உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
◼ 15-க்கும் சற்று அதிகமான மாதங்களுக்குள், புதிதாய் பிறந்த 82 பச்சிளங்குழந்தைகள் மெக்சிகோ சிட்டியின் தெருக்களில் அநாதையாய் கிடந்தன, அவற்றுள் 27 குழந்தைகள் இறந்துகிடந்தன.—எல் யூனிவர்சால், மெக்சிகோ.
◼ அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள இரண்டு தேசிய பூங்காக்களில் உள்ள குகைகளை ஆராய்ந்தபோது 27 புதிய வகை விலங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. “நம்மை சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி நாம் துளிதான் தெரிந்துவைத்திருக்கிறோம் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது” என்கிறார் ஜோயல் டஸ்பேன்; இவர் நேஷனல் பார்க் சர்வீஸ் துறையில் குகை ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.—ஸ்மித்சோனியன், அமெரிக்கா.
◼ உலக ஜனத்தொகையில் 20 சதவீதத்தினருக்குக் குடிக்க தண்ணீர் இல்லை. 40 சதவீதத்தினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை.—மிலென்யோ, மெக்சிகோ.
◼ சட்டவிரோதமாய் வேட்டையாடுபவர்கள், செரங்கெட்டி தேசிய பூங்காவில் மட்டும் வருடத்திற்கு 20,000-திலிருந்து 30,000 விலங்குகளைக் கொல்லுகிறார்கள்.—த டெய்லி நியூஸ், டான்ஜானியா.
◼ ஸ்பெயினிலுள்ள பார்சிலோனா நகரில் நடத்தப்பட்ட ஆய்வில், 16 வயது மாணவர்களில் மூவரில் ஒருவர் தவறாமல் கஞ்சா உபயோகிப்பது தெரிய வந்துள்ளது.—லா பேங்குவார்ட்யா, ஸ்பெயின்.
அலுவலகத்தில் நோய்க் கிருமிகள்
அமெரிக்க நகரங்கள் பலவற்றிலுள்ள அலுவலகத்தில் எந்தளவு பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்பதை அரிஜோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் வல்லுநர்கள் கணக்கிட்டார்கள். “(இறங்குவரிசையில்) ஃபோன்கள், கம்ப்யூட்டர் டேபிள்கள், தண்ணீர் குழாய் கைப்பிடிகள், மைக்ரோவேவ்வின் கதவு கைப்பிடிகள், கீபோர்டுகள் என ஐந்து இடங்களில் நோய் கிருமிகள் எக்கச்சக்கம் காணப்பட்டதை” அவர்கள் கண்டுபிடித்தார்களென குளோப் அண்டு மெயில் என்ற செய்தித்தாள் சொல்கிறது. அந்த அறிக்கையின்படி, “சமையலறை டேபிளிலுள்ள பாக்டீரியாவைவிட 100 மடங்கு அதிகமான பாக்டீரியா கம்ப்யூட்டர் டேபிளில் உள்ளன, வெஸ்டர்ன் டாய்லட் ஸீட்டிலுள்ள பாக்டீரியாக்களைவிட 400 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் கம்ப்யூட்டர் டேபிளில் உள்ளன.”
“கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்வதோடு சரி”
பிலிப்பைன்ஸ் நாடுதான் ஆசியாவில் உள்ள ஒரே “கிறிஸ்தவ” நாடு என்பதாக குறிப்பிடப்படுகிறது. எனினும், பிலிப்பைன் கவுன்சில் ஆஃப் இவான்ஜிலிக்கல் சர்ச்சஸ் என்ற அமைப்பில் பிஷப்பாக பணியாற்றும் எஃப்ராயிங் டென்டீரோ என்பவர் இவ்வாறு சொன்னார்: “நம்மில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்வதோடு சரி, அப்படி நடந்துகொள்வதே இல்லை.” மணிலா புல்லட்டீன் என்ற செய்தித்தாள் குறிப்பிட்ட விதமாக, அந்தக் குற்றச்சாட்டிற்கு ஓரளவு சர்ச் தலைவர்களே காரணமாய் இருக்கிறார்கள்; “பைபிள் போதனைகளைத் தெரிந்துகொள்ளவும் பைபிளை மதிக்கவும் ஜனங்களுக்கு” அவர்கள் உதவாதிருக்கிறார்கள். சில சர்ச் பிரசங்கங்களில் அரசியல் பேசப்படுகிறதே தவிர பைபிள் வசனங்கள் விளக்கப்படுவதில்லை.
சாப்பாட்டுக்கு சண்டைபோடும் மனிதர்களும் விலங்குகளும்
“பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியாவில் பபூன் குரங்குகளும் கழுதைப்புலிகளும் பொதுமக்களைத் தாக்குவது சர்வசாதாரணமான சங்கதியாய் இருக்கிறது” என நைரோபியில் வெளியாகும் தி ஈஸ்ட் ஆஃப்ரிக்கன் என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது. தண்ணீருக்காக ஒருமுறை ஏற்பட்ட சண்டையில் அநேக பபூன் குரங்குகள் இறந்துபோயின, கால்நடை வளர்ப்பவர்கள் சிலர் காயமடைந்தார்கள். குரங்கு பட்டாளங்கள் “முக்கிய சாலை சந்திப்புகளில் அல்லது பாலங்களில்” நின்றுகொண்டு உள்ளூர் சந்தைகளுக்கு சாமான்களைச் சுமந்து வரும் டிரக்குகளை வழிமறித்து சூறையாடுகின்றன. “விலங்குகள் பழக்குலைகளை அல்லது [பெரிய] தர்ப்பூசணி பழங்களைத் தூக்கிக்கொண்டு ஓடுவதை அடிக்கடிப் பார்க்கலாம்” எனவும் அந்தச் செய்தித்தாள் சொல்கிறது.
கரையோர வானிலையைப் பாதிக்கும் கப்பல் போக்குவரத்து
கால்வாய்களில் பெருமளவு நடக்கும் கப்பல் போக்குவரத்து கரையோர வானிலையைப் பாதிக்கலாம் என கால்நர் ஸ்டட்டு-ஆன்ஸீகர் என்ற ஜெர்மானிய செய்தித்தாள் கூறுகிறது. ஹேம்பர்க் நகரிலுள்ள, மேக்ஸ் பிளாங்க் வானிலையியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இங்கிலீஷ் கால்வாய் மீதுள்ள மேகங்களின் அமைப்பை ஆராய்ந்தார்கள். கரையோர பகுதிகளுக்கு மேலிருந்த மேகங்களின் அடர்த்தி குறைவாகவும் கால்வாய்களுக்கு மேலாக இருந்த மேகங்களின் அடர்த்தி அதிகமாகவும் இருந்ததை கண்டுபிடித்தார்கள். கப்பல்களிலிருந்து வெளியேறும் புகைகளே இதற்குக் காரணம். ஆவியான நீரை திரவமாக்குவதில் கப்பல்களிலிருந்து வெளிப்படும் புகைக்கரியின் துகள்கள் முக்கிய பங்காற்றுகின்றன; இதனால் பெருமளவு நீர் துளிகள் உருவாவதாக நம்பப்படுகிறது. “கடந்த 50 ஆண்டுகளில், கப்பல்கள் முன்பைவிட நான்கு மடங்குக்கும் அதிகமாய் எரிபொருளை உபயோகிக்கின்றன” என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது.