மார்பகப் புற்றுநோய் மேற்கொள்ள... மீண்டுவர...
மார்பகப் புற்றுநோய் மேற்கொள்ள... மீண்டுவர...
கவிதாவுக்கு 40 வயது. a ஆரோக்கியமான பெண்மணி. அவருடைய பரம்பரையில் யாருக்குமே மார்பக கேன்சர் கிடையாது. அதோடு, இந்த நோய் வருவதற்கான வேறெந்தக் காரணிகளும் அவருக்கு இருக்கவில்லை. அவர் தவறாமல் மேமோகிராம்கூட (mammogram) செய்துகொண்டார். அதில் கேன்சர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனால், ஒருநாள் குளிக்கும்போது அவர் தன்னுடைய மார்பகங்களைப் பரிசோதனை செய்ததில், ஒரு கட்டி இருப்பது தெரிந்தது. டாக்டரிடம் காட்டியபோது அது கேன்சர் கட்டி என்பது தெரிய வந்தது. அதற்கு என்னென்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி டாக்டர் விளக்கியபோது கவிதாவும் அவரது கணவரும் அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்திருந்தார்கள்.
முன்பெல்லாம், ஒரு பெண்ணுக்கு மார்பக கேன்சர் வந்தால், ரேடிகல் மாஸ்டெக்டமி (radical mastectomy) செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று டாக்டர் சொல்வார். அதென்ன ரேடிகல் மாஸ்டெக்டமி? அது நம் உடல் உறுப்பைச் சிதைக்கும் ஒரு அறுவை சிகிச்சை. அதில், மார்பகம், மார்பிலும் அக்குளிலும் உள்ள நிணநீர் முடிச்சுகள், மார்புத் தசைகள் ஆகியவை நீக்கப்பட்டன. இது போதாதென்று கீமோதெரபியும் ரேடியேஷன் சிகிச்சையும் வேதனையைக் கூட்டின. இதனால்தான், இந்த நோயைவிட இதற்கான சிகிச்சையை நினைத்து நிறையப் பேர் பயப்பட்டார்கள்.
மார்பக கேன்சருக்கு எதிரான போராட்டம் ஒரு தொடர் போராட்டமாகவே இருந்துவருகிறது. ஒருபக்கம் இந்தக் கொலைகார கேன்சர் செல்களோடு மல்லுக்கட்டி அதை ஒழித்துக்கட்ட வேண்டும்; மறுபக்கம் நம் உடல் உறுப்பைச் சிதைக்காமல்... கடுமையான பக்கவிளைவுகள் வராமல்... தடுக்க வேண்டும். கவிதாவைப் போல இன்றுள்ள மார்பக கேன்சர் நோயாளிகளுக்கு வெவ்வேறு விதமாக சிகிச்சை அளிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. b அதோடு, தொடர்ச்சியாக செய்யப்படுகிற மருத்துவ ஆய்வுகளும், வெளிவருகிற மீடியா அறிக்கைகளும் நம்பிக்கை அளிக்கின்றன; புதுப்புது சிகிச்சைகள், முன்கூட்டியே அறிவதற்கான டெஸ்டுகள், சத்துள்ள உணவுகள் போன்றவற்றால் இந்த நோயை முழுமையாக விரட்டியடிக்க முடியும் என்று அவை சொல்கின்றன.
என்னதான் மருத்துவம் முன்னேறியிருந்தாலும், இன்றும்கூட பெண்களின் உயிரைப் பறிக்கும் ஒரு முக்கியக் கொலையாளியாக மார்பக கேன்சர் இருக்கிறது. c வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். முன்பெல்லாம் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அரிதாகவே தென்பட்ட இந்நோய் இப்போது அநேகரைத் தாக்கியிருக்கிறது. அதோடு, இறப்பு விகிதமும் அதிகரித்திருக்கிறது. ஏன்? “நிறைய பேர் ஆரம்ப கட்டத்துல இதை அலட்சியம் பண்ணிடறாங்க. முத்திப் போனதுக்கு அப்புறம்தான் எங்ககிட்ட வர்றாங்க” என்று சொல்கிறார் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு டாக்டர்.
