ஒப்பற்றது ஆனால், உயிர்களற்றது!
ஒப்பற்றது ஆனால், உயிர்களற்றது!
இஸ்ரேலிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
உலகத்திலேயே மிக உப்புத்தன்மையுள்ளதும், தாழ்வானதும், ஜீவராசிகள் இல்லாததுமான நீர்நிலை இதுதான்; ஆனால், ஆரோக்கியமளிக்கும் நீர்நிலைகளில் இதற்கு இணை இதுவே என்கிறார்கள் சிலர். நாறும் கடல், பிசாசின் கடல், நிலக்கீல் ஏரி என்றெல்லாம் காலம்காலமாக இது அழைக்கப்பட்டிருக்கிறது. பைபிளில் இது உப்புக்கடல், சமனான வெளியின் கடல் என்று அழைக்கப்படுகிறது. (ஆதியாகமம் 14:3; யோசுவா 3:16) இதன் ஆழத்தில் சோதோம் கொமோராவின் இடிபாடுகள் புதையுண்டு கிடப்பதாக பைபிள் அறிஞர்கள் பலர் கருதுகிறார்கள். ஆகவே, இது சோதோம் கடல், லோத்துவின் கடல் என்றெல்லாம்கூட அழைக்கப்படுகிறது. பூர்வ காலத்தில், இந்தப் பட்டணங்களுக்கு நேரிட்ட முக்கிய சம்பவங்களோடு லோத்துவுக்குத் தொடர்புண்டு. இவரைப்பற்றி பைபிள் குறிப்பிடுகிறது.—2 பேதுரு 2:6, 7.
இந்தக் கடலுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களைக் கேட்டால், இதைப் பார்க்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றாதிருக்கலாம். எனினும், பொதுவாக சவக்கடல் அல்லது உப்புக்கடல் என்று இப்போது அழைக்கப்படும் இந்த விசித்திர நீர்நிலையைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் செல்கிறார்கள் என்பதே உண்மை. இதன் தண்ணீர் ஏன் இந்தளவு உப்புக் கரிக்கிறது? இது உயிர்களற்றதா, அதேசமயம், இதன் தண்ணீர் ஆரோக்கியமானதா?
மிகத் தாழ்வான, அதிகமாக உப்புக் கரிக்கிற கடல்
பெரும்பிளவு பள்ளத்தாக்கின் விரிசல் தென்திசையில் நீண்டு, கிழக்கு ஆப்பிரிக்காவிற்குள் செல்கிறது. இந்தப் பள்ளத்தாக்கின் வடக்கே சவக்கடல் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து ஓடிவரும் யோர்தான் நதி வளைந்து நெளிந்து பூமியின் மிகத் தாழ்வான இந்தப் பகுதியை வந்தடைகிறது. இப்பகுதி, கடல்மட்டத்திற்குக் கீழே சுமார் 418 மீட்டரில் உள்ளது. இந்தக் கடல் உள்நாட்டில் அமைந்திருக்கிறது. அதன் இருபுறமும் நிலப்பிளவினால் ஏற்பட்ட இயற்கை சுவர்கள் நிற்கின்றன. அதாவது, யூதேய மலைகள் மேற்கிலும், யோர்தானில் உள்ள மோவாப் மலைகள் கிழக்கிலும் அமைந்துள்ளன.
