‘நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்’
‘நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்’
ரீனா விரக்தியின் எல்லைக்கே போய்விட்டார். அவருடைய கணவர் மாத்யூவிற்கு மூன்று வருடங்களுக்கும் மேலாக நிரந்தர வேலை இருக்கவில்லை. “நான் நொந்து நூலாகியிருந்தேன். அடுத்து என்ன நடக்குமென்று தெரியாததால் ரொம்பவே சோர்ந்து போயிருந்தேன்” என்று சொல்கிறார் ரீனா. ‘நம் குடும்பத்தை எப்படியோ ஓட்டிக்கொண்டுதானே இருக்கிறோம்’ என்று சொல்லி மாத்யூ தன்னுடைய மனைவியை ஆறுதல்படுத்த முயன்றார். “ஆனால், உங்களுக்கு நிரந்தரமான வேலை இல்லையே. நமக்கு வருமானம் வேண்டுமே” என்றார் ரீனா.
வேலை பறிபோனால் கவலை தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும். ‘எனக்கு எப்போதுதான் வேலை கிடைக்குமோ? அதுவரை குடும்பத்தின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது?’ என்றெல்லாம் ஒருவர் யோசிக்கலாம்.
இப்படிக் கவலைப்படுவது சகஜம் என்றாலும், கவலையைத் தணிப்பதற்கு இயேசு கிறிஸ்து நடைமுறையான ஆலோசனையைக் கொடுத்தார். ‘நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்; . . . அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்’ என்று அவர் சொன்னார்.—மத்தேயு 6:34.
பயங்களை இனங்கண்டுகொள்ளுங்கள்
நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லாதது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு அந்த வசனத்தில் சொல்லவில்லை. இருந்தாலும், நாளைக்கு என்ன நடக்குமோ என்று நினைத்துக் கவலைப்படுவது, இன்று நமக்கிருக்கும் மனபாரத்தை அதிகரிக்கத்தான் செய்யும். உண்மையில், நாளைக்கு நடப்பது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி, அதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், இன்றைக்கு இருக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க நம்மால் முடியும்.
இதைச் சொல்வது சுலபம், ஆனால் செய்வது கடினம் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரிதான்! ரெபேக்காவின் கணவர் 12 வருடங்களாகச் செய்து வந்த வேலையை இழந்துவிட்டார். ரெபேக்கா இவ்வாறு சொல்கிறார்: “மனது ரொம்ப பாரமாக இருக்கும்போது நம்மால் எதையும் நிதானமாக யோசிக்க முடியாது. ஆனால், நாங்கள் யோசிக்க வேண்டியிருந்தது. அதனால் என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தேன்.
எது நடக்குமென்று நினைத்துக் கவலைப்பட்டேனோ அது நடக்காதபோது, கவலைப்படுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று புரிந்துகொண்டேன். அன்றன்று வந்த பிரச்சினைகளை அன்றன்று பார்த்துக்கொள்ள ஆரம்பித்தபோது அநாவசியமான கவலைகளெல்லாம் போய்விட்டன.”உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் எதை நினைத்து ரொம்பப் பயப்படுகிறேன்? நான் பயப்படுவது போல நிஜமாகவே நடக்க வாய்ப்பிருக்கிறதா? நான் நினைக்கிற காரியங்களெல்லாம் நடந்துவிடுமோ அல்லது நடக்காமல் போய்விடுமோ என்று யோசித்து எந்தளவிற்குக் கவலைப்படுகிறேன்?’
திருப்தியாக வாழக் கற்றுக்கொள்ளுதல்
நம்முடைய கண்ணோட்டம் நம்முடைய உணர்ச்சிகளைப் பாதிக்கலாம். ஆகவே, இந்த மனநிலையை வளர்த்துக்கொள்ள பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது: “நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.” (1 தீமோத்தேயு 6:8) திருப்தியுடன் வாழ்வது என்றால், நாம் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்குவதற்குப் பதிலாக, அன்றாடத் தேவைகள் பூர்த்தியானால் போதும் என்று இருப்பதுதான். ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்று நினைத்து வாங்கி வாங்கி குவித்தால், எளிமையாக வாழ நாம் எடுக்கும் முயற்சி தோல்வியையே தழுவும்.—மாற்கு 4:19.
ரீனா தன்னுடைய சூழ்நிலையை எதார்த்தமாக யோசித்துப் பார்த்தபோது, திருப்தியாக வாழக் கற்றுக்கொண்டார். “நாங்கள் ஒன்றும் நடுத்தெருவுக்கு வந்துவிடவில்லை; அதோடு, எங்களுக்கு மின்சார வசதியும் கேஸ் வசதியும்கூட இருந்தது. ஆனால், உண்மையிலேயே பிரச்சினை என்னவென்றால், இதுபோல குறைந்த வசதியுடன் வாழ்ந்து எங்களுக்குப் பழக்கமில்லை. அதோடு, முன்பு வாழ்ந்த மாதிரியே வாழ வேண்டும் என்ற நியாயமற்ற ஆசை என் கவலையை அதிகரித்தது” என்று அவர் சொல்கிறார்.
தன்னுடைய பிரச்சினை தாங்க முடியாததுபோல் தெரிந்ததற்குக் காரணம் தன்னுடைய சூழ்நிலை அல்ல, தன்னுடைய கண்ணோட்டமே என்பதைச் சீக்கிரத்தில் ரீனா புரிந்துகொண்டார். “என்னுடைய சூழ்நிலை நான் விரும்புகிற மாதிரி இருக்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அது எப்படி இருந்ததோ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் எனக்குக் கடவுள் கொடுத்ததில் திருப்தியாக வாழக் கற்றுக்கொண்டபோது, அதிக சந்தோஷம் கிடைத்தது” என்கிறார் அவர்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இன்றைக்கு எனக்கு என்ன தேவையோ அது கிடைத்திருக்கிறதா? அப்படியென்றால், நாளைக்கு எனக்கு என்ன தேவையோ அது நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, அந்தந்த நாளைப் பற்றி மட்டுமே யோசிக்கலாம் அல்லவா?’
ஆகவே, இருப்பதை வைத்து வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சவாலைச் சந்திக்க முதல் வழி, சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகும். * ஆனால், நிரந்தரமான வேலை இல்லாதபோது குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்ட நீங்கள் என்ன நடைமுறையான படிகளை எடுக்கலாம்? (g10-E 07)
[அடிக்குறிப்பு]
^ வேலை கண்டுபிடிப்பதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் உதவுகிற கூடுதல் தகவலுக்கு, ஆங்கில விழித்தெழு! ஜூலை 8, 2005, பக்கங்கள் 3-11-ஐக் காண்க.
[பக்கம் 5-ன் பெட்டி]
முயற்சி திருவினையாக்கும்!
பல வாரங்களாக வேலை தேடி அலைந்தும் பலன் கிடைக்காததால், இனி தனக்கு வேலையே கிடைக்கப்போவதில்லை என்று தாமஸ் நினைத்தார். “யாராவது வந்து உங்களை அழைத்துச் செல்வதற்காக நீங்கள் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிறீர்கள்; ஆனால் யாருமே வரவில்லை என்றால் எப்படி உணர்வீர்களோ அப்படித்தான் நான் உணர்ந்தேன்” என்று அவர் சொல்கிறார். தாமஸ் தன்னுடைய சூழ்நிலை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து, தன்னால் எதை மட்டும் செய்ய முடியுமோ அதைச் செய்யத் தீர்மானித்தார். அவர் முடிந்தவரை எல்லாக் கம்பெனிகளுக்கும் விண்ணப்பித்தார்; தன்னுடைய திறமைகள் கொஞ்சமாவது உபயோகப்படுமென நினைத்த கம்பெனிகளுக்கும்கூட விண்ணப்பித்தார். நேர்காணலுக்கு அழைத்த எல்லாக் கம்பெனிகளுக்கும் அவர் நன்கு தயாரித்துச் சென்றார்; “ஊக்கமாக உழைப்பவரின் திட்டங்கள் நிச்சயம் பலன் தரும்” என்பதை உறுதியாக நம்பினார். (நீதிமொழிகள் 21:5, NW) “ஒரு கம்பெனியில் இருமுறை நடந்த நேர்காணலில் உயர் அதிகாரிகள் என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்” என்று தாமஸ் சொல்கிறார். ஆனால், அவருடைய முயற்சி திருவினையானது. “எனக்கு வேலை கிடைத்துவிட்டது!” என்று அவர் சொல்கிறார்.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
வருமானத்தைவிட அதிமுக்கியமான ஒன்று
எது ரொம்ப முக்கியம்—உங்களுடைய நல்ல நல்ல குணங்களா அல்லது உங்களுடைய வருமானமா? பைபிளிலுள்ள இரண்டு நீதிமொழிகளைக் கவனியுங்கள்:
“முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் [அதாவது, குணசீலராய்] இருக்கும் ஏழையே மேல்.”—நீதிமொழிகள் 28:6, பொது மொழிபெயர்ப்பு.
“பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.”—நீதிமொழிகள் 15:17, பொ.மொ.
ஆம், ஒருவருக்கு வருமானம் இல்லை என்பதால் அவருடைய நல்ல குணங்களும் மதிப்பும் குறைந்துவிடாது. ஆகவே, ரீனாவின் கணவர் வேலையிழந்தபோது, தன் பிள்ளைகளிடம் ரீனா இவ்வாறு சொன்னார்: “நிறைய அப்பாமார்கள் தங்களுடைய குடும்பத்தை அம்போவென்று விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், உங்களுடைய அப்பா உங்கள் கூடவே இருக்கிறார். அவர் உங்களை எந்தளவுக்கு நேசிக்கிறார், உங்கள் பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்க எந்தளவுக்கு உதவியிருக்கிறார் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். இவரைப் போல ஒரு அப்பா கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!”