யாருடைய கைவண்ணம்?
ஈடிணையில்லா தகவல் களஞ்சியம்—டிஎன்ஏ
கம்ப்யூட்டரை உபயோகிப்பவர்கள் ஏராளமான டிஜிட்டல் தகவலைச் சேமித்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் முறையில் தகவலைச் சேமிக்கும் அதிநவீன வழியைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இயற்கையின் உதவியை நாடுகிறார்கள். எப்படி? சிறந்த விதத்தில் தகவலைப் பதிவு செய்யும் டிஎன்ஏ-வை (DNA) காப்பியடிப்பதன் மூலம்.
சிந்தித்துப் பாருங்கள்: செல்களில் காணப்படும் டிஎன்ஏ-ல் கோடிக்கணக்கான தகவல் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு, யூரோப்பியன் பையோயின்ஃபோர்மேட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூடை சேர்ந்த நிக் கோல்டுமென் சொல்கிறார்: ‘வுலி மெமொத்தின் (இப்போது அழிந்துபோயிருக்கும் யானை இனம்) எலும்பிலிருந்து டிஎன்ஏ-வை எடுக்க முடியும் . . . அதில் இருக்கும் தகவலைப் புரிந்துகொள்ளவும் முடியும். அது கண்ணுக்குத் தெரியாத அளவு சிறியதாக இருந்தாலும் அதில் எக்கச்சக்கமான தகவல்கள் இருக்கின்றன. அதைச் சேமித்து வைப்பதற்கு மின்சாரம் தேவையில்லை, அதைப் பாதுகாப்பதும் இடம் மாற்றுவதும் ரொம்பவே சுலபம்.’ அப்படியானால், மனிதர்களால் உருவாக்கப்பட்ட தகவலை டிஎன்ஏ-ல் சேமித்து வைக்க முடியுமா? முடியும் என்றே ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
டிஜிட்டல் முறையில் தகவலைச் சேமிப்பது போலவே, செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட டிஎன்ஏ-ல் எழுத்து வடிவாக, படங்களாக, ஆடியோ ஃபைல்களாக விஞ்ஞானிகள் தகவலைச் சேமித்து இருக்கிறார்கள். பதிவு செய்த அந்தத் தகவல் டிஎன்ஏ-ல் துல்லியமாய் இருந்தது, புரிந்துகொள்ளவும் முடிந்தது. 30,00,000 சிடிகளில் இருக்கும் தகவலை 1 கிராம் செயற்கை டிஎன்ஏ-ல் பதிவு செய்ய முடியும், அதுவும் நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பாதுகாக்கவும் முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அப்படியென்றால், இந்த முழு உலகத்தில் இருக்கும் டிஜிட்டல் தகவலையும் இதே விதத்தில் சேமித்து வைக்க முடியும். அதனால்தான் டிஎன்ஏ “ஈடிணையில்லா தகவல் களஞ்சியம்” என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? டிஎன்ஏ என்ற “தகவல் களஞ்சியம்” பரிணாமத்தால் வந்திருக்குமா, அல்லது அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா?