Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எச்சரிக்கைக்கு கீழ்ப்படிந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்

எச்சரிக்கைக்கு கீழ்ப்படிந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்

எச்சரிக்கைக்கு கீழ்ப்படிந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்

புதன் கிழமை, ஆகஸ்ட் 24, 2005. அமெரிக்காவில், லூயிஸியானா மாகாணத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரம் ஒரே உஷ்ணமாகவும் புழுக்கமாகவும் இருந்தது. அன்று, ஆலெனும் அவர் குடும்பமும் டெக்ஸஸிலுள்ள போமன்ட்டிற்கு கிளம்பிப் போனார்கள். இது நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து மேற்கே 300 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் இருக்கிறது. இந்த இடத்தில் ஐந்து நாட்களைக் கழிப்பதற்குத் தேவையான துணிமணிகளையும் அவர்கள் எடுத்துச்சென்றார்கள். ஆலென் இவ்வாறு சொல்கிறார்: “வீட்டிலிருந்து கிளம்பின சமயத்தில்தான் ப்ளோரிடாவிற்கு கிழக்கே கேட்ரீனா சூறாவளி உருவாகிக்கொண்டிருந்தது. அதைப் பற்றி அப்போது எங்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. படுநாசகரமான அந்தச் சூறாவளி நியூ ஆர்லியன்ஸை தாக்கப்போகிறது என்ற செய்தி வெள்ளிக்கிழமை இரவிற்குள் எங்களுக்குக் கிடைத்தது.”

கேட்ரீனா சூறாவளி படுபயங்கரமான சூறாவளியாக இருக்கப்போகிறது என்று ஆகஸ்ட் 28, ஞாயிற்றுக் கிழமையன்று தெரியவந்தது. நியூ ஆர்லியன்ஸ் மக்கள் உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண்டுமென்று அந்த இடத்தின் மேயர் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகரைவிட்டு வடக்கு பக்கமாகவும் மேற்கு பக்கமாகவும் நத்தை வேகத்தில் நகர ஆரம்பித்தன. அதனால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனம் இல்லாத ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கோ ஸூப்பர்டோம் என்ற மிகப் பெரிய ஸ்டேடியத்திற்கோ ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் சிலர் சூறாவளி கடந்துசெல்லும்வரை வீட்டிலேயே இருந்துவிட தீர்மானித்தார்கள்.

‘அடுத்த முறை, உடனே வெளியேறுவேன்!’

அப்படி வீட்டிலேயே இருந்துவிட தீர்மானித்தவர்களில் ஜோ என்ற யெகோவாவின் சாட்சியும் ஒருவர். வீட்டிலிருந்துகொண்டே சூறாவளியிலிருந்து தப்பித்துவிட முடியுமென்று அவர் நினைத்தார். முன்பு வந்த சூறாவளிகள், வானிலை ஆலோசகர்கள் சொன்னதுபோல் அவ்வளவு பயங்கரமாக இருக்கவில்லை என்பதாகவும் சொல்லிக்கொண்டார். ஆனால் இப்போது அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் தப்பித்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை கொஞ்ச நேரத்திற்குள் புரிந்துகொண்டேன்! திடீரென்று பேய்க்காற்று வீசத்தொடங்கியது, மடைதிறந்த வெள்ளம்போல வானம் கிழிந்து மழை கொட்ட ஆரம்பித்தது. அடுத்த நிமிடமே வீட்டின் கூரை பறந்தது. மூன்று மணி நேரத்திற்கு மூன்று மீட்டர் உயரம் என்ற வேகத்தில் தண்ணீர் ஏறியதைப் பார்த்து ஆடிப்போனேன்! வீட்டிற்குள்ளே தண்ணீர் அந்தளவு வேகமாக அடித்துக்கொண்டு வந்ததால் இரண்டாவது மாடிக்கு ஓடினேன். காற்றின் சீற்றத்தைக் கண்டு அரண்டுபோனேன். சுவர்கள் எங்கே இடிந்து விழுந்துவிடுமோ என்று பயந்தேன்! வீட்டின் உட்கூரை பெயர்ந்து விழ ஆரம்பித்தது. இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு தப்பிக்க வழி தேடினேன்.

