Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஸ்வால்பார்ட் குளிர்ந்த கடற்கரை தேசம்

ஸ்வால்பார்ட் குளிர்ந்த கடற்கரை தேசம்

ஸ்வால்பார்ட் குளிர்ந்த கடற்கரை தேசம்

நார்வேயிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அடர்ந்த மேகங்களுக்கு இடையே எங்கள் விமானம் பறந்துகொண்டிருந்ததால், எதையுமே எங்களால் பார்க்க முடியவில்லை. மேகங்களைக் கிழித்துக்கொண்டு எங்கள் விமானம் வெளியே விரைந்தபோதோ வெண்பனி மூடிய வடதுருவப் பிரதேச இயற்கை எழில் எங்கள் கண்களுக்கு விருந்தளித்தது. ஆகா, அது கண்கொள்ளாக் காட்சி! வெளிர் நீல வண்ணத்தில் காட்சியளித்த கடற்கழிகளையும், பனிப்பாறைகளையும், பனிபோர்த்திய மலைகளையும் கண்டு சொக்கிப் போனோம். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பனிபடர்ந்த பொட்டல் காடுகள்தான் தென்பட்டன. இதுதான் ஸ்வால்பார்ட்; வடதுருவத்திற்கு அருகிலுள்ள தீவுக்கூட்டம். இது வட அட்சரேகையில் 74 டிகிரிக்கும் 81 டிகிரிக்கும் இடையே அமைந்துள்ளது. இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கவே நாங்கள் வந்திருக்கிறோம்!

ஸ்வால்பார்ட் என்பதற்கு “குளிர்ந்த கடற்கரை” என்று அர்த்தம். முதன்முதலில் இந்தப் பெயர் 1194-⁠ல் ஐஸ்லாந்தின் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெற்றது. ஆனால், 400 ஆண்டுகளுக்குப் பிறகுதான், அதாவது 1596-⁠ல்தான், இந்த நிலப்பகுதி “கண்டுபிடிக்கப்பட்டு” இதன் இருப்பிடம் உலகிற்கே தெரியவந்தது. அந்த வருடத்தில் டச்சு ஆய்வுப்பயணிகளின் ஒரு தொகுதி, வடக்கு நோக்கிப் பயணித்தது; வில்லம் பாரன்ட்ஸ் என்பவர் அந்தத் தொகுதியின் தலைவராக இருந்தார். அடிவானத்தில் கரடுமுரடான மலைத்தொடர்களை, முன்பின் தெரியாத ஒரு நிலப்பகுதியை, கப்பல் காவற்தளப் பார்வையாளன் கண்டான். இந்த ஆய்வுப்பயணிகள் ஸ்வால்பார்ட்டின் வடமேற்குப் பகுதிக்கு வந்திருந்தார்கள். அந்த நிலப்பகுதிக்கு, “ஸ்பிட்ஸ்பர்கன்” என்று பாரன்ட்ஸ் பெயர்சூட்டினார்; இதற்கு “கூர்முனை மலைகள்” என்று அர்த்தம். அதுவே இன்றுவரை இந்தத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய தீவின் பெயராகும். பாரன்ட்ஸின் கண்டுபிடிப்பு ஸ்வால்பார்ட் பகுதியில் மும்முரமான வேலையை முடுக்கிவிட்டது; ஆம், திமிங்கில வேட்டை, சீல் வேட்டை, கண்ணி வைத்துப் பிடிக்கும் விலங்கு வேட்டை ஆகியவற்றில் ஈடுபடுவது, புதிய கண்டுபிடிப்புகளில் இறங்குவது ஆகியவை தவிர நிலக்கரிச் சுரங்க வேலை, அறிவியல் ஆராய்ச்சிகள், சுற்றுலாத் துறை என பல்வேறு தொழில்கள் இங்கு சூடுபிடித்திருக்கின்றன. காலப்போக்கில் பல்வேறு நாடுகள் இந்தத் தொழில்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. ஆனால், 1925 முதற்கொண்டு இந்தத் தீவுக்கூட்டம் நார்வே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

