இன்றுவரை பைபிள் எவ்வாறு நிலைத்திருக்கிறது?
இன்றுவரை பைபிள் எவ்வாறு நிலைத்திருக்கிறது?
இன்றுவரை பைபிள் நிலைத்திருப்பது அதிசயம்தான். சுமார் 1,900-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னால் இது எழுதி முடிக்கப்பட்டது. அழியும் தன்மையுள்ள நாணற்புல் காகிதங்களிலும் மிருகங்களின் பதப்படுத்தப்பட்ட தோலிலும் இது எழுதப்பட்டது. இன்று வெகு சிலரே பேசுகிற மொழியில் அன்று எழுதப்பட்டது. மேலும், பேரரசர்கள்முதல் மதத் தலைவர்கள்வரை வில்லாதி வில்லர்களெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு பைபிளை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தார்கள்.
தனிச் சிறப்புமிக்க இந்தப் புத்தகம் காலத்தை வென்று எவ்வாறு நிலைத்திருக்கிறது? பாரெங்கும் மக்கள் நன்கு அறிந்த புத்தகமாக ஆகியிருப்பது எப்படி? அதற்கான இரண்டு காரணங்களை மட்டும் இப்பொழுது சிந்திக்கலாம்.
பன்மடங்கு பிரதிகள் வேதாகமத்தைப் பாதுகாத்தன
ஆரம்பத்தில் பைபிள் புத்தகங்களின் பாதுகாவலர்களாய் விளங்கிய இஸ்ரவேலர் மிக ஜாக்கிரதையாக ஆரம்ப சுருள்களைப் பாதுகாத்தார்கள்; அவற்றை எண்ணற்ற நகல்கள் எடுத்தார்கள். உதாரணமாக, “லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, . . . ஒரு பிரதியை” தங்களுக்கென எழுதி வைக்குமாறு இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களிடம் சொல்லப்பட்டது.—உபாகமம் 17:20.
பெரும்பாலான இஸ்ரவேலர் வேதவாக்கியங்களை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டு அவற்றை வாசிப்பதில் பேரின்பம் கண்டார்கள். அதன் காரணமாக, திறம்பட்ட நகலெடுப்பவர்களின் உதவியோடு அதிக கவனத்துடன் வேதாகமம் பிரதியெடுக்கப்பட்டது. நகலெடுக்கும் பணிசெய்த, பயபக்திமிக்க எஸ்றா, ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகர்’ என்று குறிப்பிடப்படுகிறார். (எஸ்றா 7:6) பொ.ச. ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் எபிரெய வேதாகமத்தை (“பழைய ஏற்பாட்டை”) நகலெடுத்த மசோரெட்டுகள், பிழைகளைத் தவிர்ப்பதற்காக வேதாகமத்திலிருந்த எழுத்துக்களை எண்ணி எழுதினார்களாம். இதுபோன்று சிரத்தையோடு, கண்ணும்கருத்துமாக நகலெடுத்தது, வேதாகமம் மிகச் சரியாக இருக்க உதவியது; அதோடு, பைபிளை அழிப்பதற்கு எதிரிகள் மூர்க்கத்தோடு, விடாமல் முயற்சி செய்தபோதிலும் அது நிலைத்திருக்கவும் உதவியது.