சவக்கடல் இந்தளவுக்கு உப்புக் கரிப்பது ஏன்? யோர்தான் நதி, பிற சிற்றாறுகள், ஓடைகள், ஊற்றுகள் ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீர், பல வகை உப்புகளை அடித்துவந்து இங்கு குவிக்கிறது. முக்கியமாக, மக்னீசியம், சோடியம், கால்சியம் குளோரைடு போன்ற உப்புகள் இங்கு வந்து சேருகின்றன. யோர்தான் நதி மட்டுமே ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமாக உப்பை, அதாவது 8,50,000 டன் அளவு உப்பை வாரிக்கொண்டு வந்து சேர்ப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தக் கடல் அவ்வளவு தாழ்வான பகுதியில் இருப்பதால், இதன் தண்ணீர் வெளியேற வேறு வழி இல்லை. தானாகவே ஆவியானால்தான் உண்டு. அனல் பறக்கும் கோடைகாலத்தில், எழுபது லட்சம் டன் தண்ணீர் ஆவியாகிறது. இதனால்தான், இந்தக் கடலில் தண்ணீரின் அளவு அதிகமாவதில்லை. தண்ணீர் ஆவியானாலும், உப்புகளும் கனிமங்களும் இங்கேயே தங்கிவிடுகின்றன. இதனால், உலகிலேயே அதிக உப்புக் கரிக்கும் கடலாக இது ஆகியிருக்கிறது. இது சுமார் 30 சதவீத உப்புத்தன்மை உள்ளதாய் இருக்கிறது. பெருங்கடல்களில் காணப்படுவதைவிட இது பன்மடங்கு அதிகம்.
அந்தக் காலத்திலிருந்தே, சவக்கடலின் தனித்தன்மைகளைக் கண்டு மக்கள் அதிசயத்திருக்கிறார்கள். இந்தக் கடலின் நீர், “ஒரே கசப்பாகவும், உப்புக் கரிப்பதாகவும் இருந்ததால் அதில் மீன்கள் வாழ வழியில்லை” என்பதாக கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் கேள்விப்பட்டிருந்தார். நீரில் உப்புத்தன்மை மட்டுக்குமீறி அதிகமாயிருப்பதால் இதன் அடர்த்தியும் அதிகமாயிருக்கிறது. இதனால் இயற்கையாகவே மிதப்பாற்றல் அதிகமாக இருக்கிறது. நீச்சல் தெரியாதவர்கூட இதில்
மூழ்கிவிடாமல் மிதக்கலாம். இது எந்தளவுக்கு உண்மை என்பதைத் தெரிந்துகொள்வதற்காக ரோம தளபதியான வெஸ்பேஸியன் போர்க் கைதிகளை இந்தக் கடலில் எறிந்ததாக யூத சரித்திராசிரியர் ப்ளேவியஸ் ஜொஸிஃபஸ் கூறுகிறார்.உயிர்களற்ற இந்த நீர்நிலை எப்படி ஆரோக்கியமானதாய் இருக்க முடியுமென இப்போது நீங்கள் யோசிப்பது தெரிகிறது.
மிக ஆரோக்கியமான கடலா?
பறவைகள், மீன்கள், தாவரங்கள் என எதுவுமே இல்லாத வளமற்ற கடலைப்பற்றி இடைக்கால பயணிகள் கதைகதையாய் சொன்னார்கள். இந்தக் கடலிலிருந்து ஒருவித துர்நாற்றத்தோடு வெளிவந்த நீராவியை முகர்ந்தால் மரணம் என்றும்கூட கருதப்பட்டது. இதனால், துர்நாற்றம் வீசுகிற, உயிர்களற்ற கடலைப்பற்றிய கதைகள் உலா வந்தன. இதில் ஜீவராசிகள் எதுவுமில்லை என்பது உண்மைதான். ஏனெனில், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் ஒருசில வகை பாக்டீரியாக்களைப் போன்ற எளிய உயிரிகளே இந்தத் தண்ணீரில் தாக்குப்பிடிக்க முடியும். இதற்கு, இந்தக் கடலின் உப்புத்தன்மை அந்தளவு அதிகமாக இருப்பதே காரணம். இந்தக் கடலில் சங்கமமாகும் தண்ணீரில் அடித்து வரப்படும் அப்பாவி மீன்கள் உடனடியாக செத்துமடிகின்றன.
