நொறுங்கிய இதயங்களும் சிதறிய விசுவாசமும்
நொறுங்கிய இதயங்களும் சிதறிய விசுவாசமும்
“கிழித்துப்போட்ட குப்பைகளாய் எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் கிடந்தன; எங்களுடைய வீடு எங்கே இருந்தது என்பதைக்கூட எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சொன்னார்; அவருடைய கிராமத்தை டிசம்பர் மாதம் 2004-ல் சுனாமி நாசமாக்கியது. சில சமயங்களில் “பல்லைக் கடித்துக்கொண்டு ஜெபம் செய்ய” வேண்டியிருந்தது என்று அந்த அழிவைப்பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில் மதத்தைப்பற்றிக் கட்டுரைகள் எழுதும் ஒரு பத்திரிகை ஆசிரியர் சொன்னார்.
இயற்கைப் பேரழிவுகள் கடவுள் கொடுக்கும் தண்டனை என்று அநேகர் நினைக்கிறார்கள். ஒரு பத்திரிகை எழுத்தாளர் அழிவுண்டாக்கிய சூறாவளியைக் “கடவுளின் கைவரிசை” என்று விளக்கினார். ஐக்கிய மாகாணங்களில் உள்ள சில மதத் தலைவர்கள் கட்ரீனா சூறாவளி தாக்குதல் போன்ற சம்பவங்களை “பாவமுள்ள நகரங்களின்” மேல் வந்த “கடவுளின் சீற்றம்” என்பதாக விவரித்தார்கள். புத்த மதத்தில் தீவிர ஈடுபாடுடைய இலங்கையைச் சேர்ந்தவர்கள் சுனாமி வந்ததற்காக கிறிஸ்தவர்களைக் குற்றம் சாட்டினார்கள்; அதனால், இவ்விரு மதங்களுக்கிடையே இருந்த பிரிவினை இன்னும் மோசமானது. இந்து கோவில் ஒன்றின் தர்மகர்த்தா, மக்கள் சரியான வழியில் வாழவில்லை அதனால்தான் சிவ பெருமான் கோபப்பட்டுவிட்டதாக நம்பினார். ஐக்கிய மாகாணங்களில் உள்ள புத்த மதத் தலைவர் ஒருவர் இயற்கைப் பேரழிவுகளைப்பற்றி இவ்வாறு சொன்னார்: “இந்தச் சம்பவங்களெல்லாம் ஏன் நடக்கின்றன என்று நமக்குத் தெரியாது. இந்தப் பூமியில் நாம் ஏன் இருக்கிறோம் என்பதும்கூடத் தெரியாது.”
சிதைந்துபோன வீடுகளையும் செத்து விழுந்த உடல்களையும் நொறுங்கித் தவிக்கும் இதயங்களையும் காணும்போது, ‘கடவுள் ஏன் இவ்வளவு அதிகமான துன்பங்களை அனுமதிக்கிறார்’ என்று வியப்புடன் கேட்டிருக்கிறீர்களா? அல்லது ‘இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கடவுள் அனுமதித்ததற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்; ஆனால், அவற்றை அவர் சொல்லவில்லை’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்தப் பத்திரிகையில் பின்வரும் கட்டுரைகள் அந்த விஷயத்தை அலசும். மேலும், இயற்கைப் பேரழிவுபற்றி முன்னறிவிப்பு செய்யும்போது அல்லது சம்பவிக்கும்போது காயப்படுவதையும் உயிரிழப்பதையும் முடிந்தவரை தவிர்ப்பதற்கு மக்கள் எடுக்க வேண்டிய சில நடைமுறை படிகளையும் இக்கட்டுரைகள் கலந்தாராயும்.
[பக்கம் 3-ன் படம்]
இயற்கைப் பேரழிவுகளை கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்று அநேக மதத் தலைவர்களுக்குத் தெரியவில்லை