உதாரணமாக, பொ.ச.மு. 168-ல் சிரியாவை ஆண்ட நான்காம் ஆண்டியோகஸ், பாலஸ்தீனம் முழுவதிலும் கண்ணில்பட்ட எபிரெய வேதாகமப் பிரதிகளையெல்லாம் அழித்துப்போடுவதற்கு முயற்சி செய்தான். “அவர்கள் கையில் சிக்கிய நியாயப்பிரமாணத்தின் எந்தச் சுருள்களும் சுக்குநூறாகக் கிழிக்கப்பட்டு, தீயில் பொசுக்கப்பட்டன” என்று யூத சரித்திரப் புத்தகம் ஒன்று குறிப்பிடுகிறது. த ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “நியாயப்பிரமாணத்தின் சுருள்களை அழிக்க வேண்டும் என்ற கட்டளையை அதிகாரிகள் தீவிரமாய் நிறைவேற்றினார்கள் . . . பரிசுத்த புத்தகத்தை வைத்திருந்தவர்களுக்கு . . . மரண தண்டனை விதிக்கப்பட்டது.” என்றாலும், பாலஸ்தீனத்திலும் மற்ற நாடுகளிலும் வாழ்ந்த யூதர்களிடம் வேதாகமத்தின் பிரதிகள் பாதுகாப்பாய் இருந்தன.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை (“புதிய ஏற்பாட்டை”) எழுத்தாளர்கள் எழுதி முடித்தவுடனேயே, கடவுளுடைய வழிநடத்துதலால் அவர்கள் எழுதிய கடிதங்களும் தீர்க்கதரிசனங்களும் சரித்திர சம்பவங்களும் மின்னல் வேகத்தில் அதிகமதிகமாய் நகலெடுக்கப்பட்டன. உதாரணமாக, யோவான் தன்னுடைய சுவிசேஷத்தை எபேசுவிலோ அதற்கு அருகிலோ எழுதினார். அந்த சுவிசேஷத்தினுடைய நகலின் ஒரு துண்டுப்பகுதி, பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது; இது, யோவான் தன் சுவிசேஷத்தை எழுதி முடித்த 50 வருடங்களுக்குள்ளாக நகலெடுக்கப்பட்ட பிரதியின் ஒரு பகுதியென வல்லுநர்கள் கூறுகிறார்கள். கிரேக்க வேதாகமம் எழுதப்பட்டு சில ஆண்டுகளிலேயே, அதன் பிரதிகள் தூர தேசங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் வசம் இருந்தது இந்தக் கண்டுபிடிப்பிலிருந்து தெரிய வந்தது.
பைபிள் மிகப் பரவலாக வினியோகிக்கப்பட்டதும்கூட கிறிஸ்துவின் காலத்திற்குப் பிறகு பல நூற்றாண்டுகளாக அது நிலைத்திருப்பதற்கு உதவியது. உதாரணமாக, பொ.ச. 303-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி பொழுது புலர்ந்ததும் ரோமப் பேரரசர் டையோகிளிஷனுடைய போர் வீரர்கள் ஒரு சர்ச்சின் கதவுகளை நொறுக்கிப்போட்டு உள்ளே போய் வேதாகமத்தின் பிரதிகளை எரித்தபோது அவர் கண்குளிர அதைக் கண்டுகளித்தார் எனக் கூறப்படுகிறது. பரிசுத்த வேதாகமத்தை எரிப்பதன்மூலம் கிறிஸ்தவத்தைப் பூண்டோடு அழித்துவிடலாம் என டையோகிளிஷன் மனக்கணக்குப் போட்டார். எனவே, ரோமப் பேரரசு முழுவதிலும் உள்ள பைபிள்கள் அனைத்தையும் அடுத்த நாள் முச்சந்தியில் எரிக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார். என்றாலும், சில பிரதிகள்
தப்பின; திரும்பவும் பிரதிகளெடுக்கப்பட்டன. சொல்லப்போனால், டையோகிளிஷனின் துன்புறுத்தலுக்குப் பிறகு கொஞ்ச காலத்திற்குள்ளாகவே பிரதியெடுக்கப்பட்ட கிரேக்க மொழி பைபிளின் இரண்டு நகல்களின் பெரும் பகுதிகள் இந்நாள்வரை இருக்கின்றன. ஒன்று ரோமிலும், மற்றொன்று இங்கிலாந்திலுள்ள லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் நூலகத்திலும் காணப்படுகின்றன.பைபிளின் மூலப்பிரதிகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் முழு பைபிளின் அல்லது அதன் சில பகுதிகளின் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரக்கணக்கில் இன்றும் உள்ளன. அவற்றில் பல மிகப் பழமையானவை. மூல பைபிளிலிருந்த செய்தி நகலெடுக்கும்போது மாறிவிட்டதா? “வேறெந்த பழமையான புத்தகமும் இவ்வளவு துல்லியமாக நகலெடுக்கப்படவில்லையென நிச்சயமாகச் சொல்லலாம்” என்று எபிரெய வேதாகமத்தைப்பற்றி டபுள்யூ. எச். கிரீன் என்ற அறிஞர் கூறினார். பைபிளின் மூலப்பிரதிகளைப் பாதுகாக்கும் முக்கிய அதிகாரியான சர் ஃபிரெட்ரிக் கென்யன் கிரேக்க வேதாகமத்தைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “மூலப்பிரதிகள் எழுதப்பட்ட சமயத்திற்கும், இப்போது நம்மிடமுள்ள மிகப் பழமையான பிரதிகள் எழுதப்பட்ட சமயத்திற்கும் இடையில் சொல்லிக்கொள்ளுமளவிற்கு இடைவெளி இல்லை. வேதாகமங்கள் ஆரம்பத்தில் எழுதப்பட்ட விதமாகவே இன்றும் நம்மிடம் இருக்கின்றனவா என நீண்ட காலமாய் மனதைக் குடைந்த சந்தேகங்கள் அனைத்தும் இப்பொழுது தீர்க்கப்பட்டுவிட்டன. புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மையும் பொதுவான நாணயமும் இறுதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படலாம்.” அதோடு, “பைபிள் திருத்தமானது என்று சந்தேகத்திற்கிடமின்றி சொல்லலாம். . . . உலகிலுள்ள மற்றெந்த பழமையான புத்தகங்களைப் பற்றியும் இவ்வாறு சொல்ல முடியாது” என்றும் சொன்னார்.
