ஆன்லைனில் பிள்ளைகள்—பெற்றோர் என்ன செய்யலாம்?
ஆன்லைனில் பிள்ளைகள்—பெற்றோர் என்ன செய்யலாம்?
உங்கள் பிள்ளையிடம் கார் சாவி இருந்தால் உங்கள் மனம் படபடக்குமா? அல்லது அவன் இஷ்டப்படி இன்டர்நெட்டை பயன்படுத்தினால் உங்கள் மனம் பதறுமா? இரண்டிலுமே ஆபத்து இருக்கிறது. இரண்டையும் அவன் பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்நாள் பூராவும் கார் ஓட்டக்கூடாதென்று நீங்கள் அவனுக்குத் தடைவிதிக்க முடியாதுதான். ஆனால், பாதுகாப்பான முறையில் காரை ஓட்டுவதற்கு அவனுக்குத் தேவையான எல்லா பயிற்சியையும் நீங்கள் அளிக்க முடியும். அதேபோலத்தான் இன்டர்நெட்டையும் சரியான முறையில் உபயோகிக்க அநேக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இந்த விஷயத்தில் பின்வரும் பைபிள் நியதிகள் உங்களுக்குக் கைகொடுக்கும்.
“விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 13:16) உங்கள் பிள்ளைகள் இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள் என்றால், நீங்கள் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதலில் இன்டர்நெட் எப்படி வேலை செய்கிறதென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உடனுக்குடன் தகவல் பரிமாறிக்கொள்ளும்போது, வெப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, மற்ற காரணங்களுக்காக இன்டர்நெட்டை பயன்படுத்தும்போது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். “எனக்கு ரொம்ப வயசாகிவிட்டது; நான் படிக்காதவன்/ள் என்று சொல்லி, தெரிஞ்சிக்காம இருந்துடாதீங்க. நாளுக்கு நாளு மாறிவரும் டெக்னாலஜியை கொஞ்சம் தெரிஞ்சுவச்சிக்கோங்க” என்கிறார் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான மேர்ஷே.
“நீ புது வீட்டைக் கட்டும்போது உன் வீட்டு மாடியைச் சுற்றிக் கைப்பிடிச் சுவரைக் கட்டு.” (உபாகமம் 22:8, [இணைச்சட்டம்] பொது மொழிபெயர்ப்பு) தேவையில்லாத காட்சிகள் எட்டிப்பார்க்காதிருக்க, ஆபத்தான இணைய தளங்களுக்குள் பிள்ளைகள் நுழையாதபடி தடுக்க இன்டர்நெட் சேவை மையங்களும் சாஃப்ட்வேர் புரோகிராம்களும் பெற்றோருக்கு சில புரோகிராம்களை வழங்குகின்றன. இவை ஒரு “கைப்பிடிச் சுவரை” போல், அதாவது “வேலிபோல்” இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கின்றன. தங்களுடைய பெயர், வீட்டு விலாசம் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பிள்ளைகள் வெளியிடுவதைத் தடுப்பதற்கும் சில புரோகிராம்கள் உள்ளன. என்றாலும், ஆபத்தான எல்லா தகவல்களும் வராதபடி செய்யும் சக்தி இந்த புரோகிராம்களுக்குக் கிடையாது. அதோடு, கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடும் இளசுகள் இந்த புரோகிராம்களுக்கே டிமிக்கி கொடுத்துவிடுகிறார்கள்.
“தனித்திருக்க விரும்புகிறவன் சுய இச்சையின்படி செய்ய முயலுகிறான், யாருடைய அறிவுரையையும் கேட்காமல் மனம்போன போக்கில் நடக்கிறான்.” (நீதிமொழிகள் 18:1, NW) 9-19 வயதுடைய இளைஞர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒருவருடைய பெட் ரூமில் இன்டர்நெட் கனெக்ஷன் இருப்பதாக பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வு காட்டியது. வீட்டில் எல்லாரும் வந்துபோகிற இடத்தில் கம்ப்யூட்டரை வைத்தால், பிள்ளைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க பெற்றோருக்கு வசதியாக இருக்கும். அதேசமயம் பிள்ளைகளும் மோசமான இணைய தளங்களை எட்டிப்பார்க்க யோசிப்பார்கள்.
“நீங்கள் ஞானமற்றவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்துங்கள்; பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், நாட்கள் பொல்லாதவையாக இருக்கின்றன.” (எபேசியர் 5:15, 16, NW) பிள்ளைகள் எப்போது இன்டர்நெட்டைப் பயன்படுத்தலாம், எவ்வளவு நேரம் ஆன்லைனில் இருக்கலாம், எப்படிப்பட்ட இணைய தளங்களுக்குள் செல்லலாம்/கூடாது என்பதையெல்லாம் தீர்மானியுங்கள். நீங்கள் போடும் விதிமுறைகள் ஏன், எதற்கு என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லி அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
அதேசமயம் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே இருக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, அவர்களுடைய மனதில் நல்ல நெறிமுறைகளைப் பதிய வைப்பது முக்கியம். அப்போதுதான் நீங்கள் அருகில் இல்லாதபோதும் அவர்கள் ஞானமாக நடப்பார்கள். * (பிலிப்பியர் 2:12) இன்டர்நெட்டை பயன்படுத்தும் விஷயத்தில் நீங்கள் போடும் விதிமுறைகளை மீறினால் என்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவர்களுக்குத் திட்டவட்டமாகச் சொல்லுங்கள். அதன் பிற்பாடு அந்த விதிமுறைகளை அமல்படுத்துங்கள்.