வயதான பெண்களைத்தான் இந்த நோய் அதிகம் தாக்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 80 சதவீத பெண்கள் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். ஆனால், ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த கேன்சரைக் குணப்படுத்த முடியும். சொல்லப்போனால், இந்த நோய் தாக்கிய பெண்களில் 97 சதவீதம் பேர் ஐந்து வருடங்களுக்குப் பிறகும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்; இவர்களில் கவிதாவும் ஒருவர். ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்ததும், உடலின் மற்றப் பாகங்களுக்குப் பரவுவதற்கு முன்பே சிகிச்சை எடுத்துக்கொண்டதும்தான் இதற்கு முக்கியக் காரணம்.
மார்பக கேன்சர் என்றால் என்ன?
பொதுவாக மார்பக கேன்சருக்கு முதல் அறிகுறி மார்பகத்தில் திடீரென வருகிற ஒரு கட்டிதான்; கவிதாவுக்கும் அப்படித்தான் வந்தது. அதற்காக எல்லாக் கட்டியையும் கேன்சர் கட்டி என்று நினைத்துவிடக்கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட கட்டிகளில் சுமார் 80 சதவீதம் தீங்கற்றவை; அதில் பெரும்பாலானவை வெறும் நீர்கட்டிகள்தான்.
மார்பக கேன்சர் எப்படி வருகிறது? நம் மார்பகத்திலுள்ள ஒரு செல் மட்டும் ஜெட் வேகத்தில் பிரிந்து வளரத் தொடங்கும்; பின்பு அது படிப்படியாக ஒரு கட்டியாக மாறும். அந்த செல்கள் எப்போது மற்ற திசுக்களை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறதோ அப்போதுதான் அது கேன்சர் கட்டியாக மாறுகிறது. சில கட்டிகள் வேகமாக வளரும். ஆனால் சில கட்டிகள், பத்து வருடங்கள் ஆனால்கூட வெளியே தெரியாது.
கவிதாவுக்கு வந்திருக்கிற கட்டி கேன்சர் கட்டிதானா என்பதைத் தெரிந்துகொள்ள டாக்டர் ஒரு மெல்லிய ஊசியால் அந்தக் கட்டியிலிருந்து திசுக்களை எடுத்தார். அதைப் பரிசோதித்துப் பார்த்தபோது கேன்சர் கட்டி என்பது தெரியவந்தது. அதற்குப் பின்பு, அந்தக் கட்டியும் அதைச் சுற்றியிருந்த மார்பகத் திசுக்களும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. அதோடு, அந்தக் கட்டியின் அளவு, வகை, எந்தளவுக்குப் பரவியுள்ளது, எந்த நிலையில் உள்ளது என்பதெல்லாம் கண்டறியப்பட்டது.
நிறைய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கூடுதல் சிகிச்சை கொடுக்கப்படுகிறது; இல்லாவிட்டால் கேன்சர் மீண்டும் வருவதற்கும், உடலில் பரவுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, கட்டியிலிருந்த கேன்சர் செல்கள் இரத்த ஓட்டத்தின் மூலமாகவோ, நிணநீர் மண்டலம் வழியாகவோ மற்ற இடங்களுக்கும் பரவி மறுபடியும் வளரத் தொடங்கலாம். அது நம்முடைய மூளை, ஈரல், எலும்பு மஜ்ஜை அல்லது நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் பரவும்போதுதான் (metastasis) உயிர்க்கொல்லி நோயாக மாறுகிறது.
கவிதாவுக்கு ரேடியேஷனும் கீமோதெரபியும் கொடுக்கப்பட்டது. கேன்சர் செல்கள் கட்டியைச் சுற்றியோ, அல்லது உடலில் மற்ற பாகங்களிலோ பரவியிருந்தால் அதை ஒழித்துக்கட்ட இவை உதவின. ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அவருடைய கேன்சர் கட்டிக்குத் தீனிபோட்டது. எனவே, புதிய கேன்சர் செல்கள் வளருவதைத் தடுக்க அவருக்கு ஆண்டிஹார்மோனல் தெரபி (antihormonal therapy) அளிக்கப்பட்டது.