பைபிள் மொழிபெயர்ப்பு
உலகமெங்கும் அறியப்பட்ட புத்தகமாக பைபிள் ஆகியிருப்பதற்கு, அது ஏராளமான மொழிகளில் கிடைப்பது இரண்டாவது முக்கிய காரணமாகும். இந்த உண்மை, எல்லா நாட்டவரும் பல்வேறு மொழியினரும் தம்மை அறிந்துகொண்டு, “ஆவியோடும் உண்மையோடும்” தம்மை வணங்க வேண்டும் என்ற கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாகவே இருக்கிறது.—யோவான் 4:23, 24; மீகா 4:2.
எபிரெய வேதாகமத்தின் முதல் மொழிபெயர்ப்பு, கிரேக்க செப்டுவெஜின்ட் மொழிபெயர்ப்பு ஆகும். இது, பாலஸ்தீனத்திற்கு வெளியே வாழ்ந்த கிரேக்க மொழி பேசிய யூதர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது; பூமியில் இயேசு ஊழியம் செய்வதற்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி முடிக்கப்பட்டது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் உட்பட முழு பைபிளும் எழுதி முடிக்கப்பட்ட சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே அதன் மொழிபெயர்ப்புகள் அநேக மொழிகளில் கிடைக்க ஆரம்பித்தன. பிறகோ, ராஜாக்களும், மக்களின் கைகளில் பைபிள் கிடைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டிய பாதிரியார்களும்கூட அதைக் கடுமையாய் எதிர்த்தார்கள். மக்களறிந்த மொழிகளில் கடவுளுடைய வார்த்தை மொழிபெயர்க்கப்படுவதற்கு முட்டுக்கட்டை போடுவதன்மூலம் தங்களுடைய சர்ச் உறுப்பினர்களை ஆன்மீக இருளிலேயே வைத்திருக்க அவர்கள் முயற்சி செய்தார்கள்.
எதிர்ப்பதில் சர்ச்சும், அரசாங்கமும் கைகோர்த்தபோதிலும் மக்களின் மொழியில் பைபிளை மொழிபெயர்க்க நெஞ்சுரமிக்கவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தார்கள். உதாரணமாக, ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த வில்லியம் டின்டேல் என்ற ஆங்கிலேயர், 1530-ல் ஐந்தாகமங்களின் தொகுப்பை, அதாவது, எபிரெய வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களை மொழிபெயர்த்தார். இவர், பல எதிர்ப்புகளின் மத்தியிலும் பைபிளை எபிரெயு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு நேரடியாக மொழிபெயர்த்த முதல் நபரானார். மேலும், யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்திய முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாளரும் இவரே. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பைபிள் அறிஞரான காஸியோடோரோ டெ ரேனா முதன்முதலாக பைபிளை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவர்; இப்பணியில் ஈடுபட்டிருந்தபோது கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களால் மரணத்தை முத்தமிடுமளவுக்குத் துன்புறுத்தலைச் சந்தித்து வந்தார். தன்னுடைய மொழிபெயர்ப்பு வேலையை முழுமையாய் முடிப்பதற்கு அவர், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, ஹாலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார். a
இன்று பைபிள் அதிகமதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது; லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுகின்றன. மக்கள் நன்கு அறிந்த புத்தகமாக பைபிள் நிலைத்திருப்பது, கடவுளுடைய வழிநடத்துதலால் பின்வருமாறு எழுதின அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகளிலுள்ள உண்மைக்கு அத்தாட்சி அளிக்கிறது. “புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று அவர் எழுதினார்.—1 பேதுரு 1:24, 25.
