Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் ஆசிரியர் யார்?

பைபிளின் ஆசிரியர் யார்?

பைபிளின் கருத்து

பைபிளின் ஆசிரியர் யார்?

பைபிளை எழுதியவர்கள் யார் யாரென அது ஒளிவுமறைவின்றி சொல்கிறது. பைபிளின் வெவ்வேறு புத்தகங்கள், “நெகேமியா கூறியது,” “ஏசாயா . . . கண்ட தரிசனம்,” ‘யோவேலுக்கு உண்டான யெகோவாவின் வசனம்’ போன்ற வார்த்தைகளுடன் தொடங்குகின்றன. (நெகேமியா 1:1, பொது மொழிபெயர்ப்பு; ஏசாயா 1:1; யோவேல் 1:1) பைபிளிலுள்ள சில சரித்திரப் பதிவுகள் காத், நாத்தான், சாமுவேல் ஆகியோர் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. (1 நாளாகமம் 29:29, 30) பல சங்கீதங்களில் காணப்படும் மேற்குறிப்புகள் அவற்றின் எழுத்தாளர்களை அடையாளம் காட்டுகின்றன.​—சங்கீதம் 79, 88, 89, 90, 103, 127.

பைபிளை எழுத மனிதர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மற்ற புத்தகங்களைப் போல இதுவும் மனித ஞானத்தில்தான் எழுதப்பட்டதென சந்தேகவாதிகள் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்துக்கு உறுதியான ஆதாரம் இருக்கிறதா?

நாற்பது எழுத்தாளர்கள், ஒரே ஆசிரியர்

பைபிளை எழுதிய அநேகர் ஒரே உண்மை கடவுளாகிய யெகோவாவின் பெயரில் எழுதியதாக ஒப்புக்கொண்டார்கள்; மேலும், அவராலோ அவரைப் பிரதிநிதித்துவம் செய்த ஒரு தேவதூதனாலோ வழிநடத்தப்பட்டு எழுதியதாகவும் ஒப்புக்கொண்டார்கள். (சகரியா 1:7, 9) எபிரெய வேதாகமத்தை எழுதிய தீர்க்கதரிசிகள் 300 தடவைக்கும் அதிகமாக, “கர்த்தர் [யெகோவா] சொல்லுகிறது என்னவென்றால்” எனச் சொல்லி செய்திகளை அறிவித்தார்கள். (ஆமோஸ் 1:3; மீகா 3:5; நாகூம் 1:12) இவர்களுடைய புத்தகங்களில் அநேகம், “ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்” என்பதைப் போன்ற வார்த்தைகளோடு ஆரம்பிக்கின்றன. (ஓசியா 1:1; யோனா 1:1) “தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்று கடவுளுடைய தீர்க்கதரிசிகளைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்.​—2 பேதுரு 1:21.

ஆக, பைபிளில் பல புத்தகங்கள் இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் இருக்கின்றன. பலர் அதை எழுதினபோதிலும் கடவுளுடைய எண்ணங்களையே தாங்கள் எழுதியதாக ஒப்புக்கொண்டார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், தம்முடைய எண்ணங்களை எழுத்தில் வடிக்க மனிதரை கடவுள் பயன்படுத்தினார். அதை அவர் எவ்வாறு செய்தார்?

“தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது”

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார். (2 தீமோத்தேயு 3:16) “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்பதற்கான கிரேக்க வார்த்தை சொல்லர்த்தமாக, “கடவுள் ஊதினார்” என்று பொருள்படுகிறது. அதாவது, தாம் தெரிவிக்க விரும்பிய விஷயங்களை அந்த எழுத்தாளர்களின் மனதிற்குள் விதைத்தார்; இதைச் செய்ய கண்ணுக்குத் தெரியாத தம்முடைய சக்தியைப் பயன்படுத்தினார். அதன்மூலம் தம்முடைய செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தார். என்றாலும், பத்துக் கட்டளைகளைக் கொடுத்த விஷயத்தில், கற்பலகைகளில் யெகோவாவே வார்த்தைகளை வடித்தார். (யாத்திராகமம் 31:18) சில சமயங்களில், தம்முடைய செய்தியை எழுதும்படி மனிதர்களிடம் அவர் நேரடியாகவே சொன்னார். “கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது . . . என்றார்” என்பதாக யாத்திராகமம் 34:27 சொல்கிறது.

இன்னும் சில சந்தர்ப்பங்களில், எழுதி வைக்க தாம் விரும்பிய தகவலை மனிதர்களுக்குத் தரிசனமாக கடவுள் காட்டினார். “நான் தேவதரிசனங்களைக் கண்டேன்” என்று எசேக்கியேல் சொன்னார். (எசேக்கியேல் 1:1) அதேவிதமாக, ‘தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டார். பின்பு அவர் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தார்.’ (தானியேல் 7:1) இதேவிதமாகவே, பைபிளின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தகவலும் அப்போஸ்தலன் யோவானுக்குக் காட்டப்பட்டது. ‘கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன் . . . அது: . . . நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுது’ என்று சொன்னதாக யோவான் குறிப்பிட்டார்.​—வெளிப்படுத்துதல் 1:10, 11.

