், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புகளைத் தேடுவதில் கவனமாக இருந்தார். உதாரணமாக, காலையில் நெடுநேரம் நடந்து களைத்துப்போன பின்பு சீகார் என்ற ஊருக்கு அவரும் அவரது சீடர்களும் வந்துசேர்ந்தார்கள், பின்பு சீடர்கள் உணவு வாங்குவதற்காகப் போய்விட்டார்கள். ஓய்வெடுக்க இயேசு அந்த ஊரின் கிணற்றருகே உட்கார்ந்திருந்தார்; ஆனாலும் அவர் விழிப்புடன் இருந்தார், சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பைக் கண்டார். சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் எடுக்க அங்கு வந்தாள். அந்தச் சமயத்தில் இயேசு ஒரு குட்டித்தூக்கம் போட்டிருக்கலாம். அல்லது, ஏதாவது சாக்குப்போக்குகள் வைத்துக்கொண்டு அவளிடம் பேசாமல் இருந்திருக்கலாம். என்றாலும் அவர் பேசினார், அந்தப் பெண்ணையும் உரையாடலில் ஈடுபடுத்தி வலிமைமிக்க சாட்சி கொடுத்தார்; அதனால், அந்த ஊராரில் பலரும் அவரை ஏற்றுக்கொண்டார்கள். (யோவா. 4:4-26, 39-42) நாம் இயேசுவின் முன்மாதிரியை இன்னும் நெருங்கப் பின்பற்ற முடியுமா? அதாவது, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் ஆட்களுக்கு நற்செய்தியைச் சொல்ல வாய்ப்புகளைத் தேடுவதில் இன்னும் அதிக விழிப்புடன் இருக்க முடியுமா?
11, 12. (அ) தமது வேலையைச் செய்வதிலிருந்து திசைதிருப்ப முயன்றவர்களுக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார்? (ஆ) இயேசு ஊழியத்தில் எப்படிச் சமநிலையைக் காத்துக்கொண்டார்?
11 சிலசமயங்களில், இயேசு தமது வேலையைச் செய்துகொண்டிருந்தபோது நல்லெண்ணம் கொண்ட ஆட்கள் அவரைத் திசைதிருப்ப முயன்றார்கள். கப்பர்நகூமில் இயேசு அற்புதமாகச் சுகப்படுத்தியதைக் கண்ட மக்கள் மிகவும் மனம் கவரப்பட்டதால் அவரைத் தங்களுடனேயே தங்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இது புரிந்துகொள்ளத்தக்கதுதான். இருந்தாலும், அந்த ஒரே ஊராருக்கு மட்டுமல்ல ‘இஸ்ரவேல் வீட்டாரில் வழிதவறிப்போன ஆடுகள்’ அனைவருக்கும் பிரசங்கிக்க வேண்டுமென்பதே இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. (மத். 15:24) ஆகவே, “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என அவர் அந்த மக்களிடம் கூறினார். (லூக். 4:40-44) அப்படியானால், இயேசு தமது ஊழியத்தின்மீதே கவனத்தை ஒருமுகப்படுத்தினார், எதுவும் தம்மைத் திசைதிருப்ப அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
12 இயேசு தமது வேலையில் அந்தளவு தீவிரமாய் ஈடுபட்டதால் சமநிலை இழந்து, வாழ்க்கையில் வேறு எந்தக் காரியத்தையும் அனுபவிக்காமல் இருந்தாரா? அல்லது, ஊழியத்தில் அவர் அப்படியே மூழ்கிப்போனதால் மக்களின் தேவைகளை அறியாமல் இருந்தாரா? இல்லை, எல்லாவற்றையும் சமநிலையுடன் செய்வதில் இயேசு தன்னிகரற்ற முன்மாதிரி வைத்தார். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்தார், தமது நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் ஆனந்தம் கண்டார். குடும்பங்கள்மீது பரிவு காட்டினார், அவற்றின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு புரிந்துகொண்டார்; பிள்ளைகளிடம் பாசத்தைக் கொட்டினார்.—மாற்கு 10:13-16-ஐ வாசியுங்கள்.
13. பிரசங்கிக்கும் விஷயத்தில், இயேசுவைப் பின்பற்றி நாம் எப்படி விழிப்புணர்வையும் சமநிலையையும் காட்டலாம்?