[அடிக்குறிப்பு]
a ரேனாவுடைய மொழிபெயர்ப்பு 1569-ல் வெளியானது; ஸீப்ரீயானோ டே வாலேரா என்பவர் 1602-ல் அதை மறுபதிப்பு செய்தார்.
[பக்கம் -ன் பெட்டி/படங்கள்] 14]
எந்த மொழிபெயர்ப்பை நான் வாசிக்க வேண்டும்?
அநேக மொழிகளில் ஏராளமான பைபிள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. சில மொழிபெயர்ப்புகள் புரிந்துகொள்ளக் கடினமான, புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. இன்னும் சில மொழிபெயர்ப்புகள், உள்ளதை உள்ளபடி சொல்லாமல், வசனங்களின் சாராம்சத்தை மட்டும் கொடுக்கும் மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன; இதுபோன்ற மொழிபெயர்ப்புகள், துல்லியமாய் இருக்க வேண்டும் என்பதற்கல்ல, வாசிப்பதற்குச் சுலபமாய் இருக்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. வேறு சில மொழிபெயர்ப்புகள், கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்திருக்கின்றன.
யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் ஆங்கில பதிப்பு, பெயர் குறிப்பிட விரும்பாத குழுவினரால் மூலமொழிகளிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பிறகு, இந்த மொழிபெயர்ப்பை அடிப்படையாக வைத்து, சுமார் 60 மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும், அந்த மொழிகளில் மொழிபெயர்த்தவர்கள் வேதாகமத்தின் மூலமொழியோடு தாராளமாய் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். முடிந்தவரை மூலமொழி வாசகத்தை அர்த்தம் மாறாமல் அப்படியே மொழிபெயர்ப்பதுதான் புதிய உலக மொழிபெயர்ப்பின் நோக்கமாகும். பைபிள் காலத்தில் வாழ்ந்த வாசகர்கள், மூலமொழியில் எழுதப்பட்ட வாசகங்களை எளிதாகப் புரிந்துகொண்டார்கள். அதேவிதமாக, இன்றுள்ள வாசகர்கள் பைபிளை வாசித்ததும் உடனடியாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை உருவாக்க மொழிபெயர்ப்பாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.
துல்லியமற்ற தன்மைக்கும் ஒருதலைபட்சமான மொழிபெயர்ப்புக்கும் உதாரணங்களைக் கொடுக்க, புதிய உலக மொழிபெயர்ப்பு உட்பட நவீன பைபிள் மொழிபெயர்ப்புகள் சிலவற்றை மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஆய்வு செய்தார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜேஸன் டேவிட் பெடூன் என்ற அறிஞர்; இவர், அமெரிக்காவிலுள்ள வட அரிஜோனா பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுப் பிரிவின் இணைப் பேராசிரியராவார். இவர், “ஆங்கிலம் பேசுவோர் மத்தியில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பைபிள்களில்” ஒன்பது பைபிள்களை ஆய்வு செய்து, 2003-ல் 200 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். b சர்ச்சைக்குட்பட்ட பல வேதவசனங்களை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்; ஏனென்றால், அதுபோன்ற வசனங்களை “மொழிபெயர்க்கையில் ஒருதலைபட்சமாக மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பு அதிகம்” இருக்கிறது. இவர், அந்த ஒவ்வொரு வசனங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் கிரேக்க வசனத்தோடு ஒப்பிட்டார். அப்போது, அர்த்தத்தை மாற்றி தங்களுக்குச் சாதகமாக மொழிபெயர்த்திருக்கிறார்களாவென ஆராய்ந்தார். அவருடைய விமர்சனம் என்ன?