நீதிமொழிகள் 31:27) உங்கள் பிள்ளைகள் இன்டர்நெட் பயன்படுத்துவதைக் கண்காணியுங்கள்; நீங்கள் கண்காணிப்பீர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கட்டும். இப்படிச் செய்வது, அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுகிறீர்கள் என்று அர்த்தமாகாது. இன்டர்நெட் என்பது ஒரு “பொது இடம்” என்பதை நினைவில் வையுங்கள். எப்போதும் பிள்ளைகளின் ஆன்லைன் கணக்குவழக்குகளைப் பார்வையிடுங்கள்; அவர்களுடைய ஈமெயில்களையும் அவர்கள் சந்தித்திருக்கும் இணைய தளங்களையும் நோட்டம் விடுங்கள் என்று பெற்றோருக்கு அறிவுறுத்துகிறது அமெரிக்க உளவுத்துறை.
“[ஒரு நல்ல தாய்] தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.” (“ஞானம் உன்னைக் காப்பாற்றும், புரிந்துகொள்ளுதல் உன்னைப் பாதுகாக்கும். . . . கெட்டவர்களைப் போன்று தீயவழியில் செல்வதைத் தடுக்கும்.” (நீதிமொழிகள் 2:11, 12, ஈஸி டு ரீட் வர்ஷன்) பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு அவர்களைக் கண்காணிப்பதும் நோட்டமிடுவதும் ஓரளவுக்குத்தான் கைகொடுக்கும். ஆனால், அவர்களுக்கு நன்னெறிகளைப் புகட்டுவதும் நீங்கள் முன்மாதிரி வைப்பதும் அதைவிட அதிக பலனைத் தரும். எனவே, இன்டர்நெட்டில் என்னென்ன ஆபத்துகள் பதுங்கியிருக்கின்றன என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு விலாவாரியாக விளக்குங்கள். ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குச் சிறந்த வழி, அவர்களுடன் நல்ல பேச்சுத்தொடர்பு கொள்வதே. இதைக் குறித்து ஒரு கிறிஸ்தவ தகப்பன் சொல்கிறார்: “இன்டர்நெட்டில் வரும் ‘கெட்ட’ ஆட்களைப் பற்றி எங்கள் மகன்களிடம் பேசினோம். . . . அதுமட்டுமல்ல, ஆபாசமானப் படங்களை ஏன் பார்க்கக்கூடாது, ஆன்லைனில் முன்பின் தெரியாதவர்களிடம் ஏன் பேசக்கூடாது என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னோம்.”
உங்கள் பிள்ளைகளை உங்களால் பாதுகாக்க முடியும்
ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு முயற்சி தேவை. ஏனென்றால், மீடியாவுடன் தொடர்புகொள்ள தினம் தினம் புதுப் புது எலெக்ட்ரானிக் சாதனங்கள் சந்தைக்கு வருகின்றன. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தினால் பிள்ளைகளுக்கு நன்மைகள் ஒருபக்கம் காத்திருக்க, மறுபக்கம் பயங்கரமான ஆபத்துகளும் மறைந்திருக்கின்றன. வரப்போகும் ஆபத்துகளைச் சந்திக்க பெற்றோர்கள் எப்படி இப்போதே தங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்தலாம்? “பணம் பாதுகாப்பை அளிப்பதைப் போல ஞானமும் பாதுகாப்பை அளிக்கும்” என்கிறது ஒரு பைபிள் வாசகம்.—பிரசங்கி 7:12, NW.
உங்களுடைய பிள்ளைகள் ஞானமாய் நடப்பதற்கு உதவுங்கள். இன்டர்நெட்டை பயனுள்ள விதத்தில் பயன்படுத்த அவர்களைப் பழக்குங்கள். ஆன்லைன் ஆபத்துகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான், இன்டர்நெட் உங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு உண்டாக்காமல் பயனுள்ளதாக அமையும். (g 10/08)
[அடிக்குறிப்பு]
^ செல்போன்கள், கையடக்கமான பிற சாதனங்கள், சில வீடியோ கேம் மையங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் பிள்ளைகள் இன்டர்நெட்டுக்குள் நுழைய முடியும் என்பதை பெற்றோர் மனதில் கொள்ள வேண்டும்.
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
பிரிட்டனில், வாரத்திற்கு ஒருமுறை இன்டர்நெட்டை பயன்படுத்தும் 9-19 வயதுடைய இளைஞர்களில் 57 சதவீதத்தினர் ஆபாசப் படங்களைப் பார்த்திருக்கிறார்கள்; ஆனால், 16 சதவீத பெற்றோர் மாத்திரமே தங்களுடைய பிள்ளைகள் இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களைப் பார்த்திருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
இன்டர்நெட் சாட் ரூம்களிலும் டேட்டிங் சர்வீஸ் சென்டர்களிலும் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 7,50,000 காமுகர்கள் சுற்றுவதாக நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள்
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
அமெரிக்காவில், 12-17 வயது இளைஞர்களில் 93 சதவீதத்தினர் இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள்
[பக்கம் 17, 18-ன் படம்]
இன்டர்நெட்டை பயனுள்ள முறையில் பயன்படுத்த உங்கள் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுப்பீர்களா?