13 விழிப்புடன் இருப்பதில் நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றும்போது எப்படி அவரைப்போல் எல்லாவற்றையும் சமநிலையுடன் செய்யலாம்? ஊழியம் செய்வதிலிருந்து இந்த உலகம் நம்மைத் திசைதிருப்ப நாம் அனுமதித்துவிடக் கூடாது. ஊழியத்தைக் குறைத்துக்கொள்ளும்படி நல்லெண்ணமுள்ள நண்பர்களும் உறவினர்களும்கூட நம்மைத் தூண்டலாம் அல்லது “இயல்பான வாழ்க்கையை” நாடும்படி உந்துவிக்கலாம். என்றாலும், நாம் இயேசுவைப் பின்பற்றினால் நம் ஊழியத்தை உணவைப் போல் கருதுவோம். (யோவா. 4:34) நம் வேலை நமக்கு ஆன்மீக ரீதியில் ஊட்டம் அளிக்கிறது, மகிழ்ச்சியும் தருகிறது. என்றாலும், நாம் ஒருபோதும் மிதமிஞ்சியவர்களாய் இருக்கக் கூடாது; அதாவது, சுயநீதிமான்கள் போல் நடந்துகொள்ளவோ எதையும் அனுபவிக்காத துறவிகள் போல் வாழவோ கூடாது. இயேசுவைப் போல் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும், ‘சந்தோஷமுள்ள கடவுளை’ சேவிக்கும் சமநிலையுள்ள ஊழியர்களாய் இருக்க வேண்டும்.—1 தீ. 1:11.
கஷ்ட காலங்களில் எப்படி விழிப்புடன் இருக்கலாம்?
14. கஷ்ட காலங்களில் எந்த உண்மையை மறந்துவிடக் கூடாது, ஏன்?
14 நாம் பார்த்தபடி, விழிப்புடன் இருக்குமாறு இயேசு சொன்ன மிக முக்கியமான அறிவுரைகளில் சில அவர் கடும் கஷ்டத்தில் இருந்தபோது சொன்னவை. (மாற்கு 14:37-ஐ வாசியுங்கள்.) நாம் கஷ்டங்களை எதிர்ப்படுகையில் எப்போதையும்விட அதிகமாய் அவரது முன்மாதிரியைப் பின்பற்றுவது அவசியம். துன்பம் வரும்போது இன்றியமையாத ஓர் உண்மையைப் பெரும்பாலோர் மறந்துவிடுகிறார்கள்; அது மிக முக்கியமானது என்பதால் நீதிமொழிகள் புத்தகம் அதைப் பற்றி இரு முறை கூறுகிறது: “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதி. 14:12; 16:25) முக்கியமாய்ப் பயங்கரமான பிரச்சினைகளைச் சந்திக்கும்போது நம் சுயபுத்தியின் மீது சார்ந்திருந்தால், நம்மையும் நம் அன்பானவர்களையும் ஒருவேளை ஆபத்தில் சிக்கவைத்துவிடுவோம்.
15. பொருளாதார கஷ்டங்கள் வரும் சமயத்தில் ஒரு குடும்பத் தலைவர் என்ன செய்யத் தூண்டப்படலாம்?
15 உதாரணமாக, ஒரு குடும்பத் தலைவருக்கு “தன்னை நம்பியிருப்பவர்களை” பொருளாதார ரீதியில் கவனித்துக்கொள்வது அதிக சவாலாக இருக்கலாம். (1 தீ. 5:8) கூட்டங்களுக்கு வர... குடும்ப வழிபாட்டை நடத்த... ஊழியத்தில் கலந்துகொள்ள... அடிக்கடி தடையாக இருக்கிற ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்க அவர் தூண்டப்படலாம். முழுக்க முழுக்க மனித யோசனையின் மீதே சார்ந்திருந்தால், இதெல்லாம் அவருக்குத் தவறாகத் தெரியாது, நியாயமாகத்தான் தெரியும். என்றாலும், அது ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்படுவதற்கு அல்லது மரணமடைவதற்கே வழிநடத்தும். நீதிமொழிகள் 3:5, 6-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையைப் பின்பற்றுவது எவ்வளவு நல்லது! ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்’ என்று சாலொமோன் சொன்னார்.
16. (அ) சுயபுத்தியின் மேல் சாயாமல் யெகோவா தேவனுடைய ஞானத்தின் மீது இயேசு எப்படிச் சார்ந்திருந்தார்? (ஆ) கஷ்ட காலங்களில் யெகோவாவின் மீது சார்ந்திருந்த இயேசுவின் முன்மாதிரியைக் குடும்பத் தலைவர்கள் பலர் எப்படிப் பின்பற்றுகிறார்கள்?
16 இயேசு துன்பப்பட்ட சமயத்தில், சுயபுத்தியின் மேல் சார்ந்திருப்பதை அறவே தவிர்த்தார். இதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! இந்தப் பூமியில் வாழ்ந்தவர்களிலேயே மிகவும் ஞானமுள்ளவரான இயேசு ஒருபோதும் தம் சுயபுத்தியின் மேல் சார்ந்திருக்கவில்லை. உதாரணமாக, சாத்தான் அவரைச் சோதித்தபோது, “எழுதப்பட்டிருக்கிறதே” என்று திரும்பத்திரும்பச் சொல்லிப் பதிலளித்தார். (மத். 4:4, 7, 10) சோதனையை விரட்ட தம் தகப்பனுடைய ஞானத்தின் மீது சார்ந்திருந்தார்; சாத்தான் இழிவாகக் கருதுகிற... அவனுக்குக் கொஞ்சங்கூட இல்லாத... குணமாகிய மனத்தாழ்மையைக் காட்டினார். நாமும் இயேசுவைப்போல் நடந்துகொள்கிறோமா? அவரைப் போல் விழிப்புணர்வைக் காட்டுகிற குடும்பத் தலைவர், முக்கியமாய்க் கஷ்ட காலங்களில் கடவுளுடைய வார்த்தை தன்னை வழிநடத்த அனுமதிப்பார். உலகெங்கிலும் உள்ள ஆயிரமாயிரம் குடும்பத் தலைவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். பொருளாதாரக் காரியங்களைவிட கடவுளுடைய அரசாங்கத்திற்கே... உண்மை வணக்கத்திற்கே... அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முதலிடம் தருகிறார்கள். அதன் மூலம், தங்களுடைய குடும்பங்களை மிக நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள். பைபிள் வாக்குறுதி அளிக்கிறபடி, பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார்.—மத். 6:33.
17. இயேசுவைப் போல் விழிப்புடனிருக்க எது உங்களைத் தூண்டுகிறது?
17 விழிப்புடன் இருக்கும் விஷயத்தில் இயேசு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது முன்மாதிரி நடைமுறையானது, நன்மையானது, உயிரையும் காக்கக்கூடியது. ஆன்மீக ரீதியில் நீங்கள் தூங்கும்படி செய்ய, அதாவது விசுவாசத்தில் பலவீனமாகும்படி, வழிபாட்டில் மந்தமாகும்படி, உத்தமத்தை விட்டுக்கொடுக்கும்படி செய்ய, சாத்தான் ஆவலாய் இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். (1 தெ. 5:6) அவன் வெற்றி பெற அனுமதித்துவிடாதீர்கள்! இயேசுவைப் போல் எப்போதும் விழிப்புடன் இருங்கள்; ஆம், ஜெபம் செய்வதிலும் ஊழியம் செய்வதிலும் கஷ்டங்களைச் சமாளிப்பதிலும் விழிப்புடன் இருங்கள். இதன் மூலம், இந்த உலகத்தின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் அர்த்தமும் நிறைந்த வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். நீங்கள் இப்போது விழிப்புடன் இருந்தால் இந்த உலகத்திற்கு நம் எஜமானர் முடிவு கொண்டுவரும்போது அவரது தகப்பனுடைய சித்தத்தை நீங்கள் சுறுசுறுப்புடன் செய்து வருவதைப் பார்ப்பார். உங்களுடைய உண்மையுள்ள வாழ்க்கைக்குப் பலனளிக்க யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்!—வெளி. 16:15.
[கேள்விகள்]
[பக்கம் 6-ன் படம்]
கிணற்றருகே வந்த ஒரு பெண்ணிடம் இயேசு பிரசங்கித்தார். தினமும் பிரசங்கிக்க நீங்கள் வாய்ப்புகளைத் தேடுகிறீர்களா?
[பக்கம் 7-ன் படம்]
குடும்பத்தார் யெகோவாவிடம் நெருங்கியிருக்க நீங்கள் உதவினால், விழிப்புடன் இருக்கிறீர்களென அர்த்தம்