இன்று மார்பக கேன்சருக்கு அதிநவீன சிகிச்சை முறைகள் பல வந்துவிட்டன. அதனால், நோயாளியின் வயது, உடல்நலம், இதற்கு முன்பு அவருக்கு (அல்லது குடும்பத்தில் யாருக்காவது)
இருந்த கேன்சர் கட்டிகள், இப்போதுள்ள கேன்சர் கட்டி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வெவ்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஆர்லெட் என்ற பெண்ணை எடுத்துக்கொள்வோம். அவருடைய கேன்சர் பால் குழாயைத் தாண்டி பரவுவதற்கு முன்பே கண்டறியப்பட்டது. இதனால், அவருக்கு லம்பெக்டமி (lumpectomy) செய்யப்பட்டது (லம்பெக்டமி என்பது ஒரு அறுவை சிகிச்சை; அதில் மார்பக கட்டி, அதைச் சுற்றியுள்ள சில சாதாரண திசுக்கள் மட்டுமே நீக்கப்படும்). அவருக்கு மார்பகங்களை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆலிஸ் என்பவருக்குக் கட்டி சுருங்குவதற்காக முன்னதாகவே கீமோதெரபி கொடுக்கப்பட்டது, பின்பு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது. ஜேனஸுக்கு கட்டியும் சென்டினல் நிணநீர் முடிச்சும் மட்டும் நீக்கப்பட்டது; பொதுவாக, கட்டியிலிருந்து வடியும் திரவம் முதலில் சென்டினல் நிணநீர் முடிச்சில்தான் சேகரிக்கப்படுகிறது. அதில் கேன்சர் செல்கள் இல்லாததால், மற்ற நிணநீர் முடிச்சுகளை எடுக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை. இதனால், அவருக்கு லிம்பெடீமா (lymphedema) வராமல் தடுக்கப்பட்டது. லிம்பெடீமா என்பது நிறைய நிணநீர் முடிச்சுகளை எடுப்பதால் புஜத்தில் ஏற்படுகிற ஒருவித அசௌகரியமான வீக்கம்.மார்பக கேன்சரைப் பற்றி இன்று ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம்: அது ஏன், எப்படி வருகிறது?
காரணங்கள்
மார்பக கேன்சர் ஏன் வருகிறது என்பது இன்னும் ஒரு புதிராகத்தான் உள்ளது. விமர்சகர்கள் சொல்லும் குறை என்னவென்றால்: மார்பக கேன்சருக்கான சிகிச்சைகளுக்கும் பரிசோதனை முறைகளுக்கும்தான் அதிக ஆராய்ச்சி செய்யப்படுகிறது, ஏனென்றால் அதில் பெரும் லாபம் கிடைக்கிறது; ஆனால், இது ஏன் வருகிறது, எப்படித் தடுப்பது என்பதைப் பற்றி அந்தளவு ஆராய்ச்சி செய்யப்படுவதில்லை. இருந்தாலும், விஞ்ஞானிகள் முக்கியமான சில காரணங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சில செல்களின் சிக்கலான, அடுக்கடுக்கான வளர்ச்சியால் மார்பக கேன்சர் ஏற்படுகிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நல்ல செல்கள் கெட்ட செல்களாக மாறுவதற்குப் பழுதடைந்த ஒரு மரபணுதான் காரணம். செல்கள் கட்டுக்கடங்காமல் பெருகவும், மற்ற திசுக்களை ஆக்கிரமிக்கவும், நோய் எதிர்ப்பு செல்களிடம் சிக்காமல் தப்பித்துக்கொள்ளவும், முக்கிய உறுப்புகளில் திருட்டுத்தனமாக நுழைந்து தாக்கவும்கூட இதே மரபணுதான் காரணம்.
இந்தப் பழுதடைந்த மரபணு எங்கிருந்து வந்தது? 5 முதல் 10 சதவீத நோயாளிகளுக்குப் பிறக்கும்போதே இந்த மரபணு இருந்திருக்கிறது. அதனால் இந்த நோய் வருவதற்கான ஆபத்து இவர்களுக்கு அதிகம். ஆனால், நிறைய பேருக்கு வெளிக் காரணிகளால் மரபணு பழுதடைவதாகத் தெரிகிறது. இதில் முக்கியமான காரணிகள் ரேடியேஷன், ரசாயனங்கள் போன்றவை. எதிர்காலத்தில் செய்யப்படும் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்தலாம்.