“பொங்கி எழுந்துகொண்டிருந்த தண்ணீரில்தான் குதிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் வெளியே அலைகள் சுழன்றுவருவதைப் பார்த்து கதிகலங்கிப்போனேன். பலத்த காற்றினால் தண்ணீர் நுரைபொங்க பெருக்கெடுத்து வந்தது. அதில் குதித்தால் சாவு நிச்சயம் என்பது எனக்கு தெரிந்தது.”

ஆனால், கொஞ்ச நேரத்திற்குள் ஒரு படகு வந்து ஜோவின் உயிரைக் காப்பாற்றியது, அந்தப் படகு அவரை ஒரு பாலத்தில் இறக்கிவிட்டது. பாலத்தின் கீழே ஓடிய தண்ணீரில் எங்கும் பிணங்களும் கழிவுகளும் மிதந்தன. இராத்திரி முழுவதும் ஒரு காருக்கு மேலேதான் பொழுதைக் கழித்தார். அதன்பிறகு அவர் ஹெலிகாப்டரிலும் பிறகு பஸ்ஸிலும் பயணித்து நியூ ஆர்லியன்ஸ் நகரின் சமூக மையத்திற்கு வந்து சேர்ந்தார். “அங்கிருந்தவர்கள் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திற்கு அப்படியே குழம்பிப்போய் நின்றேன் ‘குடிப்பதற்கு எங்கிருந்து தண்ணி கிடைக்கும்?’ என்ற கவலை என்னை அரித்தெடுத்தது.”

‘இந்தக் கஷ்டங்களையெல்லாம் தவிர்த்திருக்கலாமே’ என்று ஜோ இப்போது யோசிக்கிறார். “ஆனால், நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டேன். அடுத்த முறை, ‘நகரைவிட்டு வெளியேறுங்கள்’ என்று சொன்னால் உடனே வெளியேறுவேன்!” என்கிறார்.

மரத்தில் அடைக்கலம் தேடிய பெண்

மிஸ்ஸிசிப்பி மாகாணத்தின் கரையோரப் பகுதியிலுள்ள பலக்ஸி மற்றும் கல்ஃப்போர்ட் நகரங்களில் சூறாவளி கோர தாண்டவமாடியது. அங்கு சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளும் உயிரிழப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல. ஆகஸ்ட் 31, 2005 தேதியிட்ட த நியு யார்க் டைம்ஸ்ஸில் பலக்ஸி நகரத்தின் பொதுநல விவகார நிர்வாகியான வின்சன்ட் கிரீல் என்பவர் இவ்வாறு சொன்னார்: “[1969-⁠ல்] கமில் சூறாவளி வந்தபோது அவர்களுக்கோ அவர்களுடைய வீடுகளுக்கோ ஒரு சேதமும் ஏற்படாததால் இந்த முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டபோது மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டார்கள்.” கேட்ரீனா சூறாவளியைவிட கமில் சூறாவளி பயங்கரமானதாக கருதப்பட்டாலும் கேட்ரீனா, ‘சுனாமிபோல் இராட்சத அலைகளை அடித்து வந்தது’ என்று அவர் சொன்னார்.

எச்சரிக்கை விடுத்தபோது அலட்சியமாக இருந்துவிட்ட இன்னொரு உள்ளூர்வாசி, இனெல் என்ற பெண். இவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை பலக்ஸி நகரிலேயே கழித்தவர். இவர் சொல்வதாவது: “இதுவரை நாங்கள் எத்தனையோ சூறாவளிகளிலிருந்து தப்பித்திருக்கிறோம். அதனால் கேட்ரீனா சூறாவளியை நாங்கள் அந்தளவுக்கு சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.” இனெல், 88 வயதான தன் மாமியாரையும், மகனையும், மகளையும் மருமகனையும்​—⁠இரண்டு நாய்களும் மூன்று பூனைகளும் உட்பட​—⁠இவர்கள் எல்லாரையும் அழைத்துவந்து வீட்டிற்குள் வைத்துக்கொண்டார். இவர்கள் அங்கேயே தங்கிவிட தீர்மானித்தார்கள். தங்களுடைய வீட்டின்மேல் அவர்களுக்கு அந்தளவு நம்பிக்கை. ஆகஸ்ட் 29-⁠ம் தேதி காலை சுமார் 10 மணி அளவில் பலக்ஸி நகரை சூறாவளி தாக்கியது. நடந்ததை இலென் இவ்வாறு விளக்குகிறார்: “வீட்டின் பின்பகுதியிலுள்ள ஒரு பெட்ரூம் வழியாக தண்ணீர் உள்ளே வருவதைக் கவனித்தேன். பிறகு வீடு முழுவதும் தண்ணீர் நிறைந்துவிட்டது. அதனால் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு வீட்டின் மேலிருந்த சிறு அறைக்கு விறுவிறுவென ஏறிச் சென்றோம், அங்கேயும் தண்ணீர் வந்துவிட்டது. அங்கிருந்து உடனே வெளியே போகவில்லையென்றால் எங்கள் கதி அவ்வளவுதான். ஆனால் எங்கே போவது?

“என் மகன், கம்பி வலையினால் செய்யப்பட்ட கதவில் ஒரு பெரிய ஓட்டைப் போட்டான், அது வழியாக வீட்டிற்கு வெளியே நீந்திச் சென்று கூரையைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தோம். நாங்கள் மூன்று பேரும் வீட்டின் வலது பக்கமாக நீந்திச் சென்றபோது, என் மகள்மட்டும் வீட்டின் இடது பக்கமாக நீந்திச் சென்றாள். வீட்டருகே இருந்த ஒரு பெரிய மரத்தைப் பார்த்ததும் நானும் என் மகனும் மாமியாரும் நீந்திச்சென்று அதை இறுக்கமாக பிடித்துக்கொண்டோம். கொஞ்ச நேரத்திற்குள் என் மகள், “அம்மா! அம்மா!” என்று கதறும் சத்தம் காதில் விழுந்தது. வீட்டிலிருந்து கடைசியாக வெளியே வந்த என் மருமகன் அவளைக் காப்பாற்றினான். வீட்டிற்கு பக்கத்தில் மிதந்து கொண்டிருந்த ஒரு படகில் அவர்கள் இருவரும் எப்படியோ ஏறினார்கள். என்னையும் ஏறும்படி சொன்னார்கள், ஆனால் சுழன்று வந்த அலைகளைப் பார்த்து பயந்ததால் நான் ஏறவில்லை. மரத்திலிருந்து என் பிடியைவிட எனக்கு தைரியம் இருக்கவில்லை, அதனால் அங்கேயே இருந்துவிட்டேன்.

“வெள்ளக்காடாக இருந்த தெருவில் எங்கள் வீடு காகிதக் கப்பல்போல் மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். எச்சரிக்கையை மதிக்காமல் முட்டாள்தனமாக நடந்ததால் இப்படியொரு நிலைமை வந்துவிட்டதை நினைத்து வருத்தப்பட்டேன்.

“கொஞ்சங்கொஞ்சமாக தண்ணீர் வற்ற ஆரம்பித்தது, கடைசியில் ஒருவழியாக நாங்கள் அனைவரும் படகில் ஒன்றுசேர்ந்தோம்! ஒரு தீயணைப்பு வண்டி எங்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. உயிர்பிழைத்ததற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி சொன்னோம்!”

சாட்சிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் திட்டம்

கல்ஃப் கோஸ்ட் பகுதி முழுவதும் கேட்ரீனா சூறாவளியால் பயங்கரமாக பாதிக்கப்பட்டது, லூயிஸியானா மாகாணம் தொடங்கி அலபாமா மாகாணம்வரை ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின. அமெரிக்காவின் இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு சூறாவளிகள் புதிதல்ல. எனவே, சூறாவளி வந்தால் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை யெகோவாவின் சாட்சிகள் பல வருடங்களுக்கு முன்பிருந்தே தயாராக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பொதுவாக ஜூன் மாதத்தில், புயல்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே நியூ ஆர்லியன்ஸ் மாநகரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் 21 சபைகளும் சகோதர சகோதரிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் அவசர திட்டத்தை மறுபார்வை செய்கின்றன. அதனால் அவசர நிலை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டுமென்று அங்கிருக்கும் கிட்டத்தட்ட எல்லா சாட்சிகளுக்கும் தெரியும். இந்தத் திட்டம் கேட்ரீனா சூறாவளி வந்தபோது எப்படி உதவியது?

