உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
◼ “நாள்முழுவதும் டிவியே கதி என கிடப்பது, ஒருவேளை உணவைக்கூட குடும்பமாக சேர்ந்து சாப்பிடாதது, குழந்தையை வைத்து தள்ளிச்செல்லும் வண்டியின் முன்னோக்கிய வடிவமைப்பு” ஆகியவை பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான பேச்சுத்தொடர்புக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றன. இதனால், பள்ளிக்குச் செல்லத் துவங்கும் பிள்ளைகள் தங்கள் மனதிலுள்ளதைச் சொல்லத் தெரியாத சமயங்களில், “கத்திக் கூச்சல்போடுகின்றன.”—தி இன்டிப்பென்டன்ட், பிரிட்டன்.
◼ ஸ்பெயினில் 23 சதவீத பிள்ளைகள் மணமாகாத தாய்மாருக்குப் பிறக்கிறார்கள். பிரான்சில் அது 43 சதவீதமாக இருக்கிறது; டென்மார்க்கில் அது 45 சதவீதமும், ஸ்வீடனில் 55 சதவீதமுமாக இருக்கிறது.—இன்ஸ்டிட்டியூட்டோ டே பொலிடிக்கா ஃபாமிலியார், ஸ்பெயின்.
◼ பிரிட்டனில் மூன்றில் ஒரு பங்கினர் இரவில் ஐந்து மணிநேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள்; இதனால், “கவனக்குறைவு, ஞாபகமறதி, [அதோடு] அடிக்கடி மாறுகிற ‘மூட்’” ஆகியவற்றால் அவதிப்படுகிறார்கள். சரிவர தூங்காததால் “உடல் பருமன், நீரிழிவு நோய், மனச்சோர்வு, விவாகரத்து, பயங்கரமான கார் விபத்துகள் ஆகியவை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இருக்கின்றன.”—தி இன்டிப்பென்டன்ட், பிரிட்டன்.
பொழுதுபோக்க அடிதடி
“இன்றைய சிறுவர்கள் அடிதடியில் இறங்குவது, அவமானப்படுத்துவது, அதை அப்படியே செல்போனில் படம்பிடித்து வைப்பது போன்ற செயல்களில் அதிகமதிகமாக ஈடுபடுகிறார்கள்” என்பதாக ஸ்பானிய செய்தித்தாள் எல் பாய்ஸ் கூறுகிறது. இவர்களிடம் செமத்தியாக அடிவாங்கியவர்களில் சிலர் மீண்டும் குணமாவதே கிடையாது. ஏன் இந்தச் சிறுவர்கள் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்? “கொள்ளை அடிப்பதற்காகவோ, இனவெறியின் காரணமாகவோ, ஒரு கும்பலில் இருப்பதாலோ அவர்கள் இவற்றில் ஈடுபடுவதில்லை. பொழுதுபோக்காகத்தான் இவற்றில் ஈடுபடுகிறார்கள் என்பதே இந்தக் குற்றச்செயலின் அதிர்ச்சியூட்டுகிற புதிய அம்சமாகும்” என்று XL பத்திரிகை தெரிவிக்கிறது. குற்றச்செயல் துறையில் நிபுணரான உளவியல் வல்லுனர் பிதென்டெ காரிடோ இவ்வாறு சொல்கிறார்: “சில சமயங்களில் அவர்கள் குடிபோதையில் மிதக்கிறார்கள், இன்னும் சில சமயங்களில் குடிக்காமல் தெளிவாக இருக்கிறார்கள். என்றாலும், பொதுவாக அவர்கள் தங்கள் செயல்களுக்காக மனம் வருந்துவதே இல்லை.”
ஏன் இந்தப் பாராமுகம்?