சிலவகை மார்பக கேன்சர் வருவதற்கு மற்றொரு காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனாக இருக்கலாம். அதனால்தான், சிறுவயதிலேயே பருவமடையும் பெண்கள்... வழக்கமாக மாதவிலக்கு நிற்க வேண்டிய வயதைத் தாண்டியும் மாதவிலக்கு நிற்காதவர்கள்... முதல் குழந்தையை மிகத் தாமதமாகப் பெற்றுக்கொள்பவர்கள் அல்லது குழந்தையே இல்லாதவர்கள்... ஹார்மோன் மாற்றீடு சிகிச்சை செய்துகொண்டவர்கள்... ஆகியோருக்கு இந்த நோய் வரும் ஆபத்து அதிகம். அதேபோல் மாதவிலக்கு நின்ற பெண்கள் குண்டானாலும் இந்த நோய் வரும் ஆபத்து அதிகம். ஏனென்றால், மாதவிலக்கு நிற்கும்போது ஹார்மோன் உற்பத்தியை சினைப்பை (ovaries) நிறுத்திவிடுகிறது; ஆனால் கொழுப்பு செல்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. அதோடு, இன்சுலின் என்ற ஹார்மோன் உடலில் அதிக அளவில் இருந்தாலும் இந்நோய் வர வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, தூக்கத்தைத் தூண்டுவிக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன் குறைவுபட்டாலும் இந்நோய் வரும்; இரவு நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த ஹார்மோன் குறைவாகவே சுரக்கும்.
மார்பக கேன்சருக்கு வலிகுறைந்த, மிகச்சிறந்த சிகிச்சை முறைகள் எதிர்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறதா? ஆராய்ச்சியாளர்கள் புதுப்புது சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள்; நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தி கேன்சர் செல்களைக் கொல்வதற்கான சிகிச்சைகளைக் கண்டுபிடித்துவருகிறார்கள்; கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தூண்டுகிற குறிப்பிட்ட மரபணுக்களையும் புரோட்டீன்களையும் தடுக்க மருந்துகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள். அதேசமயத்தில், எக்ஸ்ரே, ஸ்கேனிங் போன்றவற்றைச் செய்யும் தொழில்நுட்பத்தில் (imaging technologies) முன்னேற்றம் வந்தால், கேன்சர் செல்களை மட்டும் குறிவைத்து ரேடியேஷனை இன்னும் திறமையாக அளிக்க டாக்டர்களால் முடியும்.
இந்த நோயை விரட்டியடிக்க விஞ்ஞானிகள் மற்ற விதங்களிலும் போராடி வருகிறார்கள்; கேன்சர் செல்கள் எப்படிப் பரவுகிறது என்ற புதிருக்கு விடைகாண... கீமோதெரபிக்கே மசியாத கேன்சர் செல்களைத் திறமையாக வீழ்த்த... செல்-வளர்ச்சி சிக்னல்களைத் தடுத்துநிறுத்த... ஒவ்வொரு கேன்சர் கட்டிக்கும் பிரத்தியேக சிகிச்சை அளிக்க... அவர்கள் போராடி வருகிறார்கள்.
இருந்தாலும், இந்த உலகிலிருந்து மனிதர்களால் நோயை முழுமையாக விரட்டியடிக்க முடியாது, மரணத்தையும் தடுத்துநிறுத்த முடியாது. (ரோமர் 5:12) ஆனால், இந்தக் கசப்பான உண்மையை நம் படைப்பாளரால் மட்டுமே பொய்யாக்க முடியும். அவர் அதைச் செய்வாரா? அதில் என்ன சந்தேகம்! ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ ஒரு காலம் வரும் என்று பைபிள் உறுதியளிக்கிறது. d (ஏசாயா 33:24) நோயே இல்லாத பூமியில் வாழ்வது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்! (g11-E 08)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b எந்தவொரு சிகிச்சை முறையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை.
c மார்பக கேன்சர் ஆண்களை அரிதாகவே தாக்குகிறது.
d கடவுள் தந்த இந்த வாக்குறுதியைப் பற்றி பைபிளிலிருந்து தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 26, 27-ன் பெட்டி/படம்]
அறிகுறிகள்
ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது ரொம்ப முக்கியம்; ஆனால், இளம் பெண்களுக்குச் செய்யப்பட்ட மார்பகப் பரிசோதனை மற்றும் மேமோகிராம் அந்தளவுக்குத் துல்லியமானதாக இல்லாமல் போகலாம் என்று சில ஆய்வுகள் எச்சரிக்கை செய்கின்றன. இதனால், அநாவசியமான சிகிச்சையும் மனக்கவலையும்தான் மிஞ்சியிருக்கின்றன. என்றாலும், மார்பகத்திலும் நிணநீர் முடிச்சுகளிலும் ஏதாவது மாற்றம் தெரிந்தால் பெண்கள் அதை அலட்சியம் செய்துவிடக்கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதோ சில அறிகுறிகள்:
● அக்குள் அல்லது மார்பகத்தில் கட்டியோ தடிப்போ வந்தால்
● மார்புக் காம்பில் தாய்ப்பாலைத் தவிர வேறு ஏதாவது திரவம் கசிந்தால்
● மார்பகத் தோலின் நிறத்திலோ தன்மையிலோ மாற்றம் தெரிந்தால்
● மார்புக் காம்பு உள்ளிழுக்கப்பட்டிருந்தால் அல்லது காம்பில் வலி இருந்தால்
[பக்கம் 27-ன் பெட்டி]
உங்களுக்கு இந்த கேன்சர் வந்தால்...
● சிகிச்சை முடியவும் நோய் குணமாகவும் ஒரு வருஷத்திற்கும் மேல் ஆகலாம் என்பதை மனதில் வையுங்கள்.
● முடிந்தால், உங்களுடைய நம்பிக்கைகளை மதிக்கிற... தேவைகளைப் புரிந்துகொள்கிற... திறமையான டாக்டர்களிடம் காட்டுங்கள்.
● யாருக்கெல்லாம் சொல்லலாம், எப்போது சொல்லலாம் என்பதைக் குடும்பமாகத் தீர்மானியுங்கள். இப்படிச் செய்தால், உங்கள் நண்பர்கள் உங்கள்மீது அன்பும் அக்கறையும் காட்டுவார்கள், உங்களுக்காகவும் உங்களுடன் சேர்ந்தும் ஜெபம் செய்வார்கள். —1 யோவான் 3:18.
● மனதைத் தைரியமாக வைத்துக்கொள்ள பைபிள் வாசியுங்கள், ஜெபம் செய்யுங்கள், படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள்.—ரோமர் 15:4; பிலிப்பியர் 4:6, 7.
● மார்பக கேன்சரிலிருந்து மீண்டு வந்தவர்களோடு பேசினால் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.—2 கொரிந்தியர் 1:7.
● நாளைக்கு என்ன நடக்குமோ என்று நினைத்து கவலைப்படாமல் அந்தந்த நாளை பற்றி மட்டும் யோசியுங்கள். “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும்” என்று இயேசுவும் சொன்னார்.—மத்தேயு 6:34.
● உங்கள் சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிற வேலைகளைச் செய்யாதீர்கள். போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
[பக்கம் 28-ன் பெட்டி/படம்]
டாக்டரிடம் பேசும்போது...
● மார்பக கேன்சர் சம்பந்தமான சில முக்கிய மருத்துவப் பெயர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
● டாக்டரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். டாக்டர் சொல்லும் குறிப்புகளை எழுதுவதற்கு உதவியாக, உங்கள் துணையை அல்லது நண்பரை அழைத்துச் செல்லுங்கள்.
● டாக்டர் சொல்வது உங்களுக்குப் புரியாவிட்டால், அதை இன்னும் விளக்கமாகச் சொல்லும்படி அவரிடம் கேளுங்கள்.
● இந்த வகை கேன்சரால் பாதிக்கப்பட்ட எத்தனை நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்திருக்கிறார் என்று கேளுங்கள்.
● முடிந்தால், வேறொரு டாக்டரின் கருத்தையும் கேளுங்கள்.