நகரத்தின் மேலதிகாரிகள் மக்களை வெளியேறும்படி அறிவித்த உடனே, சபை மூப்பர்கள் சபையிலிருந்த சகோதர சகோதரிகளை தொடர்புகொண்டு நகரைவிட்டு வெளியேறும்படி சொன்னார்கள். அதனால் அநேகர் தங்கள் குடும்பங்களையும் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வெளியேற அவர்களாகவே ஏற்பாடுகள் செய்துகொள்ள முடிந்தது. வயதானவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் விசேஷ ஏற்பாடுகளும் உதவிகளும் செய்யப்பட்டன. யெகோவாவின் சாட்சிகளுடைய பேரழிவு நிவாரண குழு ஒன்றின் அங்கத்தினரான ஜான் இவ்வாறு சொல்கிறார்: “இந்தத் திட்டத்தின் மூலம் நிறைய பேரைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது.” அதனால் சூறாவளி தாக்குவதற்கு முன்பே யெகோவாவின் சாட்சிகள் பெரும்பாலோர் நகரைவிட்டு வெளியேறினார்கள். உடனடி நிவாரண உதவி அளிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகளது அமெரிக்க கிளை அலுவலகம் அவசர நிவாரண குழுக்களை அமைத்தது.

ஆஸ்ட்ரோடோமில் சாட்சிகளைத் தேடி

டெக்ஸஸைச் சேர்ந்த ஹௌஸ்டனிலுள்ள ஆஸ்ட்ரோடோம் ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட 16,000 பேர் தஞ்சம் புகுந்திருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் லூயிஸியானா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உணவும் தண்ணீரும் தங்குமிடமும் கொடுக்கப்பட்டன. அந்தப் பெரிய கூட்டத்தில் சாட்சிகள் சிலரும் இருப்பதை ஹௌஸ்டனிலுள்ள சாட்சிகளின் நிவாரண குழுவினர் தெரிந்துகொண்டார்கள். ஆனால் அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?

அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக செப்டம்பர் 2-⁠ம் தேதி வெள்ளிக் கிழமை காலையில் சில மூப்பர்கள் ஆஸ்ட்ரோடோம் ஸ்டேடியத்திற்குச் சென்றார்கள். அந்தப் பரந்த ஸ்டேடியம் முழுவதும் சிதறியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களையும், பெண்களையும், இளைஞர்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் பார்த்து மூப்பர்கள் திகைத்து போனார்கள். அந்த ஃபுட்பால் மைதானமே ஆயிரக்கணக்கான கட்டில்களால் மூடப்பட்டிருந்தது. அதோடு, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்த ஜனங்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருந்தார்கள். மருத்துவ உதவிக்காக மக்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளை ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் செல்ல ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அங்கு, சகோதரர்களைத் தேடிக்கொண்டிருந்த மூப்பர்களில் சாம்யெல் என்பவர் “அகதிகளின் முகாமிற்குள் இருப்பதுபோல் உணர்ந்தேன்” என்று கூறினார். சிறிய எண்ணிக்கையான சாட்சிகளை அவ்வளவு பெரிய கூட்டத்தில் இவர்கள் எப்படி கண்டுபிடிக்கப்போகிறார்கள்? இந்த மூப்பர்கள், ஸ்டேடியத்தில் இருக்கைகளுக்கு இடையே பெரிய பெரிய அறிவிப்பு பலகைகளைத் தூக்கிக்கொண்டு மேலும் கீழுமாக நடக்க ஆரம்பித்தார்கள். மூன்று மணிநேரம் இப்படி தேடியும் பிரயோஜனம் இல்லாமற்போனதால் வேறு விதத்தில் தேட தீர்மானித்தார்கள். ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிப்பு செய்யும்படி செஞ்சிலுவை சங்கத்திடம் கேட்டார்கள். “முழுக்காட்டுதல் பெற்ற யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் தயவுசெய்து ஸ்டேடியத்தின் கீழ்த்தளத்திலுள்ள கிழக்கு சாய்தளத்திற்கு செல்லுங்கள்” என அறிவிப்பு செய்யப்பட்டது.

ஒருவழியாக, அவர்கள் சொன்ன இடத்திற்கு சாட்சிகள் வரத் தொடங்கினார்கள், வரும்போதே அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது. சாம்யெல் என்ற அந்த மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “சந்தோஷத்தில் அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். எங்களைக் கட்டிப்பிடித்து எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டார்கள். கூட்டத்தில் தொலைந்துவிடுவோமோ என்ற பயத்தில் எங்கள் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார்கள்.” வெள்ளி, சனி ஆகிய இருநாட்களும் தேடியதில், 24 சாட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டு சாட்சிகளின் நிவாரண மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அவர்களில் அநேகர் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்திருந்தார்கள், அவர்களிடம் இருந்ததெல்லாம் உடுத்தியிருந்த துணி மட்டுமே, அதுவும் அழுக்குப்படிந்த துணி. ஒரு சாட்சியிடம் ஷூ பெட்டி அளவில் ஒரு சிறிய பெட்டி இருந்தது, அதில் முக்கியமான பத்திரங்களை அவர் வைத்திருந்தார். சூறாவளியிலிருந்து அதை மட்டும்தான் அவரால் காப்பாற்ற முடிந்தது.

ஆஸ்ட்ரோடோம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்த மூப்பர்களைப் பார்த்ததுமே அங்கிருந்த மக்கள் அவர்களை யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர்களிடம் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் கேட்டார்கள். 220-⁠க்கும் அதிகமானோர் பைபிள் வேண்டுமென்று கேட்டார்கள். சாட்சிகள் அங்கிருந்தவர்களுக்கு ஆகஸ்டு 8, 2005 விழித்தெழு! இதழையும்கூட அளித்தார்கள். “இயற்கைப் பேரழிவுகள் தீவிரமடைந்து வருகின்றனவா?” என்ற தலைப்பில் இருந்த அந்த விழித்தெழு! அந்தச் சமயத்திற்கு ஏற்றதாக இருந்தது.

சிலர் வீடு திரும்பினார்கள்

சூறாவளியிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர் நியூ ஆர்லியன்ஸ் டிவி ஸ்டேஷனின் அனுபவமிக்க செய்தியாளர் மற்றும் ஜெனரல் மேனேஜர். அவருடைய வாழ்க்கையில் இதுபோன்ற அநேக பேரழிவுகளை பார்த்திருக்கிறார். தன்னுடைய பொருள்கள் சிலவற்றைக் கொண்டுவர லூயிஸியானாவிலுள்ள ஜாஃபர்சன் மாவட்டத்திலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பி சென்றார். அங்கு தான் கண்டதை இவ்வாறு விவரிக்கிறார்: “அங்கு போனதும் எனக்கு ஒரே அதிர்ச்சி, அந்தச் சூறாவளி எதையும் விட்டுவைக்கவில்லை, எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விட்டது. அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுப்பதை டிவியில் பார்த்தேன். அதோடு, காற்றும் பலமாக அடித்ததால் பயங்கர நாசம் ஏற்பட்டது. என்னுடைய அப்பார்ட்மென்ட் தரைமட்டமாகிவிட்டது. பூஞ்சணங்களும், அழுகின பொருள்களும், துர்நாற்றமும்தான் என்னை வரவேற்றன. நாற்றம் வயிற்றைக் குமட்டியெடுத்தது. நிலைமை ரொம்பவே மோசமாக இருந்தது. ஆனாலும் பரவாயில்லை, நாங்கள் உயிர்ப்பிழைத்திருக்கிறோமே, அதுவே பெரிய விஷயம்.”

முன்பு சொல்லப்பட்ட ஆலென் என்பவரும் மட்டாரியில் இருந்த தன் வீட்டுக்குத் திரும்பினார், அது நியூ ஆர்லியன்ஸின் மேற்கு நகர்ப்புறத்தில் இருக்கிறது. சூறாவளி எல்லாவற்றையும் சூறையாடியிருந்தது. அவர் சொல்கிறார்: “நகரத்தின் கோலத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை, அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ குண்டு வீசப்பட்ட நகரம் போல ஆகிவிட்டது. டிவியிலும் ரேடியோவிலும் என்னதான் பார்த்தாலும், நடந்தோ வண்டியிலோ அங்கு போகும்போதே எந்தளவு பயங்கரமாக அழிவும் நாசமும் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது, இந்தக் கோரக் காட்சிகளை ஜீரணிக்கவே முடியவில்லை.

“உதாரணத்திற்கு, நாற்றத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஊரே பிணக்கிடங்குபோல் நாறியது. பல கடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன, சில வெள்ளத்தில் மிதந்தன. ஒவ்வொரு மூலையிலும் போலீஸ்காரர்களும் இராணுவ வீரர்களும் நின்றிருந்ததைப் பார்க்க ஒரு போர் களம்போல் காட்சியளித்தது.”

