Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாவுக்குச் சவால்விடும் வாட்டர் பேர்

சாவுக்குச் சவால்விடும் வாட்டர் பேர்

சாவுக்குச் சவால்விடும் வாட்டர் பேர்

ஜப்பானிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

உலகெங்குமுள்ள ஈரமான வாழிடங்களில் தேடிப்பாருங்கள். பாசிகள், பனிக்கட்டிகள், ஆற்றுப்படுகைகள், வெந்நீர் ஊற்றுகள், ஏரிகள், பெருங்கடல்கள் என எல்லா இடங்களிலும் அது இருக்கும்; ஏன் உங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்திலும்கூட அது இருக்கலாம். அது என்ன? உலகிலேயே கெட்டி ஆயுளுள்ள சின்னஞ்சிறிய பிராணிகளில் ஒன்றான வாட்டர் பேர்தான் அது. கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய வாட்டர் பேரின் குட்டி உடல், நான்கு பகுதிகளைக் கொண்டது. புறத்தோல் கவசம் போல அமைந்துள்ளது. எட்டுக் கால்களிலும் வளைநகங்கள் உள்ளன. அதன் முழு தோற்றத்தையும் நடையையும் பார்த்தால், ஆடி அசைந்து வரும் கரடியைப் போலிருக்கிறது; அதனால்தான் வாட்டர் பேர் என அழைக்கப்படுகிறது.

வாட்டர் பேர்கள் டார்டிகிரேடு இனத்தைச் சேர்ந்தவை. டார்டிகிரேடு என்றால் “மெதுவாக நடப்பவை” என்று அர்த்தம். இவற்றில் நூற்றுக்கணக்கான வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெண் வாட்டர் பேர்கள் ஒரே சமயத்தில் 1-⁠லிருந்து 30 முட்டைகள் வரை இடுகின்றன. இந்தக் குட்டிப் பிராணிகள் கொஞ்சம் ஈரமணலில் அல்லது ஈரமண்ணில் மட்டுமே ஆயிரக்கணக்கானவை இருக்கலாம். கூரையிலுள்ள பாசிகள்தான் இவற்றிற்குப் பிடித்தமான குடியிருப்பு.

வாட்டர் பேர் கடும் மோசமான சூழலையும்கூட தாக்குப்பிடிப்பவை. “சில வாட்டர் பேர்கள் எட்டு நாட்கள் வெற்றிடத்தில் வைக்கப்பட்டன; பின்பு, அறை வெப்பநிலையிலிருந்த ஹீலியம் வாயுவில் மூன்று நாட்களுக்கு மாற்றி வைக்கப்பட்டன; அதன்பிறகு, -272 டிகிரி செல்சியஸ் (-458 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பத்தில் பல மணிநேரங்கள் வைக்கப்பட்டன. அப்படியிருந்தும், சாதாரண அறை வெப்பநிலைக்கு வந்தவுடனேயே உயிர்பெற்றன” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா தெரிவிக்கிறது. மனித உயிரைப் பறித்துவிடுகிற ஆபத்தான எக்ஸ்ரே கதிர்கள் அதன் உடலில் நூற்றுக்கணக்கான மடங்கு ஊடுருவினாலும்சரி அது சாவதில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு விண்வெளியில் இருந்தாலும்கூட பிழைத்துக்கொள்வதாகச் சொல்லப்படுகிறது!

வாட்டர் பேர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சாகாமல் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? இறந்துவிட்டதைப்போன்ற சலனமற்ற நிலையில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் இவற்றிற்கு உள்ளது; அப்போது இவற்றின் வளர்சிதை மாற்றம் இயல்பிலிருந்து 0.01 சதவீதமாகக் குறைந்துவிடுகிறது, அதாவது முற்றிலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது! இந்நிலையை அடைவதற்காக, இவை தங்களுடைய கால்களை உடலுக்குள் இழுத்துக் கொள்கின்றன, உடலிலுள்ள நீரையெல்லாம் வெளியேற்றிவிட்டு, அதை ஈடுசெய்ய விசேஷ சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. அதோடு, டன் என அழைக்கப்படுகிற சிறிய மெழுகு பூசப்பட்ட பந்துபோல் சுருண்டுகொள்கின்றன. பிறகு, இயல்பான சீதோஷ்ணத்தில் அதாவது ஈரப்பதமான சூழ்நிலை திரும்புகையில் சில நிமிடங்களிலிருந்து சில மணிநேரத்துக்குள்ளே காலை நீட்டிநெளித்து செயல்படத் துவங்குகின்றன. ஒரு சமயத்தில், இந்த நிலைக்குச் சென்றிருந்த வாட்டர் பேர்கள் நூறு வருடங்களுக்குப்பின் மீண்டும் உயிர்பெற்று வெற்றிகரமாக வலம்வந்தன!

ஆம், அமைதியான இந்தக் குட்டி ‘ஊரும் பிராணிகள்’ அவற்றுக்கே உரிய பாணியில் யெகோவாவைத் துதிக்கின்றன, அதுவும் அதிசயிக்கத்தக்க விதத்தில்!​—சங்கீதம் 148:10, 13.

[பக்கம் 30-ன் படத்திற்கான நன்றி]

© Diane Nelson/Visuals Unlimited