பேட்டி | ஃபென்ங்-லிங் யாங்
நுண்ணுயிரியல் வல்லுநர் தன் மதநம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்
ஃபென்ங்-லிங் யாங், தாய்வான் நாட்டிலுள்ள தைபீ நகரின் மத்திய ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சியாளராய்ப் பணிபுரிகிறார். அவருடைய ஆராய்ச்சிகள், அறிவியல் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ஆரம்பத்தில் அவர் பரிணாமக் கொள்கையை நம்பினார். பிறகு, அவருடைய நம்பிக்கையை மாற்றிக்கொண்டார். அவருடைய அறிவியல் ஆராய்ச்சியைப்பற்றியும் மதநம்பிக்கையைப்பற்றியும் விழித்தெழு! நிருபரிடம் மனம் திறக்கிறார்.
உங்களைப்பற்றி சொல்லுங்கள்.
நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். தைபீ நகருக்குப் பக்கத்திலிருக்கும் ஓர் ஊரில் வளர்ந்தேன். அம்மாவுக்கு எழுத படிக்கவே தெரியாது. பிழைப்புக்காகப் பன்றிகளை வளர்த்தோம், காய்கறிகளைப் பயிர்செய்தோம். அங்கு அடிக்கடி வெள்ளம் வந்ததால் பயிர்கள் நாசமாகிவிடும். கடினமாக உழைக்கவும் மற்றவர்களுக்கு உதவவும் அப்பா அம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள்.
மதப்பற்றுள்ள குடும்பத்தில் வளர்ந்தீர்களா?
நாங்கள் தாவோ மதத்தில் இருந்தோம். ‘வான் கடவுளுக்கு’ பூஜைகள் செய்தாலும், அந்தக் கடவுளைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ‘நாம ஏன் கஷ்டப்படுறோம்? ஜனங்க ஏன் சுயநலமா இருக்காங்க?’ என்று யோசிப்பேன். அதைத் தெரிந்துகொள்ள தாவோ மதம், புத்த மதம், மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய வரலாறு பற்றியெல்லாம் படித்தேன். சில சர்ச்சுகளுக்கும் போனேன். எங்கு தேடியும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை.
நீங்கள் ஏன் அறிவியல் படித்தீர்கள்?
எனக்குக் கணிதப் பாடம் என்றால் ரொம்ப பிடிக்கும். நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கைச் சட்டங்கள் அருமையாக வேலை செய்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். மிகச் சிறிய நுண்ணுயிரிகளிலிருந்து பிரமாண்டமான பிரபஞ்சம்வரை எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கும், கட்டமைப்பும் இருக்கிறது. இதற்குக் காரணம் அதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இந்தச் சட்டங்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்.
பரிணாமக் கொள்கையை ஏன் நம்பினீர்கள்?
பள்ளிப் படிப்பிலிருந்தே பரிணாமக் கொள்கையைப்பற்றி மட்டும்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். நான் உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்ததால், பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.
நான் உயிரியல் ஆராய்ச்சியாளராய் இருந்ததால், பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்
நீங்கள் ஏன் பைபிள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
1996-ல் மேற்படிப்புக்காக ஜெர்மனிக்குப் போனேன். 1997-ல் சீமோன் என்ற யெகோவாவின் சாட்சியை அங்கு சந்தித்தேன். அந்தப் பெண் என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் பைபிளிலிருந்து பதிலளிப்பதாகச் சொன்னார். ‘வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி பைபிள்ல இருக்கு’ என்று அவர் சொன்னவுடன் அதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். இதனால், நான் தினமும் காலை 4:30 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் பைபிள் படிப்பேன். அதன்பின், அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்க “வாக்கிங்” போவேன். அடுத்த வருடமே நான் முழு பைபிளையும் படித்து முடித்தேன். பைபிளில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சொன்ன விஷயங்கள் அப்படியே நடந்திருப்பதைப்பற்றி வாசித்தபோது நான் மலைத்துப்போனேன். கடைசியில், பைபிள் கடவுள் தந்த புத்தகம் என்று உறுதியாக நம்பினேன்.
உயிர் எப்படித் தோன்றியது என நினைத்தீர்கள்?
1990-களின் முடிவில் இதைப்பற்றி நான் தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் மூலக்கூறு உயிரியல் நிபுணர்கள், உயிரின் வேதியியல் செயல்பாடுகளைப் பார்த்து வாயடைத்து போனார்கள். அதுவரை, செல்களிலுள்ள புரதங்கள்தான் (புரோட்டீன்) படுசிக்கலான மூலக்கூறுகள் என்று விஞ்ஞானிகள் நினைத்தார்கள். ஆனால், இந்த புரோட்டீன்கள் ஒன்றுசேர்ந்து மூலக்கூறு இயந்திரங்களாகச் செயல்படுவதுதான் மிகவும் சிக்கலானது என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஒரு மூலக்கூறு இயந்திரத்தில், 50-க்கும் அதிகமான புரோட்டீன்கள் ஒன்றுசேர்ந்து செயல்படுகின்றன. ஒரு “சாதாரண” செல் செயல்படுவதற்குக்கூட பல்வேறு மூலக்கூறு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. உதாரணத்திற்கு சக்தியை உற்பத்தி செய்வது, தகவலைச் சேமித்துவைப்பது, சவ்வுகளுக்கு இடையே நடக்கும் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்ய பல மூலக்கூறு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
நீங்கள் என்ன முடிவுக்கு வந்தீர்கள்?
‘இந்த புரோட்டீன் இயந்திரங்கள் எப்படி இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கு?’ என்ற கேள்வி என் மனதில் எழும்பியது. செல்லுக்குள் நடக்கும் செயல்பாடுகள் இவ்வளவு சிக்கலாய் இருப்பதை அறிந்த அநேக விஞ்ஞானிகள் அப்போது அதே கேள்வியைக் கேட்டார்கள். ஐக்கிய மாகாணத்திலுள்ள உயிர்வேதியியல் பேராசிரியர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். செல்லில் உள்ள மூலக்கூறு இயந்திரங்கள் படுசிக்கலாக இருப்பதால் அவைத் தற்செயலாகத் தோன்றியிருக்க முடியாது என்று அதில் விளக்கியிருந்தார். நானும்கூட, உயிர் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டேன்.
‘இந்த புரோட்டீன் இயந்திரங்கள் எப்படி இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கு?’ என்ற கேள்வி என் மனதில் எழும்பியது
நீங்கள் ஏன் ஒரு யெகோவாவின் சாட்சியானீர்கள்?
சீமோனுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், எனக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் 56 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார். ஜெர்மனியின் நாசி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்காததால், யெகோவாவின் சாட்சிகள் சிலர் சித்திரவதை முகாம்களில் தள்ளப்பட்டதைக் கேள்விப்பட்டேன். அவர்கள் காட்டிய தைரியம் என் மனதை ரொம்பவே கவர்ந்தது. கடவுள்மீது சாட்சிகளுக்கு இருந்த அன்பைப் பார்த்தபோது, நானும் அவர்களைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
கடவுள்மீது நம்பிக்கை வைத்ததால் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது?
முன்பைவிட இப்போது நான் சந்தோஷமாக இருப்பதாக என்னுடன் வேலைபார்ப்பவர்கள் சொல்கிறார்கள். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததை நினைத்து எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது. அதனால், என்னைப்பற்றியும் என் பெற்றோரைப்பற்றியும் நான் யாரிடமும் சொன்னதில்லை. ஆனால், கடவுள் சமூக அந்தஸ்து பார்ப்பதில்லை என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொண்டேன். சொல்லப்போனால், என்னைப்போல் இயேசுவும் ஓர் ஏழைக் குடும்பத்தில்தான் பிறந்தார். அதனால் இப்போது, நான் என் பெற்றோரை அன்பாகக் கவனித்துக்கொள்கிறேன், என் நண்பர்களிடம் அவர்களை சந்தோஷமாக அறிமுகப்படுத்துகிறேன். ▪ (g14-E 01)