சில நிவாரண உதவிகள்

நகரங்களும், மாகாணங்களும், கூட்டரசுகளும் நிவாரண ஏற்பாடுகளைச் செய்தன. அதற்கு முக்கியமாக உதவிய ஓர் அமைப்புதான் ஃபெடரல் எமர்ஜன்ஸி மேனேஜ்மன்ட் ஏஜென்ஸி (FEMA). மற்ற அமைப்புகளும் ஆயிரக்கணக்கானோருக்கு உதவியளிக்க ஏற்பாடுகள் செய்தன. வெள்ளத்தில் மூழ்கிப்போன இடங்களுக்கு எக்கச்சக்கமான துணிகளும், உணவு பொருள்களும், தண்ணீரும் அனுப்பிவைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் ஒருசில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு தங்களைக் கவனித்துக்கொள்வதற்காக FEMA ‘செக்’ அளித்ததோடு மற்ற நிதி உதவிகளையும் செய்தது. இதற்கிடையே யெகோவாவின் சாட்சிகள் எப்படி சமாளித்துக்கொண்டிருந்தார்கள்?

நாசங்களை கணக்கிட்டு பழுதுபார்த்தார்கள்

சூறாவளி தாக்கிய உடனேயே சாட்சிகள், நாசங்களை மதிப்பிடும் குழுக்களை ஒழுங்கமைத்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவர்களை அனுப்பிவைத்தார்கள். எத்தனை ராஜ்ய மன்றங்களும் சாட்சிகளின் வீடுகளும் சேதமடைந்திருக்கின்றன அல்லது தரைமட்டமாகியிருக்கின்றன என்பதை அவர்கள் கணக்கிட்டார்கள். இவ்வளவு பெரிய வேலையை அவர்களால் எப்படிச் செய்ய முடிந்தது? நியு யார்க், புரூக்ளினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளது ஆளும் குழு, அமெரிக்க கிளை அலுவலகக் குழுவின் தலைமையில் நிவாரண குழுக்களை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தது. எனவே, இடிந்துபோன கட்டடங்களை மறுபடியும் கட்டுவதற்காக ஐக்கிய மாகாணங்களின் அநேக பாகங்களிலிருந்து மண்டல கட்டட குழுக்கள் அழைக்கப்பட்டன. a அந்தக் குழுவினர் வந்து என்ன செய்தார்கள்?

மிஸ்ஸிசிப்பியிலுள்ள லாங் பீச் நிவாரண குழு தங்களுடைய பகுதியைக் குறித்து அறிக்கை சமர்ப்பித்தது. பிப்ரவரி 17, 2006-⁠க்குள், சாட்சிகளின் சேதமடைந்த 632 வீடுகளில் 531 வீடுகளை முழுமையாக புதுப்பித்திருப்பதாகவும் 101 வீடுகள் பாக்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. சாட்சிகளல்லாத அக்கம்பக்கத்தாருக்கும் அந்தக் குழு உதவியது. 17 ராஜ்ய மன்றங்களின் கூரைகள் பயங்கரமாக சேதமடைந்திருந்தன. பிப்ரவரி மாதத்தின் மத்திபத்திற்குள் 16 ராஜ்ய மன்றங்களுக்குப் புதிய கூரைகள் போடப்பட்டிருந்தன. லூயிஸியானாவிலுள்ள பட்டன்ரூச் குழு என்ன செய்தது?

இந்தக் குழு, கேட்ரீனா சூறாவளியால் கடுமையாக தாக்கப்பட்ட லூயிஸியானா பகுதியைப் பார்த்துக்கொள்கிறது. அங்கு 2,700 சாட்சிகளின் வீடுகள் பழுதுபார்க்கப்பட வேண்டியிருந்தது, பிப்ரவரி மாதத்தின் மத்திபத்திற்குள் 1,119 வீடுகள்தான் பழுதுபார்க்கப்பட்டன. அதனால் கட்டடக் குழுவிற்கு இன்னும் அதிக வேலை இருந்தது. இந்தக் குழுவும்கூட சாட்சிகளல்லாத அக்கம்பத்தாருக்கும், மோசமான நிலையிலிருந்த மற்ற குடும்பங்களுக்கும் உதவியது. 50 ராஜ்ய மன்றங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. பிப்ரவரி மாதத்திற்குள் அவற்றில் 25 சீரமைக்கப்பட்டன. செப்டம்பரில் வந்த ரீட்டா சூறாவளியினால் நாசமாக்கப்பட்ட 871 வீடுகளை, டெக்ஸஸிலுள்ள ஹௌஸ்டன் குழு சரிசெய்ய வேண்டியிருந்தது. பிப்ரவரி 20-⁠ம் தேதிக்குள் அவற்றில் 830 சரிசெய்யப்பட்டன.

