Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்

உங்களுக்கு ராமை நினைவிருக்கிறதா? அவரைப் பற்றி இந்தத் தொடர் கட்டுரையின் முதல் பக்கத்தில் சிந்தித்தோம். ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு சாப்பிடுவதும் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பது ராமுக்கு தெரிந்திருக்கவில்லை; இன்று உலகிலுள்ள நிறையப் பேரின் நிலையும் இதுதான். அவர் சொல்கிறார்: “‘ஊட்டச்சத்துமிகு உணவுகள் கைக்கு எட்டும் தூரத்தில்’ (ஜூன் 8, 2002) என்ற கட்டுரையை விழித்தெழு!-வில் படித்தேன்; ஊட்டச்சத்துள்ள உணவுகளைப் பற்றித் தெரிந்திருப்பது நல்லது என்பதைப் புரிந்துகொண்டேன்.”

ராம் தொடர்கிறார்: “அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள ஆலோசனைகளைக் குடும்பமாக நாங்கள் பின்பற்ற முயற்சி செய்தோம். கொஞ்ச நாளிலேயே எங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரித்தது. முன்பெல்லாம், எங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். ஆனால், எப்போது நாங்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிட ஆரம்பித்தோமோ அப்போதிலிருந்து அவ்வளவாகச் சளி பிடிப்பதில்லை. அதுமட்டுமல்ல, விழித்தெழு!-வில், ‘6 வழிகள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க’ (அக்டோபர் 8, 2003) என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையைப் படித்தேன்; அதில், சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான எளிய சிக்கனமான வழிகளைப் பற்றியும் கற்றுக்கொண்டேன்.

“என்னுடைய குடும்பத்தாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விழித்தெழு!-வில் வந்த மற்றொரு கட்டுரையும் உதவியது. டிசம்பர் 8, 2003-ல் வந்த “சோப்பு ஒரு ‘சுய தடுப்பூசி’” என்ற கட்டுரையே அது. அந்தக் கட்டுரையை வாசித்த உடனேயே அதிலுள்ள ஆலோசனைகளை நாங்கள் பின்பற்ற ஆரம்பித்தோம். இப்போதெல்லாம் முன்பு போல் எங்களுக்குக் கண் நோய் வருவதில்லை.

“நாங்கள் குடியிருக்கும் பகுதியில், எங்கு பார்த்தாலும் கொசுவும் ஈயும் மொய்த்துக்கொண்டிருக்கும். அங்கே இருக்கிறவர்களுக்கு அதைப் பற்றி துளியும் கவலை இல்லை. பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி * (ஆங்கிலம்) என்ற வீடியோவை நாங்கள் குடும்பமாகப் பார்த்தோம்; பூச்சிபொட்டுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமென அதிலிருந்து தெரிந்துகொண்டோம். நாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.”

முயற்சியை கைவிடாதீர்கள்! நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும்சரி, அவற்றைப் படிப்படியாகச் செய்யுங்கள், எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள்; அப்போது, வெற்றி உறுதி. உதாரணமாக, சத்தில்லாத உணவுகளை ஒரேடியாக நிறுத்திவிடுவதற்குப் பதிலாக மெல்ல மெல்ல குறைத்துவிடுங்கள். வழக்கமாக தூங்கும் நேரத்தைவிட கொஞ்சம் முன்னதாகவே தூங்கப் பாருங்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாக உடற்பயிற்சி செய்ய முயலுங்கள். ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்குப் பதிலாக கொஞ்சமாவது செய்வது மேல்! ஒரு நல்ல பழக்கம் உங்களுடைய அன்றாட வழக்கமாக ஆவதற்கு வாரங்களோ மாதங்களோகூட எடுக்கலாம். அதுவரை, நீங்கள் எடுக்கிற கூடுதல் முயற்சிகளுக்குக் கை மேல் பலன் கிடைக்காததுபோல் தோன்றினாலும் சோர்ந்துவிடாதீர்கள். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் விடா முயற்சியோடு இருந்தால், நல்ல ஆரோக்கியம் நிச்சயம்!

இந்த அபூரண உலகில், யாராலும் பரிபூரண ஆரோக்கியத்தைப் பெற முடியாது. நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தும் நோய் நொடியில் கஷ்டப்பட்டால் அதற்குக் காரணம் நீங்கள் அல்ல, வழிவழியாக நாம் பெற்றிருக்கிற குறைபாடுதான். எனவே, உங்களுடைய உடல்நலப் பிரச்சினைகளையோ, வேறு ஏதாவது பிரச்சினைகளையோ நினைத்து அளவுக்குமீறி கவலைப்படாதீர்கள். ஏனென்றால், “கவலைப்படுவதால் உங்களில் யார் தன் ஆயுளோடு ஒரு நொடியைக் கூட்ட முடியும்?” என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:25) ஆகவே, உங்களுடைய ஆயுளைக் குறைக்கிற, உடலைக் கெடுக்கிற, எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள். இப்படிச் செய்தால், கடவுளுடைய புதிய உலகம் வரும்வரை நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள்; ஆம், அங்கே, ‘யாரும் நான் நோயாளி என்று சொல்லமாட்டார்கள்.’—ஏசாயா 33:24, பொது மொழிபெயர்ப்பு. (g11-E 03)

^ யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்டது.