மனித பாணி

விஷயங்கள் கடவுளுடைய வழிநடத்துதலால் கொடுக்கப்பட்டாலும், எழுத்தாளர்கள் அதைத் தங்களுடைய பாணியில் எழுதினார்கள். சொல்லப்போனால், கடவுளுடைய செய்தியை எழுதுவதற்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. உதாரணமாக, பைபிளிலுள்ள பிரசங்கி புத்தகத்தின் எழுத்தாளர், ‘இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க . . . வகைதேடினேன்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்’ என்று சொல்கிறார். (பிரசங்கி 12:10) தான் எழுதிய சரித்திரப்பூர்வ பதிவைத் தொகுப்பதற்கு எஸ்றா குறைந்தது 14 தகவல் மூலங்களிலிருந்து செய்திகளைச் சேகரித்தார்; ‘தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கு,’ ‘யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகம்’ போன்றவை அவற்றில் சில. (1 நாளாகமம் 27:24; 2 நாளாகமம் 16:11) சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா, ‘ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து . . . அவைகளை ஒழுங்காய் எழுதினார்.’​—லூக்கா 1:3, 4.

பைபிளின் சில புத்தகங்கள் அவற்றை எழுதிய எழுத்தாளருடைய சுபாவங்களை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, லேவி என்றழைக்கப்பட்ட மத்தேயு, இயேசுவின் சீஷராவதற்கு முன்னால் வரி வசூலிப்பவராக இருந்தார்; அதனால், எண்ணிக்கையைக் குறிப்பிடுகையில் விசேஷ கவனம் செலுத்தினார். இயேசு ‘முப்பது வெள்ளிக்காசுகளுக்கு’ காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ற விவரத்தைச் சொன்ன சுவிசேஷ எழுத்தாளர் இவர் ஒருவரே. (மத்தேயு 27:3; மாற்கு 2:14) வைத்தியரான லூக்கா மருத்துவ விவரங்களைத் துல்லியமாக எழுதியுள்ளார். உதாரணமாக, எப்படிப்பட்ட நிலையிலிருந்த சிலரை இயேசு சுகப்படுத்தினார் என விளக்கியபோது, ‘கடும் ஜுரம்,’ “குஷ்டரோகம் நிறைந்த” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். (லூக்கா 4:38; 5:12; கொலோசெயர் 4:14) பெரும்பாலும், எழுத்தாளர்கள் தங்களுடைய சொந்த வார்த்தைகளிலும் பாணியிலும் கருத்துகளை எழுதுவதற்கு யெகோவா அனுமதித்தார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. அதேசமயத்தில், தம்முடைய செய்தியைத் தெரிவிப்பதற்கும் எழுதப்பட்டவை துல்லியமாக இருப்பதற்கும் அவர்களுடைய எண்ணங்களை அவர் வழிநடத்தினார்.​—நீதிமொழிகள் 16:9.

முழு பைபிள்

சுமார் 40 பேர் வெவ்வேறு இடங்களிலிருந்து 1,600 ஆண்டுகளாக எழுதிய ஒரு புத்தகம் எல்லா விதத்திலும் முழுமையான ஒத்திசைவுடனும் முரண்பாடற்ற அருமையான மையப்பொருளுடனும் இருப்பது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லையா? (பக்கம் 19-⁠லுள்ள “பைபிள் எதைப்பற்றிச் சொல்கிறது?” என்ற கட்டுரையைக் காண்க.) அவர்கள் அனைவரையும் ஒரே ஆசிரியர் உபயோகிக்காவிட்டால் இவையெல்லாம் முடியாமல் போயிருக்கும்.

தம்முடைய வார்த்தையை எழுதுவதற்கு யெகோவா மனிதர்களைப் பயன்படுத்துவது அவசியமாய் இருந்ததா? இல்லை. ஆனால், அவர் அப்படிப் பயன்படுத்தியது அவருடைய ஞானத்தைப் பறைசாற்றியது. பைபிள் எழுத்தாளர்கள் திறந்த மனதோடு, எல்லா விதமான உணர்ச்சிகளையும் எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், எல்லா தேசத்தாரின் உள்ளத்தையும் பைபிள் தொடுகிறது. தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, கடவுளுடைய இரக்கத்திற்காகக் கெஞ்சி மன்றாடிய, மனந்திரும்பிய பாவியான தாவீது ராஜாவைப் பற்றிய தகவலும் அதில் இருக்கிறது.​—சங்கீதம் 51:2-4, 13, 17, மேற்குறிப்பு.

எழுதுவதற்கு மனிதர்களை யெகோவா பயன்படுத்தியிருந்தாலும், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்தப் பரிசுத்த வேதாகமத்தை, ‘மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டார்கள்.’ அதேபோல நாமும் ஏற்றுக்கொள்ளலாம்.​—1 தெசலோனிக்கேயர் 2:13.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ ‘வேதவாக்கியங்களெல்லாவற்றின்’ ஆசிரியர் யார்?​—⁠2 தீமோத்தேயு 3:16.

◼ தம்முடைய எண்ணங்களைத் தெரிவிக்க யெகோவா என்னென்ன வழிகளைப் பயன்படுத்தினார்?​—⁠யாத்திராகமம் 31:18; 34:27; எசேக்கியேல் 1:1; தானியேல் 7:1.

◼ கடவுளுடைய வழிநடத்துதலால் பைபிளை எழுதியவர்களின் சுபாவமும் செல்வாக்கும் அவர்களுடைய எழுத்துநடையில் எவ்வாறு தெரிகின்றன?​—⁠மத்தேயு 27:3; லூக்கா 4:38.