புதிய உலக மொழிபெயர்ப்பு (NW) பைபிளில் வேறுபாடுகள் இருப்பதற்கு, அதன் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மதத்திற்கு சாதகமாக மொழிபெயர்த்திருப்பதே காரணமென பொதுமக்களும் பைபிள் அறிஞர்கள் பலரும் நினைப்பதாக பெடூன் குறிப்பிடுகிறார். எனினும், அவர் இவ்வாறு சொல்கிறார்: “புதிய உலக மொழிபெயர்ப்பு, நேர்ப்பொருளை தரும் விதத்தில், கவனமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி மிகத் துல்லியமாக இருப்பதுதான் அதிக வேறுபாடுகளுக்குக் காரணம்.” புதிய உலக மொழிபெயர்ப்பு பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகளை அவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், “ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புகளில் இதுவே மிகத் துல்லியமானது” என்கிறார். இதை, “மிகச் சிறந்த” மொழிபெயர்ப்பு என்றும் அழைக்கிறார்.
இஸ்ரேலைச் சேர்ந்த டாக்டர் பெஞ்ஜமின் கடார் என்ற எபிரெய அறிஞரும் புதிய உலக மொழிபெயர்ப்புக்குப் பின்வருமாறு புகழாரம் சூட்டினார். 1989-ல் அவர் இவ்வாறு சொன்னார்: “வேதாகமத்தை முடிந்தளவு நன்றாகப் புரிந்துகொள்வதற்கு நேர்மையாக முயற்சி எடுக்கப்பட்டிருப்பது இந்த மொழிபெயர்ப்பை வாசிக்கையில் தெரிகிறது. . . . வேதவசனத்தின் அர்த்தத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி உரைக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாதிருந்ததும் புதிய உலக மொழிபெயர்ப்பை வாசிக்கையில் தெளிவாகிறது.”
‘என்ன நோக்கத்திற்காக நான் பைபிளை வாசிக்கிறேன்? துல்லியமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வாசிப்பதற்கு சுலபமாய் இருக்க வேண்டுமென நினைக்கிறேனா? அல்லது மூலவாக்கியத்தில் உள்ளதைப் போன்று முடிந்தளவு துல்லியமாக உள்ள மொழிபெயர்ப்பை வாசிக்க நினைக்கிறேனா?’ என்ற கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (2 பேதுரு 1:20, 21) உங்களுடைய பதிலின் அடிப்படையில் நீங்கள் எந்த மொழிபெயர்ப்பை வாசிக்க வேண்டுமெனத் தீர்மானியுங்கள்.
[அடிக்குறிப்பு]
b புதிய உலக மொழிபெயர்ப்பு தவிர மற்ற மொழிபெயர்ப்புகள் பின்வருவன: தி ஆம்ப்ளிஃபைடு நியூ டெஸ்டமன்ட், த லிவிங் பைபிள், தி அமெரிக்கன் பைபிள் வித் ரிவைஸ்டு நியூ டெஸ்டமன்ட், நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்டு பைபிள், த ஹோலி பைபிள்—நியூ இன்டர்நேஷனல் வர்ஷன், த நியூ ரிவைஸ்டு ஸ்டாண்டர்டு வர்ஷன், த பைபிள் இன் டுடேஸ் இங்லிஷ் வர்ஷன், கிங் ஜேம்ஸ் வர்ஷன்.
[படம்]
“பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு” இப்பொழுது அநேக மொழிகளில் கிடைக்கிறது
[பக்கம் 12, 13-ன் படம்]
மசோரெடிக் மூலப்பிரதிகள்
[பக்கம் 13-ன் படம்]
“. . . பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்ற லூக்கா 12:7-லுள்ள வாக்கியம் காணப்படும் ஒரு துண்டுப்பகுதி
[பக்கம் 13-ன் படங்களுக்கான நன்றி]
Foreground page: National Library of Russia, St. Petersburg; second and third: Bibelmuseum, Münster; background: © The Trustees of the Chester Beatty Library, Dublin