தேவனுடைய ஆலயத்தில் செழிப்பான ஒலிவ மரம்
தேவனுடைய ஆலயத்தில் செழிப்பான ஒலிவ மரம்
இஸ்ரேல் நாட்டில் கிட்டத்தட்ட அழிக்க முடியாத ஒரு மரம் வளருகிறது! அதை எத்தனைமுறை வெட்டிச் சாய்த்தாலும் அதன் அடிவேர் இருக்கும் வரை மறுபடியும் மறுபடியும் குருத்து விடுகிறது. மரத்தின் சொந்தக்காரருக்கு சமைக்க, விளக்கு எரிக்க, மற்றும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சாதனங்களை தயாரிக்க ஏராளமான எண்ணெயை வாரி வாரி வழங்குகிறது.
பண்டையகாலக் கதை ஒன்று நியாயாதிபதிகள் என்ற பைபிள் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, “விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி” போயின. காட்டு மரங்களில் அவை விரும்பித் தேர்ந்தெடுத்த மரம் எது என்று தெரியுமா? அசைக்க முடியாதவாறு எதையும் தாங்குவதும், வளத்தை அள்ளித் தருவதுமான ஒலிவ மரமே.—நியாயாதிபதிகள் 9:8.
3,500 ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசியாகிய மோசே பண்டைய இஸ்ரவேல் தேசத்தை ‘நல்ல தேசம், ஒலிவமரங்களுள்ள தேசம்’ என்று வருணித்தார். (உபாகமம் 8:7, 8) இன்றும்கூட வடக்கே எர்மோன் மலை அடிவாரத்திலிருந்து தெற்கே பெயர்செபா எல்லை வரையாக ஒலிவ மரத்தோப்புகளை ஆங்காங்கே காணமுடிகிறது. சாரோனின் கரையோரம், சமாரியாவின் பாறைகள் நிறைந்த மலைச்சரிவுகள், கலிலேயாவின் செழிப்பான பள்ளத்தாக்கு ஆகியவற்றை இன்னும் அவை அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
பைபிள் எழுத்தாளர்கள் ஒலிவ மரத்தை அடிக்கடி அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த மரத்தின் அம்சங்கள் கடவுளுடைய இரக்கத்தை, உயிர்த்தெழுதல் வாக்குறுதியை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை விளக்க உதவின. ஒலிவ மரத்தைக் கூர்ந்து கவனித்தால் இந்த வேதாகம குறிப்புகளை நாம் புரிந்துகொள்வோம். மற்ற படைப்புகளோடு சேர்ந்து படைப்பாளரைத் துதிக்கும் இந்தத் தனிச்சிறப்புவாய்ந்த மரத்திற்கு நம்முடைய போற்றுதலும் அதிகமாகும்.—சங்கீதம் 148:7, 9.
உறுதிவாய்ந்த ஒலிவ மரம்
ஒலிவ மரம் பார்ப்பதற்கு அப்படியொன்றும் அழகான மரம் இல்லை. லீபனோனின் கம்பீரமான கேதுரு மரங்களைப் போல வானளாவ உயர்ந்து நிற்கும் மரமும் இல்லை. தேவதாரு போல அதன் மரம் அவ்வளவு விலைமதிப்புள்ளதுமில்லை. வாதுமை மரத்தின் பூக்களைப்போல அதன் பூக்களுக்கு மனதைக் கொள்ளைகொள்ளும் அழகும் இல்லை. (உன்னதப்பாட்டு 1:17; ஆமோஸ் 2:9) ஒலிவ மரத்தின் சிறப்பம்சம் மண்ணுக்கடியில் மறைந்துள்ளது. நிலத்துக்கு அடியில் ஆறு மீட்டர் ஆழத்திலும், பக்கவாட்டில் அதைக்காட்டிலும் அதிக தூரத்திலும் பரந்து அகன்று செல்லும் இதனுடைய வேர்களே மரத்தின் வளத்துக்கும் அழியாத உறுதிக்கும் காரணமாகும்.
வறட்சி காலத்தில் கீழே பள்ளத்தாக்கில் இருக்கும் மற்ற மரங்கள் காய்ந்துபோனாலும் மலைச்சரிவுகளிலுள்ள ஒலிவ மரங்கள் காய்ந்துபோவதில்லை. முடிச்சு முடிச்சாக காணப்படும் அடிமரத்தைப் பார்த்தால் இது விறகுக்குத்தான் ஆகும் என்று தோன்றும்; ஆனாலும் அடிவேர்கள் பல நூற்றாண்டுகளுக்கு ஒலிவப்
பழங்களைத் தர உதவுகிறது. இந்த உறுதிவாய்ந்த மரம் வளருவதற்கு, இடமும் சுவாசிப்பதற்கு காற்றோட்டமுள்ள மண்ணும் இருந்தால் போதும். களைகளும் நாசம் விளைவிக்கும் ஜந்துக்களுக்கு புகலிடம் அளிக்கும் தாவரங்களும் இல்லாமல் இருந்தால் போதும். இப்படி இருந்தால் ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு 57 லிட்டர் எண்ணெய் கிடைத்துவிடும்.இஸ்ரவேலர் மிகவும் பயனுள்ள இந்த எண்ணெயை பெற்றதால் ஒலிவ மரத்தின்மேல் மிகவும் பிரியமாயிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒலிவ எண்ணெயில் எரிந்த குத்துவிளக்குகளால் அவர்களுடைய வீடுகள் பிரகாசமாயிருந்தன. (லேவியராகமம் 24:2) சமையலுக்கு ஒலிவ எண்ணெய் இன்றியமையாததாக இருந்தது. சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்தது. இஸ்ரவேலர் அதிலிருந்து சோப்பு தயாரித்தனர். தானியம், திராட்சை, ஒலிவ பழங்கள் அவர்களுடைய முக்கிய பயிர்கள். ஒலிவ அறுவடை தவறிப்போனால் அது இஸ்ரவேல குடும்பத்துக்கு பெரிய நஷ்டமாக இருக்கும்.—உபாகமம் 7:13; ஆபகூக் 3:17.
பொதுவாக ஒலிவ எண்ணெய் குறைவில்லாமல் ஏராளமாக கிடைத்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை மோசே ‘ஒலிவ மரங்களுள்ள தேசம்’ என்று குறிப்பிட்டதற்கு காரணம், அந்தப் பகுதியில் அதிகமாகவே அது வளர்க்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இயற்கைவாதி டிரிஸ்ட்ராம், ஒலிவ மரத்தை ‘தேசத்தின் தனிச்சிறப்பான மரம்’ என்று வருணித்தார். ஒலிவ எண்ணெய்க்கு தனிமதிப்பு இருந்ததாலும், அது மிகுதியாய் கிடைத்ததாலும் மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலும் பயனுள்ள சர்வதேச செலாவணியாக பயன்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துகூட ஒருவர் பட்ட கடன் ‘நூறு குடம் ஒலிவ எண்ணெய்’ என்பதாக குறிப்பிட்டார்.—லூக்கா 16:5, 6.
“ஒலிவமரக் கன்றுகளைப்போல்”
மிகவும் பயனுள்ள இந்த ஒலிவ மரம் தெய்வீக ஆசீர்வாதங்களை நன்றாகவே சித்தரிக்கிறது. கடவுள் பயமுள்ள ஒரு மனிதன் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறான்? “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போல் இருப்பாள்” என்பதாக சங்கீதக்காரன் பாடினார். “உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.” (சங்கீதம் 128:3) இந்த “ஒலிவமரக் கன்றுகள்” யாவை? சங்கீதக்காரன் இவைகளை பிள்ளைகளுக்கு ஏன் ஒப்பிடுகிறார்?
ஒலிவ மரத்தின் விசேஷம் என்னவென்றால் அதன் அடிமரம் புதிது புதிதாக துளிர் விட்டுக்கொண்டே இருக்கும். a வயதாகும் போது அடிமரம், ஒரு காலத்தில் பலன்தந்தது போல கனி கொடுக்காமல் இருக்கலாம். அப்போது இந்த மரத்தை வளர்ப்பவர்கள் பல கன்றுகளை அல்லது இளங்கிளைகளை அப்படியே வளரவிட்டு விடுவார்கள். இவை மரத்தோடு சேர்ந்து அதன் முக்கிய பாகமாகிவிடும். சிறிது காலம் கழித்துப்பார்த்தால் அந்த வலுமிக்க அடிமரத்தைச் சுற்றி மூன்று அல்லது நான்கு கன்றுகள் பந்தியைச் சுற்றியிருக்கும் பிள்ளைகளைப் போலிருக்கும். இந்தக் கன்றுகளுக்கும் தாய்மரத்தின் அதே வேர்கள்தான் இருக்கும். இவை அனைத்தும் சேர்ந்து அமோகமாக கனிகொடுக்கும்.