நிலை உறைபனி நாடு, வடதுருவ வைகறை வெளிச்சம்

எங்கள் விமானம் ஐஸ் கடற்கழியின் மேல் தாழ்வாகப் பறந்து ஸ்வால்பார்ட் விமான நிலையத்தில் தளம் இறங்குகிறது. வாடகைக் கார் ஒன்றில் நாங்கள் லாங்யீர்புயியன் என்ற இடத்திற்குச் செல்கிறோம்; ஜான் எம். லாங்யீர் என்பவரின் நினைவாக இப்பெயர் இந்த இடத்திற்குச் சூட்டப்பட்டிருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் சுரங்கத் தொழிலில் பெரும் செல்வாக்குமிக்கவர். இவரே 1906-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் முதன்முதல் நிலக்கரிச் சுரங்கங்களை அமைத்தவர். ஸ்வால்பார்ட்டில் லாங்யீர்புயியனில்தான் ஜனத்தொகை அதிகம்; அதாவது, சுமார் 2,000 பேர் அங்கு வசிக்கிறார்கள். இயற்கைச் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படாத இந்தப் பரந்த நிலத்தில் நவீன நகரம் ஒன்றைப் பார்க்கிறோம்; ஆம், இங்கு பல்பொருள் அங்காடி, தபால் நிலையம், வங்கி, பொது நூலகம், பள்ளிகள், பாலர்பள்ளிகள், ஹோட்டல்கள், கஃபேக்கள், ரெஸ்டராண்ட்டுகள் ஆகியவையும் ஒரு மருத்துவமனையும் உள்ளன; அதோடு ஒரு செய்தித்தாளும் இங்கு வெளியாகிறது. பூமத்திய ரேகைக்கு வடக்கே 78 டிகிரிக்கும் அதிக தூரத்தில், உலகின் வடகோடியில் இருக்கும் இடங்களிலேயே இந்த லாங்யீர்புயியனில்தான் இவ்வளவு பேர் வசிக்கிறார்கள்.

ஒருகாலத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகளின் குடியிருப்பாக இருந்த விருந்தினர் விடுதியில் நாங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கிறது. இங்கிருந்து லாங்யீர்புயியன் நகரத்தையும் கம்பீரமாய் நிற்கும் யார்ட்ஃபியெலட் மலையையும் நன்கு பார்க்க முடிகிறது. இது அக்டோபர் மாதமாய் இருப்பதால் வெண்பனிப் போர்வைகளை மலைகள் போர்த்தியிருக்கின்றன. பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியில் பனியே காணப்படுவதில்லை, ஆனால் நிலம் பனிக்கட்டிபோல் உறைந்திருக்கிறது. இது, நிலை உறைபனி நாடாகும். கோடைகாலத்தின்போது சில நாட்களுக்கு நிலத்தின் மேற்பரப்பிலுள்ள பனிதான் சற்று உருகுகிறது. எனினும், சாதகமான காற்று வீசுவதாலும் கடல் நீரோட்டங்களின் செயல்பாட்டாலும் இந்த அட்சரேகையில் உள்ள மற்ற பகுதிகளைவிட இங்கு மிதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. நாங்கள் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பார்க்கிறபோது, மலைகள்மீது சூரியன் ஒளி வீசுகையில் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் நீலநிறத்தில் காட்சி அளிக்கிறது. லாங்யீர்புயியனைச் சுற்றி, அக்டோபர் 26 முதல் பிப்ரவரி 16 வரை சூரியன் அடிவானத்திலிருந்து மேலே எழும்புவதில்லை. ஆனால், அரோரா போரியேலஸ் எனப்படும் வடதுருவ வைகறை வெளிச்சம் குளிர் கால இரவுகளுக்கு பெரும்பாலும் ஒளியூட்டுகிறது. மறுபட்சத்தில், வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் ஸ்வால்பார்ட்டில் நள்ளிரவுச் சூரியனைக் காண முடிகிறது; லாங்யீர்புயியனில் இது ஏப்ரல் 20 முதல் ஆகஸ்ட் 23 வரை நீடிக்கிறது.

தாவரங்களும் விலங்குகளும்

இங்கு மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது, கடும் காற்று வீசுகிறது, வானமோ மேகமூட்டமில்லாமல் பளிச்சென காணப்படுகிறது. நாங்கள் சுற்றுலா செல்லத் தயாராய் இருக்கிறோம். எங்களுடைய வழிகாட்டி முதலில் சார்குஃபாகன் மலைக்கும், பிறகு லாங்யீர்ப்ரீன் பனிப்பாறைகள் இருக்குமிடத்திற்கும் நடத்தியே அழைத்துச் செல்கிறார். பனியில் உறைந்துபோயிருந்த குன்றுகளின்மீது நாங்கள் ஏறும்போது, வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் இங்கு கொள்ளை அழகுடன் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக்குலுங்குவதைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், ஸ்வால்பார்ட்டில் ஏராளமான தாவரங்கள் வளருகின்றன; அவற்றுள் சுமார் 170 பூச்செடி வகைகள் உள்ளன. ஸ்வால்பார்ட்டிற்கு மட்டுமே சொந்தமான இரண்டு வகை பூக்களில் ஒன்று, ஸ்வால்பார்ட் பாப்பி எனப்படும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பூவாகும்; மற்றொன்று, சாக்சிஃபிரேஜ் எனப்படும் சுகந்த வாசனை வீசும் ஊதா நிறப் பூவாகும்.

இன்னும் மேலே பனிமூடிய மலைச்சரிவில், இடப்பெயர்ச்சி செய்யாமல் ஸ்வால்பார்ட்டிலேயே நிரந்தரமாய் குடியிருக்கும் பறவையான ஸ்வால்பார்ட் டார்மிகன் கடந்து சென்றிருந்ததற்கான அடையாளங்களைப் பார்க்கிறோம். ப்ரூனிச்சின் கில்லமாட்டுகள், ஆக் எனப்படும் சிறிய கடற்பறவைகள், விதவிதமான கடற்காகங்கள், சேன்ட் பைப்பர்கள் எனப்படும் ஊதா நிற உள்ளான்கள் போன்ற மற்ற பறவைகள் அனைத்தும் இடப்பெயர்ச்சி செய்கின்றன. பலரும் காண விரும்புகிற பறவை, ஆர்க்டிக் டெர்ன் எனப்படும் வடதுருவ ஆலா ஆகும். இப்பறவை இனங்களில் பல, இங்கிருந்து கோளத்தின் மறுகோடியான தென் துருவ அண்டார்டிகாவரை இடப்பெயர்ச்சி செய்கின்றன.

துருவ நரியின் பாதம் பதிந்த பாதைகளையும் நாங்கள் பார்க்கிறோம். கூச்ச சுபாவமுடைய ஊர்த்தோட்டியான இந்த நரி, செத்த விலங்குகளின் அழுகிய மாம்சத்தையும், துருவக் கரடி சாப்பிட்டு மிச்சம் மீதி வைத்திருக்கும் மாம்சத்தையும் தின்று தீர்க்கிறது; ஆனால், அதோடுகூட சின்னஞ்சிறு பறவைகளைப் பிடித்து உணவாக்கிக்கொள்கிறது, பறவைகளின் முட்டைகளையும் உட்கொள்கிறது. ஸ்வால்பார்ட்டிற்குச் சொந்தமான இரண்டு நிலவாழ் பாலூட்டிகளில் ஒன்று இந்த நரி; மற்றொன்று, ஸ்வால்பார்ட் ரெயின்டீர் எனப்படும் சிநேகபாவமான பனிமான். நாங்கள் ஸ்வால்பார்ட்டில் தங்கியிருந்த சமயத்தில் இந்தப் பனிமானை வெகு அருகில் பல முறை பார்க்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அது எங்களைச் சாந்தமாய் பார்க்கிறது, அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்வதற்கு முன், அதனருகே சென்று ஃபோட்டோ எடுப்பதற்கும் அது அனுமதிக்கிறது. இந்தப் பனிமானுக்கு குட்டையான கால்களும், கதகதப்பூட்டும் அடர்த்தியான ரோமமும் உள்ளன; இப்போது இலையுதிர் காலமாய் இருப்பதால் பார்க்க அது கொழுகொழுவென்று இருக்கிறது. அதன் உடலிலுள்ள கூடுதல் கொழுப்பு, வரவிருக்கும் குளிர் காலத்திற்குத் தேவையான உணவு சேமிப்புக் கிடங்காய்த் திகழ்கிறது.

வடதுருவத்தின் ராஜாவான துருவக் கரடி, சீல்களை வேட்டையாடுவதற்காகப் பெரும்பாலான நேரத்தை கடலிலுள்ள பனிப் பாறைகளில் கழிப்பதால் பலரும் இதைக் கடல்வாழ் பாலூட்டியாகவே கருதுகிறார்கள். ஆனால் தன்னந்தனியாக அலையும் கரடிகளை நீங்கள் ஸ்வால்பார்ட்டில் எங்கு வேண்டுமானாலும் பார்க்க முடியும். அப்படி நாங்கள் எதிர்ப்படாதிருக்கவே எங்கள் வழிகாட்டி விரும்புகிறார். துருவக் கரடி முரட்டுத்தனத்துடன் வலியத் தாக்கும் தன்மை படைத்ததாய் இருப்பதால், பாதுகாப்புக்காக எங்கள் வழிகாட்டி துப்பாக்கியையும் கைவசம் வைத்திருக்கிறார். 1973 முதற்கொண்டு துருவக் கரடிகளை வேட்டையாடுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டிருக்கிறது, மீறி அதைக் கொன்றால் விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது ஸ்வால்பார்ட் பகுதியில் துருவக் கரடிகள் ஏராளம் இருந்தாலும் எதிர்காலத்தில் இந்தக் கம்பீரமான விலங்கின் நிலை குறித்து அஞ்சப்படுகிறது. வடதுருவம் பார்ப்பதற்குப் பனிமூடியதாக, பசுமையானதாக, மாசற்றதாக காட்சியளித்தாலும், PCBs எனப்படும் பாலிகுளோரினேட்டட் பைஃபினைல்கள் போன்ற கொடிய ரசாயன நச்சுப்பொருள்கள் சுற்றுச்சூழலைப் பாதித்திருக்கின்றன. இத்தகைய நச்சுப்பொருள்கள் சேர்ந்துள்ள பிற விலங்குகளை உணவுச் சங்கிலியின் முடிவில் இருக்கும் துருவக் கரடிகள் உட்கொள்வதால் அவற்றின் உடலில் பெருமளவு நச்சுப்பொருள்கள் சேர்ந்துவிடுகின்றன; இது அவற்றின் இனப்பெருக்கத் திறனைப் பாதிப்பதாகத் தெரிகிறது.

சார்குஃபாகன் மலை உச்சியை நாங்கள் அடைகிறோம், தூரத்தில் வெண்பனி மூடிய எண்ணற்ற சிகரங்களைக் கண்களால் பருகுகிறோம். தென்மேற்குத் திசையில் கொள்ளை அழகுடன் வீற்றிருக்கும் வட்ட வடிவ நூர்டன்ஷோல்ட்ஃபையல்லட் மலை சூரிய ஒளியில் நனைகிறது. எங்களுக்குக் கீழே லாங்யீர்புயியன் இருக்கிறது, எங்களுக்கு மேலே வெளிர் நீலநிறத்தில் வடதுருவ வானம் காணப்படுகிறது. பூமிக் கோளத்தின் மேலே நிற்பதைப் போன்ற உணர்வையே நாங்கள் பெறுகிறோம். சில ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டு, மலையேறிகள் வழக்கமாக அருந்தும் பிளாக் கரண்ட் பானத்தை​—⁠பிளாக் கரண்ட் சாறும், சர்க்கரையும், வெந்நீரும் கலந்த பானத்தை​—⁠குடித்தது எங்களுக்குப் புத்துயிர் அளிக்கிறது; லாங்யீர்ப்ரீன் பனிப்பாறைகளைக் கடந்து நாங்கள் மலையிலிருந்து இறங்கத் தயாராகிறோம்.

நிலக்கரிச் சுரங்கமும் அழிந்து வரும் விலங்குகளும்

பழமையான நிலக்கரிச் சுரங்கத்தைப் போய்ப் பார்ப்பது மறக்க முடியாத மற்றொரு அனுபவம் ஆகும். குண்டாக இருந்த எங்கள் வழிகாட்டி அனுபவமிக்க நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியும்கூட. இவர் எங்களுக்கு லாங்யீர்புயியனுக்கு வெளியே உள்ள சுரங்கம் 3-ஐக் காட்டுகிறார். சுரங்க உடையில், நெற்றிப் பகுதியில் விளக்கெரியும் உறுதியான ஹெல்மட்டை அணிந்துகொண்டு அவருடன் மலைக்குள் வெகு தூரம் செல்கிறோம். 1900-களின் ஆரம்பம் முதற்கொண்டு ஸ்வால்பார்ட்டின் முக்கியத் தொழிலாக இந்த நிலக்கரி சுரங்கத் தொழில் இருப்பதை நாங்கள் அறிந்துகொள்கிறோம். பல ஆண்டுகளுக்கு இந்தத் தொழிலாளிகள் ரொம்பவே கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள், நிலக்கரி அடுக்குகளுள்ள கிடைமட்ட சுரங்கப் பாதைகளில் தங்கள் கைகளாலும் முட்டிகளாலும் தவழ்ந்து சென்றிருக்கிறார்கள்; சில இடங்களில் அவற்றின் உயரம் 70 சென்டிமீட்டரே இருந்திருக்கிறது. அவ்வாறு சென்று பார்க்க எங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தது; இந்த சுரங்கத் தொழிலாளிகளின் வேலையைச் செய்ய நாங்கள் விரும்பவே இல்லை. அவர்களுடைய வேலை கடினமாய் இருந்தது; அங்குள்ள காற்றில் முழுக்க முழுக்க நிலக்கரித் தூளும் பாறைத் துகள்களும் நிறைந்திருந்தன; இரைச்சல் காதைப் பிளக்குமளவு பலமாக இருந்தது; அதோடு, குகையில் எப்போது வேண்டுமானாலும் வெடிப்புகளும் திடீர்ச் சரிவுகளும் ஏற்படுகிற ஆபத்தும் இருந்தது. தற்போது நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஸ்வால்பார்ட்டின் பொருளாதாரத்திற்கு நிலக்கரிச் சுரங்கத் தொழில் இன்னமும் முதுகெலும்பாய்த் திகழ்கிறது; எனினும், கடந்த சில பத்தாண்டுகளாக சுற்றுலாத் துறை பெரும் வருவாய் ஈட்டித்தரும் முக்கியத் தொழிலாய் ஆகிவருகிறது.

வடதுருவத்தின் வன உயிர்கள் அழிந்து வருவதைப் பற்றி மக்கள் எப்போதுமே எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. சில சமயங்களில் திமிங்கிலங்கள், வால்ரஸ், பனிமான், துருவக் கரடிகள் ஆகிய விலங்குகளும், இன்னும் பிற விலங்குகளும் வேட்டையாடப்படுவதால், சில வகை விலங்குகள் ஸ்வால்பார்ட்டில் முற்றிலும் இல்லாமல் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனினும், இப்படி அழிகிற நிலையிலிருந்த அநேக விலங்கினங்களைக் காப்பாற்றுவதற்கு அரசின் பாதுகாப்புச் சட்டங்கள் உதவியிருக்கின்றன.

நில அமைப்பியல் வல்லுநர்களின் இன்பப் பரதீஸ்

‘நில அமைப்பியல் வல்லுநர்களின் இன்பப் பரதீஸ்’ என ஸ்வால்பார்ட் வருணிக்கப்பட்டிருக்கிறது. தாவரங்கள் ஆங்காங்கு மட்டுமே வளருவதால் இதன் இயற்கை வனப்பு, நிலவியல் புத்தகத்திலுள்ள படங்களைப் புரட்டிப் பார்ப்பதுபோல் இருக்கிறது. நிலவியல் சார்ந்த தனிச்சிறப்புமிக்க அமைப்புகள் மலைகளில் உள்ளன; அவை நில அடுக்குகளாய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பார்ப்பதற்குப் பாளம் பாளமாக ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட பிரமாண்டமான ‘கேக்’ போல் தெரிகிறது. எல்லா காலக்கட்டத்திலும் பாறைகள் இருந்திருக்கின்றன. அவற்றில் சில மணலாலும் களிமண்ணாலும் உருவானவை, இன்னும் சில கரிமப் பொருள்களால் ஆனவை. காலம் கடந்தோடியபோது எண்ணற்ற மக்கிய தாவரங்களையும் விலங்குகளையும் களிமண் மூடியபோது, அவை புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. சொல்லப்போனால், புவி அமைப்பு சகாப்தங்களின் அனைத்து காலப் பிரிவுகளையும் சேர்ந்த பாறைகளில் இந்தப் புதைபடிவங்கள் காணப்படுகின்றன.

ஸ்வால்பார்ட் அருங்காட்சியகத்தில் வெப்பமண்டலத்திற்கே உரிய ஏராளமான தாவர, விலங்குகளின் புதைபடிவங்களை நாங்கள் கவனிக்கிறோம்; இந்தத் தீவுக்கூட்டத்தில் நிலவும் சீதோஷ்ணநிலை இன்றுபோல் இல்லாமல் முன்னர் அதிக வெப்பமாய் இருந்ததையே அது காட்டுகிறது. ஸ்வால்பார்ட்டில் சில இடங்களில் கிட்டத்தட்ட நிலக்கரி அடுக்குகள் 5 மீட்டர் திண்மமுள்ளதாய் இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! நிலக்கரி அடுக்குகளில், ஊசியிலை மரங்கள், இலையுதிர் மரங்கள் ஆகியவற்றின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. முன்னர் இங்கு எக்கச்சக்கமான தாவரங்கள் இருந்ததற்கும் மிதமான சீதோஷ்ணநிலை நிலவியதற்கும் மற்றொரு அத்தாட்சி, தாவரஉண்ணியான டைனசாரின் காலடித் தடங்கள் புதைபடிவங்களில் காணப்படுவதாகும்.

இந்தளவுக்குச் சீதோஷ்ணநிலை அடியோடு மாறியதை எப்படி விளக்க முடியும்? இதைக் குறித்து லாங்யீர்புயியனிலுள்ள டைரக்டரேட் ஆஃப் மைனிங் என்ற நிறுவனத்தின் பிரதிநிதியான டுர்ஃபின் ஷார்னெட் என்ற நில அமைப்பியல் வல்லுநரிடம் கேட்கிறோம். கண்டப் பெயர்ச்சியே அதற்கு முக்கியக் காரணமென நில அமைப்பியல் வல்லுநர்கள் பலரும் கருதுவதாக அவர் சொல்கிறார். டெக்டானிக் பிளேட் எனப்படும் பாறைத் தகடுகள் ஒன்றின்மீது ஸ்வால்பார்ட் அமைந்திருக்கிறது என்றும், இது தெற்கே கிட்டத்தட்ட நிலநடுக்கோட்டுக்கு அருகே இருந்து வெகு நீண்ட காலமாக மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்திருக்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஓரிரு சென்டிமீட்டர் தூரத்திற்கு ஸ்வால்பார்ட் இன்னும் வடகிழக்குத் திசையில் நகருவது நவீன சாட்டிலைட் கண்காணிப்பிலிருந்து தெரிய வந்திருக்கிறது.

எங்களுடைய விமானம் ஸ்வால்பார்ட்டை விட்டுப் புறப்படும்போது, மனதில் அசைபோட ஏராளமான தகவலை இந்தப் பயணம் எங்களுக்கு அளித்திருப்பதைப் புரிந்துகொள்கிறோம். பரந்து விரிந்துகிடக்கும் வடதுருவ இயற்கைக் காட்சி, சீதோஷ்ணநிலைக்கு ஈடுகொடுத்து சமாளிக்கிற விலங்குகள், விதவிதமான தாவரங்கள் எல்லாமே படைப்பில் காணப்படும் பல்வகைமையையும், அவற்றின் முன் மனிதன் ஒன்றுமே இல்லை என்பதையும், இயற்கையைப் பேணிப் பாதுகாப்பதில் மனிதர்கள் எவ்வளவு பொறுப்பாய் நடந்திருக்கிறார்கள் என்பதையும் பற்றி எங்களைச் சிந்திக்க வைக்கிறது. தெற்கு நோக்கி விமானத்தில் பறக்கையில் குளிர்ந்த கடற்கரை தேசத்தைக் கடைசியாக ஒருமுறை மேலிருந்து பார்க்கிறோம்; பனிமூடிய இந்த மலை உச்சிகளில் சில மேகங்களையும் துளைத்துக்கொண்டு மேலே வருகையில் மதியநேர சூரிய ஒளியில் வெளிர் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கின்றன.

[பக்கம் 24-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

வடதுருவம்

கிரீன்லாந்து

ஸ்வால்பார்ட்

லாங்யீர்புயியன்

75°வ

ஐஸ்லாந்து

நார்வே

60°வ

ரஷ்யா

[பக்கம் 25-ன் படம்]

லாங்யீர்புயியன் பகுதி

[பக்கம் 25-ன் படம்]

வடதுருவத்தில் நிலவும் கடுங்குளிரை ஊதா நிற சாக்சிஃபிரேஜ் போன்ற பல வித பூச்செடிகள் தாக்குப்பிடிக்கின்றன

[படத்திற்கான நன்றி]

Knut Erik Weman

[பக்கம் 26-ன் படங்கள்]

ஸ்வால்பார்ட் டார்மிகனும் ஸ்வால்பார்ட் ரெயின்டீரும்

[படத்திற்கான நன்றி]

Knut Erik Weman