அன்பு பொழிவதன் அவசியம்
அன்பு பொழிவதன் அவசியம்
முதல் பிரசவத்திலேயே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு தாய், குழந்தைகளை வளர்க்கச் சிறந்த வழி எதுவென குழந்தை மனநல நிபுணர் ஒருவரிடம் கேட்டார். அதற்கு அவர், “அடிக்கடி அவர்களைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுங்கள்!” என்று சொன்னார். அதோடு, “பல வழிகளில் அன்பையும் பாசத்தையும் கொட்டிக் குழந்தைகளை வளருங்கள்; உதாரணத்திற்கு, கட்டி அணையுங்கள், முத்தமிடுங்கள், கொஞ்சுங்கள், புரிந்துகொள்ளுங்கள், சந்தோஷப்படுங்கள், வாரிவழங்குங்கள், மன்னியுங்கள், நியாயமான காரணம் இருக்கும்போது கண்டியுங்கள். நாம் அன்பு வைத்திருப்பது குழந்தைகளுக்கே தெரியுமென நாம் நினைத்துவிடக் கூடாது” என்றார்.
அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில், மியாமி பல்கலைக்கழகத்தின் டச் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநரான டிஃபானி ஃபீல்ட் அந்த நிபுணர் தந்த ஆலோசனையை ஆமோதிப்பதாகத் தெரிகிறது. “ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும் நலனுக்கும் உணவும் உடற்பயிற்சியும் மிக அவசியமாக இருப்பதுபோலவே தொடுவதும் மிக அவசியமாக இருக்கிறது” என்று அவர் வலியுறுத்துகிறார்.
வளர்ந்து ஆளானவர்களிடமும் பாசத்தை வெளிக்காட்டுவது முக்கியமா? ஆம், முக்கியமே. வயது வரம்பில்லாமல் சொல்லிலும் செயலிலும் அன்பைப் பொழிவது மன நலனுக்கு அத்தியாவசியமானது என்று ஓர் ஆராய்ச்சியில் முடிவு செய்தார், சிகிச்சைமுறை உளவியல் நிபுணரான க்ளோட் ஸ்டைநர். வயதானவர்கள் பலரைக் கவனித்துக்கொள்ளும் லாரா என்ற நர்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “வயதானவர்களிடம் பாசத்தைப் பொழிவது பெரும் பலனளிப்பதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும்போதும் அவர்களைத் தொடும்போதும் அவர்கள் நம்மீது நம்பிக்கை வைக்கிறார்கள், நம் அறிவுரைகளை ஆசையோடு கேட்டு நடக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாசத்தோடும் நேசத்தோடும் அவர்களை நடத்துவது அவர்களுடைய சுயகௌரவத்திற்கு மதிப்பு கொடுப்பதாக இருக்கிறது.”
மேலுமாக, பாச மழையில் நனைகிறவர் மட்டுமல்ல, பாச மழை பொழிபவரும் மிகுந்த நன்மை பெறுகிறார். இயேசு கிறிஸ்து ஒருமுறை சொன்னபடி, “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது.” (அப்போஸ்தலர் 20:35) முக்கியமாக, கவலையிலோ மனச்சோர்விலோ பயத்திலோ சிக்கித் தவிப்பவர்களிடம் பாசத்தைக் காட்டுவது பெருமளவு பயன் அளிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பைபிள் பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறது.
சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘தொழுநோய் நிறைந்த ஒருவனை’ மாமனிதரான இயேசு கிறிஸ்துவே கரிசனையோடு தொட்டதாக பைபிள் சொல்கிறது; அப்போது அவனுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!—லூக்கா 5:12, 13; மத்தேயு 8:1-3.
இப்போது, வயதான தீர்க்கதரிசியான தானியேலின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; தேவதூதர் ஒருவர் அவரிடம் அன்பாகப் பேசி உற்சாகப்படுத்தி, மூன்று முறை அவரைத் தொட்டபோது அவருக்கு எவ்வளவு பலம் கிடைத்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உடலிலும் உள்ளத்திலும் சோர்ந்துபோயிருந்த தானியேல் மறுபடியும் தெம்படைவதற்குத் தேவைப்பட்டதெல்லாம் அந்தப் பாசமான தொடுதலும் உற்சாகமான வார்த்தைகளும்தான்.—தானியேல் 10:9-11, 15, 16, 18, 19.
ஒரு சமயம், அப்போஸ்தலன் பவுலின் நண்பர்கள் அவரைச் சந்திக்க எபேசுவிலிருந்து மிலேத்துவுக்கு சுமார் 50 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்தார்கள். அங்கே பவுல், இனி அவர்கள் தன்னைச் சந்திக்க முடியாதெனச் சொன்னார். அப்போது, அவருக்கு விசுவாசமாயிருந்த அந்த நண்பர்கள் அவரை ‘கட்டித் தழுவி முத்தமிட்டார்கள்’; அச்சமயத்தில், அவர் எவ்வளவு உற்சாகமடைந்திருப்பார்!—அப்போஸ்தலர் 20:36, 37, பொது மொழிபெயர்ப்பு.
ஆகவே, பைபிளும்சரி இன்றைய ஆராய்ச்சிகளும்சரி, ஒருவருக்கொருவர் பாசத்தை வெளிக்காட்டும்படி நம்மை ஊக்குவிக்கின்றன. பாசத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வது, உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நன்மைகளை அள்ளி வழங்குகிறது. உகந்த விதத்தில் உள்ளப்பூர்வமாக அன்பு பொழிவது பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அவசியம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. (g09-E 12)