● இரண்டு டாக்டர்களின் கருத்தும் ஒத்துப்போகாவிட்டால், இந்த வகை கேன்சரைக் குணப்படுத்துவதில் இந்த இரண்டு பேரில் யாருக்கு அதிக அனுபவம் இருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்கு வந்திருக்கிற கேன்சரைப் பற்றி இரண்டு டாக்டர்களையும் கலந்துபேசச் சொல்லுங்கள். இல்லாவிட்டால், மூன்றாவதாக வேறொரு டாக்டரின் கருத்தையும் கேளுங்கள்.
[பக்கம் 29-ன் பெட்டி/படங்கள்]
பக்கவிளைவுகளைச் சமாளிக்க...
சிலவகை கேன்சருக்குச் சிகிச்சை எடுப்பதால் வரக்கூடிய பக்கவிளைவுகள்: குமட்டல், முடி உதிர்தல், மிதமிஞ்சிய சோர்வு, வலி, கைகால்களில் கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போன உணர்வு, தோலில் அலர்ஜி. இத்தகைய பக்கவிளைவுகளைக் குறைக்க இதோ சில எளிய வழிகள்:
● நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நன்கு சாப்பிடுங்கள்.
● எப்போது சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள், எப்போது சோர்வாக இருக்கிறீர்கள் என்றும் எந்தெந்த உணவு ஒத்துக்கொள்கிறது, எது ஒத்துக்கொள்வதில்லை என்றும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
● குமட்டலையும் வலியையும் குறைக்க ஏதாவது மருந்து சாப்பிடலாம், அக்குபஞ்சர் அல்லது மசாஜ் செய்யலாம்.
● தெம்பாக இருக்கவும், எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அளவாக உடற்பயிற்சி செய்யுங்கள். e
● அடிக்கடி படுத்து ஓய்வெடுங்கள். ஆனால், ரொம்ப நேரம் படுத்துக்கொண்டிருந்தால் சோர்வு திகமாகுமே தவிர குறையாது என்பது நினைவிருக்கட்டும்.
● உங்கள் சருமம் உலர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இறுக்கமான உடைகளை போடாதீர்கள். வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
[அடிக்குறிப்பு]
e கேன்சர் நோயாளிகள் டாக்டரிடம் கேட்டுத்தான் எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.
[பக்கம் 30-ன் பெட்டி]
பிரியமானவருக்கு கேன்சர் வந்தால்...
அவருக்கு நீங்கள் எப்படிப் பக்கபலமாக இருக்கலாம்? “சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள்” என்ற பைபிள் நியதியைப் பின்பற்றுங்கள். (ரோமர் 12:15) உங்கள் அன்பையும் அக்கறையையும் காட்ட ஃபோன் செய்யுங்கள், கடிதம் எழுதுங்கள், வாழ்த்துமடல் அனுப்புங்கள், ஈ-மெயில் பண்ணுங்கள், அடிக்கடி போய் கொஞ்ச நேரம் செலவிடுங்கள். அவருடன் சேர்ந்து ஜெபம் செய்யுங்கள், பைபிளிலுள்ள ஆறுதலான வசனங்களை வாசியுங்கள். “கேன்சர் வந்து செத்துபோனவங்களப் பத்தி பேசாதீங்க, இன்னும் உயிரோட இருக்கிறவங்கள பத்தி மட்டுமே பேசுங்க” என்று சொல்கிறார் பெரில். கேன்சரிலிருந்து மீண்டு வந்த ஜேனஸ் சொல்கிறார்: “உங்க நண்பர பார்க்கும்போது அப்படியே அணைச்சுக்கோங்க, அதுபோதும். கேன்சரைப் பத்தி அவங்களா பேச்செடுத்தா மட்டும் பேசுங்க.” குறிப்பாகக் கணவர், நோயால் வாடும் மனைவிமீது அன்பைப் பொழிவது ரொம்பவே முக்கியம்.
