Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கப்பத்தோக்கியாவில் காற்றும் நீரும் செதுக்கிய குடியிருப்புகள்

கப்பத்தோக்கியாவில் காற்றும் நீரும் செதுக்கிய குடியிருப்புகள்

கப்பத்தோக்கியாவில் காற்றும் நீரும் செதுக்கிய குடியிருப்புகள்

கப்பத்தோக்கியா என்ற இடத்தைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். யாருக்காக அவர் தனது முதல் கடிதத்தை எழுதினாரோ அவர்களில் ‘கப்பத்தோக்கியாவில் . . . தற்காலிக குடிகளாய் வாழ்ந்துவரும்’ மக்களும் அடங்குவர். (1 பேதுரு 1:1, 2, பொது மொழிபெயர்ப்பு) கப்பத்தோக்கியா எத்தகைய நாடு? அங்கிருந்த மக்கள் ஏன் பாறையில் குடையப்பட்ட குகைகளில் குடியிருந்தார்கள்? கிறிஸ்தவத்தைப் பற்றி அவர்கள் எப்படி அறிந்துகொண்டார்கள்?

“கற்கூம்புகளும் கற்தூண்களும் நிறைந்த காட்டில் கண்ணைக் கட்டிவிட்டதுபோல் எங்களுக்கு தோன்றியது” என சொன்னார் பிரிட்டிஷ் பிரயாணி டபிள்யு. எஃப். ஏயின்ஸ்வர்த்; இவர் 1840-களில் கப்பத்தோக்கியாவுக்கு விஜயம் செய்தவர். துருக்கியிலுள்ள இந்தப் பகுதியின் தனித்தன்மை வாய்ந்த இயற்கை சூழல், அங்கு விஜயம் செய்யும் பயணிகளை இன்றும் வியப்பில் ஆழ்த்துகிறது. கப்பத்தோக்கிய பள்ளத்தாக்குகளுக்கு இடையே, மௌனமாக நிற்கும் காவலாளிகளைப் போல் விசித்திரமான ‘கற்சிலைகள்’ கூட்டம் கூட்டமாய் காணப்படுகின்றன. அவற்றில் சில, 30 மீட்டர் அல்லது அதற்கும் அதிகமான உயரமுடைய பிரமாண்டமான புகைக்கூண்டுகளைப் போல் வானளாவ காட்சியளிக்கின்றன. இன்னும் சில, ஐஸ்கிரீம் கோன்கள், நான்முக கூம்புகள், காளான்கள் போன்றவற்றின் சாயலில் தென்படுகின்றன.

ஒரு நாளின் வெவ்வேறு சமயங்களில் பல்வேறு வண்ணங்களை இவற்றின் மீது சூரியன் தீட்டுகையில் அவற்றின் அழகே தனி அழகுதான்! விடியலில் இவை இளம் சிவப்பில் மின்னுகின்றன. உச்சிக்குள் இவை வெளிறிய தந்த நிறத்திலும் அஸ்தமனத்தில் பொன்னிறத்திலும் ஒளிருகின்றன. இந்த ‘கற்கூம்புகளும் கற்தூண்களும் நிறைந்த காடு’ எப்படி உருவானது? இங்குள்ள மக்கள் ஏன் அவற்றில் குடியிருக்கிறார்கள்?

காற்றாலும் நீராலும் செதுக்கப்பட்டது

அனடோலியா தீபகற்பத்தின் மையத்தில் கப்பத்தோக்கியா வீற்றிருக்கிறது; இது ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கிறது. இரண்டு எரிமலைகள் மட்டும் இங்கு இருந்திருக்காவிட்டால் இந்தப் பகுதி ஒரு பீடபூமியாக இருந்திருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அந்த எரிமலைகளின் பெரும் வெடிப்பால் இந்தப் பகுதி இரண்டு வகை பாறைகளால் நிறைந்து காணப்பட்டது; ஒன்று, பெசால்ட்டு என்றழைக்கப்படும் கடினப் பாறை, மற்றொன்று எரிமலை சாம்பல் கெட்டியானதால் உருவாகிய மிருதுவான வெள்ளை பாறை.