கேட்ரீனா கற்பித்த பாடங்கள்

கேட்ரீனா சூறாவளியின் சீற்றத்தால் சீரழிந்துபோன ஆயிரக்கணக்கான மக்கள் எச்சரிக்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தைக் கற்றிருக்கிறார்கள். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஜோவைப் போலவே அநேகர் சொல்லலாம்: அடுத்த முறை “‘நகரைவிட்டு வெளியேறுங்கள்’ என்று சொன்னால் உடனே வெளியேறுவேன்!”

வளைகுடா பகுதியில் சூறாவளியால் தாக்கப்பட்ட மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் இன்னும் உதவியளித்து வருகிறார்கள். (கலாத்தியர் 6:10) மனிதாபிமானத்தோடு உதவியளிப்பது மட்டுமே இவர்களுடைய வேலையல்ல. அதைவிட முக்கியமான ஒரு வேலையை 235 நாடுகளில் செய்துவருகிறார்கள்; அது, எந்தவொரு சூறாவளி எச்சரிப்பு செய்தியையும்விட முக்கியமான ஓர் எச்சரிப்பு செய்தியை அறிவிக்கும் வேலை. இந்தப் பொல்லாத உலகத்தைக் கடவுள் கூடிய சீக்கிரத்தில் அழித்து இந்தப் பூமியை சுத்தப்படுத்தப்போகிறார்; அவர் ஆரம்பத்தில் விரும்பியபடியே அதை மாற்றப்போகிறார் என்று பைபிள் முன்னறிவிக்கிறது. கடவுள் நியாயந்தீர்க்கப்போகும் இந்தச் சமயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் உங்கள் பகுதியில் உள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள்.​—மாற்கு 13:10; 2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 14:6, 7; 16:14-16.

[அடிக்குறிப்பு]

a மண்டல கட்டட குழுக்கள் யெகோவாவின் சாட்சி வாலண்டியர்களால் ஆனவை. இவர்கள் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதிலும் புதுப்பிப்பதிலும் அனுபவமிக்கவர்கள். அமெரிக்காவில் கிட்டத்தட்ட நூறு குழுக்கள் உள்ளன. அதுதவிர, உலகமுழுவதும் இதுபோன்ற இன்னும் அநேக குழுக்கள் உள்ளன.

[பக்கம் 1415-ன் படம்]

கேட்ரீனா சூறாவளியின் மையம்​—⁠செயற்கைக்கோள் படம்

[படத்திற்கான நன்றி]

NOAA

[பக்கம் 15-ன் படம்]

வெள்ளக்காடாக இருந்த நியூ ஆர்லியன்ஸ்

[படத்திற்கான நன்றி]

AP Photo/David J. Phillip

[பக்கம் 15-ன் படங்கள்]

கேட்ரீனா சூறாவளி கட்டடங்களைத் தகர்த்து அநேகரின் உயிர்களைப் பறித்தது

[படத்திற்கான நன்றி]

AP Photo/Ben Sklar

[பக்கம் 1617-ன் படம்]

டெக்ஸஸில் ஹௌஸ்டன் நகரில் உள்ள ஆஸ்ட்ரோடோம் சுமார் 16,000 பேருக்கு அடைக்கலம் தந்தது

[பக்கம் 17-ன் படங்கள்]

ஆஸ்ட்ரோடோமில் கிறிஸ்தவ மூப்பர்கள் சாட்சிகளைத் தேடினார்கள்

[பக்கம் 18-ன் படம்]

வீடுகளைச் சரிசெய்து கொடுத்ததற்காக சாட்சிகள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள்

[பக்கம் 18-ன் படம்]

மிகவும் சேதமடைந்திருந்த கூரையை வாலண்டியர்கள் சரிசெய்கிறார்கள்

[பக்கம் 18-ன் படம்]

வாலண்டியர்கள் உணவு அளித்தார்கள்

[பக்கம் 19-ன் படம்]

ஆலென்