ஜெஃப் சொல்கிறார்: “கேன்சர் என்ற விஷயத்தையே அப்பப்ப மூட்டகட்டி வெச்சிடுவோம். கேன்சர், கேன்சர்னு எப்ப பார்த்தாலும் அத பத்தியே பேசக்கூடாதுன்னு என் மனைவி நெனைச்சா. அதனால, நாங்க அப்பப்ப ஒருநாள் முழுக்க அதப் பத்தி பேசாம இருக்கனும்னு தீர்மானிச்சோம். அதுக்கு பதிலா, மனசுக்கு இதமாக இருக்கிற விஷயங்கள பத்தி பேசினோம். அந்த மாதிரி நேரத்துல கேன்சருக்கு லீவ் விட்டுட்ட மாதிரி இருக்கும்.”
[பக்கம் 30-ன் பெட்டி]
மனம் திறக்கிறார்கள்
கேன்சர் என்று தெரிந்ததும்...
ஷேரன்: ஒரு நிமிஷத்துல எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. “என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுனு” சொன்னேன்.
ரொம்ப கஷ்டமான நேரத்தில்...
சாண்ட்ரா: சிகிச்சையகூட சகிச்சுக்கலாம், ஆனா, மன வேதனையைத்தான் தாங்கிக்கவே முடியாது.
மார்கரெட்: ரெண்டாவது தடவ கீமோதெரபி எடுத்ததுக்கு அப்புறம், “அவ்வளவுதான், இதுக்குமேல என்னால முடியாதுனு சொல்வோம்.” ஆனா, திரும்பவும் சிகிச்சைக்காக போவோம்.
நண்பர்களைப் பற்றி...
ஆர்லெட்: எங்க நண்பர்கள்கிட்ட சொன்னோம். அப்பத்தானே எங்களுக்காக அவங்களும் ஜெபம் பண்ணுவாங்க.
ஜென்னி: மத்தவங்க நம்மள பார்த்து சின்னதா சிரிக்கும்போது, தலை அசைக்கும்போது, நல்லா இருக்கீங்களானு ஒரு வார்த்தை கேட்கும்போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும்.
தூணாய் தாங்கும் கணவர்கள்...
பார்பரா: தலைமுடி கொட்ட ஆரம்பிச்சது. உடனே முழுசா மொட்டை அடிச்சுகிட்டேன். என் வீட்டுக்காரர் காலென் பார்த்துட்டு, ‘உன் தலை நல்லா மொழுமொழுனு உருண்டையா இருக்கு’னு சொல்வாரு. அவர் அப்படி சொல்றது எனக்கு சிரிப்பாவும் இருக்கும், சந்தோஷமாவும் இருக்கும்.
சாண்ட்ரா: சிகிச்சை எடுக்கிறதால நான் பார்க்க வித்தியாசமா இருந்தேன்; அந்த சமயத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கண்ணாடியிலே பார்ப்போம். என் வீட்டுக்காரர் ஜோ முகத்தில ஒரு சின்ன சலனம்கூட இருக்காது, அவரு என்மேல வெச்சிருக்கிற அன்பு கொஞ்சம்கூட குறையலைனு எனக்குப் புரியும்.
சோனா: என் வீட்டுக்காரர் சரண் மத்தவங்ககிட்ட, “எங்களுக்கு கேன்சர்”-னுதான் சொல்வாரு.
ஜென்னி: என் கணவர் ஜெஃப் என்கிட்ட அன்பையும் பாசத்தையும் பொழிஞ்சாரு. கடவுள்மேல அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆழமான அன்பும் எனக்குப் பலம் கொடுத்தது.
[பக்கம் 29-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கேன்சர் செல்கள், இயல்பாக வளருவதற்கான சிக்னல்களுக்கு கீழ்ப்படியாமல் பெருகத் தொடங்குகின்றன, மற்ற திசுக்களை ஆக்கிரமிக்கின்றன
[படம்]
பால் சுரப்பி நாளங்களில் நல்ல செல்கள்
பால் சுரப்பி நாளங்களில் மட்டும் புற்றுநோய் (Ductal carcinoma)
நாளப் புற்றுநோய் வெளியே பரவுகிறது
[பக்கம் 30-ன் படம்]
குடும்பத்தாரும் நண்பர்களும் கொடுக்கிற அன்பான ஆதரவே அரும்பெரும் மருந்து