வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
என்னுடைய பிரச்சினைக்கு ஆலோசனை தேவைப்பட்டால் அல்லது பைபிள் வாசிக்கையில் ஏதாவது கேள்வி எழுந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
“புதையல்களைத் தேடுகிறதுபோல்” ஞானத்தையும் புத்தியையும் விடாமுயற்சியுடன் ‘தேடும்படி’ நீதிமொழிகள் 2:1-5 நம் ஒவ்வொருவரையும் உந்துவிக்கிறது. அப்படியானால், நம்முடைய பைபிள் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பதற்கும் நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஊக்கமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். எப்படிச் செய்யலாம்?
“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தந்திருக்கும் ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி “ஆராய்ச்சி செய்வது எப்படி” என்பது தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில், பக்கங்கள் 33 முதல் 38-ல் சொல்லப்பட்டுள்ளது. (மத். 24:45) உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸை எப்படிப் பயன்படுத்துவது என்பது பக்கம் 36-ல் விளக்கப்பட்டுள்ளது. இந்த இன்டெக்ஸின் ஒவ்வொரு பதிப்பிலும் தகவல்கள் பொருள்வாரியாகவும் வசனம்வாரியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே, முக்கிய வார்த்தைகளையோ பைபிள் வசனங்களையோ அதில் எடுத்துப் பார்க்கலாம்; அப்போது, நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டிய பிரசுரங்களைத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்குத் தேவைப்படும் திட்டவட்டமான பதிலைத் தெரிந்துகொள்ள அல்லது வழிநடத்துதலைப் பெற பொறுமையுடன் தேடுங்கள். “புதையல்களை” தேடுகிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு நேரமும் முயற்சியும் தேவை.
உண்மைதான், சில விஷயங்களுக்கும் வசனங்களுக்கும் நம்முடைய பிரசுரங்களில் நேரடியான விளக்கம் இல்லை. அப்படியே ஏதாவது வசனத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும்கூட, உங்களுடைய கேள்விக்கு ஒருவேளை விடை கிடைக்காமல் போகலாம். அதோடு, பைபிளில் எல்லா விவரங்களும் இல்லாததால் சில பதிவுகளின் பேரில் கேள்விகள் எழும்பலாம். அந்த எல்லாக் கேள்விக்கும் நாம் உடனடியாகப் பதிலைப் பெற முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், நாமே ஏதாவது பதிலை ஊகித்துக்கொள்ளக் கூடாது; இல்லையென்றால், ‘விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக வீண் கேள்விகளை எழுப்பும்’ விவாதத்தில்தான் ஈடுபட்டுக் கொண்டிருப்போம். (1 தீ. 1:4; 2 தீ. 2:23; தீத். 3:9) இதுவரை நம் பிரசுரங்களில் சிந்திக்கப்படாத இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் கிளை அலுவலகமோ தலைமை அலுவலகமோ ஆராய்ச்சி செய்து பதில் தர இயலாது. பைபிளின் ஆசிரியரான யெகோவாமீது நாம் பலமான விசுவாசம் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதில் பல விவரங்கள் கொடுக்கப்படவில்லை; ஆனால், வாழ்க்கைப் பாதையில் செல்வதற்குப் போதுமான தகவல்களை பைபிள் தருவதால் நாம் திருப்தியுடன் இருக்கலாம்.—யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தில், 185 முதல் 187 வரையிலான பக்கங்களைக் காண்க.
உங்களுடைய மனதைக் குடைகிற ஒரு விஷயத்தைப் பற்றி அலசி ஆராய்ந்த பின்பும் எவ்வித பதிலோ தீர்வோ கிடைக்கவில்லையென்றால்? முதிர்ச்சிவாய்ந்த சக விசுவாசியை, ஒருவேளை சபை மூப்பரை, தயங்காமல் அணுகுங்கள். அவர்களுக்கு பைபிள் அறிவும் கிறிஸ்தவ வாழ்க்கையில் அனுபவமும் நிறைய இருக்கின்றன. உங்களுடைய பிரச்சினைக்கு ஆலோசனை தேவைப்பட்டால் அல்லது தீர்மானம் எடுக்க உதவி தேவைப்பட்டால், அவர்கள் தரும் சமநிலையான வழிநடத்துதல் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் உங்களையும் உங்களுடைய சூழ்நிலையையும் நன்கு அறிந்திருக்கிறார்கள், உங்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். அதோடு, உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி யெகோவாவிடம் ஜெபத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிடுவதற்கு... அவருடைய சக்தியின் வழிநடத்துதலைக் கேட்பதற்கு... மறந்துவிடாதீர்கள்; ஏனென்றால், யெகோவா ஞானத்தையும் புத்தியையும் தருகிறார்.—நீதி. 2:6; லூக். 11:13.