மிருதுவான இந்த பாறையை ஆறுகளும் மழையும் காற்றும் அரிக்க ஆரம்பித்தபோது செங்குத்தான பள்ளத்தாக்குகள் உருவாயின. காலப்போக்கில் இந்தப் பள்ளத்தாக்குகளை சுற்றிலும் வரிசையாக அமைந்துள்ள சில முகடுகள் மெல்ல மெல்ல பிளவுபட்டு, எண்ணற்ற கற்கூம்புகளை உருவாக்கின; இப்படியாக உலகில் வேறெங்கும் காண முடியாத ‘சிற்பங்களால்’ இந்த இடத்தை நிரப்பின. சில கற்கூம்புகள் பார்ப்பதற்கு அசல் தேன்கூடுகளைப் போன்று இருக்கின்றன. உள்ளூர் வாசிகள் மிருதுவான பாறையில் அறைகளை குடைந்தார்கள்; குடும்பம் வளர வளர அதற்கேற்ப அறைகளும் அதிகரித்தன. இந்த குடியிருப்புகள் கோடையில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

நாகரிகத்தின் ‘நாற்சந்தியில்’ வாழ்தல்

கப்பத்தோக்கிய குகை வாசிகள் நாகரிகத்தின் ‘நாற்சந்தி’ ஒன்றில் குடியிருந்திராவிட்டால் எந்தத் தொடர்புமின்றி தனித்து விடப்பட்டிருப்பார்கள். பிரபல சில்க் ரோடு, அதாவது ரோம பேரரசை சீனாவுடன் இணைத்த 6,500 கிலோமீட்டர் நீளமுள்ள வணிக மார்க்கம், கப்பத்தோக்கியா வழியாக சென்றது. வணிகர்களைத் தவிர பெர்சிய, கிரேக்க, ரோம படைகளும் இந்த மார்க்கத்தில் பயணித்தன. இந்த பயணிகளால் புதிய மத கருத்துக்களும் பரவின.

பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் கப்பத்தோக்கியாவில் யூத குடியிருப்புகள் இருந்தன. பொ.ச. 33-⁠ல், இந்தப் பகுதியை சேர்ந்த யூதர்கள் எருசலேமில் இருந்தார்கள். பெந்தெகொஸ்தே பண்டிகையைக் கொண்டாட அவர்கள் அங்கு சென்றிருந்தார்கள். ஆகவே, பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட பிறகு அப்போஸ்தலன் பேதுரு கப்பத்தோக்கியாவிலிருந்து வந்திருந்த அந்த யூதர்களுக்கு பிரசங்கித்தார். (அப்போஸ்தலர் 2:1-9) அவர் பிரசங்கித்த செய்தியை சிலர் ஏற்றுக்கொண்டு, புதிதாக பெற்ற மத நம்பிக்கைகளுடன் வீடு திரும்பியதாக தெரிகிறது. ஆகவேதான் பேதுரு தன் முதல் கடிதத்தை கப்பத்தோக்கிய கிறிஸ்தவர்களுக்காகவும் எழுதினார்.

எனினும் காலப்போக்கில் கப்பத்தோக்கியாவிலிருந்த கிறிஸ்தவர்கள் மீது பொய் மத தத்துவங்கள் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தன. நான்காம் நூற்றாண்டை சேர்ந்த கப்பத்தோக்கிய சர்ச்சின் மூன்று முக்கிய தலைவர்கள் வேதப்பூர்வமற்ற திரித்துவ கொள்கையை பலமாக ஆதரிக்கவும் செய்தார்கள். அவர்கள் நேஸியான்சஸை சேர்ந்த கிரெகரி, மகா பேஸில், அவரது சகோதரரான நிஸாவை சேர்ந்த கிரெகரி ஆகியோர் ஆவர்.

துறவற வாழ்க்கை முறையை ஏற்கும்படி மகா பேஸில் ஊக்குவித்தார். பாறைகளில் குடையப்பட்ட, கப்பத்தோக்கியர்களின் எளிய குடியிருப்புகள் அவர் பரிந்துரைத்த கடும் துறவற வாழ்க்கை முறைக்கு வெகு பொருத்தமானவையாகவே இருந்தன. துறவிகளின் சமுதாயம் வளர்ந்தபோது பெரிய கூம்புகளினுள் சில சர்ச்சுகள் கட்டப்பட்டன. 13-⁠ம் நூற்றாண்டுக்குள், சுமார் முந்நூறு சர்ச்சுகள் அந்த கற்பாறைகளில் குடைந்தெடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இன்றும் அழியாமல் நிற்கின்றன.

அந்த சர்ச்சுகளும் துறவி மாடங்களும் இன்று பயன்படாமல் இருக்கின்றன; ஆனாலும் கடந்த நூற்றாண்டுகளில் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அநேக குகைகள் இன்னும் குடியிருப்புகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இயற்கை வடித்த கட்டமைப்பை, அறிவாளிகளான இந்த உள்ளூர் வாசிகள் குடியிருப்புகளாக மாற்றியிருப்பதை கப்பத்தோக்கியாவிற்கு விஜயம் செய்யும் அநேகர் கண்டு வியக்காமல் போவதில்லை.

[பக்கம் 24, 25-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கப்பத்தோக்கியா

சீனா (கேத்தே)