காலரா, மலேரியா போன்ற பெரும்பாலான வெப்பமண்டல நோய்களை ஆய்வுசெய்வதில் மருத்துவத்துறை பாராமுகம் காட்டுகிறது. ஏன்? “[புதிய மருந்துகளை] தயாரிப்பதற்கு மருந்து கம்பெனிகள் முன்வருவதில்லை . . . இது வருந்தத்தக்க விஷயம்” என மைக்கல் ஃபர்கஸன் என்பவர் சொல்கிறார்; இவர், ஸ்காட்லாந்திலுள்ள டன்டீ பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு-உயிரியலாளராகப் பணியாற்றுகிறார். மருந்து கம்பெனிகள் முன்வராததற்குக் காரணம்? இந்த மருந்துகளைத் தயாரித்தால் போட்ட காசை திரும்ப எடுக்க முடியாமல் போய்விடுமே என்பதுதான். ஆனால், அல்ஸைமர், உடல் பருமன், ஆண்மை குறைவு போன்ற பிரச்சினைகளுக்கான நிவாரணிகள் கொழுத்த லாபத்தை அள்ளித்தருவதால் அவற்றைத் தயாரிக்கவே இக்கம்பெனிகள் விரும்புகின்றன. இதற்கிடையில், “பாதுகாப்பான, தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற வழியில்லாமல் உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் [ஏறக்குறைய] 10 லட்சம் பேர் மலேரியா நோயால் சாகிறார்கள்” என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது.
பொருள்களை வாங்க அடம்பிடிக்கும் வாண்டுகள்
இத்தாலியில் ரோம் நகரிலுள்ள லா சாபியென்ஸா யுனிவர்சிட்டியின் பிரகாரம், மூன்று வயது சின்னஞ்சிறுசுகளுக்குக்கூட, மார்க்கெட்டில் எந்தெந்த பிராண்ட் பொருள்கள் கிடைக்கின்றன என்பது அத்துப்படி; அதனால், எட்டு வயதாகும்போது தாங்கள் ஆசைப்படும் பொருள்களை வாங்கிக்கொள்கிறார்கள். டிவி விளம்பரங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அந்தளவு செல்வாக்கு செலுத்துவதால், குறிப்பிட்ட சில பொருள்களை வாங்கும்படி தங்களுடைய பெற்றோரிடம் அடம்பிடிக்கிற குட்டி “சர்வாதிகாரிகளாக” அவர்கள் மாறிவிடுகிறார்கள் என்று லா ரேபூப்பிளிக்கா என்ற செய்தித்தாள் தெரிவிக்கிறது. “விற்கப்படுகிற (வாங்கப்படுகிற) பொருள்கள் எல்லாமே வாழ்க்கைக்கு மிக அவசியம் என [பிள்ளைகள்] நினைக்கிறார்கள்; அதோடு அவர்களுடைய இந்தக் கற்பனை உலகை நிஜமென நினைத்து அத்தகைய ஓர் உலகில் வாழவும் தொடங்குகிற அபாயம் இருக்கிறது” என்பதாக அந்தச் செய்தித்தாள் கூறுகிறது.
“கர்ப்பிணி” ரோபாட்
டாக்டர்களும் நர்ஸுகளும் காலங்காலமாக கர்ப்பிணி பெண்களை வைத்துதான் பிரசவம் பார்ப்பதற்குப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது பிரசவிப்பதைப் பாவனை செய்துகாட்டும் நோயெல் என்று பெயரிடப்பட்ட நிறைமாத “கர்ப்பிணி ரோபாட் மிகப் பிரபலமாகி வருகிறது” என்று அஸோஸியேட்டட் பிரெஸ் அறிக்கை கூறுகிறது. இந்த “கர்ப்பிணி” ரோபாட்டில் இயற்கையான நாடித்துடிப்பு, கர்ப்பப்பையின் கழுத்துப்பகுதி விரிவடைவது என எல்லாவற்றையும் புரோகிராம் செய்ய முடிகிறது; இதனால், பிரசவிக்கும்போது ஏற்படுகிற பல சிக்கல்களை அது பாவனை செய்கிறது; அதோடு, உடனடியாக பிரசவிக்கும்படியோ தாமதமாக பிரசவிக்கும்படியோ அதை புரோகிராம் செய்ய முடிகிறது. நோயெல் பிரசவிக்கும் “குழந்தை” செக்கச்செவேல் என ஆரோக்கியமாக இருக்கலாம் அல்லது ஆக்ஸிஜன் குறைபாட்டால் நீல நிறமாக பிறக்கலாம். ஏன் ஒரு பொம்மையை வைத்து பயிற்சி பெற வேண்டும்? “ஏதாவது தவறு ஏற்பட்டால், 20,000 டாலர் மதிப்புள்ள ரோபாட்தானே, போனால் போகட்டும் என விட்டுவிடலாம், ஆனால் மனித உயிருடன் அப்படி விளையாட முடியாதே” என்று அந்த அறிக்கை விளக்குகிறது.