ஒலிவ மரத்தின் இந்தத் தனிச்சிறப்பான அம்சம், பெற்றோரின் வலுமிக்க ஆவிக்குரிய வேரிலிருந்து பலத்தைப் பெற்று மகன்களும் மகள்களும் விசுவாசத்தில் எவ்வாறு உறுதியாக வளரமுடியும் என்பதை அழகாக விளக்குகிறது. பிள்ளைகள் வளர்ந்துவருகையில், கனிகொடுப்பதில் அவர்களும் சேர்ந்துகொண்டு பெற்றோருக்கு ஆதரவாய் இருப்பர். தங்களோடுகூட தங்கள் பிள்ளைகள் யெகோவாவை சேவிப்பதை பார்க்கும் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.—நீதிமொழிகள் 15:20.
“ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு”
யெகோவாவைச் சேவிக்கும் ஒரு வயதான தகப்பன் கடவுள் பயமுள்ள தன் பிள்ளைகளைப் பார்த்து களிகூருகிறான். ஆனால் இதே பிள்ளைகள் தங்கள் தகப்பன் ‘பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறதைக்’ காணும்போது மிகவும் துக்கப்படுகின்றனர். (1 இராஜாக்கள் 2:2) இப்படியொரு துக்கமான சம்பவம் குடும்பத்தில் நிகழும்போது பைபிள் அளிக்கும் அந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கை அதைச் சமாளிக்க நமக்கு உதவுகிறது.—யோவான் 5:28, 29; 11:25.
அநேக பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருந்த யோபு, மனுஷனுடைய வாழ்நாள் குறுகியது என்பதை நன்றாகவே அறிந்திருந்தார். பூத்து வாடிவிடும் ஒரு பூவுக்கு அதை அவர் ஒப்பிட்டு பேசினார். (யோபு 1:2; 14:1, 2) தான் அனுபவித்துவந்த வேதனைகளிலிருந்து விடுதலைபெற யோபு தனக்கு மரணம் வராதா என்று ஏங்கினார். கல்லறையை ஒளிந்துகொள்ளும் ஓர் இடமாக கருதினார். அதிலிருந்து திரும்பிவர முடியும் என்று அவர் நம்பினார். “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்று யோபு ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கு பின்வருமாறு நம்பிக்கையோடு பதிலளித்தார்: “எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். [யெகோவாவே] என்னைக் கூப்பிடும்; அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.”—யோபு 14:13-15.
பாதாளத்தில் இருந்து கடவுள் தன்னைக் கூப்பிடுவார் என்று உறுதியாக நம்புவதை யோபு இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ஒரு மரத்தை உதாரணப்படுத்திப் பேசுகிறார். அவர் அதை வருணிப்பதைப் பார்த்தால் அவர் ஒலிவ மரத்தைப் பற்றிதான் பேசுகிறார் என்று தோன்றுகிறது. “ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் யோபு 14:7) ஒரு ஒலிவ மரத்தை வெட்டி சாய்க்கலாம், ஆனால் அதை அழித்துவிட முடியாது. மரத்தை வேரோடு சாய்த்தால்தான் அது செத்துப்போகும். வேர்கள் இருந்தால் மரம் முன்னிலும் அதிக பலத்தோடு மறுபடியும் துளிர்விட்டு வளரும்.
திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்” என்று யோபு சொல்லுகிறார். (நீண்டகால வறட்சிக்குப்பின் ஒலிவ மரம் வாடிப்போனாலும், சுருங்கிப்போன அடிக்கட்டை திரும்ப உயிர்பெற்று வளரலாம். “அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம் போலக் கிளைவிடும்.” (யோபு 14:8, 9) யோபு வாழ்ந்துவந்த வறட்சியான, தூசு நிறைந்த தேசத்தில் பழைய ஒலிவமர அடிக்கட்டைகள் ஆங்காங்கே காய்ந்து பட்டுப்போய் நின்றுகொண்டிருப்பதை அவர் கவனித்திருக்க வேண்டும். ஆனால் மழை வந்தபோதோ, “செத்துப்போன” அந்த மரம் மறுபடியும் உயிர்பெற்றது, அதன் வேர்களிலிருந்து புதிய கிளைகள் தோன்றி அது ஒரு “இளம் மரம்” போல துளிர்விட்டது. இதற்கிருக்கும் இந்தச் சிறப்பான ஆற்றலை கவனித்த ஒரு தோட்டக்கலை நிபுணர், “ஒலிவ மரத்துக்கு சாவே கிடையாது என்று நாம் தைரியமாகச் சொல்லலாம்” என்றார்.
விவசாயி பட்டுப்போன தன் ஒலிவ மரங்கள் மறுபடியும் துளிர்விடுவதைக் காண வாஞ்சையாக இருப்பது போலவே, யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை உயிர்த்தெழுப்ப வாஞ்சையாக இருக்கிறார். உண்மையுள்ள ஆபிரகாமும் சாராளும், ஈசாக்கும் ரெபெக்காளும், இன்னும் மற்ற ஆட்களும் திரும்ப உயிர்பெறும் அந்தக் காலத்தை அவர் எதிர்நோக்கி இருக்கிறார். (மத்தேயு 22:31, 32) மரித்தோரை திரும்ப வரவேற்று மறுபடியுமாக முழுமையான பயனுள்ள ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதைக் காண்பது எத்தனை ஆனந்தமாக இருக்கும்!
அடையாள அர்த்தமுள்ள ஒலிவமரம்
கடவுள் பாரபட்சமில்லாதவராக இருப்பதிலும் உயிர்த்தெழுதலுக்காக ஏற்பாடு செய்திருப்பதிலும் அவருடைய இரக்கம் வெளிப்படுகிறது. மனிதர்கள் எந்த இனத்தை அல்லது பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், யெகோவாவின் இரக்கம் எவ்வாறு அனைவருக்கும் கிடைக்கிறது என்பதை விளக்க பவுல் அப்போஸ்தலன் ஒரு ஒலிவ மரத்தை பயன்படுத்தினார். பல நூற்றாண்டுகளாக யூதர்கள் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாய், ‘ஆபிரகாமின் சந்ததி’யாக இருப்பதில் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.—யோவான் 8:33; லூக்கா 3:8.
ஒருவர் கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு, அவர் யூத தேசத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கவில்லை. ஆனால் இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் அனைவரும் யூதர்களாக இருந்தனர். ஆபிரகாமின் வாக்குப்பண்ணப்பட்ட வித்தை உண்டுபண்ணுவதற்கு கடவுளால் முதலில் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதர்களாக இருக்கும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்தது. (ஆதியாகமம் 22:18; கலாத்தியர் 3:29) இந்த யூத சீஷர்களை பவுல் அடையாள அர்த்தமுள்ள ஓர் ஒலிவ மரக்கிளைக்கு ஒப்பிட்டு பேசினார்.
இயற்கையான யூதர்களில் பெரும்பான்மையினர் இயேசுவை நிராகரித்துவிட்டனர். இதனால் “சிறு மந்தை” அல்லது “தேவனுடைய இஸ்ரவேலின்” எதிர்கால உறுப்பினர்களாகும் தகுதியை இழந்தனர். (லூக்கா 12:32; கலாத்தியர் 6:16) இவ்வாறு அவர்கள் வெட்டி எறியப்பட்ட ஒலிவமரக் கிளைகளைப்போல ஆனார்கள். அவர்களுடைய இடத்தை யார் நிரப்புவார்? பொ.ச. 36-ல் ஆபிரகாமின் வித்தின் பாகமாக ஆவதற்காக புறஜாதியார் தெரிந்துகொள்ளப்பட்டனர். தோட்டத்தில் வளரும் ஒலிவமரத்தில் காட்டு ஒலிவ கிளைகளை யெகோவா ஒட்டவைத்தது போன்று இது இருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட ஆபிரகாமின் வித்தை உண்டுபண்ணுகிறவர்களில் புறஜாதி ஜனங்களும் இருப்பர். புறஜாதி கிறிஸ்தவர்கள் இப்போது ‘ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளி’களாக முடியும்.—ரோமர் 11:17.
காட்டு ஒலிவ மரக்கிளையை தோட்டத்து ஒலிவ மரத்தில் ஒட்டவைப்பது என்பதை ஒரு விவசாயி நினைத்துக்கூட பார்க்கமாட்டான். அது “சுபாவத்திற்கு விரோதமாய்” இருக்கும். (ரோமர் 11:24) “நல்ல மரத்தை காட்டுமரத்தோடு ஒட்டவைத்தால் அராபியர் சொல்வது போல அது காட்டு மரத்தை கீழ்ப்படுத்தி அடக்கிவிடும், ஆனால் இதையே மாற்றிச் செய்தால் வெற்றி கிட்டாது” என்று தி லாண்ட் அண்டு தி புக் என்ற புத்தகம் விளக்குகிறது. இதைப் போன்றுதான் யெகோவா “புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்கு” கவனம்செலுத்திய போது யூத கிறிஸ்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 10:44-48; 15:14) கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றப்படுவது எந்த ஒரு தேசத்தையும் சார்ந்ததில்லை என்பதற்கு இது தெளிவான ஒரு அடையாளமாக இருந்தது. ஆம், “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:35.
ஒலிவ மரத்தின் உண்மையற்ற யூத “கிளைகள்” தரித்துப்போடப்பட்டனர். அது போல பெருமையினாலும் கீழ்ப்படியாமையினாலும் யெகோவாவின் தயவில் ஒருவர் நிலைத்திருக்கவில்லை என்றால், அவருக்கும் இதே கதிதான் என்பதை பவுல் விளக்கினார். (ரோமர் 11:19, 20) கடவுளுடைய தகுதியற்ற தயவை ஒருபோதும் அற்பமாய் எண்ணிவிடக்கூடாது என்பதை இது காட்டுகிறது.—2 கொரிந்தியர் 6:1.
எண்ணெய் பூசுதல்
ஒலிவ எண்ணெயை சொல்லர்த்தமாகவும் அடையாள அர்த்தமாகவும் இரண்டு விதமாக பயன்படுத்துவதைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. பண்டைய காலங்களில், காயங்களும் இரணங்களும் சீக்கிரமாய் ‘ஆறுவதற்கு எண்ணெய்’ பயன்படுத்தப்பட்டது. (ஏசாயா 1:6) இயேசுவின் உவமைகள் ஒன்றில் நல்ல அயலானாக இருந்த சமாரியன் எரிகோவுக்கு போகும் வழியில் அவன் சந்தித்த அந்த மனிதனின் காயங்களில் ஒலிவ எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து கட்டினான்.—லூக்கா 10:34.
ஒலிவ எண்ணெயை தலைக்குத் தேய்த்தால் அது புத்துயிரளிப்பதாகவும் இதமாகவும் இருக்கும். (சங்கீதம் 141:5) ஆவிக்குரிய நோயினால் பீடிக்கப்பட்டவனைக் கையாளும்போது கிறிஸ்தவ மூப்பர்கள் ‘கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசு’வார்கள். (யாக்கோபு 5:14) மூப்பர்கள் தரும் அன்புள்ள வேதப்பூர்வமான புத்திமதியும், ஆவிக்குரிய நோயில் இருக்கும் உடன்விசுவாசிகளுக்காக அவர்கள் செய்யும் ஊக்கமான ஜெபமும், காயத்தை ஆற்றும் ஒலிவ எண்ணெய்க்கு ஒப்பிடப்பட்டுள்ளது. எபிரெய மொழிவழக்கில் ஒரு நல்ல மனிதனை “சுத்தமான ஒலிவ எண்ணெய்’ என்று சில சமயங்களில் கூறுவார்கள் என்பது சுவாரஸ்யமாய் உள்ளது.
“தேவனுடைய ஆலயத்தில் பசுமையான ஒலிவமரம்”
மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளை மனதில்கொண்டு பார்த்தால், கடவுளுடைய ஊழியர்களை ஒலிவ மரங்களுக்கு ஒப்பிடுவது ஆச்சரியமாயில்லை. தாவீது, ‘தேவனுடைய ஆலயத்தில் பசுமையான ஒலிவமரமாக’ இருக்க விரும்பினார். (சங்கீதம் 52:8) வீட்டைச் சுற்றி இஸ்ரவேலரின் குடும்பங்கள் ஒலிவ மரங்களை வைத்திருந்தது போல, தாவீதும் யெகோவாவுக்கு அருகில் இருக்கவேண்டும், கடவுளுக்குத் துதியுண்டாக கனிகொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.—சங்கீதம் 52:9.
யெகோவாவுக்கு உண்மையாய் இருந்தபோது இரண்டு கோத்திர யூத ராஜ்யம், ‘நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பசுமையுமான ஒலிவ மர’த்துக்கு ஒப்பாக இருந்தது. (எரேமியா 11:15, 16) ஆனால் அவர்கள் ‘யெகோவாவின் வார்த்தைகளைக்கேட்க மாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க’ ஆரம்பித்தபோது அந்தப் பாக்கியமான நிலையை இழந்துபோனார்கள்.—எரேமியா 11:10.
தேவனுடைய ஆலயத்தில் பசுமையான ஒலிவ மரமாக ஆவதற்கு நாம் யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும், அவர் நமக்கு சிட்சை கொடுத்து “திருத்தம்” செய்யும்போது நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நாம் இன்னும் அதிகமாக கிறிஸ்தவ கனிகளைக் கொடுப்போம். (எபிரெயர் 12:5, 6) வறட்சியான காலத்தில் பிழைத்திருக்க ஒலிவ மரத்துக்கு ஆழமாய் படர்ந்த வேர்கள் தேவையாக இருப்பது போலவே சோதனைகளையும் துன்புறுத்துதல்களையும் சகித்திருக்க நம்முடைய ஆவிக்குரிய வேர்களை பலப்படுத்துவது அவசியம்.—மத்தேயு 13:21; கொலோசெயர் 2:6, 7.
ஒலிவ மரம் ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவனுக்கு அடையாளமாக இருக்கிறது. இவர் உலகத்துக்கு அறியப்படாதவராய் இருக்கலாம். ஆனால் கடவுள் அவரை அங்கீகரிக்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் இந்த ஒழுங்குமுறையில் மரிக்க நேர்ந்தால் அவர் வரப்போகிற புதிய உலகில் மீண்டும் வாழ்வார்.—2 கொரிந்தியர் 6:9; 2 பேதுரு 3:13.
வருடந்தோறும் கனிகொடுத்துக் கொண்டே இருக்கும் பட்டுப்போகாத இந்த ஒலிவ மரம் கடவுளுடைய வாக்குறுதியை நமக்கு நினைப்பூட்டுகிறது: “விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:22) அந்தத் தீர்க்கதரிசன வாக்குறுதி கடவுளுடைய புதிய உலகில் நிறைவேற்றமடையும்.—2 பேதுரு 3:13.
[அடிக்குறிப்புகள்]
a பொதுவாக இந்தப் புதிய இளங்கிளைகள் தாய்மரத்தின் பலத்தை எல்லாம் உறிஞ்சிவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வருடமும் வெட்டிவிடுவார்கள்.
[பக்கம் 25-ன் படம்]
ஸ்பெய்ன், அலகான்டி மாகாணம், ஜேசியாவில் காணப்படும் முறுக்கேறிய பழங்காலத்திய அடிமரம்
[பக்கம் 26-ன் படங்கள்]
ஸ்பெய்ன், கிரனடா மாகாணம், ஒலிவமரத் தோப்புகள்
[பக்கம் 26-ன் படம்]
எருசலேமின் மதில்களுக்கு வெளியே இருக்கும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு ஒலிவ மரம்
[பக்கம் 26-ன் படம்]
ஒலிவ மரத்தில் கிளைகளை ஒட்டவைப்பது பற்றி பைபிள் குறிப்பிடுகிறது
[பக்கம் 26-ன் படம்]
இந்தப் பழங்கால மரத்தைச் சுற்றியிருப்பது ஒலிவ கிளைகளின் கன்றுகள்