இந்தக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், இதைச் சுற்றிலுமுள்ள பகுதிகள் அப்படியல்ல. பெரும்பாலானவை தரிசாகக் கிடந்தாலும், சிறு பகுதிகள் பாலைவனச் சோலை போல செழிப்பாக, நீர்வீழ்ச்சிகளோடும் வெப்பமண்டலச் செடிகளோடும் பச்சைப் பசேலென்று கண்ணுக்குக் குளுமையாய் காட்சியளிக்கின்றன. இந்தப் பகுதியில் எக்கச்சக்கமான விலங்கினங்கள்
காணப்படுகின்றன. இந்தக் கடலுக்கு அருகிலுள்ள பகுதியில், 24 வகை பாலூட்டிகள் வசிக்கின்றன. அவற்றில் மணல் பூனை, அரேபிய ஓநாய் போன்றவை சில. ஐபெக்ஸ் எனப்படும் மலையாடுகளை இங்கு அதிகமாகக் காணலாம். பல நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகள், மீன்கள் ஆகியவையும் இந்தப் பகுதிகளில் உள்ள நன்னீரில் வாழ்கின்றன. பறவைகள் இடம்பெயர்ந்து செல்கிற ஒரு முக்கிய மார்க்கத்தில் இந்த சவக்கடல் அமைந்திருப்பதால், 90-க்கும் மேற்பட்ட பறவையினங்களை இங்கே காணலாம். அவற்றில், கருப்பு நாரை, வெள்ளை நாரை போன்றவை அடங்கும். கிரிப்ஃபன் பெருங்கழுகு, எகிப்திய பெருங்கழுகு ஆகியவையும் இங்கு குடியிருக்கின்றன.உலகிலேயே மிக ஆரோக்கியமான நீர்நிலை இதுதான். எப்படி? நோய்களைக் குணப்படுத்தும் சக்தி இதன் தண்ணீருக்கு இருப்பதாக நம்பி, ஒருகாலத்தில் மக்கள் இதைக் குடித்ததாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கு இதைக் குடிக்கும்படி யாருமே நிச்சயமாகச் சொல்ல மாட்டார்கள். இந்த உப்புத் தண்ணீரில் குளித்தால் உடல் சுத்தமாகும் என்றும் சொல்லப்படுகிறது. இது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது. இந்தப் பகுதி முழுவதுமே ஆரோக்கியமளிப்பதாகப் புகழப்படுகிறது. இது தாழ்வாக இருப்பதால் இயற்கையாகவே இங்கு பிராணவாயு அதிகம் உள்ளது. காற்றில் புரோமைடு அதிகமாக இருப்பதால், இங்கு வருவோர் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். கரையோரமாக இருக்கும் கனிமங்கள் செறிந்த கரிசல் மண்ணும் சூடான கந்தக ஊற்றுகளும் பல தோல் வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கவும் மூட்டு பிரச்சினைகளைக் குணமாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, முன்பு இந்தப் பகுதியில் வளர்ந்த குங்கிலிய வகை மரத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம். இது அழகு சாதனத்திலும் மருந்திலும் பயன்படுத்தப்படுகிறது.
கடல் தரும் நிலக்கீல்
சவக்கடலைப் பற்றிய மற்றொரு விசித்திரமான விஷயம், அது நிலக்கீலை வெளியிடுவதே. இதன் மேற்பரப்பில் கட்டி கட்டியாக நிலக்கீல் மிதப்பதை அவ்வப்போது காண முடிந்திருக்கிறது. சுமார் 2,700 கிலோ எடையுள்ள நிலக்கீல் 1834-ஆம் ஆண்டு கரையோரம் மிதந்து வந்ததாக 1905-ல் தி பிப்ளிகல் உவர்ல்ட் என்ற பத்திரிகை குறிப்பிட்டது. “மனிதரால் பயன்படுத்தப்பட்ட முதல் பெட்ரோலிய பொருள்” நிலக்கீல்தான் என்று சொல்லப்படுகிறது. (சவுதி அராம்கோ உவர்ல்ட், நவம்பர்/டிசம்பர் 1984) பூமியதிர்ச்சிகளால் சவக்கடலின் அடியிலிருந்த நிலக்கீல் பாளங்கள் உடைந்து, மேற்பரப்பில் மிதந்ததாகச் சிலர் கருதினார்கள். ஆனால் இந்த நிலக்கீல், பாறைகளை ஊடுருவி, உப்புப் பாறைகளோடு சேர்ந்து கடலின் அடிப்பரப்பிற்குச் செல்கிறது. உப்புப் பாறைகள் நீரில் கரையும்போது, நிலக்கீல் பாளங்கள் மேற்பரப்பிற்கு வருகின்றன. இவ்வாறு நடப்பதற்கே அதிக சாத்தியம் உள்ளது.
காலம்காலமாக, நிலக்கீல் பல விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படகுகளில் தண்ணீர் உட்புகாதிருப்பதற்கும் கட்டுமானத்திலும் பூச்சிகளை விரட்டுவதற்கும்கூட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நான்காம் நூற்றாண்டின் மத்தியில், எகிப்தியர், பிரேதங்களைப் பதப்படுத்தி பாதுகாக்க நிலக்கீலை பெருமளவு பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது; எனினும், இந்தக் கருத்தை சில வல்லுநர்கள் அமோதிப்பதில்லை. முற்காலத்தில், சவக்கடல் பகுதியில் குடியேறிய நபாடியா என்ற பண்டைய நாடோடிகள் நிலக்கீல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். இதைக் கரைக்குக் கொண்டுவந்து, வெட்டி, விற்பதற்காக எகிப்துக்கு எடுத்துச் சென்றார்கள்.
சவக்கடல் உண்மையிலேயே ஒப்பற்றதுதான். உலகிலேயே இதுதான் மிகவும் உப்பானது, தாழ்வானது, உயிர்களற்றது, சொல்லப்போனால், மிக ஆரோக்கியமான கடலும்கூட. ஆம், இதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை. பூமியில் உள்ள அதிசய கடல்களில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. (g 1/08)
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
கடல்நீரில் பாதுகாப்பாக . . .
ஒருகாலத்தில், பரபரப்பாக இயங்கும் வியாபார மார்க்கமாய் சவக்கடல் இருந்ததாக சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தாலான இரண்டு நங்கூரங்கள் இதற்குச் சான்றளிக்கின்றன.
சவக்கடலில் தண்ணீர் குறைவாக உள்ள கரையோரப் பகுதியில் இந்த நங்கூரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒருகாலத்தில், இதற்கு அருகில்தான் பண்டைய துறைமுகமான என்கேதி அமைந்திருந்தது. இவற்றில் ஒரு நங்கூரம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதிக்குரியது. சவக்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நங்கூரங்களிலேயே இதுதான் மிகப் பழமையானது. இரண்டாவது நங்கூரம், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதெனச் சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் இருந்த மிகச் சிறந்த ரோம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இது செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
சாதாரணமாக, மரத்தாலான நங்கூரங்கள் கடல்நீரில் சிதைந்துவிடும். உலோகத்தாலானவையோ நீடித்திருக்கும். ஆனால், சவக்கடலில் பிராணவாயு இல்லாததாலும், அதில் உப்புத்தன்மை அதிகமிருப்பதாலும் அந்த மர நங்கூரங்களும் அவற்றோடு இணைக்கப்பட்ட கயிறுகளும் குறிப்பிடத்தக்க விதத்தில் நல்ல நிலையில் இருக்கின்றன.
[படம்]
பொ.ச.மு. 7-ஆம் நூற்றாண்டுக்கும் 5-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த மர நங்கூரம்
[படத்திற்கான நன்றி]
Photograph © Israel Museum, Courtesy of Israel Antiquities Authority
[பக்கம் 26-ன் படம்]
வெந்நீர் ஊற்று நீர்வீழ்ச்சிகள்
[பக்கம் 26-ன் படம்]
ஆண் மலையாடு
[பக்கம் 26-ன் படம்]
மிதந்துகொண்டே செய்தித்தாள் வாசிக்கிறார்கள்